மாக்கான்  

Posted by Matangi Mawley


இது LKG படிச்சது - Holy Cross St. Antony's Nursery School-la. "Christmas போது நிறைய programs இருக்கு- நீ என்ன பண்ணுவ"? ன்னு miss இது கிட்ட வந்து கேட்டப்போ- "பேசுவேன்" அப்டீன்னுருக்கு. Class ல இதுதான் நிறையா பேசும் னு , miss எப்போ பாரு complaint தான் என்கிட்டே. நன்னாருக்கே! கொழந்த class ல friends-ஓட பேசாம- வேறெங்க பேசும்? ஆனா இது இப்டி சொன்னத- அங்க ஒரு ரொம்ப நல்ல HM sister இருந்தா- நல் spirit-ல எடுத்துண்டு இத "Vote of thanks சொல்லு" அப்டீன்னு சொல்லிட்டா. அவ்வளவுதான். ஆத்துக்கு வந்து- "நான் mike பேசுவேன்.. mike ல பேசுவேன்" னு ஒரே குஷி!

அன்னிக்கு அடுத்த நாள் ஆத்துக்கு வந்து ஒரே அழுக. ஏன்னா- dance ஆடற கொழந்தைகளுக்கெல்லாம் frock வாங்கி கொடுத்திருக்காளாம். "எங்கு மட்டு ஒண்ணுமே ஆங்கி தல்ல"-னு ஓ-ன்னு அழுக. அப்புறம் என்ன? கட கடையா ஏறி- இதுக்கொரு dress-அ "ஆங்கி" கொடுத்துது. இதோட "costume" என்ன-ன்னு நாங்களும் இதோட மீஸ், HM sister எல்லாருமா கலந்தாலோசிச்சு- பைஜாமா-ஜிப்பா- white color-னு decide பண்ணினோம். அதுக்கப்றம் தான் முக்கியமான விஷயமான "vote of thanks" சொல்லறதே வந்துது. இவர் உக்காந்து அழகா எழுதிகொடுத்து- சொல்லிகொடுத்தார். அத கத்துண்டு சொல்லறதுல அத்தன ஒயட்டல். இது ஒரு தடவ சொல்லி, நான் ஒரு தடவ சொல்லி, அது அப்பா ஒரு தடவ சொல்லி- tape ல record பண்ணி, அப்புறம் "நா இனொன்னு இன்னொன்னு"ன்னு இது இன்னொரு தடவ சொல்லி... (இதுக்கு சொல்லிகொடுத்து ஓஞ்சு போனத tape பண்ணிநோமொல்யோ? அந்த sample இங்க கேளுங்கோ!-click here )

அப்டியா-இப்டியா-ன்னு Christmas-உம் வந்தது. "participants"-லாம் காலேலையே வரணும்-னு சொல்லிட்டா. காலேல இத கொண்டோய் விட்டாச்சு. இதுக்கு "costume"-ஓ ஒரு வெள்ள color 'பைஜாமா-ஜிப்பா'. மத்த கொழந்தைகளுக்கு frock-choli-pant-shirt னு அத்தன variety. அதுகள்-எல்லாம் make-up room-ல உக்காந்து இருந்துதுகள். எலி புழுக்க கணக்கா இதுக்கு அங்க என்ன வேல? 4 inch கூட தலேல முடி கெடயாது. இது தாத்தாவாத்துக்கு போரபோதெல்லாம்- தாத்தாக்கு hair-cut பண்ணும்-போதெல்லாம் இதுக்கும் ஒரு 'summer-crop' உண்டு. எதோ இதுவும் பாவம் உக்காந்திருக்கே-ன்னு free-யா இருந்த miss- இது தலையையும் நாலு வார வாரி, ஒரு lip-stick ஒண்ண ஈஷி விட்டா. (அது எந்த சீப்ப போட்டாளோ! அந்த நாலு வாரல்-ஓட பலன்- அடுத்தநா காலேல- நான் அந்த நாலு inch கூந்தல நாலாயிரம் தடவ வாரினேன்!) அங்கேர்ந்து வந்து- "எனக்கும் make-up போட்டாளே"-ன்னு ஒரே பீத்தல். lip-stick போய்டும்-னு தண்ணி கூட குடிக்காம உக்காண்டுருந்துது. என் தம்பி ஊர்லேர்ந்து வந்திருந்தான். School கு program பாக்க வந்தவன் சும்மா இல்லாம- "ஐயைய.. ஒதட்டுல லாம் என்ன இது சேப்பு சேப்பா-"? ன்னு நன்னா துணியால புடிச்சு தொடச்சு விட்டுட்டான், கடங்காரன்! அத்தன கோவம் இதுக்கு! காதெல்லாம் செவந்துடுத்து. எங்க இது அழுதுடுமோ-ன்னு பயந்துண்டு உக்காண்டுருந்தேன். நல்ல வேள. miss வந்து- "front ல உக்காந்துக்கோ" ன்னு சொன்ன ஒடனே கோவம் லாம் போச்சு.

