26/11- ஒரு வரலாறு?  

Posted by Matangi Mawley


மூன்று வருடங்கள். இப்படி எண்ணுவதும் ஒரு அபத்தம் தானோ? எண்ணிக்கையின் பயன்? எண்ணிக்கையே வரலாற்றில் இடம் பிடிக்க முதல் படி. வரலாறு என்றால்? இன்றைய காலகட்டத்தில் வரலாறு எனப்படுவது- கடந்து போன ஒன்று. நடப்பவைக்கும், நடக்கபோவதர்க்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாதது தான் வரலாறு. போகிப்பண்டிகையில் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எரித்த ஒரு சில வஸ்துக்களில்- இந்த வரலாறும் இருந்திருக்கலாம். இருந்திருக்கும். ஆனால் இந்த சம்பவம் வரலாறா? மறைந்துவிட்டதா அது? இன்னும் அப்படி நடக்கவில்லை. அதற்க்கு இன்னும் கொஞ்சம் காலம் உண்டு. இந்த நாள்- இன்னும் மடியவில்லை. சுவாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. முதலில் மங்கிப் போகும். சாதாரண ஒரு நாளாக மாறும். நல்ல நாளாகவோ, கெட்ட நாளாகவோ... அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மறையும். மறைந்து- வரலாறாக மாறிப்போகும். மனித உணர்வுகளை நீக்கிவிட்டு- கணக்குகளால் மட்டுமே கட்டப்பட்டு பதிக்கப்பட்ட ஒரு 'சம்பவம்'. ஜாலியன்வாலா பாக் போல... அல்லது- 172 இந்தியர்களை தூக்கிலிட்டர்களே- சௌரி சௌரா வில், காவல் நிலையத்தை, 23 காவலாளிகளுடன் எரித்ததற்காக... அதைப் போல- ஒரு வரலாற்று 'சம்பவம்'.

மீண்டும் இதே நாள்- ஒரு நாள்- கடிகார முள் நகரும். ஆனால் அதை நகர்த்தும் நாள் எது என்று யாருக்கும் தெரியாமல் போகும். இல்லையானால்- யாரோ இரண்டு பேர்- முதியவர்கள் - வெத்தலை போட்டுக்கொண்டு திண்ணையில் சாவகாசமாக- அவர்களுக்கிடையில் நடக்கும் ஒரு சம்பாஷணையாக மாறிப்போகும். ஆனால் அவர்களது கடலளவு வாழ்வினுள்- இந்த சம்பவம் ஒரு துளி தான். இன்னும் கொஞ்சம் காலம் கடந்து போகும். "பாட்டி, அந்த தாத்தா யாரு? அவர் எப்புடி இறந்து போனார்"? என்று யாரோ ஒரு சிறுமி கேட்பாள். பாட்டி சொல்லுவாள்- "அவரா? ரொம்ப நல்லவர். பாவம்- போக வேண்டியவர் இல்ல தான். போய்ட்டார். என்ன பண்ண முடியும்? விதி..." - என்பாள். இது விதியா? மனிதரால் ஜீரணிக்க முடியாத கசப்பான அனுபவங்களுக்கு 'விதி' என்ற பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. அந்த அனுபவத்தின் உண்மை- மனிதர்களின் இந்த கோழைத்தனத்தால் மறைந்து போகிறது. எதற்காக சொல்லவேண்டும் இந்த சம்பவங்களை? நாளைய உலகத்தை - பஞ்சு மெத்தையில் லாவகமாக வைத்து அழகு பார்ப்போமே!

வருங்காலம் உணரும். பஞ்சு மெத்தையின் உண்மை புரிந்து கொள்ளும் காலம்- வருங்காலத்திற்கும் வரும். மூன்று வருடங்களுக்கு முன், அமைதியான எனது அறையில் ஒரு ஒலி. வீட்டிலிருந்து அம்மா. அம்மா- எப்போது பேசினாலும்- 'இங்க போகாதே... அத செய்யாதே' என்று ஒரு நீண்ட பட்டியல் வாசிப்பாள். எனக்கு அது மனப்படமாகியிருந்தது. "பெரிய hotel கு போகாதே" என்று சொல்லி விட்டு அழுதாள். "கோபு போய்ட்டான்... போய்ட்டான்...". இது எப்படி முடியும்? ஏதோ ஒரு மூலையில் வாழும் என் குடும்பத்திற்கும்- எங்கேயோ நடக்கும் பயங்கரவாதத்திற்க்கும் என்ன தொடர்பு? ஏன் இப்படி நடக்க வேண்டும்? மாமா வின் கடேசி வார்த்தை- அவர் மகள் மற்றும் மகனின் பெயர், என்று சொன்னார்கள். இது வரலாறா? சம்பவமா? எழுதி வைத்து விட்டு, பதிவு செய்து விட்டு மறந்து போய் விடலாமா? ஒரு மனிதனின் கடேசி வார்த்தை. அவன் குரல் இனியும் இந்த பூமியில் ஒலிக்கவே ஒலிக்காது. அது அமைதியாகிவிடப்போகிறது...

