மாதர் தம்மை இழிவு செய்யும்...  

Posted by Matangi Mawley


பத்மா வ பத்தி இன்னிக்கு தான் பேச்சு வந்தது. 4 வருஷம் ஆச்சு. அவ என்ன ஆனா, எப்படி இருக்கா- ஒரு தகவலும் கிடையாது. 9th உம் 10th உம் என் கூட, என் class ல படிச்சா. என்ன நல்ல handwriting தெரியுமா? எல்லா miss உம் அவள தான் board ல எழுத சொல்லுவா. School prayer பாடுவா. ரொம்ப அழகா பரதநாட்யம் ஆடுவா. 4 வருஷத்துக்கு அப்புறம் அவள பத்தி நான் கேள்வி படர news இப்படியா இருக்கணும்?

11th / 12th கு வேற school மாறி போனா. Commerce படிச்சப்ரம், சென்னை ல ஒரு BPO ல வேலைல சேர்ந்தா. சென்னைல ஒரு Software company ல வேல பாக்கற பையன் கூட கல்யாணம் ஆச்சு-ன்னு 4 வருஷத்துக்கு முன்னாடி தெரிய வந்தது. இன்னிக்கு, என் கூட படிச்ச இன்னொரு friend மூலமா அவள பத்தின அந்த செய்தி கிடைச்சது. Recent ஆ அவளுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்துதாம். "ஆஹா- எவ்வளவு நல்ல news" னு நினச்சேன். "பெண்" குழந்தை பிறந்ததுக்கு அவ தான் காரணம்-னு அவள அவ in-laws வீட்டுல, வீட்ட விட்டு அனுப்பிட்டாங்களாம். அவ husband உம் எந்த support உம் தரலியாம், அவளுக்கு!

இப்போ என்ன ஆச்சு அவளுக்குன்னு எனக்கு தெரியல! அவ contact எதுவும் என்கிட்ட இல்ல. ஆனா இந்த news கேட்டதிலேர்ந்து எனக்கு ஒரே கோவம்!

இப்போவே அவளோட in-laws வீட்டுக்கு போய், அவங்களையும், அவ husband யும் எல்லார் முன்னாடியும் அறையணும் போல இருக்கு! அவ mother-in-law வோட அம்மாவ யாரும் ஏன் வீட்ட விட்டு ஒதிக்கி வைக்கல? கிராமங்கள்-ல சரி- படிக்காத மக்கள், விவரம் தெரியாம நடக்கறாங்க-ன்னு விடலாம். Haryana, Jharkhand, Rajasthan, Maharashtra போன்ற இடங்கள்-ல ரொம்பவே common இந்த மாதிரி சம்பவங்கள். ஆனா town ல? படிச்ச சமுதாயத்துல? அந்த fellow B.Tech ஆம். அவனுக்காவது அவன் அம்மா/அப்பா சொல்றது தப்பு, "XX"/"XY" ய நிர்ணயம் பண்ணற சக்தி யாரு கைலயும் இல்ல ங்கற sense வேண்டாம்? There is no person in this world who does not get “Fooled by Randomness”.

இத்தன Acts இருக்கே! Domestic Violence, Sexual Harassment, Trafficking? International Women's Day வேற ஒண்ணு இருக்கு. என்ன use? சமுதாயம் முழிச்சுக்காத வரைக்கும் என்ன இருந்தும் use இல்ல! ஒரு சமுயாததொட சாபக்கேடு இது. நம்ப அக்கம் பக்கத்ல இத போல ஒரு விஷயம் நடக்கறது தெரிஞ்சா, அத தட்டி கேட்கறது நம்ம கடமை. அக்கம் பக்கத்து வீட்டுல யாராவது ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க? At least half a dozen reasonable and respectable people living in the same street , இந்த வீட்டுக்கு போய் இந்த முட்டாள்கள் கிட்ட ஞாயத்த பேச வேண்டாமா? நம்ம தெருவுல இப்படி நடக்கறது நம்ம எல்லாருக்குமே அவமானம்-னு நினைக்க வேண்டாமா? Social pressure build up பண்ணனும். Legal action must be the last resort. ஏன்னா அவங்க ஒரு case அ முடிக்கறதுக்கே 20 வருஷமாகும்! சம்பந்தப்பட்டவர்களுக்கு ஞாயம் கடைக்கர வாய்ப்புகளும் குறைவு தான்!

பத்மா வுக்கு அவ அக்கம் பக்கத்ல இருக்கறவங்க support கடைக்கும் னு நம்பறேன். Meanwhile, friends யாராவது இத படிச்சா- பத்மா contact details இருந்தா எனக்கு தெரிய படுத்தவும்...

PS : நிறையா English sentences /வார்த்தைகள் பிரயோகத்தை தவிர்க்க முடியல. எழுதணும்-னு plan பண்ணி எழுதல. எங்கயாவது இத சொல்லணும் போல இருந்தது. தோணினத அப்படியே எழுதினேன்... Please bear with me ...

26/11- ஒரு வரலாறு?  

Posted by Matangi Mawley


மூன்று வருடங்கள். இப்படி எண்ணுவதும் ஒரு அபத்தம் தானோ? எண்ணிக்கையின் பயன்? எண்ணிக்கையே வரலாற்றில் இடம் பிடிக்க முதல் படி. வரலாறு என்றால்? இன்றைய காலகட்டத்தில் வரலாறு எனப்படுவது- கடந்து போன ஒன்று. நடப்பவைக்கும், நடக்கபோவதர்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது தான் வரலாறு. போகிப்பண்டிகையில் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எரித்த ஒரு சில வஸ்துக்களில்- இந்த வரலாறும் இருந்திருக்கலாம். இருந்திருக்கும். ஆனால் இந்த சம்பவம் வரலாறா? மறைந்துவிட்டதா அது? இன்னும் அப்படி நடக்கவில்லை. அதற்க்கு இன்னும் கொஞ்சம் காலம் உண்டு. இந்த நாள்- இன்னும் மடியவில்லை. சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. முதலில் மங்கிப் போகும். சாதாரண ஒரு நாளாக மாறும். நல்ல நாளாகவோ, கெட்ட நாளாகவோ... அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மறையும். மறைந்து- வரலாறாக மாறிப்போகும். மனித உணர்வுகளை நீக்கிவிட்டு- கணக்குகளால் மட்டுமே கட்டப்பட்டு பதிக்கப்பட்ட ஒரு 'சம்பவம்'. ஜாலியன்வாலா பாக் போல... அல்லது- 172 இந்தியர்களை தூக்கிலிட்டர்களே- சௌரி சௌரா வில், காவல் நிலையத்தை, 23 காவலாளிகளுடன் எரித்ததற்காக... அதைப் போல- ஒரு வரலாற்று 'சம்பவம்'.

மீண்டும் இதே நாள்- ஒரு நாள்- கடிகார முள் நகரும். ஆனால் அதை நகர்த்தும் நாள் எது என்று யாருக்கும் தெரியாமல் போகும். இல்லையானால்- யாரோ இரண்டு பேர்- முதியவர்கள் - வெத்தலை போட்டுக்கொண்டு திண்ணையில் சாவகாசமாக- அவர்களுக்கிடையில் நடக்கும் ஒரு சம்பாஷணையாக மாறிப்போகும். ஆனால் அவர்களது கடலளவு வாழ்வினுள்- இந்த சம்பவம் ஒரு துளி தான். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து போகும். "பாட்டி, அந்த தாத்தா யாரு? அவர் எப்புடி இறந்து போனார்"? என்று யாரோ ஒரு சிறுமி கேட்பாள். பாட்டி சொல்லுவாள்- "அவரா? ரொம்ப நல்லவர். பாவம்- போக வேண்டியவர் இல்ல தான். போய்ட்டார். என்ன பண்ண முடியும்? விதி..." - என்பாள். இது விதியா? மனிதரால் ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவங்களுக்கு 'விதி' என்ற பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. அந்த அனுபவத்தின் உண்மை- மனிதர்களின் இந்த கோழைத்தனத்தால் மறைந்து போகிறது. எதற்காக சொல்லவேண்டும் இந்த சம்பவங்களை? நாளைய உலகத்தை - பஞ்சு மெத்தையில் லாவகமாக வைத்து அழகு பார்ப்போமே!

வருங்காலம் உணரும். பஞ்சு மெத்தையின் உண்மை புரிந்து கொள்ளும் காலம்- வருங்காலத்திற்கும் வரும். மூன்று வருடங்களுக்கு முன், அமைதியான எனது அறையில் ஒரு ஒலி. வீட்டிலிருந்து அம்மா. அம்மா- எப்போது பேசினாலும்- 'இங்க போகாதே... அத செய்யாதே' என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிப்பாள். எனக்கு அது மனப்படமாகியிருந்தது. "பெரிய hotel கு போகாதே" என்று சொல்லி விட்டு அழுதாள். "கோபு போய்ட்டான்... போய்ட்டான்...". இது எப்படி முடியும்? ஏதோ ஒரு மூலையில் வாழும் என் குடும்பத்திற்கும்- எங்கேயோ நடக்கும் பயங்கரவாதத்திற்க்கும் என்ன தொடர்பு? ஏன் இப்படி நடக்க வேண்டும்? மாமா வின் கடேசி வார்த்தை- அவர் மகள் மற்றும் மகனின் பெயர், என்று சொன்னார்கள். இது வரலாறா? சம்பவமா? எழுதி வைத்து விட்டு, பதிவு செய்து விட்டு மறந்து போய் விடலாமா? ஒரு மனிதனின் கடேசி வார்த்தை. அவன் குரல் இனியும் இந்த பூமியில் ஒலிக்கவே ஒலிக்காது. அது அமைதியாகிவிடப்போகிறது...

ஒரு சில நேரங்களில் தோன்றும். அரசாங்கத்தை விடவும், பயங்கரவாதிகளுக்கு தான் மனித உயிரின் மகத்துவம் நன்கு புறிகிறது, என்று. மனித உயிருக்கு தீங்கு விளைவித்தால்- 'பயம்' என்ற இலக்கை அவர்கள் அடையலாம் என்று அவர்களுக்கு தெரியும். மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புறிந்திருக்க வேண்டும்.

