"... Musical Trinity Concert கு, அந்த காலத்திலேயே நான் முப்பது ரூபா கொடுத்திருக்கேன்! இன்னிக்கு அது நூறு ரூபாய்-க்கு சமம்..." - என்று அப்பா சொன்னர், ஒரு பழைய receipt ஐ காட்டி. எத்தனை எத்தனை மாற்றங்களைக் கடந்து, இன்றைய நாளை நாம் எட்டிப் பிடித்திருக்கிறோம், என்று தோன்றியது! "... எல்லாராத்லேயும் கிணறு இருக்கும். பாத்ரம் பண்டம் ஏதாது அதுல விழுந்துடும்.கிணறு முழுகிறவன் மாசம் ஒரு தடவ குரல் கொடுத்துண்டே ரோடு வழியா போவான் ;அதை கிணறு முழுகி எடுத்து கொடுப்பான் ;. காலணாவோ அரை அணாவோ அவனுக்கு கூலி கொடுப்பா ...(உள்ள விழிந்திருக்கும் பாத்திரத்தோட மதிப்பிர்கேரப்ப ! ) . இப்போ நினைச்சு பாத்தா ஆச்சர்யமா இருக்கு. அவன் கிணத்துக்குள்ள இறங்கி, முழுகி, உள்ள போய் எடுத்துண்டு வர வரைக்கும் பாத்துண்டே இருப்போம். இன்னிக்கு உங்களுக்கெல்லாம் எத நின்னு வெடிக்க பாக்கவும் time கிடையாது. ரெக்கைய கட்டிண்டு பறக்கரேள்..." நிஜம் தான். என் சிறு பிராயத்தில், எனக்கு இருந்த அளவு நேரம் கூட இன்றைய குழந்தைகளுக்கு இல்லைதான். "... அவன் எடுத்து கொடுத்தப்றம், காலணாவ தூக்கி போடுவா. அத எடுத்துண்டு போவான்..." - இப்போது இதை கேட்கும் பொது- இப்படிப்பட்ட ஒரு சமுதாய சூழலில் நான் பிறவாதிருந்தல்- நான் செய்த புண்யம் என்று தோன்றியது. நமது "Constitution" இல் "FRATERNITY assuring the dignity of the individual..." என்ற ஒரு வாக்கியம் வரும், "Preamble" இல். எத்தனை அழகாக யோசிக்கப்பட்ட ஒன்று! ஆனால் அவர்கள் நடத்தப்பட்ட சூழலே அவர்களை அவ்வாறு யோசிக்க வைத்திருக்கிறது! எத்தனை ஆழமான ஒரு வார்த்தை!
"... Hotel ல போய் சாப்ட மாட்டா யாரும். அது அப்படி தான். ப்டாது. நான் எங்க அப்பா முன்னாடி உட்காரவே மாட்டேன். நீ என் முன்னாடி கால் மேல கால் போட்டுண்டு உக்காந்துக்க. அதுக்காக- அந்த காலத்துல அப்படி இருந்துதாக்கும்-னு பேசி பிரயோஜனமில்ல. எங்க அண்ணா school கே போகமாட்டான். எங்க அப்பா அவன வெரட்டு வெரட்டுன்னு வெரட்டுவா. ஆத்து வாசல்ல வந்து நிப்பான். நான் கூட, 'school கு போறேன்னு அப்பாட்ட சொல்லுடா'-ம்பேன். அப்பாக்கு தெரியாம அம்மா அவனுக்கு சாப்ட ஏதாவது தருவா. படிக்காம இல்ல. ரொம்ப நன்னா படிப்பான். பசி. சில பேரால பசி தாங்க முடியாது. அப்போ, எங்க அப்பா-க்கு அத புரிஞ்சுக்கற அளவுக்கு... அப்படியும் ஒரு காரணம்- அவன் school கு போகாததுக்கு இருக்கும்னே தொணிருக்காது... 'லால்குடி' சொல்லுவார். அவர் அப்பா, இவர் violin வாசிக்கலேன்னா, வேலி லேர்ந்து குச்சிய பிடுங்கி அடிப்பார்னு. 'நல்ல வேள அடிச்சார்'-னார். ஆனா இந்த காலத்து கொழந்தைகள் அப்படி கிடையாது. அதுகளும் mature ஆ இருக்கு. நாமும் அது மாதிரி செய்யறவா இல்ல... அந்த கால set-up ஏ வேற. அதுக்காக 'அதுதான் ஒசத்தி. அப்படி தான் இப்பவும் இருக்கணும்'-ங்கறதுல அர்த்தமே இல்ல..." 1st std class teacher - Rosy Miss. Home Work செய்யாமல் இருப்பவர்களுக்கு கை-முட்டியில் (knuckles) இரண்டு மர அடி scale ஆல் நல்ல அடி விழும். எனக்கும் பல முறை விழுந்துதான் இருக்கிறது. ஆனால் அதுவும் 'என் காலம்' என்று சொல்லும் அளவிற்கு இன்றைக்கு மாற்றங்கள். Teacher அடித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்! News channel களுக்கு நான்கு நாள் தீனி அது! அப்பா Rosy Miss கு ஒரு கடிதம் எழுதினார். இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். "...children are walking flowers ..." என்று எழுதிருக்கும். அன்று எனக்கு அந்த letter இல் அப்பா என்ன எழுதியிருந்தார் என்று தெரியாது. அந்த கடிதத்தை Rosy Miss படித்ததிலேர்ந்து என்னை அடிக்கவே இல்லை. இன்றும், என்னை நினைவு வைத்திருக்கிறார்- அன்புடன் விசாரிக்கிறார் அந்த Teacher. இதனால் எங்களுக்குள் வைரிபாவம் ஏற்படவில்லை .. அது தான் அந்த காலகட்டத்தின் விசேஷம் ...