ஒரு சில நேரங்களில் தோன்றும். அரசாங்கத்தை விடவும், பயங்கரவாதிகளுக்கு தான் மனித உயிரின் மகத்துவம் நன்கு புறிகிறது, என்று. மனித உயிருக்கு தீங்கு விளைவித்தால்- 'பயம்' என்ற இலக்கை அவர்கள் அடையலாம் என்று அவர்களுக்கு தெரியும். மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புறிந்திருக்க வேண்டும்.

இந்த உணர்வை பல முறை உணர்ந்து விட்டேன். ஆனால் அதிலிருந்து மீள முடியவில்லை. தொலைக்காட்சி பெட்டியில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் 'முக்கியச் செய்தி'- அது எத்தனை பெரிய செய்தியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அதன் தாக்கம், '
அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- அதில் ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்' என்று உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தெரிந்தவர்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு- அந்த இழப்பு- ஒரு நாள் அல்ல- ஒவ்வொரு நாளும் உண்டு. நம்மால் செய்ய முடிந்தது? இந்த சம்பவங்களுக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டும்.

நினைவுகளே மிகச் சிறந்த பதிவுகள். அதில் கணிதம் மட்டுமல்ல- உணர்வுகளும் படர்ந்து இருக்கிறது. அதில் உயிர் இருக்கிறது. நினைவுகளை உயிரோடு வைத்திருக்க வேண்டும். அவை தான் நம்மை வருங்காலத்திற்கு அழைத்துச் செல்லும். வருங்காலத்திர்க்கான காரணம் இந்த நினைவுகளில் பதுங்கி இருக்கிறது. இந்த வருங்காலத்திற்கு- வரலாறு வேண்டாம்- நினைவிகளை விட்டுச் செல்வோம்...


Previous Article: 26/11- மற்றும் ஒரு கணக்கு...

Remembering.... P.K. Gopalakrishnan (Maternal uncle)

This entry was posted on 27 November, 2011 at Sunday, November 27, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

6 comments

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.. கண்ணீர்த்துளிகள் மைத்துளிகளாக...

27 November 2011 at 18:28

ஒரு சில நேரங்களில் தோன்றும். அரசாங்கத்தை விடவும், பயங்கரவாதிகளுக்கு தான் மனித உயிரின் மகத்துவம் நன்கு புரிகிறது, என்று. மனித உயிருக்கு தீங்கு விளைவித்தால்- 'பயம்' என்ற இலக்கை அவர்கள் அடையலாம் என்று அவர்களுக்கு தெரியும். மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். தெரிந்தவர்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு- அந்த இழப்பு- ஒரு நாள் அல்ல- ஒவ்வொரு நாளும் உண்டு.

உணர்ந்து எழுதப்பட்டதாலோ என்னவோ படிக்கும் போது என்னவோ பண்ணுகிறது.

பிளாஷ் நியூஸ் பார்க்கும்போதெல்லாம் தோன்றும்.. நமக்குத் தெரிந்தவர்கள் (அ) வேண்டியவர்கள் இருக்கும் பகுதி எனில் கூடுதல் கலவரம் மனசுக்குள். இல்லாவிட்டால் அந்த இழப்பின் கனம் கொஞ்ச நேரம் பாதித்து பின் மறந்து போய்..
நம்மை உள்ளுக்குள் அலசிக் கொண்டால் நிறைய ஆச்சர்யங்கள் கிட்டும்.

27 November 2011 at 18:29

பலூன் ஊத ஊதப் பெருகி வளர்வதைப் பார்த்துக் கை கொட்டிக் குதூகலிக்கும் சிறுபிள்ளை படாரென்று பலூன் வெடிப்பதைப் பார்த்ததும் உணரும் அதிர்ச்சி.. 'இன்னொரு பலூன் ஊதித்தரேன் குழந்தே' என்று எத்தனை சொன்னாலும் ஏற்றுக்கொண்டு, வெடிக்கும் ஒவ்வொரு பலூனுக்கும் வெளிவரும் அதிர்ச்சி.. உயிரைக் கணக்காகப் பார்ப்பதில் ஒரு சின்ன சௌகரியம் - வலிகளை பொதுப்படுத்த முடிகிறது. சரியா தவறா தெரியாது, இருந்தாலும் இயல்பு என்ற போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு முகம் மறைக்க முடிகிறது. பலூன் வெடிப்பை internalize செய்ய முடிகிறது.
உங்களுக்கு என் மனப்பூர்வமான நல்லெண்ணங்கள்.
இத்தனை அருமையாக(!) வலிக்கும் படி எழுதுகிறீர்களே.. வாழ்த்துக்கள்.