இந்த உணர்வை பல முறை உணர்ந்து விட்டேன். ஆனால் அதிலிருந்து மீள முடியவில்லை. தொலைக்காட்சி பெட்டியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் 'முக்கியச் செய்தி'- அது எத்தனை பெரிய செய்தியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அதன் தாக்கம், '
அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- அதில் ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்' என்று உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தெரிந்தவர்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு- அந்த இழப்பு- ஒரு நாள் அல்ல- ஒவ்வொரு நாளும் உண்டு. நம்மால் செய்ய முடிந்தது? இந்த சம்பவங்களுக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டும்.

நினைவுகளே மிகச் சிறந்த பதிவுகள். அதில் கணிதம் மட்டுமல்ல- உணர்வுகளும் படர்ந்து இருக்கிறது. அதில் உயிர் இருக்கிறது. நினைவுகளை உயிரோடு வைத்திருக்க வேண்டும். அவை தான் நம்மை வருங்காலத்திற்கு அழைத்துச் செல்லும். வருங்காலத்திர்க்கான காரணம் இந்த நினைவுகளில் பதுங்கி இருக்கிறது. இந்த வருங்காலத்திற்கு- வரலாறு வேண்டாம்- நினைவிகளை விட்டுச் செல்வோம்...


Previous Article: 26/11- மற்றும் ஒரு கணக்கு...

Remembering.... P.K. Gopalakrishnan (Maternal uncle)

"தங்கச்சி..."!  

Posted by Matangi Mawley

"... Musical Trinity Concert கு, அந்த காலத்திலேயே நான் முப்பது ரூபா கொடுத்திருக்கேன்! இன்னிக்கு அது நூறு ரூபாய்-க்கு சமம்..." - என்று அப்பா சொன்னர், ஒரு பழைய receipt ஐ காட்டி. எத்தனை எத்தனை மாற்றங்களைக் கடந்து, இன்றைய நாளை நாம் எட்டிப் பிடித்திருக்கிறோம், என்று தோன்றியது! "... எல்லாராத்லேயும் கிணறு இருக்கும். பாத்ரம் பண்டம் ஏதாது அதுல விழுந்துடும்.கிணறு முழுகிறவன் மாசம் ஒரு தடவ குரல் கொடுத்துண்டே ரோடு வழியா போவான் ;அதை கிணறு முழுகி எடுத்து கொடுப்பான் ;. காலணாவோ அரை அணாவோ அவனுக்கு கூலி கொடுப்பா ...(உள்ள விழிந்திருக்கும் பாத்திரத்தோட மதிப்பிர்கேரப்ப ! ) . இப்போ நினைச்சு பாத்தா ஆச்சர்யமா இருக்கு. அவன் கிணத்துக்குள்ள இறங்கி, முழுகி, உள்ள போய் எடுத்துண்டு வர வரைக்கும் பாத்துண்டே இருப்போம். இன்னிக்கு உங்களுக்கெல்லாம் எத நின்னு வெடிக்க பாக்கவும் time கிடையாது. ரெக்கைய கட்டிண்டு பறக்கரேள்..." நிஜம் தான். என் சிறு பிராயத்தில், எனக்கு இருந்த அளவு நேரம் கூட இன்றைய குழந்தைகளுக்கு இல்லைதான். "... அவன் எடுத்து கொடுத்தப்றம், காலணாவ தூக்கி போடுவா. அத எடுத்துண்டு போவான்..." - இப்போது இதை கேட்கும் பொது- இப்படிப்பட்ட ஒரு சமுதாய சூழலில் நான் பிறவாதிருந்தல்- நான் செய்த புண்யம் என்று தோன்றியது. நமது "Constitution" இல் "FRATERNITY assuring the dignity of the individual..." என்ற ஒரு வாக்கியம் வரும், "Preamble" இல். எத்தனை அழகாக யோசிக்கப்பட்ட ஒன்று! ஆனால் அவர்கள் நடத்தப்பட்ட சூழலே அவர்களை அவ்வாறு யோசிக்க வைத்திருக்கிறது! எத்தனை ஆழமான ஒரு வார்த்தை!

"... Hotel ல போய் சாப்ட மாட்டா யாரும். அது அப்படி தான். ப்டாது. நான் எங்க அப்பா முன்னாடி உட்காரவே மாட்டேன். நீ என் முன்னாடி கால் மேல கால் போட்டுண்டு உக்காந்துக்க. அதுக்காக- அந்த காலத்துல அப்படி இருந்துதாக்கும்-னு பேசி பிரயோஜனமில்ல. எங்க அண்ணா school கே போகமாட்டான். எங்க அப்பா அவன வெரட்டு வெரட்டுன்னு வெரட்டுவா. ஆத்து வாசல்ல வந்து நிப்பான். நான் கூட, 'school கு போறேன்னு அப்பாட்ட சொல்லுடா'-ம்பேன். அப்பாக்கு தெரியாம அம்மா அவனுக்கு சாப்ட ஏதாவது தருவா. படிக்காம இல்ல. ரொம்ப நன்னா படிப்பான். பசி. சில பேரால பசி தாங்க முடியாது. அப்போ, எங்க அப்பா-க்கு அத புரிஞ்சுக்கற அளவுக்கு... அப்படியும் ஒரு காரணம்- அவன் school கு போகாததுக்கு இருக்கும்னே தொணிருக்காது... 'லால்குடி' சொல்லுவார். அவர் அப்பா, இவர் violin வாசிக்கலேன்னா, வேலி லேர்ந்து குச்சிய பிடுங்கி அடிப்பார்னு. 'நல்ல வேள அடிச்சார்'-னார். ஆனா இந்த காலத்து கொழந்தைகள் அப்படி கிடையாது. அதுகளும் mature ஆ இருக்கு. நாமும் அது மாதிரி செய்யறவா இல்ல... அந்த கால set-up ஏ வேற. அதுக்காக 'அதுதான் ஒசத்தி. அப்படி தான் இப்பவும் இருக்கணும்'-ங்கறதுல அர்த்தமே இல்ல..." 1st std class teacher - Rosy Miss. Home Work செய்யாமல் இருப்பவர்களுக்கு கை-முட்டியில் (knuckles) இரண்டு மர அடி scale ஆல் நல்ல அடி விழும். எனக்கும் பல முறை விழுந்துதான் இருக்கிறது. ஆனால் அதுவும் 'என் காலம்' என்று சொல்லும் அளவிற்கு இன்றைக்கு மாற்றங்கள். Teacher அடித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்! News channel களுக்கு நான்கு நாள் தீனி அது! அப்பா Rosy Miss கு ஒரு கடிதம் எழுதினார். இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். "...children are walking flowers ..." என்று எழுதிருக்கும். அன்று எனக்கு அந்த letter இல் அப்பா என்ன எழுதியிருந்தார் என்று தெரியாது. அந்த கடிதத்தை Rosy Miss படித்ததிலேர்ந்து என்னை அடிக்கவே இல்லை. இன்றும், என்னை நினைவு வைத்திருக்கிறார்- அன்புடன் விசாரிக்கிறார் அந்த Teacher. இதனால் எங்களுக்குள் வைரிபாவம் ஏற்படவில்லை .. அது தான் அந்த காலகட்டத்தின் விசேஷம் ...

"... நாங்க வளந்த சூழல் அப்படி. தயிர் காரி வருவா. அவ கிட்டேர்ந்து தயிர் வாங்குவோம். சில்லற இல்லேன்னா அவ கொடுக்கற பாக்கி காசு வாங்கபடாது-ன்னு எங்க அப்பா தெரு கோடில இருக்கற கடைலேர்ந்து சில்லற வாங்கிண்டு வர சொல்லுவார்..." தயிர் மட்டும் ஏன் அவளிடமிருந்து வாங்க வேண்டும்? "... அவோ ஏதாவது தண்ணி கேட்டாலோ- அவ குடிச்ச பாத்தரத்த கவுத்து வைப்பா. அதுல கொஞ்சம் தண்ணிய தெளிச்சு தான் எடுப்பா எங்க அம்மா... இது அந்த தயிர் காரிக்கும் தெரியும். அந்த காலத்துல அப்படி தான். ஏன்? எப்படி? ன்னுலாம் எனக்கு சொல்ல தெரியல. அப்படியே எனக்கு தெரிஞ்சு உனக்கு சொன்னாலும் உன்னால புரிஞ்சுக்க முடியாது. உனக்கு எச்சல், பத்து-ன்னாலே என்னன்னு தெரியாது... ஐயங்கார் மாமா வாதத்துக்கு போனா எங்க அப்பாவுக்கு வெள்ளி tumbler ல ஜலம் தருவா. வெள்ளிக்கு தோஷம் இல்ல-ன்னு ஏதோ ஒரு ஷாஸ்த்ரம்..."

அந்த கால சமூஹம் பல பாகங்களை/பரிமாணங்களைக் கொண்ட ஒரு வலை- என்று தான் சொல்ல வேண்டும். "அப்பா-அம்மா வை புறிந்து கொள்ள வேண்டும்"- என்ற வாதத்திற்கே இங்கு/இன்றைய கால கட்டத்தில் இடம் இல்லை என்று தான் தோன்றுகிறது. அப்படிப்பட்ட, ஒரு இறுக்கமான கலாசார சூழளுக்குள்ளிலிருந்து, வளர்ந்து வந்திருக்கும் அப்பா-அம்மா, பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை உள் வாங்கிக்கொண்டு, தங்களையும் அந்த மாற்றங்களுக்கேற்றார்போன்று மாற்றிக்கொண்டு, எனக்கும்- ஓரளவு கலாசார உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால்- அது நிச்சயமாக பாராட்டப் பட வேண்டிய விஷயம். ஆனால்- என்னால், அந்த கால சமுதாயத்தின் மனநிலையை புறிந்து கொள்ள முடியும் என்று சிறிதளவும் நம்பிக்கையில்லை. ஒரு மனிதன், அவன் செய்த வேலைக்கான கூலியைக் கூட அவன் கையில், அவன் செய்த வேலையை மதித்து, கொடுக்காத சமுதாய சூழலை புறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை. ஆனால்- தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சமூஹம் எப்படி மாறியிருக்கிறது என்பதை புறிந்து கொள்ள, அதன் துவக்கத்தில் அதற்கிருந்த தன்மையை புறிந்து கொள்ளத்தான் வேண்டும். மாற்றத்தின் பரிமாணத்தைக் கண்டு பிரமிக்க வேண்டுமென்றால், அந்த மாற்றத்தின் பாதையை கண்டு கொள்ளத்தான் வேண்டும்.