Christmas நா என்ன-ன்னு அங்க எல்லா கொழந்தைகளுக்கும் சொன்னா. இது எதோ ரொம்ப கவனமா கவனிச்சுண்டு இருந்துதேன்னு- கூப்டு- இது கிட்ட "அப்டீன்ன என்னடா"? ன்னு கேட்டப்போ- "அப்ப்டீன்ன எனக்கு நெறைய 'gift' வாங்கி தருவாளே ஏ ஏ ஏ "- ன்னுது. இது ஆசய ஏன் கெடுப்பானேன்-னு தான் " 'மாக்கான்' னு ஒண்ணு இருக்கு. கருப்பா இருக்கும். சேப்பு color மூக்கு இருக்கும். பெரிய கண்ணு இருக்கும். எப்போலாம் நீ சமத்தா இருக்கியோ- 'மாக்கான்' உனக்கு chocolate தரும்"-னு சொல்லி வெச்சேன். அன்னிக்கு இருந்தாப்ல இப்போ வரைக்கும் என்னிக்குமே அவளோ சமத்தா இருந்ததே இல்ல! அதோட அப்பா office லேர்ந்து வந்த ஒடனே- நாற்காலி எடுத்துண்டு வந்து வெச்சுது. தூத்தம் எடுத்துண்டு வந்து குடுத்துது. Rhymes லாம் correct-ஆ சொல்லி காட்டித்து. அடுத்த நாள் காலேல- எங்காத்து வாசல்-ல இருக்கற வேப்ப மரத்து கெளைல ஒரு plastic bag-ல நாலு chocolate தொங்கிண்டுருந்துது. "கொஞ்சம் நெறையா வாங்கிருக்கலாமோல்யோ"-ன்னு 'மாக்கான்'-ட சொன்னேன். "பல்லு கெட்டு போய்டும்"நுடார்.

அதுக்கப்றம்- 'மாக்கான்' chocolate லாம் தர அளவுக்கு ஒண்ணும் நடக்கல.



பரமபதம்  

Posted by Matangi Mawley


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" கேட்டுத் துவங்கிய பல காலை வேலைகளின் விளைவே "மஞ்சகாப்பு" கட்டுரை. அதன் பிற்பாடு ஒரு சில சமயங்களில் நான் "திரும்பிப் பார்த்திருக்கும்" பொழுதுகளில் ஒரு சில விஷயங்களைப் பற்றிய என் கருத்துக்களில் பல்வேறான எண்ணங்களின் தாக்கம். "இருப்பது", "இல்லாதது" என்று பல வேதாந்தங்களும், சித்தாந்தங்களும் அவ்வபோது மனதினில் இடம் பிடித்துக் கொண்டும், விடை பெற்றுக்கொண்டும் இருக்கும் இந்த வேளையில் தான், நான் இவர்கள் இரு தரப்பையுமே சாரவில்லை என்ற ஞானம் எனக்கு உதித்தது. ஏனெனில்- நான் "இருப்பது" என்பவர்களின் பக்தியையும் ரசிக்கத் தெரிந்திருக்கிறேன், "இல்லாதது" என்பவர்களின் வாதங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவை அனைத்திற்கும் இடையில், நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்திற்கு எடுத்துச் செல்வது என்ற பொறுப்பு- யாரும் நமக்கு அளிக்காவிட்டாலும், நம்முடையது- என்பதும் உண்மை.