27 November 2011 at 20:57

இந்தியாவின் பலமும் பலவீனமும் அதன் பரப்பும் ஜனத்தொகையும்தான்.யார் மறைந்தபோதும் யார் இருந்தபோதும் கவனத்தில் கொள்ளாத ஒரு புள்ளிவிவரம்தான் கோடிக்கணக்கான ஜனங்கள்.

ஒரு மருத்துவமனையில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்த நாளிலேயே இறந்தநாளையும் பரிசாய்ப் பெறுகிறதா? பரவாயில்லை.

சென்னையின் 7 செ.மீ. மழைக்கு சரளா என்கிற ஒருபெண் எப்படி பலியானாள்? யாரின் அலட்சியம்? தெரியாது. அந்தப் பெயர் இனிப் புழக்கத்தில் இருக்காது.

யூனியன் கார்பைட் போபாலில் கசியவிட்ட விஷவாயுவின் துர்கந்தம் இன்னும் கருப்பைகளில் பொசுங்கிக்கொண்டிருக்கிறதே நிவாரணத்துக்காக அல்லாடியபடி இந்த அரசாக்கத்தின் துணையோடு? அதனாலென்ன?

ஒரு இனமே பூண்டோடு கண்ணெதிரில் அழிக்கப்பட்டு நாஜி முகாம்களை நினைவுபடுத்தும் வரலாற்றுக் கொடுஞ்செயலுக்கு என்ன பெயர் கொடுப்பது?

நீரில் பாகம் பிரித்து எல்லையை நிர்ணயித்து தினமும் பரஸ்பரம் சுட்டுக் கொல்லும் காருண்யத்துக்கு வள்ளலார் என்ன மதிப்பெண் கொடுப்பார்?

//மனிதர்கள்- அரசாங்க புள்ளி விவர புத்தகங்களை அழகு படுத்தும் எண்கள் கிடையாது. இது அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.//

தீவிரவாதிகளையும் விட மிக அதிகமான படுகொலைகளையும் குற்றங்களையும் திட்டமிட்டுச் செய்யும் ஆட்சியாளர்கள் ஓட்டுக்களுக்குப் பின்னும் விசாரணைக்கமிஷன்களுக்குப் பின்னும் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள்.இப்போதெல்லாம் நிகழும் பல குண்டுவெடிப்புக்களுக்குப் பின்னால் அரசே இருக்கிறதோ என்ற சந்தேகமும் எனக்குண்டு.

இது இப்படியிருக்க தங்களின் வினையெதுவுமில்லாமலேயே திடீரென்று ஊடகங்களின் முக்கியச்செய்தியாக தாங்கள் மாறிப்போகும் அவலம் இழப்பின் சோகத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே சொல்லொணாத் துயரம். ஊடகங்களுக்கும் மற்றவர்களுக்கும் அது ஒரு கமர்ஷியல் ப்ரேக்கற்ற சுவாரஸ்யம்.

நிறைய சிந்தனைகளை எழுப்பிய உங்களின் எழுத்துக்கு நன்றி மாதங்கி.

28 November 2011 at 10:14

அன்பு மாதங்கி,மையின் வழியாக வழிந்த உங்கள் சோகத்தை இன்று உணர்ந்தேன். பயங்கரங்கள் நடக்கும்போது மனம் புரண்டாலும் இன்னோரு பயங்கரம் வரும் போது பழைய பயம் பின்னால் போகிறதுதான் யதார்த்தம்.
இதிலயே நம் ரத்த சம்பந்தமும் இருந்தால் அது நம்மவிட்டுப் போவதில்லை. உங்கள் அம்மாவை நினத்தால் மனம் பிளக்கிறது.
ரிஷபன் அவர்களின் வரிகள் குறி பார்த்து அடிக்கின்றன.

29 November 2011 at 08:33

// அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- அதில் ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்' என்று உணருபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். //

ரொம்ப கொடுமையான விஷயம்.
உங்க குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.

//நினைவுகளே மிகச் சிறந்த பதிவுகள்//
//இந்த வருங்காலத்திற்கு- வரலாறு வேண்டாம்- நினைவிகளை விட்டுச் செல்வோம்.../

அருமை.

7 December 2011 at 17:42

Post a Comment