"... cultural refinement வேணும். ஒரு சில விஷயங்கள புரிஞ்சுக்க, அந்த விஷயத்தோட cultural backdrop அ புரிஞ்சுண்டு தான் ஆகணும். எனக்கு கோவம் வந்துதுன்னா, நான் சின்ன வயசுல ஒரு மகிழம்பூ மரம் ஒண்ணு இருக்கும். அதுக்கடீல போய் நிப்பேன். '..மாலிக்கு என்ன கோவமான்னு...' என்ன அவாத்துக்கு அழஷிண்டு போய்டுவா. தல வாரி விடுவா, எல்லாம் பண்ணுவா. உப்மா பண்ணிண்டுருக்கான்னு தெரிஞ்சுதோ இல்லையோ- எங்க நமக்கு கொடுத்துடுவாளோன்னு ஆத்துக்கு ஓடி வந்துடுவேன். அவாத்துல சாப்ட கூடாதுன்னு எனக்கு யார் சொல்லி கொடுத்தா? எனக்கு 6-7 வயசு இருக்கும். நம்பாதது பூனைக்குட்டி எப்படி பொறந்த ஒடனே அம்மாவ கண்டு பிடிச்சுண்டு போய் பால் குடிக்கறதோ- அத போல தான் இதுவும். அதுக்கு யார் சொல்லி கொடுத்தா"? ஆனால் இப்படிப்பட்ட சூழலிலிருந்து வந்த அவர்களால்- எப்படி எங்கள் Pizza Hut/ Mc Donalds கலாசாரத்தை உள் வாங்கிக்கொள்ள முடிகிறது? பெற்றோர்களிடம், அவர்கள் என்ன தான் ஒரு தோழர்களாக இருக்க முயன்றாலும், மனம் விட்டு பேச முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் தான் போலும். அவர்கள் வெளிப்பட காட்டிக்கொள்ளாது விட்டாலும்- 'எனக்கு இது ஒவ்வாது' என்ற திரை ஒன்று அவர்களின் கண்களில் அசைவது, அவர்களையும் மீறி நம் கண்களுக்கு புலப்பட்டு விடுகிறது. அவர்கள் சொல்லவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால்- அவர்கள் சிறு ப்ராயத்திலேர்ந்து நமக்கு கொடுத்த "cultural consciousness" என்றானது- அவர்களின் மன நிலையை நமக்கு நன்கு உணர்த்தி விடுகிறது. ஆனால்- என்னைப் பொறுத்த வரையில்- அவர்களுடன் எல்லாவற்றையும் பற்றி பேசுவது தான் நல்லது. அவர்கள் 'evolve' ஆனது சித்தி அடைய, அவர்கள் குழந்தைகள் 'evolve' ஆவதும் அவசியம்.

"... மன்னார்குடி அரிசி கடச்சந்து வழியா நானும் எங்க அம்மாவும் நடந்து போயிண்டுருந்தோம். எனக்கு ஒரு ஏழு வயசு இருக்குமோ என்னவோ. மீன் maarket வழியா போயிண்டுருக்கும்போது, அங்க வேகவச்ச சவ்வாரிகட்ட கிழங்கு வித்துண்டுருந்தா, ரஞ்சிதம் . எங்க அம்மாவ பாத்துட்டு ஓடி வந்தா... 'தங்கச்சி... சௌக்கியமா? அண்ணன் எப்புடி இருக்குது'? ன்னு உரிமையா கேட்டா. 'இது என்ன உம்புள்ளையா'? ன்னு என் கன்னத்த தொட்டு கிள்ளினா. திருஷ்டி கழிச்சா... அப்பறமா எங்க அம்மா சொன்னா. எங்க மாமா பொறக்கும் போது எங்க பாட்டிக்கு ஜுரம். பால் கொடுக்கப்டாதுன்னு சொல்லிட்டாராம் வைத்தியர். ரஞ்சிதத்தோட அம்மாவுக்கும் அப்போ தான் கொழந்தை பொறந்திருந்துது. அவ அம்மாக்கு ஒரு படி நெல்லு-ங்கராப்ல ஏதோ பேசிண்டு, எங்க மாமாவுக்கு ரஞ்சிதத்தோட அம்மா தான் பால் கொடுத்தாளாம். அந்த முறைல எங்க அம்மா அவளுக்கு 'தங்கச்சி'... "- இதை ஒற்றை வரியிலும் சொல்லலாம். ஆனால்- அந்த 'தங்கச்சி' என்ற வார்த்தையின் கனத்தை- அந்த சமூஹத்தின் தன்மையை புரிந்துகொண்டாலேயன்றி ரசிக்க முடியாது. 'இதனை ஏன் ரசிக்கவேண்டும்'- என்று கேட்பவர்களுக்கு, நாம் சொன்னாலும் புரியாது...

ஒரு மணி நேரம் அப்பாவுடன் நடந்த சம்பாஷணை. ஒரு மணி நேர -"Time Travel". ஒரு மணி நேர "Introspection"...

துப்பாண்டி குடும்பத்தினர்- EPISODE 6  

Posted by Matangi Mawley



"தா பார்! சாப்பாடு கடைல இருக்கு. 9 :30 தான் கட தொரப்பான். முதல் வேலையா அப்போ பாக்க உனக்கு வாங்கிண்டு வரேன். அது வரைக்கும் ஒரு சத்தம் வரப்டாது. ரொம்ப பசிச்சா, வெளீல போய் ஒரு கரப்பையோ, பல்லியையோ நீயே பிடிச்சு தின்னுக்க வேண்டியது தான். நான் என்ன வெச்சிண்டா வஞ்சன பண்ணறேன்? உனக்கு தானே தரப்போறேன்..." காலேலேர்ந்து ஒரே புடுங்கல். இந்த துப்பாண்டி, இத விட்டுட்டு எங்கயாவது போனாலே இப்படிதான். இதுக்கு பொழுது போகாத- சர்வ காலமும்- "ங்கா ங்கா..." ன்னு பிடுங்கி எடுக்கறது, Bushy. அதுவும் இப்போ வயத்துக்குள்ள குட்டிகள் வேற! இந்த தடவ ரெண்டோ, மூணு! "ரெண்டோட நிறுத்திக்கோடா" ன்னு சொல்லி வெச்சிருக்கேன்... போன installment, ரெண்டு குட்டிகள maintain பண்ணவே போரும் போரும்-னு ஆயுடுத்து. ஆனா, அதுகள் ரெண்டும் எத்தன அழகு...!

கொறஞ்சது ஒரு 10 -15 நாளுக்கு சரியா நடக்கவே ஆரம்பிக்கல, ரெண்டும். ஒண்ணு "Chotu"- பையன். அவன்
அப்பா துப்பாண்டி, சின்ன வயசுல எப்புடி துரு-துரு-ன்னு இருந்துதோ, அதே போல இதுவும் மஹா துரு-துரு! இன்னொண்ணு- "Cuppy" - பொண்ணு. அது அட்டசல் Bushy. எப்போவும் காரியத்துல (சாப்பாட்டுல) தான் கண்ணு, அதுக்கு. நடக்க ஆரம்பிச்சுதோ, இல்லையோ- ரெண்டும் ஒரே வெஷமம்! அதுலயும் இந்த Chotu இருக்கே- சரியா இன்னும் நடக்க வேற வராதைக்கு- side ஆல நடக்கும், balance இல்லாம. அப்புறம் steady பண்ணிக்கும். தலைய சாச்சுண்டு ஒரு பார்வை பாக்கும், "இவ என்ன பண்ணறா"? ன்னு.

அப்படியே அது பாட்டி ஜாட, அது முஹத்துல. துப்பாண்டி அம்மா இருக்கே, தெரு பூனையா இருந்தாலும் அத்தன களையா இருக்கும். நிறையா தெரு பூனைகள்- முகம் பெருசா- பாக்கவே பயமா இருக்கும். துப்பாண்டி பரம்பரைலியே- அது அம்மாவ தவிர்த்து- மீதி எல்லாமுமே பாக்க பயமா தான் இருக்கும். அப்பப்போ வந்து இதுகள பாத்துட்டு போகுங்கள். துப்பாண்டியாவது கொஞ்ச நாள் தெரு பூனையா இருந்துட்டு அப்புறம் எங்காத்துக்கு வந்துது. Chotu -Cuppy க்கு, கால் மண்ணுலையே படல!

வெளி உலகமே தெரியாத வளர்ற குழந்தைகளோட innocence கு ஈடு இணையே கிடையாது. அது போல, Chotu -Cuppy யும், எந்த சூது-வாதும் தெரியாம, அதுகள் பாட்டுக்கு விளையாடிண்டு இருக்குகள். ஆனா, அதுலயும் இந்த Cuppy கொஞ்சம் சமத்து தான். காரியவாதி. சொல்லி கொடுக்கறதெல்லாம் இந்த Bushy தான். "கொழந்தைகள கவனிப்போம்" -ன்னு எல்லாம் எண்ணமே கிடையாது. வேணும்னே- நம்ப கண்ணுக்கு நேர feed பண்ணிட்டு- "பத்தியா, நான் feed பண்ணறேன், எனக்கு 'ங்கா' தா..." ங்கும். இந்த Cuppy சாப்படற time ல ஒழுங்கா சாப்டுடும். ஆனா Chotu கு எப்போபாரு விளையாட்டு தான். நன்னா ஆட்டம் போட்டுட்டு- பால் குடிக்க வாய வைக்கும், அப்படியே தூங்கி போய்டும்! அது கிட் ட் ட் ட போய் சத்தம் போட்டா- எழுந்துண்டு மறுபடியும் பால குடிக்கும்.. பாவம்!

துப்பாண்டிக்கு இதுகள் ரெண்டுத்தையும் கண்டாலே பிடிக்காது. இதுகளால, அதுக்கு இருந்த importance கொறஞ்சு போனதா feel பண்ணித்தோ என்னவோ. இதுகள் இருந்த வரைக்கும் ஆத்து பக்கமே வரல. என்னிக்காவது, வெளீல ஒண்ணும் தேரலன்னா- இங்க வரும். இந்த Chotu, துப்பாண்டி சாப்டும் பொது, "இவன் என்ன திங்கறான்"? ன்னு கிட்ட போய் பாக்கும். துப்பாண்டி சீரிண்டு வெரட்டி விட்டுடும், அத. காலால அடிக்க போகும். பாத்துது, இந்த Chotu. ஒரு நாள், துப்பாண்டி சாப்டும் போய் ஓடி போய், அத ஒரு அடி அடிச்சுட்டு, ஓடி வந்துடுத்து...