"... நாங்க வளந்த சூழல் அப்படி. தயிர் காரி வருவா. அவ கிட்டேர்ந்து தயிர் வாங்குவோம். சில்லற இல்லேன்னா அவ கொடுக்கற பாக்கி காசு வாங்கபடாது-ன்னு எங்க அப்பா தெரு கோடில இருக்கற கடைலேர்ந்து சில்லற வாங்கிண்டு வர சொல்லுவார்..." தயிர் மட்டும் ஏன் அவளிடமிருந்து வாங்க வேண்டும்? "... அவோ ஏதாவது தண்ணி கேட்டாலோ- அவ குடிச்ச பாத்தரத்த கவுத்து வைப்பா. அதுல கொஞ்சம் தண்ணிய தெளிச்சு தான் எடுப்பா எங்க அம்மா... இது அந்த தயிர் காரிக்கும் தெரியும். அந்த காலத்துல அப்படி தான். ஏன்? எப்படி? ன்னுலாம் எனக்கு சொல்ல தெரியல. அப்படியே எனக்கு தெரிஞ்சு உனக்கு சொன்னாலும் உன்னால புரிஞ்சுக்க முடியாது. உனக்கு எச்சல், பத்து-ன்னாலே என்னன்னு தெரியாது... ஐயங்கார் மாமா வாதத்துக்கு போனா எங்க அப்பாவுக்கு வெள்ளி tumbler ல ஜலம் தருவா. வெள்ளிக்கு தோஷம் இல்ல-ன்னு ஏதோ ஒரு ஷாஸ்த்ரம்..."
அந்த கால சமூஹம் பல பாகங்களை/பரிமாணங்களைக் கொண்ட ஒரு வலை- என்று தான் சொல்ல வேண்டும். "அப்பா-அம்மா வை புறிந்து கொள்ள வேண்டும்"- என்ற வாதத்திற்கே இங்கு/இன்றைய கால கட்டத்தில் இடம் இல்லை என்று தான் தோன்றுகிறது. அப்படிப்பட்ட, ஒரு இறுக்கமான கலாசார சூழளுக்குள்ளிலிருந்து, வளர்ந்து வந்திருக்கும் அப்பா-அம்மா, பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை உள் வாங்கிக்கொண்டு, தங்களையும் அந்த மாற்றங்களுக்கேற்றார்போன்று மாற்றிக்கொண்டு, எனக்கும்- ஓரளவு கலாசார உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால்- அது நிச்சயமாக பாராட்டப் பட வேண்டிய விஷயம். ஆனால்- என்னால், அந்த கால சமுதாயத்தின் மனநிலையை புறிந்து கொள்ள முடியும் என்று சிறிதளவும் நம்பிக்கையில்லை. ஒரு மனிதன், அவன் செய்த வேலைக்கான கூலியைக் கூட அவன் கையில், அவன் செய்த வேலையை மதித்து, கொடுக்காத சமுதாய சூழலை புறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை. ஆனால்- தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சமூஹம் எப்படி மாறியிருக்கிறது என்பதை புறிந்து கொள்ள, அதன் துவக்கத்தில் அதற்கிருந்த தன்மையை புறிந்து கொள்ளத்தான் வேண்டும். மாற்றத்தின் பரிமாணத்தைக் கண்டு பிரமிக்க வேண்டுமென்றால், அந்த மாற்றத்தின் பாதையை கண்டு கொள்ளத்தான் வேண்டும்.