நம் கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் "பக்தி" எனப்படும் அந்த உணர்விற்கு நம் கலாசார முன்னேற்றத்தில் ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது. ஆயிரம் வருடங்களாக உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலாக இருக்கட்டும், "நம்ம தாயார் என்ன அழகா இருக்கா, பாரேன்"- என்று சிலைகளின் அழகில் உணர்ச்சிகள் தேடும் சாதாரண மக்களின் "பக்தியாக" இருக்கட்டும். "தப்பு பண்ணினா சாமி கண்ணா குத்தும்"- என்ற உணர்வு, குழந்தை முதல் ஒரு மனிதனை ஒழுக்கத்தின் பாதையில் நடக்க உதவியிருக்கிறது.

நம் கலாசாரத்திலும், பக்தியிலும் இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள். "வைகுண்ட ஏகாதசி" அன்று "சுவர்க்க வாசல்" திறக்கப்படும், கோவில்களில். அதில் நுழைந்தால்- "சுவர்க்கம் நிச்சயம்" என்பது ஐதீகம். அது ஒரு உணர்வு. 80 - 90 வயது நிரம்பிய ஒருவர், தன கடமைகளை எல்லாம் முடித்தவர், முழுமையாக உணர்ந்து அனுபவிக்கும் ஓர் "மன நிறைவு" அது. ஆனால் இன்றைக்கு, வளர்ந்த சூழ்நிலையும்- சுற்றி நடக்கும் நினைவுகளினாலும் பாதிக்கப்பட்ட சிந்திக்கும் திறனானது- 50 ரூபாய் கொடுத்து, வரிசையில் நின்று, சுவர்க்கத்தில் ஒரு 'seat reserve ' செய்கிறோம், என்றுதான் நினைக்க முடிக்கிறதே தவிர- "மன நிறைவு" என்ற "பக்தி" எனப்படுவதற்கே உரிய உணர்வு இங்கு இல்லை.

"ராதா-கிருஷ்ணா" என்ற எண்ணம், அதனுடைய காவியத் தன்மயினால் அமரத்துவம் பெற்றது என்பது என் கருத்து. சில நேரங்களில், காவியங்களினால்தான் "பக்தி" உருவாக்க
ப் படுகிறது. மொகல் மன்னர்களின் படைகளிலேர்ந்து ரங்கனையும்-தாயாரையும் பாதுகாக்க, தாயாரை வில்வ மரத்தினடியில் புதைத்து; ரங்கனை ஒரு குழு ஒன்று, வேறு தேசம் கொண்டு சென்றது. பல வருடங்கள் ஆகியும், அக்குழு திரும்பாததால் வேறொரு "ரங்கன்" செய்து வழிபட துவங்கிவிட்டார்கள். ஆனால் தாயாரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து, குழுவில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து, மொகல் படைகளிடமிருந்து ரங்கனைக் காத்து எடுத்து வந்தார். ஆனால் புது-ரங்கனால் பிழைத்திருக்கும் தற்போதைய குழு- இந்த ரங்கனை ஒப்புக்கொள்ளவில்லை. 90 வயது நிரம்பிய, கண் பார்வை மங்கிப்போன ஒரு வண்ணான்- பழைய ரங்கனின் ஆடை நறுமணம் கொண்டு, அவரே "உண்மையான ரங்கன்" என்று கூறிய பிற்பாடே அந்த ரங்கனை ஒப்புக்கொண்டார்கள். தாயார், அவளது உண்மையான கணவன் வந்தவுடன், கோவில் தர்மகர்த்தாவின் கனவில் தோன்றி "புதைத்த இடத்திலேயே என்னைத் தேடு, நான் கிடைப்பேன்", என்றாளாம். இப்படிப்பட்ட சில கதைகளும் "பக்தி"/நமது கலாச்சாரத்திற்கு அடையாளமாக விளங்குகின்றன.

இன்றைய காலகட்டத்தில்- நமது பல கோவில்களை சீர் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தபோது- பல வவ்வால்
தோட்டங்கள் காணாமல் போயிருந்தன. நல்லதுதான். ஆனால் எனக்கு என்னவோ அங்கு வவ்வால்களைப் பார்த்தல் தான் அந்தக் கோவிலின் பழமையையும், பெருமையையும் முழுமையாக உணர முடிகிறது. கோவில்கள், எந்த காலகட்டத்திலுமே பல ஜீவராசிகளுக்கு இருப்பிடமாக உள்ளது. "Renovation " எனப்படுவது அந்த கீவராசிகளையும் பாதிக்காது இருத்தல் அவசியம். அதே போல பரீட்சை roll number ஐ கரியில் கோவில் சுவறுகளில் கிறுக்கும் "கலாசாரத்தை" நம் காலத்தோடு நிறுத்திக் கொள்ளுதலும் அவசியம்.