ஒரு மாசம்- ஒண்ணர மாசம் கழிச்சு தான் குரலே எழும்பித்து. பூனை குரல் அப்போதான் வந்துது. ஒரு சில சமயத்துல- "மி...மி..."ன்னு கீச்-கீச்-னு சத்தம் வரும். என்னத்தையோ தரைல தேடும், இந்த Chotu. எதோ த்யானத்துல இருக்கறாப்ல, எதையோ பாத்துண்டு யோசிச்சுண்டே இருக்கும். அது எத பத்தி யோசிக்குமோ! அங்க-இங்க பார்வை போகாம, focused ஆ, ஆடாம அசையாம, அப்படியே உக்காண்டுருக்கும். அப்புறம், ஒண்ணுமே நடக்காத மாதிரி எழுந்து- விளையாட போய்டும். அது உக்காந்து இருந்த இடம் மட்டும்- துளி ஈரமா இருக்கும்...

ரெண்டு மாசத்துக்கெல்லாம்- பயங்கர வாலாயுடுத்துகள். சாப்பட வேற ஆரம்பிச்சிடுத்து (solid food). ஒரு நாளைக்கு எத்தன தடவ தான் வராண்டா வ அலம்பறது?! எதப்பாத்தாலும் அது மேல ஏறணும். இதுகள் எங்க பூந்துண்டு இருக்குகள்-னு பாத்து, விரட்டி விடறதே வேலையா போச்சு. "Hindu" paper ல Adoption காக Ad. கொடுத்தோம்- "ரெண்டுத்தையும் யாரவது எடுத்துக்கோங்கோ"-ன்னு. நல்ல response. 10 நாள் வரைக்கும் call வந்த வண்ணம் இருந்துது. ஆனா முதல் நாளே ஒருத்தர்- ரெண்டுத்தையும் எடுத்துக்கறேன்- ன்னு எடுத்துண்டு போய்ட்டார். எங்களுக்கு அதுகள் ரெண்டுத்தையும் பிரிக்க வேண்டாமே-ன்னு தான். அதுகள எடுத்துண்டு போனப்றம்- "போய் செந்தேன், குட்டிகள் சௌக்கியம்"-னு ஒரு தகவலும் இல்ல! ஒரே கவலை. எங்க எங்கயாவது கொண்டு போய் வித்துடுவாரோ, சரியா பாத்துக்க மாட்டாரோ-ன்னுலாம். இவருக்கு வேற ஒரே guilt, Bushy ய பாக்கரப்போலாம்- "என் குட்டிகள் எங்க?"-ன்னு அது கேக்கராப்லையே தோணறது -ன்னு! ஒரு வாரம் கழிச்சு- "குயட்டிகள் சௌக்கியம், Chotu நன்னா weight ஏரிடுத்து"-ன்னு ஒரு தகவல் வந்துது. அப்பறம் தான் நிம்மதியா இருந்துது!

"Bushy ஷீ ஷீ ஷீ.... என்னடா வேணும் ஒனக்கு.."? ன்னு அத தடவி குடுத்துண்டு கொஞ்சராராமாம்! அது நெனச்சிக்கும், மனசுல- "விடிய விடிய கத கேட்டுட்டு- Bushy க்கு துப்பாண்டி பாட்டன்-ங்கரானே"-ன்னு. "அதுக்கு என்ன சார் வேணும்? 'ங்கா' - தான் வேணும். போய் அத வாங்கிண்டு வந்து, கையோட அதுக்கு கொஞ்சம் போட்டு அது வாய அடைங்கோ... அப்றமா உங்களுக்கு நான் first class coffee போட்டு தரேன்..."

PS: Chotu Video
பாக்க- Click Here

குக்குளு குளு குளு குளு  

Posted by Matangi Mawley


சனிக்கிழமைகளில் அம்மாவிற்கு evening shift. அப்பாவிற்கு அரை நாள் விடுமுறை. அம்மாவிற்கு இரவு நேர சாப்பாடு தயார் செய்து கட்டிக் கொடுத்து விட்டு, அப்பா என்னை கவனித்துக் கொள்ளவேண்டும். சனிக்கிழமை மாலை நேரங்களில் அப்பாவின் வாலைப் பிடித்துக் கொண்டு அவர் எங்கெல்லாம் கூட்டிச் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்வது வழக்கம். திருச்சியில் பார்ப்பதற்கு இடங்கள் அவ்வளவு இல்லை. அதே கோவில், குளம் , யானை, அம்மா மண்டபம் படித்துறை , Main Guard Gate தான். தவறாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்ர வீதி மார்கெட்டில் பூசணிக்காய் காரியிடம் பூசணிக்காயும் , மற்ற காய் கறிகளும் வாங்கிக்கொண்டு, Sunday Special ( அப்பா சமையல் )- அவியல் கான ஏற்பாடுகளை செய்து கொண்டு வீடு திரும்புவோம்.

திருவானைக்கோவில் ஒரு தனி சுவாரஸ்யம். நான் மீண்டும மீண்டும் போகவேண்டும் என்று ஆசைப் பட்டு போகும் கோவில். அங்கு பிரகாரங்களில் நிறைய பெரிய பெரிய frame போட்ட படங்கள். அந்தப் படங்களுக்குக் கீழே , அந்தப் படங்கள் பற்றின கதைகள். சம்பந்தருக்கு ஞானப்பால் கிடைத்த கதை, ராவணன் தன் கைகள் , தலை, நரம்புகளால் ஆன வீணை ஒன்றை வாசித்து ஈசனிடம் ஆசி பெற்ற கதை என்று பல கதைகளை அப்பாவை படிக்கச் சொல்லிக் கேட்கவேண்டும் , எனக்கு. சில சமயங்களில் இந்த படங்களில் இல்லாத கதைகளும், கோவில் பிரஹாரத்தை சுற்றி வரும் சமயங்களில் அப்பா சொல்லிக் கேட்கும் வழக்கம். ஜம்புகேஸ்வரர் சந்நிதியில், பின் புறம் ஸ்தல வ்ரிக்ஷம் ஜம்பு பல ( நாகைப்பழ ) மரத்தின் முன் என்னை நிற்க வைத்து என் அப்பா கூறிய கதை தான் "குக்குளு குளு குளு குளு" !

காளிதாசரின் கவித்திறனை சோதிக்க எண்ணிய அரசர் - "குக்குளு குளு குளு குளு"- என்ற வாக்கியத்தைக் கொடுத்து பாடல் அமைக்கச் சொன்னாராம். மறுநாள் காளிதாசர் அரசரிடம் சென்று -

|| जम्भू पलानि पक्वानि
पतन्ति विमले जले गुग्गुलु ग्लु ग्लु ग्लु ||

(Jamboo phalaani pakhwaani
Padanthi vimale jale
Guggulu Glu Glu Glu)

- என்றாராம். இது தான் அந்தக்கதை ...
அதாவது பழுத்த நாவல் பழங்கள் தெளிந்த நீரில் விழும்போது, குக்குளு குளு குளு குளு-
என்ற சப்தம் வந்ததாம். இந்த இரட்டை வரி கதை - இத்தனை வருடங்களாக என் மனதில் ஆழமாக பதிந்து போன ஒன்றானது .

சப்தங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. எண்ணங்களுக்குக் கூட உருவம் கொடுத்து விடலாம். சப்தங்களுக்கு..? Dictionary யில்அர்த்தம் பார்க்கத்தெரிந்த பல பேர்களுக்குக் கூட Pronunciation (phonetics) படித்துப் பார்த்து புரிந்து கொள்ளத் தெரிந்திருப்ப்பதில்லை. நம் அன்றாட வாழ்கையில் நாம் எத்தனையோ சப்தங்களை உள் வாங்கிக்கொள்கிறோம். இதில் சில நம் ஆழ் மனதின் அமைதியை குலைக்கும் நாராசங்களாக இருக்கிறது. ஆனால் ஒருசில சப்தங்கள், நமக்கு மட்டுமே சொந்தமானவைகளாக, அழகான நினைவுகளாய் மாறிவிடுகின்றன. இந்த சப்தங்களை வார்த்தைகளில் பகிர்ந்துகொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது. ஆனால் நான் காளிதாசராக பிறக்கவில்லையே!

பாட்டி வீட்டிற்கு விடுமுறைகளில் செல்லும்போதெல்லாம் வெந்நீர் தவலைக்கருகில் உள்ள அலுமினியத் தவலை ஒன்றைக் கவிழ்த்துப் போட்டு, அதில் என்னை உட்கார வைத்து, மிளகாய் வற்றல், உப்பு கொண்டு 'சுற்றிப் போட' --வெந்நீர் தவலை அடியில் அது வெடிக்கும் சப்தத்தோடு சேர்த்து, அது வெடித்து கிளம்பும் சிறுசிறு கரித்துகள்கள் பறந்து பறந்து வெந்நீர் தவலையின் அடிப்புறத்தில் மோதும் அதே தருணத்தில், தவலையின் உட்புறத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் வெந்நீரின் கொப்புளிக்கும் சப்தம். கொல்லையில் பறித்த தேங்காய்களை கடப்பாறையில் உரிக்கும் பொழுது எழும் சப்தம். குந்துமணிகளை கைகளால் அளையும் பொழுது வரும் சப்தம். இரும்பு gate இன் விளிம்புகளின் மீது ஏறிக்கொண்டு, காலால் தரையை உந்திக்கொண்டு, உள்ளே-வெளியே என்று, முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டு விளையாடும்பொழுது , அந்த gate -கதவு "போதும்" என்பது போல் லேசாக ஒரு குரல் கொடுக்கும் --அந்த சப்தம்.

School விட்டு வீடு திரும்பும் நேரங்களில், வீடுகள் கட்ட குவித்து வைத்திருக்கும் ஜல்லிக் கற்கள் மீது ஏறி விளையாடுபோது எழும் சப்தம். Aeroplane பறக்கும் சப்தம் கேட்டு -எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதை விட்டு விட்டு -தலை தெறிக்க மாடிக்கு ஓடிப்போய் அதைப் பார்க்க போகும் வேளைகளில், ஓட்டத்தின் வேகத்தில் இடறி கீழே விழும் தேய்த்து வைத்திருந்த பாத்திரங்களின் சப்தம். Aeroplane பார்த்து விட்டு திரும்பும் போது அம்மா திட்டுவாளே என்ற பயத்தில் கூடுதல் ஒலியில் துடிக்கும் இருதய துடிப்பின் சப்தம்!