"... cultural refinement வேணும். ஒரு சில விஷயங்கள புரிஞ்சுக்க, அந்த விஷயத்தோட cultural backdrop அ புரிஞ்சுண்டு தான் ஆகணும். எனக்கு கோவம் வந்துதுன்னா, நான் சின்ன வயசுல ஒரு மகிழம்பூ மரம் ஒண்ணு இருக்கும். அதுக்கடீல போய் நிப்பேன். '..மாலிக்கு என்ன கோவமான்னு...' என்ன அவாத்துக்கு அழஷிண்டு போய்டுவா. தல வாரி விடுவா, எல்லாம் பண்ணுவா. உப்மா பண்ணிண்டுருக்கான்னு தெரிஞ்சுதோ இல்லையோ- எங்க நமக்கு கொடுத்துடுவாளோன்னு ஆத்துக்கு ஓடி வந்துடுவேன். அவாத்துல சாப்ட கூடாதுன்னு எனக்கு யார் சொல்லி கொடுத்தா? எனக்கு 6-7 வயசு இருக்கும். நம்பாதது பூனைக்குட்டி எப்படி பொறந்த ஒடனே அம்மாவ கண்டு பிடிச்சுண்டு போய் பால் குடிக்கறதோ- அத போல தான் இதுவும். அதுக்கு யார் சொல்லி கொடுத்தா"? ஆனால் இப்படிப்பட்ட சூழலிலிருந்து வந்த அவர்களால்- எப்படி எங்கள் Pizza Hut/ Mc Donalds கலாசாரத்தை உள் வாங்கிக்கொள்ள முடிகிறது? பெற்றோர்களிடம், அவர்கள் என்ன தான் ஒரு தோழர்களாக இருக்க முயன்றாலும், மனம் விட்டு பேச முடியாததற்கு இதுவும் ஒரு காரணம் தான் போலும். அவர்கள் வெளிப்பட காட்டிக்கொள்ளாது விட்டாலும்- 'எனக்கு இது ஒவ்வாது' என்ற திரை ஒன்று அவர்களின் கண்களில் அசைவது, அவர்களையும் மீறி நம் கண்களுக்கு புலப்பட்டு விடுகிறது. அவர்கள் சொல்லவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால்- அவர்கள் சிறு ப்ராயத்திலேர்ந்து நமக்கு கொடுத்த "cultural consciousness" என்றானது- அவர்களின் மன நிலையை நமக்கு நன்கு உணர்த்தி விடுகிறது. ஆனால்- என்னைப் பொறுத்த வரையில்- அவர்களுடன் எல்லாவற்றையும் பற்றி பேசுவது தான் நல்லது. அவர்கள் 'evolve' ஆனது சித்தி அடைய, அவர்கள் குழந்தைகள் 'evolve' ஆவதும் அவசியம்.
"... மன்னார்குடி அரிசி கடச்சந்து வழியா நானும் எங்க அம்மாவும் நடந்து போயிண்டுருந்தோம். எனக்கு ஒரு ஏழு வயசு இருக்குமோ என்னவோ. மீன் maarket வழியா போயிண்டுருக்கும்போது, அங்க வேகவச்ச சவ்வாரிகட்ட கிழங்கு வித்துண்டுருந்தா, ரஞ்சிதம் . எங்க அம்மாவ பாத்துட்டு ஓடி வந்தா... 'தங்கச்சி... சௌக்கியமா? அண்ணன் எப்புடி இருக்குது'? ன்னு உரிமையா கேட்டா. 'இது என்ன உம்புள்ளையா'? ன்னு என் கன்னத்த தொட்டு கிள்ளினா. திருஷ்டி கழிச்சா... அப்பறமா எங்க அம்மா சொன்னா. எங்க மாமா பொறக்கும் போது எங்க பாட்டிக்கு ஜுரம். பால் கொடுக்கப்டாதுன்னு சொல்லிட்டாராம் வைத்தியர். ரஞ்சிதத்தோட அம்மாவுக்கும் அப்போ தான் கொழந்தை பொறந்திருந்துது. அவ அம்மாக்கு ஒரு படி நெல்லு-ங்கராப்ல ஏதோ பேசிண்டு, எங்க மாமாவுக்கு ரஞ்சிதத்தோட அம்மா தான் பால் கொடுத்தாளாம். அந்த முறைல எங்க அம்மா அவளுக்கு 'தங்கச்சி'... "- இதை ஒற்றை வரியிலும் சொல்லலாம். ஆனால்- அந்த 'தங்கச்சி' என்ற வார்த்தையின் கனத்தை- அந்த சமூஹத்தின் தன்மையை புரிந்துகொண்டாலேயன்றி ரசிக்க முடியாது. 'இதனை ஏன் ரசிக்கவேண்டும்'- என்று கேட்பவர்களுக்கு, நாம் சொன்னாலும் புரியாது...