கலாசாரத்தை
வருங்காலத்திற்கு கொண்டு செல்வது என்னும் பொறுப்பானது- வெறும் கோவில்களையும், அங்குள்ள சிலைகளையும் குழந்தைகளுக்கு
காட்டுதலாகிவிடாது. 1000 வருடங்களாக ஒரு கோவில் இருக்கிறது என்றால்- அது கற்களும் மணலும் சேர்ந்த கலவை மட்டுமல்ல. அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வைப்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை புரிந்து கொண்டாலே அந்தக் கோவிலின் இருப்பதை புரிந்துகொள்ள இயலும். இப்படிப்பட்ட சில விஷயங்களை நினைத்துப் பார்க்கையில்- நம் அறிவையும்- சித்தாந்தங்களையும்- நாம் நம்பாத நம்பிக்கைகளையும் பின்னே வைத்து விட்டு விட நேரும் இந்த கலாசாரத்தை முன்னே எடுத்துச் சல்ல வேண்டிய பொறுப்பானது, மிக மிக கடினம் தான்- என்று நினைக்க வைக்கிறது.

2010 -ஓட என்னோட ஹீரோ!  

Posted by Matangi Mawley

நான் 1st std படிக்கும்போது- எனக்கு "Bus Conductor " ஆகணும்-னு கொள்ள ஆசை! அப்போலாம் நம்ம Super Star கண்டக்டர்- இருந்ததெல்லாம் எனக்கு தெரியாது! ஆனா- எனக்கு நெஜமாவே பஸ் கண்டக்டர் னா ரொம்ப புடிக்கும். இந்த கூட்டத்துக்கு மத்தீல, கம்பிய கூட புடிக்காம பஸ்-கு இந்த கோடி-க்கு அந்த கோடி நடக்கறதே ஒரு பெரிய விஷயமா தோணும் எனக்கு. அத விட- அந்த கண்டக்டர் கைல இருக்கற பை! எவ்வளோ சில்லற! அவர் நகரும் போதெல்லாம் கலுக்-கிலுக் னு அதுலேர்ந்து சத்தம் வரத பாத்துட்டு- "அவா கிட்ட மட்டும் எவ்வளோ காசு" ன்னு நெனப்பேன்! ஆனா- ஒன்னங்க்லாஸ்- அந்த கலர்-கலர்- அவர் கிட்ட இருக்கற டிக்கெட் தான்! எல்லாரும்- "doctor, engineer-"னு சொல்லற இடத்துல- நான் மட்டும் யாரு என்கிட்ட "நீ பெருசானப்ரம் என்னவாகப்போற"? ன்னு கேட்டாலும்- "பஸ் கண்டக்டர்"னு தான் சொல்லுவேன்!

ஆனா- நாளடைவுல- இந்த "பஸ் கண்டக்டர்" மோஹம் கொஞ்சம் கொஞ்சமா என்ன விட்டு போய்டுத்து. ஒரு சில- சம்பவங்கள்-நால. நான் 12th படிக்கும்போது- ஒரு நாள் school கு கெளம்ப ரொம்ப late ஆச்சு. கூட்டமான பஸ்- நான் பொதுவா ஏற மாட்டேன். ஆனா அன்னிக்கு எதோ test என்னவோ! இல்லேன்னா அவளோ கஷ்ட பட்டிருக்க மாட்டேன். பஸ் வந்துது. அப்படி ஒரு கூட்டம். ஏறவே முடியல! எதையுமே புடிச்சுக்காம- foot board - தொங்கிண்டு school -கு போனேன்! எனக்கு பின்னாடி தொங்கினவாதான் எனக்கு support ! Driver break அழுத்த அழுத்த எனக்கு அவளோ பயம்! அந்நிய தேதி வரைக்கும்- இந்த "வளை ஓசை" பாட்டு பாத்து foot board- நாமளும் தொங்கணும்-னு இருந்த ஆசையெல்லாம், இருந்த எடம் தெரியாம போச்சு! கமல் ஹாசன் கிட்ட போய்- "செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து! ஸ்கூல்-கு ரெண்டு stop முன்னாடியே எறங்கி நடந்து போனேன். 45 நிமிஷம் class -கு வெளீல நின்னேன். Late- போனதுக்காக. Test -உம் எழுதல!