ஆனால் இவை கூட எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்த சப்தங்கள் தான். இன்னும் சில சப்தங்கள் உள்ளன. வார்ததைகளால் விவரிக்க முடியாத சப்தங்கள். நமக்கு மட்டுமே தெரிந்த, நாம் மட்டுமே உணர்ந்த, ரசித்த சப்தங்கள்...

"அப்பா-அம்மா" பலூன் விற்கும் பாட்டி. ஒருநாள் கூட அவள் கொடுத்துக்கொண்டு செல்லும் அந்த பலூன் சப்தம் மாறுபட்டதே இல்லை. ஆனால் அந்த சப்தத்தை, நான் உணர்ந்த உணர்வை- வார்த்தைகளால் எப்படித் தெரிவிக்க முடியும்? ரோஜாப்பூ, சைக்கிளில் விற்றுச் செல்லும் ரோஜாப்பூக்காரன் கொடுக்கும் சப்தம். அவன் " ரோஜாப்" என்று ஒருமுறை கூவிவிட்டு , அதைக் கேட்டுவிட்டு அவனை ஓடிப்போய் பிடிப்பதற்குள் அவன் எங்கோ தெருக் கோடிக்குச் சென்றிருப்பான். தினமும் அவன் வரவை எதிர் நோக்கி, balcony யிலேயே காத்திருக்கும் நாட்கள் உண்டு. கல்கத்தாவில் புதன்கிழமைகளில் ஒரு அம்மாவும் அவளுடைய இரண்டு குழந்தைகளும் "ஹாரே ராமா, ஹாரே கிருஷ்ணா " என்று harmonium & தப்ளம் வாசித்துக்கொண்டு பாடுவார்கள். நாங்கள் இருந்த 6 -வது மாடி வரை கேட்கும் அவர்களது சுருதி சுத்தமான, வளமான குரல். அவர்கள் எந்த விதமான academy களிலும் சென்று சங்கீதம் கற்றவர்கள் இல்லை. அந்த ஒரு வரியை தான் அவர்கள் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால்- பக்தி, கலாசாரம் போன்ற சொற்களுக்கு அப்பாற்பட்டு, நமது அந்தராத்மாவின் மூல ஷ்ருதியை ஒரு க்ஷணம் சுண்டிப் பார்த்து விட்டு வரச்செய்யும்- த்வனி அது. 1/2 மணி நேரம் அங்கு நின்று பாடினால் ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் தேறுமோ என்னவோ. அந்த 1/2 மணி நேரம்- நம் வாழ்வில் நமக்கு கிடைத்தது எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்து திருப்தி பட்டுக்கொள்ள தோன்றும்.

ஒவ்வொரு சப்தமும் ஒரு நினைவு. நம் வாழ்வெனும் தவத்திற்கு - பிரணவத்தின் பலன் அளிக்கும் மந்திரங்கள், இந்த சப்தங்கள். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு இந்த மந்திரங்களை மனத்தில் நினைவு கூர்ந்து தான் பார்ப்போமே...

சினிமா பாடல்களில் ராகமாலிகை- Degree காபி 3  

Posted by Matangi Mawley


ராகமாலிகை-அப்டீங்கற ஒண்ணு- கர்நாடக சந்கீதத்துக்கே உரியதான ஒரு விஷயம். ஒரு பாட்டோட ஒவ்வொரு வரியோ, ஒவ்வொரு சரணமோ- வெவ்வேறு ராகத்துல அமைக்கப்பட்டிருந்தா அத ராகமாலிகை-ன்னு சொல்லலாம். ஒரு அழகான விஷயம் இதுல என்னன்னா- ஒரு கர்நாடக கச்சேரி-ல ஒரு வித்வானுக்கு, ஒரே பாட்டுல வெவ்வேற ராகங்கள "explore"/"experiment" பண்ண, இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனா சினிமா-ல ராகமாலிகை-ங்கறது, ஒரு தனி விஷயம் தான். சினிமா-ல ஒவ்வொரு scene /situation கு ஏத்தாப்ல பாடல்கள் அமைக்கப்படும் சூழ்நிலைல, ராகமாலிகைகள கையாளறது-ங்கறது ஒரு தனித்துவம் வாய்ந்த விஷயம்- அப்டீங்கறது என் கருத்து. அந்த காலத்துல, தமிழ் சினிமா பாடல்கள்-ல நல்ல strong கர்நாடக சங்கீத சாயல் இருந்தது. "Light music ", "சினிமா music "- வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சு. அது வரைக்கும், சினிமா பாடல்கள்-ல கர்நாடக சங்கீதம் தான் ப்ராதாநித்து இருந்தது.

Romance, comedy, Sentiment -னு எத்தனையோ விஷயங்கள் நிரஜ்ஞ்சு இருக்கும் சினிமா-ல, கர்நாடக சந்கீதத்துக்குன்னே உரியதான, ராகமாலிகைகள- எப்படி use பண்ணினார்கள்- அந்த காலத்துல-அப்டீங்கரதுதான் ஆச்சர்யம்!

ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. அதன் தன்மை இருக்கு. அதிகாலை நேரத்த வரவேற்கும் ராகம், தூக்கத்தை அழைக்கும் ராகம், மோஹம் அளிக்கும் ராகம்- கல்லையும் கரைத்திடும் ராகம், இருட்டில் ஒளி தரும் ராகம்- னு எத்தனையோ ராகங்களும், அதற்க்கான தன்மைகளும் உண்டு. இத போல தனித்துவம் வாய்ந்த ராகங்களோட ஆற்றல, நான் test பண்ணி பாத்ததில்ல. ஆனா, அந்த கால music directors, இத test பண்ணிருப்பார்கள் போல தான் தோணறது. ராகமாலிகைகள சினிமா-ல use பண்ண வசதியான situations அமஞ்சிருந்துது, அந்த கால சினிமாக்கள்ல. உதாரணத்துக்கு, ராகங்கள பத்தியும், அதன் தன்மைகள பத்தியும் பேசினோம், இல்லையா? "சம்பூர்ண ராமாயணம்" ங்கற சினிமா-ல ராவணனோட அபூர்வமான வித்வத்-அ வெளி கொண்டுவரும் ஒரு காட்சி. ராவணன், அவர் சபைல பாடறது போல ஒரு scene. இந்த பாட்டுல என்ன interesting விஷயம்-னா, இந்த பாட்டுல கேள்விகள் கேட்பார்கள்- "காலையில் பாடும் ராகம்? யுத்த ராகம்"? னு. ராவணன், அந்தந்த கேள்விகளுக்கான பதில அழகா பாடி காமிப்பார். அந்த ஒரு வரி-ல அந்த ராகத்தோட முழு சாயலும் வரும், அந்த ராகத்தோட பெயரும் வரும்! இத விட அழகா, common man கு சங்கீதத்த கொண்டு சேர்க்க முடியுமா, தெரியல. அந்த பாட்ட கேக்க- click here.

சம்பூர்ண ராமாயணத்துல பாட்டுக்கா பஞ்சம்? எல்லா பாட்டுமே ரொம்ப அழகான பாட்டு தான்! "இன்று பொய் நாளை வா"-ன்னு திலங் ராகத்துல அமைக்கப்பட்ட அந்த பாட்டு கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே போல ராகத்தோட பெயர் வராப்ல "அகஸ்தியர்", அப்டீங்கற சினிமா- லயும் ஒரு ராகமாலிகை இருக்கு. "வென்றிடுவேன்"- ங்கற அந்த பாட்ட கேக்க- click here.

யோசிச்சு பாக்கும் போது, அந்த காலத்துல இத போல ராகத்தோட பெயர் பாட்டிலேயே வராப்ல அமைக்கப்பட்ட பாடல்கள் நிறையாவே இருக்கு-ன்னு தான் தோணறது. எனக்கு, இந்த பட்டியல்-ல ரொம்பவே பிடிச்ச ஒரு ராகமாலிகை- 'சிவகவி' ('47) சினிமா-ல, பாபநாசம் சிவன் music ல அமஞ்ச "வசந்த ருது"-ங்கற பாட்டு! அந்த கால "Super Star"- MKT பாடின பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

அந்த காலத்துல ராஜா/ராணி/மாய மந்திரம் படங்கள் நிறையா வந்ததும், ராகமாலிகைகள அழகா சினிமால பிரயோகிக்க வசதியா அமஞ்சுருந்துது. ஏன்னா- இத போல Mythological சினிமாக்கள்-ல situation கு பஞ்சமே இருந்ததில்ல. இதனாலேயே- பல ரொம்ப அழகான ராகமாலிகைகள்- சினிமாக்கள்-ல நமக்கு கிடைச்சுது. "வேதாள உலகம்" சினிமா-ல DKP அம்மா பாடின பாரதியார் பாட்டு- "தீராத விளையாட்டு பிள்ளை"! இன்னுமும் அது ஒரு "concert favourite". இந்த பாட்டுக்கான situation லாம் Mythological கதைகள்-ல தானாவே அமைந்து போய்டும். ராஜ- சபைல நடக்கும் நடன காட்சியா. இன்னொரு ரொம்பவே அழகான பாரதியார் பாட்டு, ராகமாலிகை- '57 ல வந்த, கலைஞர் எழுதின "மணமகள்" அப்டீங்கற social drama ல இருக்கு. ரொம்ப பிரபலமான பாட்டும் கூட. Lyrics அ முழுசா உணர்த்தக்கூடிய ஒரு music. அமைதியான 'காபி' ல ஆரம்பிச்சு- கொஞ்ச கொஞ்சமா affection கும் passion கும் நடுவில் உலவும் 'மாண்டு' ராகத்த தொட்டு, ஒரு rage ஓட அந்த border அ 'வசந்தா' ராகத்தால கடந்து- கடந்தப்ரம் 'திலங்' ஒரு விதமான அமைதி- அமைதி-கப்ரம் ஏதோ ஒரு சொஹம் கலந்த சுகம்- 'சிவரஞ்சனி' ராகத்துல- ன்னு அந்த "சின்னஞ்சிறு கிளியே பாட்டு" ஒரு encyclopedia of ராகமாலிகா தான்!

