இந்த்ரப்ரஸ்தம்
எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். நல்ல ஜுரம். அப்பா, office இற்கு leave சொல்லிவிட்டு, என்னை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் நான் சாப்பிடும்போது அப்பா கதை சொல்லுவது வழக்கம். இப்பவும் கூட. சமயம் கிடைக்கும் போது. எனக்கு தெரியாத கதை அப்பா-வுக்கு நினைவு வரும் போது. சரி. அன்று- அப்பா-வின் கண்ணில் கண்ணீர். அந்த கண்ணீருடன் பரிச்சயம்- அதுவே முதல் தரம், எனக்கு. ஒரு மாவீரன். சிறுவன். அவனை சூழ்ந்து கொண்ட பல பகைவர்கள்- அவனைக் காட்டிலும் நிறைய வாழ்ந்தவர்கள். அவனது உறவுகள். இறக்கும் தருவாயிலும் அவனது வீரத்தின் உச்சத்தை- தேர் சக்கரத்தை உடைத்து எடுத்து அவன் போர் புரிந்து காட்டினான்- என்ற விஷயம் தான், அந்த கண்ணீர். அந்த கதை- எனக்கு அப்போது புரியவில்லை. என்னை அபிமன்யு-வின் வீரத்தைக் காட்டிலும், அப்பாவின் கண்ணீர் தான் மிகவும் பாதித்தது. அது தான் முதல் முறையாக நான் மகாபாரதக் கதை கேட்டது.
நமது கலாசாரத்திற்க்கே உண்டான ஒரு சில விஷயங்களில்- நாம் இன்னார்- என்று நமக்கு எடுத்துக் காட்டுவதற்கு அத்யாவசியமானது- ராமாயணமும், மகாபாரதமும். இந்த உண்மையை புரிந்து கொள்ளும் பக்குவம் என் சஹ வயதினருக்கே இருப்பதாகத் தோன்றவில்லை. அது போகட்டும். எனக்கும் என் அப்பாவிற்க்குமே ஒரு சில வாதங்கள் உண்டு. ராவணன் மீதும், துரியோதனன் மீதும் எனக்கு ஒரு பரிவு உண்டு- என்பதைக் குறித்து. ராமன்- சீதையை "அக்னி பிரவேசம்" செய்யத் தூண்டியது குறித்து. அவளை நாடு கடத்தியது குறித்து. "அந்த கால வழக்கங்கள்- இன்றைய கால கட்டத்தோடு அதை ஒப்பிட்டு பார்ப்பது தகாது"- என்று அப்பா என்னை சமாதானப் படுத்தினாலுமே- இந்தக் கதைகளில் கூறப்படும் ஒரு சில விஷயங்களுடன் எனக்கு ஒப்புதல் கிடையாது.
எனக்கு இந்தக் கதைகளின் மீது பற்றுதல் இருந்தாலும், ஈர்ப்பு இல்லாததற்கு மற்றும் ஒரு காரணம்- இந்தக் கதைகளில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. அதற்காக நான் ஒரு "Feminist" என்று கொடி தூக்கவில்லை. எனக்கு அந்த சித்தாந்தத்தில் அவ்வளவாக ஈடுபாடும் கிடையாது. ஆனாலும்- ஒரு சில சமயங்களில், ஒரு சில விஷயங்கள்- இந்தக் கதைகளில், என் புரிதலுக்கு அப்பால் இருப்பது, கொஞ்சம் வருத்தம். "காலகட்டம்", "தேவ ரஹசியம்" என்றெல்லாம் எத்தனை விதமாக இந்த விஷயங்களை ஞாயப் படித்தினாலும்- என்னால் அவைகளை ஏற்க முடியவில்லை.
அதுபோகட்டும். மகாபாரத கதை- இரண்டு, மூன்று எழுத்தாளர்களின் பாணிகளில் படித்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறை படித்த போதும் ஒவ்வொரு அனுபவம் ஏற்படும். எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை எத்தனை எண்ணங்கள். எண்ணப் போக்குகள். ராஜாஜி-யுடைய மகாபாரதமே முழுமையான ஒரு மகாபாரதக் கதை படித்த உணர்வு அளித்தது. ஆனாலும்- இவை எந்த பரிமாணமுமே- இந்தக் கதையின் பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய/தகுந்த மதிப்பை அளிக்கவில்லை- என்ற குறை மட்டும் மீதம் இருந்தது. இத்தகைய ஒரு சந்தர்பத்தில் தான், சமீபத்தில் Chithra Banerjee Divakaruni அவர்கள் எழுதிய "The Palace of Illusions" என்ற புத்தகம் படிக்க நேரிட்டது.