College படிச்ச காலம்- இன்னும் மோசம். ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரம் நின்னும்டே போன பொழுதெல்லாம் உண்டு! அதுக்கும் மேல- exam பொது ஒரு வருஷமா படிக்காத பாடத்த எல்லாம் ஒரு மணி நேரத்துல கூட்டமான பஸ்- நின்னுண்டே படிச்ச அனுபவங்களும் உண்டு! அதனால- இப்போலாம் பஸ் போறத தவிர்க்க முடியற வரைக்கும் தவிர்க்கறது!

அன்னிக்கு எந்த ஆட்டோ வும் வரல! மாட்டு வண்டீலயாவது ஏறி வீட்டுக்கு போனா போரும் ங்கற நெலம. கூட்டமா இருந்தாலும் பரவா இல்ல-ன்னு கண்ண மூடிண்டு பஸ்- ஏறிட்டேன். ஒரு college பசங்க கும்பல் ஒண்ணு அடுத்த stop- எரித்துகள்! அந்த வயசுக்குள்ள அத்தன heroism-உம் பண்ணிண்டு- எந்த பொண்ணாவது நம்மள பாக்கறாளா-ன்னு பாத்துண்டு இருந்துதுகள். அதுல ஒண்ணு- கருமமே கண்ணா- foot board- தொங்கிண்டு, ஒத்த கையால மட்டும் பஸ் கம்பிய பிடிச்சிண்டு, ஒரு கால- பஸ்-கு வெளீல தொங்க விட்டுண்டு- அத்தன circus வேலையும் காட்டிண்டிருந்துது!

எதோ traffic problem திடீர்னு. Driver அண்ணா break- போட்டார். இந்த கோமாளி நடு ரோட்டுல நல்ல traffic மத்தீல விழுந்துது! ஆடோகாரன், பைக்- போறவன்- எல்லாரும் இத திட்டிட்டு போறா! எத பத்தியும் கவலை இல்ல. பஸ் கெளம்பி ஓட ஆரம்பிச்சப்ரம்- ஓடற பஸ்- ஏறி heroism காட்டித்து! அதோட friend கும்பல் எல்லாம்- "ஹாய்-ஊய்"ன்னு ஒரே கூத்து, இது இப்டி விழுந்து, எழுந்து வந்ததுக்கு!

ஒரு அம்மா. கதவு பக்கம் two-seat-நெறைய உக்கண்டுருந்தா. நல்ல ஆகிருதி. தலைய அள்ளி முடிஞ்சு, உச்சி- ஒரு tight கொண்ட. நெத்தி நெறையா குங்கும போட்டு. அந்த அம்மா- seat விட்டு எழுந்துக்கரத யாரும் பாக்கல. நேரா இந்த கோமாளி கிட்ட போனா. தன்னோட கோவத்த எல்லாம் சேத்துண்டு அவன் முதுகுல ஒரு அடி கொடுத்தா பாருங்கோ! பையன் தெறிச்சு போய்ட்டான்! செத்த நேரம் அவனுக்கு என்ன நடந்துதுன்னே புரியல. அந்த அம்மா-வா, வந்தது தெரியாத, தன்னோட seat கு போய் உக்காந்துட்டா! அப்புறம் என்ன? கூட்டத்துல ஒருத்தனா கலந்துட்டன் பைய்யன். வாய தெறக்கவே இல்ல, இரங்கற வரைக்கும்!

சில பேர் cinema- காட்டறத எல்லாம் பாத்துட்டு, "இப்படியெல்லாம் செஞ்சா தான் hero"ன்னு நெனச்சுன்க்கரா! தான் life- மதிக்கறவன்தான் hero. தன்னோட life- மதிக்கத் தெரியாதவனுக்கு எப்படி இன்னொரு life- மதிக்கத் தெரிய முடியும்? நம்ம எல்லாருக்குமே- இத போல கோமாளிகள அவா நன்மைக்காக- ஒண்ணு வெக்கணும்-னு தோணும்! ஆனா- அந்த அம்மா-க்கு அத பண்ணற தைரியமும், அந்த மனசும் இருந்தது. என்ன பொறுத்த வரைக்கும், அந்த அம்மா ஒரு ஹீரோ தான்! அவங்கதான்- 2010 -ஓட என்னோட ஹீரோ!