இதே சினிமா-ல MLV -P லீலா combination ல இன்னும் ஒரு அபூர்வமான ராகமாலிகா இருக்கு. இந்த combination ல நிறைய பாடல்கள் இருந்தாலுமே- இந்த பாட்டுக்கு ஒரு தனி இடம் தான். "எல்லாம் இன்பமயம்" பாட்டு கேக்க- click here.

60s ல மறுபடியும் ராகமாலிகைகள பிரயோகிக்கும் கடமை- Mythological சினிமாக்களுக்கு போய் சேர்ந்தது. K. V. மஹாதேவன் அவர்களோட அபாரமான music ல "திருவிளையாடல்" சினிமால- வரும் "ஒரு நாள் போதுமா" பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here. இந்த பாட்டு பிரமாதம் தான். பாலமுரளிக்ருஷ்ணா அவர்களோட குரலும் பிரமாதம் தான். ஆனா- இத எல்லாத்த காட்டிலும்- T. S. பாலைய்யா-வோட histrionics - Chance ஏ இல்ல!

Romance ராகமாலிகைகள்-ல குறைவு தான்- என்றாலும்- அந்த area லயும் கொஞ்சம் பாடல்கள் கொண்டு வந்தது- பெரிய விஷயம் தான். Dance கு dance, romance கு romance- ங்கற விதத்துல அமைந்த பாட்டு- "உத்தம புத்திரன்" சினிமா-ல வந்த "காத்திருப்பான் கமல கண்ணன்". இந்த பாட்ட கேக்க- click here. ஆனா- இந்த ராகமாலிகா பாடல்களிலேயே- என்னோட ரொம்ப ரொம்ப இஷ்டமான பாட்டு- "மணாளனே மங்கையின் பாக்கியம்" சினிமா-ல வரும், ஆதிநாராயண ராவ்-ஓட inimitable music ல ஒலிக்கும்- "தேசுலாவுதே". இந்த படத்த, சின்ன வயசில 30-40 தடவ பாத்த அனுபவம் இருக்கு. பறக்கும் பாய், மந்திர தந்திர கமண்டலம்-னு- குழந்தைகளுக்கு தேவையான எல்லா சமாசாரமும் இருக்கும். இந்த பாட்டு- இத பாட தெரிஞ்சாச்சு-ன்னா எந்த Music contest யும் win பண்ணினடலாம். அத்தன கஷ்டமான- but அபூர்வமான பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

ராகமாலிகைகள்- சினிமா பாடல்கள்-ல இப்போலாம் அவ்வளவாக இல்லாம போய்டலாம். ஆனா- இந்த பாடல்கள் எல்லாமே- கடந்த காலம், நமக்கு கொடுத்த ஒரு பரிசு. இந்த பாடல்கள வருங்காலத்துக்கு கொண்டு போறது, நம்ம கடமை. இது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

PS: Degree காபி Series: மி மராதி -- GR -- Degree காபி

Paper - ல பேரு...  

Posted by Matangi Mawley

"The Hindu"- 13th July ., 2011 - "Letters to the Editor"...

"Paper ல பேரு வர அளவுக்கு நன்னா படிக்கணும்"னு- என் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது... :)

Tag டோய்...  

Posted by Matangi Mawley

கொஞ்ச நாளைக்கு முன்னாடி- "என்னடா இது... அவ்வளவு தான் தமிழ் blog ஆ?? ஒண்ணுமே எழுத தோணலையே..." அப்டீன்னு யோசிச்ச போது-- தக்குடு boss "உங்கள tag பண்ணிருக்கேன்...." அப்டீன்னார்! சரி--- நம்ம blog கு இன்னும் கொஞ்ச காலம் இருக்கு போலருக்கு-ன்னு தோணித்து...

குறிப்பு: 1 ... 2 ... ன்னு குறிப்பிடற order ல தான், அந்த விஷயங்களோட முக்கியத்துவம்- னு கிடையாது...

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

"இன்னது"- ன்னு சொல்லவே முடியாது. அப்பப்போ, ஒவ்வொண்ணு பிடிக்கும். "Mood" அ பொறுத்தது. இருந்தாலும்--

> உபயோகமுள்ள பேச்சு- அறிவுக்கு பயனளிக்கற பேச்சு. நல்ல விஷயங்கள பத்தி. Music /Books பத்தி. நல்ல மனிதர்கள பத்தி. நல்ல மொழி-ல அமைந்த பேச்சு. சொற்பொழிவு. எனக்கு Obama வோட Speeches ரொம்ப பிடிக்கும். அவர் ஏதாவது செய்யராரோ, இல்லையோ-- அவர் குரல்/content /அத அவர் வெளிப்படுத்தற விதம்! எனக்கு Amitabh Bachchan குரலும் ரொம்ப பிடிக்கும். "Main Aazaad Hoon" ன்னு ஒரு படம். அதுல அவர் ஒரு Speech கொடுப்பார். (click here) முடிஞ்சா அந்த படம் கூட பாக்கலாம். அந்த Speech ல அவர் குரல்!!!! பாஷ புரியணும் னு அவசியம் இல்ல. அந்த ஒலி போதும்...
> Books. கொஞ்ச நாளைக்கு முன்னாடி- என்னோட படிக்கற பழக்கத்துக்கு கொஞ்சம் இடையூறு வந்தது. அப்போ தான் நான் realize பண்ணினேன். என்கிட்ட இருக்கற ஒரே நல்ல குணம் இது தான். இதுவும் போச்சு-ன்னா, என்ன பத்தி பெரும பட்டுக்கக்கூடிய விஷயம்-னு எதுவுமே கிடையாது-ன்னு. அந்த பழக்கத்த விடாம எப்புடியோ திருப்பி படிக்க ஆரம்பிச்சாச்சு. மறுபடியும் அத நிறுத்தாம தொடர முயற்சி பண்ணிண்டு இருக்கேன்.
> இசை/ Fountain pen/ தாழம் பூ/ பழங்கதைகள்/ பாட்டி/ வையாளி [இத போல ஒரு விஷயத்த எங்க ஸ்ரீரங்கத்துல மட்டுமே பாக்கலாம்- click here]/ பெரிய பெரிய கோலம்/ ஜிமிக்கி/ கனவு/ சிரிப்பு/ அழகான கையெழுத்து (hand writing)/ புழுக்க pencil/ ஓவியம்/ தூக்கம்/ நூலகம்/ ஜோல்னா பை/ மழைல football விளையாடற பசங்க... எத்தனையோ சொல்லலாம்...

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

> தேவ இல்லாம அதிகாரம் பண்ணறது
> மனிதாபிமானமில்லாத [ஜீவராசிகளித்தலும் கூட] செயல்கள்...
> Gossiping [வம்பு] / வத்தி வைக்கறது/ அவதூறு/ டம்பம் / அடுத்தவன் செய்யறானே-ன்னு தானும் செய்யறது...

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

> என் Future அ பத்தி- ரொம்பவே பயம் உண்டு. ஏன் ன்னு தெரியாது.
> துப்பாண்டி-யோட அம்மா போனதுலேர்ந்து- அவன் தூங்கும்போது "மூச்சு விடரானா"ன்னு பாத்துண்டே இருக்கேன்...
> அப்பா கூட வெளீல போனா-- வண்டிய பாத்துக்கோ-- ன்னு நிக்க வெச்சுட்டு எங்கயாவது போய்டுவா. ரொம்ப ரொம்ப ரொம்ப பயமா இருக்கும். சின்ன வயசுல ஒரு தடவ அப்படி பண்ணினதுல நான் ரொம்ப பயந்து போய்- கெட்ட கனவு வந்து- விடியற் காலேல எழுந்து அழுது- அம்மா-கிட்ட அப்பாக்கு நல்ல dose வாங்கி கொடுத்தேன். இப்போ கூட எப்போவாவது அப்படி விட்டுட்டு போறப்போ- பயமா தான் இருக்கும்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

நிறையா விஷயங்கள் இருக்கு-- இன்னது-ன்னு சொல்ல முடியல...
எங்க துப்பாண்டி பேசறது புரிஞ்சா நன்னா இருக்கும்...
ஒரு சில சமயத்துல என் mind ல தோணற விஷயங்கள் எனக்கும் கூட புரியல...

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

மேஜை-ன்னு தனியா எதுவும் கிடையாது. Office ல-ன்னா ஒரு ஓட்ட computer னு சொல்லலாம். வீட்டுல-- மேஜை மேல உக்காந்து வேல பண்ணற பழக்கமெல்லாம் கிடையாது. நிறையா books அங்க இங்க கெடக்கும். பேனா - இடறி விழுந்தா ஒரு பேனா கடைக்கும்... Laptop - அது இல்லாம நம்ளால இருக்கவே முடியாது... இன்னும் எத்தனையோ விஷயங்கள்...

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

> இந்த Tag கொடுத்த "தக்குடு" Boss ஓட blog
> Tom and Jerry / Harry Potter books ல ஒரு சில இடங்கள்/ Jim Carrey படங்கள்...
> காரணமே இல்லாம கூட சிரிப்பு வரும்... Bus ல auto ல போகும் போது- ஏதாவது திடீர்னு தோணும்-- சிரிப்பு வரும்... என்ன பாத்தது இன்னும் சில பேருக்கும் சிரிப்பு வரும்...

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

ஒரு சில "planning" வேலையெல்லாம் பண்ணிண்டு இருக்கேன்...
இந்த Tag அ எழுதிண்டு இருக்கேன்...

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

பொறந்து இந்த 24 வருஷம் உருப்படியா எதுவுமே செய்யல! உண்மை என்னன்னா- இன்னது செய்யணும்- னு தோணல... யோசிச்சு பாக்கும் போது-

> ஏதாவது ஒரு விஷயத்த பத்தி- முழுசா தெரிஞ்சுக்கணும். இந்த விஷயத்துல- இந்த பொண்ண கேட்டா போரும்- வேற யாரையும் கேக்க வேண்டாம்-ங்கற அளவுக்கு ஏதாவது ஒரு விஷயத்த பத்தி தெரிஞ்சுக்கணும்.
> நிறையா travel பண்ணனும். பல ஊர்கள/நாடுகள பாக்கணும். ஒரு தடவையாவது Paris/ Venice/ Egypt -கு போகணும். India பூராவும் ஒரு tour போகணும். ஒவ்வொரு குக்க்ராமமும் பாக்கணும். மக்களை பாக்கணும். கொவில்கள பாக்கணும். அந்த ஊர் கலாச்சாரத்த பத்தி தெரிஞ்சுக்கணும். அந்த ஊர் சாப்பாடு சாப்டனும்.
> எங்க அப்பா படிச்சிருக்கற எல்லா புஸ்தகங்களையும் நானும் படிக்கணும்... அதுக்கு மேலையும் படிக்கணும்... ஒரு Book ஆவது எழுதணும்.
> ஒரு தடவையாவது J . K . Rowling யும், ரஹ்மான் யும் நேர்ல பாக்கணும்!