ஒரு புது விதமான பாரதம். இப்படி நடந்ததோ- என்று எனக்குத் தெரியாது. ஆனால்- இப்படியும் நடந்திருக்கலாம்- என்றுத் தோன்றியது. இதில் என்ன புதுமை? மகாபாரத்தின் நாடி- த்ரௌபதி. அவள் கதை இது. இதற்கு முன்னர் நான் படித்திடாத கதை இது. ஒரு பெண்ணால் ஆன/அழிந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதையை- அவளே கூறுவது தானே தகும்? அது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
எதிர் பாராத தருணத்தில் ஜனித்த மகள். அவளது பிறப்பின் பயன் யாது- என்று வியந்த அவள் உறவுகள். தமது அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள பெற்ற மகனுடன்- ஏன் இப்படிப்பட்ட ஒரு மகள் நமக்கு? என்று வியந்த தந்தை. மணக்கப் போகும் கணவர் யார் எனத் தெரியாத மணமகள். மணந்த கணவனுடன் சேர்த்து, நால்வர்- அவனது சஹோதரர்களுக்குப் பங்கு போடப்பட்ட மனைவி. மயன் அமைத்த "மாயா மாளிகை"யின் மகாராணி. கணவர்களாலும், சொந்தங்களாலும், ஞாயமெனும், தர்மமெனும் காரணங்கள் பல கூறி கை விடப்பட்ட ஒரு பெண். கணவர்கள் ஐந்து பேர் இருக்க- ஆறாவதாக ஒருவரின் மீது ஏன் இந்த லயிப்பு? என்பதற்கு விளக்கம் தேடும் ஒரு பெண்ணின் பயணம்- இந்த "The Palace of Illusions".
ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்- என்று வ்யாசர் அளித்த வரம். இந்த வரத்தைக் காட்டிலும்- அடுத்த கணவனிடம் செல்லும் தருணத்தில்- முந்தைய கணவனுடன் கழித்த நினைவுகளை மறக்க இயலும்படியான வரம் அளித்திருக்கக் கூடாதோ- என்கிறாள்! த்ரௌபதியின் மன நிலையை இதை விட அழகாக நான் இது வரை எந்த பாரதத்திலும் படித்திருக்கவில்லை. ஒரு பெண்ணாக அவளை முன்னே வைத்து அவளை இப்படி யாரும் சித்தரிக்கவும் இல்லை.
கர்ணன், அவளது சுயம்வரத்தில் பங்கேற்க முயல்கிறான். அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு. அவனைப் பார்க்கவோ, அவனைப் பற்றி ஆர்வம் கொள்ளவோ தடை விதிக்கப் பட்டிருந்தாலும்- தடை விதிக்கப் பட்டிருக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீதுமே இயல்பாக இருக்கக்கூடியதொரு ஈர்ப்பு. திருஷ்டத்யும்னன் கர்ணனைத் தடுக்க- கௌரவர்கள் கர்ணனுக்கு ஆதரவு தர- குடும்பத்தின் மானம் காத்திட, போர் புரியவும் தயாராக த்ரௌபதிக்கு முன்னே நிற்கும் அவள் அண்ணனைப் பார்க்கிறாள். தூண்டில் புழுக்களாக வளர்க்கப் பட்டவர்கள்- அவள் அண்ணனும், அவளும்; பழி தீர்த்துக்கொள்ள... உலகெங்கும் தன் புகழ் பரப்ப... அவள் மீது உண்மையாகவே அன்பு கொண்டவனாக இருந்தவன் அவள் அண்ணன் மட்டுமே. கௌரவ சேனையுடன் போரிட்டு அவன் மீளுவது கடினம். அது அவனுக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தில்- அவன் உயிர், கர்ணனின் மீதிருந்த அந்த லயிப்பை விட உயர்ந்து நின்றது. "தங்கள் தகப்பன் பெயர் கூறிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்"- என்று கர்ணனிடம் அவள் கூறியது, அவள் வாழ் நாள் முழுவதும், அவளைத் துரற்றியது. இப்படியொரு விளக்கம்- அவளது கேள்விக்கு- நான் இது வரையில் படித்திடவில்லை. இப்படிதான் அவள் மனதில் தோன்றியிருக்கும். அவள் கர்வம் கொண்டவள்-அல்ல. தருணம் அப்படி. அந்தத் தருணத்தை, இப்படி யாரும் வருணிக்கவில்லை.
கீசகன். இப்படியும் ஒரு உலகம். ராஜகுமாரியாக, ராணியாக இருந்த நான்- இப்படி ஒரு பணிப்பெண்ணாக! இப்படியா நடத்தப் படுகிறார்கள்- சாதாரணப் பெண்கள்? அரண்மனை ஆண்கள் இவர்களை இப்படியா பார்க்கிறார்கள்? நான் இந்த சூழ்நிலைகளிலிருந்து மீண்டு, மீண்டும்- மகாராணியானால்- என் மாளிகையில் பணிபுரியும் சாதாரணப் பெண்களுக்கு இப்படிப் பட்ட கஷ்டங்கள் வராமலிருக்கச் செய்வேன்- என்று நினைக்கிறாள்- த்ரௌபதி. இதுவரை நான் படித்திருந்த பாரதக் கதைகளில், இது வெறும் ஒரு அத்யாயம். ஆனால் இங்கு- இது ஒரு கதாபாத்திரத்தின் ஜனனம். பிற்காலத்தில், ஒரு பெரும் ராணியாக போற்றப்படப் போகும் ஒரு ராணியின்- ஜனனம்.