ஒரு மணி நேரம் அப்பாவுடன் நடந்த சம்பாஷணை. ஒரு மணி நேர -"Time Travel". ஒரு மணி நேர "Introspection"...
16 comments
தங்கச்சீ யா?ஹ்ம் நல்லா எழுதி இருக்கீங்க..ஆனா முடிவா என்ன சொல்ல வரீங்கன்னுதான் புரியல்:)
படிக்க நன்றாக இருந்தது.சில பழைய பழக்க வழக்கங்கள் மனதை நெருடினாலும்,அந்த கால கட்டத்தில் மனிதாபிமானம் சில விஷயங்களில் கூட இருந்ததோ என்று எண்ண வைக்கிறது
‘’Children are walking flower’’ உங்கள் அப்பப்பாவின் கடிதம் சிலிர்க்க வைக்கிறது இதற்கப்புறம் எந்த டீச்சருக்கும் யாரையும் அடிக்க கை வராது…
கால வேற்றுமை பழக்க வேற்றுமை அப்பா அழகாக சொல்ல மகள் கோர்த்து சொன்னது நன்றாக இருந்தது…
ஒரு காலகட்டத்தில் இந்த உயர்வு மனப்பான்மை மனப்பூர்வமாக எல்லா முனைகளிலிருந்து அனுமதிக்க பட்டிருந்தது
காலவெள்ளத்தில் உயர்வு மனப்பான்மையில் இருந்தவர்கள் நேர் நிறையாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்…
பாரதி சொன்ன ’’நாவிதனும் சித்தப்பன் ஆவான் ‘’ நெருங்கி கொண்டிருக்கிறது ..மனிதத்தில் பல முன்னேற்றங்கள் சில இழப்புகள்….
இதே சூழலில் வாழ்ந்ததாலோ என்னவோ
இந்தப் பதிவில் சொல்லிப் போகும்
விஷயங்கள் எல்லாம் நிழற்படம் போல
கண் முன்னால் விரிந்து கொண்டே போனது
வண்ணான் தேய்த்து கொணர்ந்த துணியை
மீண்டும் நனைத்துப் போடுவது
பஸ்ஸில் டவுனுக்குப் போய் வந்தால்
குளித்து விட்டுத்தான் விட்டிற்குள் நுழைவது
இது மாதிரியான விஷயங்களை எல்லாம்
என் பிள்ளைகளிடம் சொன்னால் கூட
நம்ப மறுக்கிறார்கள்
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
அந்தக்கால சமூகத்தின் நிலையைப் புரிந்து கொள முடியும் என்று தோன்றவில்லை என்கிறீர்கள். அப்பாவுடன் கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசியபோதே இவ்வளவு எண்ணங்கள் தோன்றுமானால் நம் கலாச்சாரங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் தெரிந்து கொள்ள முயன்றால் அவற்றின் மதிப்புகளும் , சீர்கேடுகளும் தெளிவாகத் தெரியும். விருப்பத்துடன் அணுகினால் குறைகள் தெரியாது. வெறுப்புடன் அணுகினால்
குணங்கள் ஒரு ஆப்ஜெச்டிவ் அனாலிசிஸ் தேவை. எந்தக் காலத்திலும் வாழ்க்கையின் வால்யூஸ் மாறுவதில்லை. எழுதிக்கொண்டே போகலாம். சிந்திக்கத் துவங்கி விட்டீர்கள் என்று தெரிகிறது. ஆல் த பெஸ்ட்.
வெறுப்புடன் அணுகினால் குணங்கள்
‘தெரியாது “ சேர்த்துக்கொள்ளுங்கள்.
'பல பரிமாண வலை' பரவலான ஆழமான வர்ணனை.
Teacher அடித்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்!// different times... அதே ரீதியில் ஒப்பிட முடியுமென்று தோன்றவில்லை. ஏகலைவனை வைச்சுப் பார்க்கும் போது துரோணரை என்னனு சொல்றது? இன்னிய teachers பத்தி என்ன சொல்றது? சுவாரசியமான சிந்தனையைக் கிளப்பி விட்டீர்கள்.
vicarious "time travel" - beautiful!
Every generation learns from the practices of older generations.What is intriguing is the highly elevated thinking on the one hand and highly objectionable practices on the other hand of our older generations!There was such a wide gap between thinking and living - was it called culture? Lot has been written about this.I still feel that such practices are still there in some places - south or north!Good to read such biographical notes!Keep blogging!