9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?

நல்ல விஷயங்கள கேக்க முடியும்.
நல்ல விஷயங்கள பாத்தா ரசிக்க முடியும்.
நல்ல விஷயங்கள பத்தி பேச முடியும்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

> போலித்தனம் நிறைந்த எந்த விஷயத்தியுமே கேக்க பிடிக்காது.
> "உன்ன பத்தி அவ அப்படி சொல்லரா"-ன்னு என்கிட்ட ஒருத்தர் சொன்னா- அத கேக்க பிடிக்காது.
> Negative opinions - கெட்ட அவிப்ராயங்கள்-- கேக்க பிடிக்காது.
> ஒருத்தரோட வருத்தம் தரக்கூடிய "embarrassment" அ பத்தி கேக்க பிடிக்காது.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

> நிறையா பாஷ- பேச/எழுத/படிக்க- கத்துக்கணும்.
> நிரவல்/கல்பனா ஸ்வரம்/ ஆலாபன- எல்லாமா இருக்கறாப்ல ஒரு பாட்டாவது பாட கத்துக்கணும். [Especially - "
இன்னுதய பாராதே"-ன்னு கல்யாண வசந்தத்துல ஒரு புரந்தரதாசர் பாட்டு இருக்கு. அத விஸ்தாரமா பாட கத்துக்கணும்-னு ரொம்ப ஆசை...]/ நிறையா Musical instruments வாசிக்கவும் ஆசை...
> Effective ஆ- ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காம- பயனுள்ளதா மாத்தி வாழறது எப்புடி-ன்னு கத்துக்கணும்... அதுக்கு ரொம்ப அவசியமா- ஒரு சமயத்துல- ஒரு விஷயத்துல மட்டுமே கவனம் செலுத்தறது எப்புடி-ன்னு கத்துக்கணும். தொ பாருங்கோ-- 11th question எழுதிண்டு இருக்கேன்... இன்னும் mind 8th question லியே இருக்கு...

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பாட்டி சமையல
தவிர்த்து...

> ஆவக்கா மாங்கா ஊருகாய போட்டு mix பண்ணின rice
> மாகாளி ஊருக்காய்/ சத்தரம் bus stand "ரகுநாத் hotel " ரவா dosa/ Degree coffee/ இஞ்சி morabba/ Puchkaa [Calcutta ல road ஓரத்துல -பானி பூரி கிடைக்கும்... அத Puchka ன்னு சொல்லுவா- அங்க]/ Calcutta Chetla Mod -ங்கற எடத்துல இருக்கற "DiDi கட" Shingaadaa [samosa]/ கத்தரிக்காய் ரசவாங்கி-பொடலங்காய் கரி...
> வடாம் மொட்ட மாடில காய போட்டுருக்கறத "திருடி" திங்க பிடிக்கும்...

13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?

[லிஸ்ட் பெருசானதுக்கு-- sorry ...]
தல ரஹ்மான் பாடல்கள தவிர்த்து--

> தமிழ்: பூங்கதவே தாள் திறவாய்... கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே [அதுல பானுமதி அம்மா குரல்-- ஆஹா!] ... உன் சிரிப்பினில்... மலரே மௌனமா... கல்யாண தேன் நிலா...
> ஹிந்தி: Aap ki nazron ne samjha ... E Ajnabi [தல பாட்டு தான்-- எழுதாம இருக்க முடியல...] ... Jaaiye aap kahaan jaayenge ... Tere Ishq mein [ரேகா பரத்வாஜ் குரல்-- chance ஏ இல்ல...] ... Agar Tum mil jao [பழைய version ...] ... Jiya dhadak dhadak ...
> மலையாளம்: பிணக்கமாணோ ... [இந்த பாட்ட கேக்கரத விட பாக்கறது தான் பிடிக்கும்... அதுக்கு Ravi Varma paintings ல கொஞ்சம் பரிச்சயம் இருக்கணும்..அவரோட நிறையா paintings பாக்க- click here ... ]... நாதா நீ வரும்போள்... பொன்னில் குளிச்சு நின்னு... தீபம் கையில் சந்த்யா தீபம்... ஸ்வர ராக கங்கா பிரவாஹம்... கோபிகே நின் விரல்... ஸ்வர்ண சாமரம்... தேவாங்கனங்கள்...

14) பிடித்த மூன்று படங்கள்?

[லிஸ்ட் பெருசானதுக்கு-- sorry ...]

> ஹிந்தி: Abhimaan, Wednesday, Dhobi Ghat, Chamatkaar [இதுல Naseeruddin Shah வ ரொம்ப பிடிக்கும்], Ankur
> தமிழ்: மணாளனே மங்கையின் பாக்கியம், நாயகன், மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, மைக்கேல் மதன காம ராஜன், திருவிளையாடல் -ல தருமி பகுதி மட்டும், தில்லானா மோகனாம்பாள், சென்னை 28
> English: Sound of Music, animation movies [Lion king /Shrek /Finding Nemo , etc ], Gladiator, Cast Away, You ve got mail , Bruce Almighty
மலையாளம்: பெருமழக்காலம், வானப்ரஸ்தம், வாஸ்தவம், My Dear குட்டிச்சாத்தான், மனிச்சித்ரதாழம், தேன் மாவின் கொம்பத்து, காட்டத்தே கிளிக்கூடு...
> Bengali : Agantuk, charulatha, Unneeshe April, Seemaabadhdha, Shob Charitro Kalponik
மொழிக்கு அப்பாற்பட்டவை: The Bicycle Thief, Life is Beautiful, Pushpak, the kid /city lights (Chaplin ), Children of Heaven

List இன்னும் இருக்கு... profile page ல...

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?

books / music / passion for life and to live ...

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

யாருக்கு இந்த Tag பிடிச்சிருந்துதோ- அவங்க எல்லாருமே இத எழுதலாம்...

இந்த்ரப்ரஸ்தம்  

Posted by Matangi Mawley


எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். நல்ல ஜுரம். அப்பா, office இற்கு leave சொல்லிவிட்டு, என்னை
கவனித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் நான் சாப்பிடும்போது அப்பா கதை சொல்லுவது வழக்கம். இப்பவும் கூட. சமயம் கிடைக்கும் போது. எனக்கு தெரியாத கதை அப்பா-வுக்கு நினைவு வரும் போது. சரி. அன்று- அப்பா-வின் கண்ணில் கண்ணீர். அந்த கண்ணீருடன் பரிச்சயம்- அதுவே முதல் தரம், எனக்கு. ஒரு மாவீரன். சிறுவன். அவனை சூழ்ந்து கொண்ட பல பகைவர்கள்- அவனைக் காட்டிலும் நிறைய வாழ்ந்தவர்கள். அவனது உறவுகள். இறக்கும் தருவாயிலும் அவனது வீரத்தின் உச்சத்தை- தேர் சக்கரத்தை உடைத்து எடுத்து அவன் போர் புரிந்து காட்டினான்- என்ற விஷயம் தான், அந்த கண்ணீர். அந்த கதை- எனக்கு அப்போது புரியவில்லை. என்னை அபிமன்யு-வின் வீரத்தைக் காட்டிலும், அப்பாவின் கண்ணீர் தான் மிகவும் பாதித்தது. அது தான் முதல் முறையாக நான் மகாபாரதக் கதை கேட்டது.

நமது கலாசாரத்திற்க்கே உண்டான ஒரு சில விஷயங்களில்- நாம் இன்னார்- என்று நமக்கு எடுத்துக் காட்டுவதற்கு அத்யாவசியமானது- ராமாயணமும், மகாபாரதமும். இந்த உண்மையை புரிந்து கொள்ளும் பக்குவம் என் சஹ வயதினருக்கே இருப்பதாகத் தோன்றவில்லை. அது போகட்டும். எனக்கும் என் அப்பாவிற்க்குமே ஒரு சில வாதங்கள் உண்டு. ராவணன் மீதும், துரியோதனன் மீதும் எனக்கு ஒரு பரிவு உண்டு- என்பதைக் குறித்து. ராமன்- சீதையை "அக்னி பிரவேசம்" செய்யத் தூண்டியது குறித்து. அவளை நாடு கடத்தியது குறித்து. "அந்த கால வழக்கங்கள்- இன்றைய கால கட்டத்தோடு அதை ஒப்பிட்டு பார்ப்பது தகாது"- என்று அப்பா என்னை சமாதானப் படுத்தினாலுமே- இந்தக் கதைகளில் கூறப்படும் ஒரு சில விஷயங்களுடன் எனக்கு ஒப்புதல் கிடையாது.

எனக்கு இந்தக் கதைகளின் மீது பற்றுதல் இருந்தாலும், ஈர்ப்பு இல்லாததற்கு மற்றும் ஒரு காரணம்- இந்தக் கதைகளில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. அதற்காக நான் ஒரு "Feminist" என்று கொடி தூக்கவில்லை. எனக்கு அந்த சித்தாந்தத்தில் அவ்வளவாக ஈடுபாடும் கிடையாது. ஆனாலும்- ஒரு சில சமயங்களில், ஒரு சில விஷயங்கள்- இந்தக் கதைகளில், என் புரிதலுக்கு அப்பால் இருப்பது, கொஞ்சம் வருத்தம். "காலகட்டம்", "தேவ ரஹசியம்" என்றெல்லாம் எத்தனை விதமாக இந்த விஷயங்களை ஞாயப் படித்தினாலும்- என்னால் அவைகளை ஏற்க முடியவில்லை.