நான் மலையிலிருந்து விழுந்த தருணம்- பீமன் பதறியது. "அவள் ஏன் விழவேண்டும்"? என்று யுதிஷ்டிரரைக் கேட்டது. "நம்மை அவள் மணந்தாள்- ஆனால் ஒருவரின் மீது அவள் அதிகம் அன்பு கொண்டாள்". என்று அவர் பதில் கூற- என் மீது அதிகம் பிரேமை கொண்ட பீமன்- "யார்"? எனக் கேட்க- கொஞ்சம் பொறுத்தார், யுதிஷ்டிரர். என்னைப் பற்றி யாரும் அறிந்திட முடியாத ஒரு ரஹசியம்- என்று என்னில் நான் கொண்ட கர்வம்! யுதிஷ்டிரரின்- மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றலின் மீது என்றைக்குமே எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவரை நான் புரிந்துகொண்டதில் தான் தவறிவிட்டேன். நான் ஏன் பதறுகிறேன்? அவர் கூறப் போகும் பதிலின் மீது- ஏன் இத்தனை ஆர்வம், எனக்கு? என்னைப் பற்றி அவர் புரிந்து கொண்ட விவரத்தை அவர்க் கூறுவாரா? இந்த தருணத்திற்குப் பிறகு என் கணவர்களை நான் பார்க்கப் போவதுமில்லை. பிறகு ஏன் என்னைப் பற்றின அவர்களின் கடைசி அபிப்ராயத்தைக் கேட்டிருக்க இத்தனை ஆவல்? "அர்ஜுனன்..." என்றார். சத்தியத்தை விடவும், இரக்கமே பெரிதென எண்ணினார்- அவர். என் கீர்த்திக்கு பங்கம் நேராமல் காக்க- அவர் வாழ்நாளில்- அவரது இரண்டாவது பொய்யை, எனக்காகக் கூறினார்...
வாழ்கை என்பது, ஒரு சில சம்பவங்கள்- பல பல உணருதல்கள். த்ரௌபதியின் வாழ்வில் அவளுக்கு நிகழ்ந்த/அவளால் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களைப் பற்றியே இது வரை படித்ததுண்டு. ஆனால்- அவளது வாழ்க்கையைக் கண்டது, அவள் உணர்ந்தவைகளை அவளுடன் சேர்ந்து நானும் உணர்ந்து, அவளுடன் வாழ்ந்தது- இதுவே முதல் முறை!
பாரதக் கதையில்- எத்தனையோ கதா பாத்திரங்கள். பெண் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரு பட்டியல் எடுத்தால் எத்தனை பெயர்கள் வரும்- என்று கணக்கு போடலாமே. த்ரௌபதி, குந்தி, காந்தாரி, சுபத்திரை, அம்பா, சுதேஷ்ணா, பானுமதி, உத்தரா, சத்யவதி, கங்கா... வேறு பெயர்கள் தோன்றவில்லை. சரி. இந்தப் பட்டியலில்- எத்தனைப் பெண் கதாபாத்திரங்கள்- தங்களை பாதித்தன? தங்கள் மனத்தைக் கவர்ந்தன? அப்படி பாதித்தது/கவர்ந்தது- என்றால்- அது ஏன்? இதே- பெண் கதாபாத்திரங்கள் என்று சுருக்கிக் கொள்ளாமல்- மகாபாரதம்- என்று எடுத்துக் கொண்டோமேயானால்- எத்தனையோ கதாபாத்திரங்கள் கூறலாம். கர்ணன், அபிமன்யு, கிருஷ்ணன், பீஷ்மர், பீமன், ஏகலைவன், கடோத்கஜன்- என்று. ஆனால்- இந்த புத்தகம் படித்த பிற்பாடு- கர்ணன்/கிருஷ்ணன் மீது கூட ஏற்படாத அளவிற்கு ஒரு ப்ரீத்தி- த்ரௌபதியின் மீது எனக்கு ஏற்பட்டு விட்டது. ஒரு சில சமயங்களில், மிகவும் வருத்தமாகவும் இருக்கும். ஒரு பெண்ணாக- என்னால் ஏன் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள இயலவில்லை- என்று. இந்த புத்தகத்தில்- என் கேள்விக்கான விடை கண்டுகொண்டேன் :: இது வரையில்- அவளை ஒரு பெண்ணாக- யாரும் சித்தரிக்கவில்லை. இது தான் விடை. இது தான் உண்மை...