ஒரு நல்ல கதை படித்த உணர்வுதான் ஏற்படுகிறது.
இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது. பாட்டி,அவருக்குப் பிறகு அம்மா. அதற்குப் பிறகு நான் . எங்கள் வீட்டில் எச்சில் பத்து இருக்கிறதா.? அம்மா சொன்ன எச்சில் இரக்க அடிக்கும் ,பத்து பரக்க அடிக்கும் நினைவில் பதிந்திருக்கிறது.
உங்களோட போஸ்ட் படிக்கும் போது ஒவ்வொரு வரியையும் ஜாக்கிரதையா படிக்க வேண்டி இருக்கு, இல்லைனா ஒரு வார்த்தைல கூட சுவாரசியமான ஒரு விஷயத்தை நாங்கள் இழக்க நேரிடலாம். அழகான வார்ப்பு!
இந்த எச்சில்/பத்து நானும் ரொம்ப பார்ப்பேன்.
Made for very interesting reading. As you summarize, it felt like a time warp. Nostalgia is a two-edged sword. Anyway, you could always look at it as today is tomorrow's nostalgia and live today as is.
Loved your narration flow. ரொம்ப நல்லா எழுதியிருக்கே. வாழ்த்துக்கள்.
காலச்சக்கரத்தில் ஏறி ஒரு ஐம்பதாண்டு காலம் பின்னோக்கி பயணித்து, கிணற்றினுள் கிடந்த பழங்காசை கண்டெடுத்த அனுபவம். அது இன்று செல்லாக் காசாயினும், அதன் இன்றைய மதிப்பு அந்த காசைவிட பல மடங்கதிகமாகத்தான் உயர்த்திருக்கிற நிறைவாய் இந்த பதிவு. ஏன் இந்த திடீர் பயணம்? குழந்தைகிட்ட நம்ம கால கட்டத்தையை சொல்லிப் புரியவைக்க முடியாத ஆதங்கமா?
தி.ஜானகிராமன் , கு.ப.ராஜகோபாலன் , மற்றும் லா.ச. ரா., தேவன் போன்றவர்களுடைய படைப்புகளைப் படிக்கும்பொழுது , அந்த காலகட்டத்தின் கலாச்சார வாழ்கைப்பதிவுகள் நன்கு புலப்படும் ... தன்வயப்பட்ட, சிந்தனை மிகுந்த நேரங்களில், என் பால்யகாலநினைவுகளிலும் இலக்கியத்தரம் வாய்ந்த சில காட்சிகளை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் அவகாசத்தைதான் , நான் , உன்னுடன் செலவிடும் quality -time என்று கருதுகிறேன் ...இவையெல்லாம் நம்முடைய ஆணிவேரை கெட்டிப்படுத்தும் / உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன் ..will help us remain well-anchored/ well-balanced ...to know the difference between temptations and opportunities... Indeed I am happy with your 'understanding '
உன் புரிதலில் எனக்கு சந்தோஷமே.. கிட்டதிட்டஅறுபது வருஷத்திற்கு முந்திய இந்த " தங்கச்சி "
கதையை நீ பதிவு செய்ததில் எனக்கு மட்டற்ற மகிச்ழ்ச்சி ...வாழ்த்துக்கள் ... மாலி .
I was introduced to your blog by my cousin. I have just read three of your posts but that has been enough to feel impresses. As they say 'oru paanai sottrukku oru soru padam'.
You have juxtaposed the lofty and lowly aspects of old customs very well.
I too have often wondered how our elders could think so highly but still practice some inhuman customs - untouchability, for instance.
But then man is a mixture of good and bad. We somehow need to keep the good and discard the bad from the the customs and traditions handed down from generation to generation.
The humor, nostalgia and social comment that lace your compositions really deserve kudos.
"besh, besh"!
எங்கம்மா ரொம்ப ஆசாரம் எல்லாம் பார்க்க மாட்டா. ஆனாக்க அவா அம்மாவப்பத்தி என்ன சொன்னாளோ அதெல்லாம் உங்கப்பதிவுல இன்னைக்கு படிச்சேன்.
பிரமாதமா எழுதறேள் மாதங்கி.வாழ்த்துக்கள்.
அந்த கிணத்துல இரங்கறவரப்பத்தி நீங்க எழுதினது நன்றாக் இருக்கு. நானும் சின்ன வயசில வேடிக்கை பார்த்தது நினைவுக்கு வந்தது.
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
14 hours ago
-
4 days ago
-
1 week ago
-
2 weeks ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".