அதுபோகட்டும். மகாபாரத கதை- இரண்டு, மூன்று எழுத்தாளர்களின் பாணிகளில் படித்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறை படித்த போதும் ஒவ்வொரு அனுபவம் ஏற்படும். எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை எத்தனை எண்ணங்கள். எண்ணப் போக்குகள். ராஜாஜி-யுடைய மகாபாரதமே முழுமையான ஒரு மகாபாரதக் கதை படித்த உணர்வு அளித்தது. ஆனாலும்- இவை எந்த பரிமாணமுமே- இந்தக் கதையின் பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய/தகுந்த மதிப்பை அளிக்கவில்லை- என்ற குறை மட்டும் மீதம் இருந்தது. இத்தகைய ஒரு சந்தர்பத்தில் தான், சமீபத்தில் Chithra Banerjee Divakaruni அவர்கள் எழுதிய "The Palace of Illusions" என்ற புத்தகம் படிக்க நேரிட்டது.

ஒரு புது விதமான பாரதம். இப்படி நடந்ததோ- என்று எனக்குத் தெரியாது. ஆனால்- இப்படியும் நடந்திருக்கலாம்- என்றுத் தோன்றியது. இதில் என்ன புதுமை? மகாபாரத்தின் நாடி- த்ரௌபதி. அவள் கதை இது. இதற்கு முன்னர் நான் படித்திடாத கதை இது. ஒரு பெண்ணால் ஆன/அழிந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதையை- அவளே கூறுவது தானே தகும்? அது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

எதிர் பாராத தருணத்தில் ஜனித்த மகள். அவளது பிறப்பின் பயன் யாது- என்று வியந்த அவள் உறவுகள். தமது அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள பெற்ற மகனுடன்- ஏன் இப்படிப்பட்ட ஒரு மகள் நமக்கு? என்று வியந்த தந்தை. மணக்கப் போகும் கணவர் யார் எனத் தெரியாத மணமகள். மணந்த கணவனுடன் சேர்த்து, நால்வர்- அவனது சஹோதரர்களுக்குப் பங்கு போடப்பட்ட மனைவி. மயன் அமைத்த "மாயா மாளிகை"யின் மகாராணி. கணவர்களாலும், சொந்தங்களாலும், ஞாயமெனும், தர்மமெனும் காரணங்கள் பல கூறி கை விடப்பட்ட ஒரு பெண். கணவர்கள் ஐந்து பேர் இருக்க- ஆறாவதாக ஒருவரின் மீது ஏன் இந்த லயிப்பு? என்பதற்கு விளக்கம் தேடும் ஒரு பெண்ணின் பயணம்- இந்த "The Palace of Illusions".

ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்- என்று வ்யாசர் அளித்த வரம். இந்த வரத்தைக் காட்டிலும்- அடுத்த கணவனிடம் செல்லும் தருணத்தில்- முந்தைய கணவனுடன் கழித்த நினைவுகளை மறக்க இயலும்படியான வரம் அளித்திருக்கக் கூடாதோ- என்கிறாள்! த்ரௌபதியின் மன நிலையை இதை விட அழகாக நான் இது வரை எந்த பாரதத்திலும் படித்திருக்கவில்லை. ஒரு பெண்ணாக அவளை முன்னே வைத்து அவளை இப்படி யாரும் சித்தரிக்கவும் இல்லை.

கர்ணன், அவளது சுயம்வரத்தில் பங்கேற்க முயல்கிறான். அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு. அவனைப் பார்க்கவோ, அவனைப் பற்றி ஆர்வம் கொள்ளவோ தடை விதிக்கப் பட்டிருந்தாலும்- தடை விதிக்கப் பட்டிருக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீதுமே இயல்பாக இருக்கக்கூடியதொரு ஈர்ப்பு. திருஷ்டத்யும்னன் கர்ணனைத் தடுக்க- கௌரவர்கள் கர்ணனுக்கு ஆதரவு தர- குடும்பத்தின் மானம் காத்திட, போர் புரியவும் தயாராக த்ரௌபதிக்கு முன்னே நிற்கும் அவள் அண்ணனைப் பார்க்கிறாள். தூண்டில் புழுக்களாக வளர்க்கப் பட்டவர்கள்- அவள் அண்ணனும், அவளும்; பழி தீர்த்துக்கொள்ள... உலகெங்கும் தன் புகழ் பரப்ப... அவள் மீது உண்மையாகவே அன்பு கொண்டவனாக இருந்தவன் அவள் அண்ணன் மட்டுமே. கௌரவ சேனையுடன் போரிட்டு அவன் மீளுவது கடினம். அது அவனுக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தில்- அவன் உயிர், கர்ணனின் மீதிருந்த அந்த லயிப்பை விட உயர்ந்து நின்றது. "தங்கள் தகப்பன் பெயர் கூறிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்"- என்று கர்ணனிடம் அவள் கூறியது, அவள் வாழ் நாள் முழுவதும், அவளைத் துரற்றியது. இப்படியொரு விளக்கம்- அவளது கேள்விக்கு- நான் இது வரையில் படித்திடவில்லை. இப்படிதான் அவள் மனதில் தோன்றியிருக்கும். அவள் கர்வம் கொண்டவள்-அல்ல. தருணம் அப்படி. அந்தத் தருணத்தை, இப்படி யாரும் வருணிக்கவில்லை.

கீசகன். இப்படியும் ஒரு உலகம். ராஜகுமாரியாக, ராணியாக இருந்த நான்- இப்படி ஒரு பணிப்பெண்ணாக! இப்படியா நடத்தப் படுகிறார்கள்- சாதாரணப் பெண்கள்? அரண்மனை ஆண்கள் இவர்களை இப்படியா பார்க்கிறார்கள்? நான் இந்த சூழ்நிலைகளிலிருந்து மீண்டு, மீண்டும்- மகாராணியானால்- என் மாளிகையில் பணிபுரியும் சாதாரணப் பெண்களுக்கு இப்படிப் பட்ட கஷ்டங்கள் வராமலிருக்கச் செய்வேன்- என்று நினைக்கிறாள்- த்ரௌபதி. இதுவரை நான் படித்திருந்த பாரதக் கதைகளில், இது வெறும் ஒரு அத்யாயம். ஆனால் இங்கு- இது ஒரு கதாபாத்திரத்தின் ஜனனம். பிற்காலத்தில், ஒரு பெரும் ராணியாக போற்றப்படப் போகும் ஒரு ராணியின்- ஜனனம்.

நான் மலையிலிருந்து விழுந்த தருணம்- பீமன் பதறியது. "அவள் ஏன் விழவேண்டும்"? என்று யுதிஷ்டிரரைக் கேட்டது. "நம்மை அவள் மணந்தாள்- ஆனால் ஒருவரின் மீது அவள் அதிகம் அன்பு கொண்டாள்". என்று அவர் பதில் கூற- என் மீது அதிகம் பிரேமை கொண்ட பீமன்- "யார்"? எனக் கேட்க- கொஞ்சம் பொறுத்தார், யுதிஷ்டிரர். என்னைப் பற்றி யாரும் அறிந்திட முடியாத ஒரு ரஹசியம்- என்று என்னில் நான் கொண்ட கர்வம்! யுதிஷ்டிரரின்- மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றலின் மீது என்றைக்குமே எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவரை நான் புரிந்துகொண்டதில் தான் தவறிவிட்டேன். நான் ஏன் பதறுகிறேன்? அவர் கூறப் போகும் பதிலின் மீது- ஏன் இத்தனை ஆர்வம், எனக்கு? என்னைப் பற்றி அவர் புரிந்து கொண்ட விவரத்தை அவர்க் கூறுவாரா? இந்த தருணத்திற்குப் பிறகு என் கணவர்களை நான் பார்க்கப் போவதுமில்லை. பிறகு ஏன் என்னைப் பற்றின அவர்களின் கடைசி அபிப்ராயத்தைக் கேட்டிருக்க இத்தனை ஆவல்? "அர்ஜுனன்..." என்றார். சத்தியத்தை விடவும், இரக்கமே பெரிதென எண்ணினார்- அவர். என் கீர்த்திக்கு பங்கம் நேராமல் காக்க- அவர் வாழ்நாளில்- அவரது இரண்டாவது பொய்யை, எனக்காகக் கூறினார்...

வாழ்கை என்பது, ஒரு சில சம்பவங்கள்- பல பல உணருதல்கள். த்ரௌபதியின் வாழ்வில் அவளுக்கு நிகழ்ந்த/அவளால் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களைப் பற்றியே இது வரை படித்ததுண்டு. ஆனால்- அவளது வாழ்க்கையைக் கண்டது, அவள் உணர்ந்தவைகளை அவளுடன் சேர்ந்து நானும் உணர்ந்து, அவளுடன் வாழ்ந்தது- இதுவே முதல் முறை!

பாரதக் கதையில்- எத்தனையோ கதா பாத்திரங்கள். பெண் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரு பட்டியல் எடுத்தால் எத்தனை பெயர்கள் வரும்- என்று கணக்கு போடலாமே. த்ரௌபதி, குந்தி, காந்தாரி, சுபத்திரை, அம்பா, சுதேஷ்ணா, பானுமதி, உத்தரா, சத்யவதி, கங்கா... வேறு பெயர்கள் தோன்றவில்லை. சரி. இந்தப் பட்டியலில்- எத்தனைப் பெண் கதாபாத்திரங்கள்- தங்களை பாதித்தன? தங்கள் மனத்தைக் கவர்ந்தன? அப்படி பாதித்தது/கவர்ந்தது- என்றால்- அது ஏன்? இதே- பெண் கதாபாத்திரங்கள் என்று சுருக்கிக் கொள்ளாமல்- மகாபாரதம்- என்று எடுத்துக் கொண்டோமேயானால்- எத்தனையோ கதாபாத்திரங்கள் கூறலாம். கர்ணன், அபிமன்யு, கிருஷ்ணன், பீஷ்மர், பீமன், ஏகலைவன், கடோத்கஜன்- என்று. ஆனால்- இந்த புத்தகம் படித்த பிற்பாடு- கர்ணன்/கிருஷ்ணன் மீது கூட ஏற்படாத அளவிற்கு ஒரு ப்ரீத்தி- த்ரௌபதியின் மீது எனக்கு ஏற்பட்டு விட்டது. ஒரு சில சமயங்களில், மிகவும் வருத்தமாகவும் இருக்கும். ஒரு பெண்ணாக- என்னால் ஏன் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள இயலவில்லை- என்று. இந்த புத்தகத்தில்- என் கேள்விக்கான விடை கண்டுகொண்டேன் :: இது வரையில்- அவளை ஒரு பெண்ணாக- யாரும் சித்தரிக்கவில்லை. இது தான் விடை. இது தான் உண்மை...