26/11- மற்றும் ஒரு கணக்கு...
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் ஒரு குடும்பம் தன் தலைவனை இழுந்தது. அந்தத் தலைவன்- ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு தமையன்- ஒரு மாமன்... இன்னும் அவன் என்னவெல்லாமோ இருந்திருக்கக் கூடும். ஆனால் அப்படி நடக்க அவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதை விதி என்கிறார்கள், ஒரு சிலர். ஜென்ம பயன் என்கிறார்கள்- இன்னும் சிலர். காலம்- என்கிறார்கள் மற்றும் சிலர். என்னைப் பொறுத்த வரையில்- அன்று அந்த இடத்தில்- வேறு ஏதோ ஒன்று செயல் பட்டுக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் மீரியதொன்று. அதை என்னவென்று என்னால் இன்று வரையிலும் விவரிக்க முடிந்ததில்லை. அது- என்னை ஓர் பாடத்தை உணரச் செய்தது. "பயங்கரவாதம்" எனப்படுவது ஒன்று- மேடைப் பேச்சு வீரர்களின் கோர்வை மொழியின் ஒரு அங்கம் இல்லை, என்று. குட்டிச் சுவற்றின் மீது வெட்டிப் பேச்சும், உலகின் மீது போலிக் கோவம் கொண்டு சினிமா பட ஹீரோக்கள் போன்று ஆகத் துடிக்கும் இளைகனின் மனக் கோட்டையின் ஒரு செங்கல்லும் இல்லை- இந்த "பயங்கரவாதம்". இது- ஒரு உணர்வு. இதைப் பற்றி பெசுவதினாலோ, அல்லது இதைப் பற்றிப் படிப்பதினாலோ உணர்ந்து விட முடியாத ஒரு உணர்வு. அதை எப்போது நாம் உணருகிறோம்- என்று ஒரு கேள்வி உதிக்கிறதோ? உணர்ந்தேன். 200 , 300 என்று தொலைக்காட்சிப் பெட்டியில் சடலங்களை கூறு போட்டுக் கொண்டு எண்ணிக் கொண்டிருந்த பொது- அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- நான் அதில் யாரோ ஒருவரை நான் வாழ்ந்த காலத்தில் அறிந்திருக்கிறேன் என்று எந்த நொடியில் உணர்ந்தேனோ- அந்த நொடியில் உணர்ந்தேன். உலகெங்கும் பரவியிருக்கும் ஒன்றை அந்நாள் வரையிலும் நான் ஒரு வாக்கியமாகவே எண்ணியிருந்தேன். அதன் உணர்ச்சியை- அது என் வீட்டு கதவை இடித்த போது தான் உணர்ந்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக- அவ்வபோது செய்திகள் இல்லாத நேரங்களிலோ- அல்லது யாரோ சில பிரபலங்கள் அதைப் பற்றி பேட்டி கொடுத்திருந்தபோதோ- தொலைக்காட்சிப் பெட்டியில் என்னையும் மீறி என் மனம் லயித்தது. ஏன்? எதற்கு நானே என் அறிவை கொறை பட்டுக் கொள்கிறேன்? இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரச்சனைகள் தீரும் என்று எப்படி என்னால் எண்ண முடிந்தது? ஆனால்- இப்படிப்பட்ட கேள்விகளை சிறிது நேரம் மறக்கத் தோன்றியது. மறுப்பு, வாக்கு, என்பது போன்ற- கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அதே சொற்கள். இது இல்லை என்றால்- பிடிபட்ட குற்றம் சாட்டப் பட்டிருக்கும் அந்த ஒரே நபருக்கு பழைய சினிமா பாடல்களைப் பாடப் பிடிக்குமாம்! ஒள்ளூர என் அறிவின் வெற்றியை என் புத்தி பாடி மகிழ்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் என் மனத்தின் பங்கு இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரிந்தவர்களின் ஜீவன் மெழுகுச்ச் சுடர்களை தீயிட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி வைத்துக் கொள்வோமே. இன்னும் 20 வருடங்கள் கழிந்து- என்றோ ஒரு நாள்- "நீதி" என்பதற்கு சற்று அருகாமையில் வசிக்கும் ஏதோ ஒரு வார்த்தையின் அர்த்தம்- இந்த "பயங்கரவாதப்" பிரச்சனைக்கு தண்டனையாக அளிக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோமே! ஆனால் அன்றைய தினம்- அந்த "நீதி"யை கேட்டு ஆனந்தம் கொள்ளும் ஜீவன்களின் எண்ணிக்கை குறைந்து போயிருக்கும். அன்றைய தினம்- இன்று நான் உணருகின்ற அந்த 200 , 300 என்ற கணக்குகள்- மீண்டும் ஒரு முறை- உணர்வில்லா கணக்குகளாக இதிஹாச புத்தகங்களின் பக்கங்களில் பதிந்து போயிருக்கும். ஜாலியன்வால பாக் மற்றும் ஹீரோஷீமா/நாகாசாகி போன்ற ஒரு இதிஹாச நடப்பு. அதைப் படிக்கின்ற வருங்கால குழந்தைகளுக்கு- அந்த கணிதங்கள்- வெறும் பதில்கள்- வினாத்தாளில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள். அவை உணர்ச்சி அல்ல. வெறும் கணக்கு...
இது தானா நடக்கும்? உயிர் - உயிராக மதிப்பிடப்பட வேண்டும். கணக்காக அல்ல. அந்த நாள் வந்துத் தான் ஆக வேண்டும். அதை எதிர் பார்த்துக்கொண்டிருப்பேன்...
பி. கு.: எனக்குத் தெரிந்த அந்த ஒருவர் (mum's younger brother).