சினிமா பாடல்களில் ராகமாலிகை- Degree காபி 3  

Posted by Matangi Mawley


ராகமாலிகை-அப்டீங்கற ஒண்ணு- கர்நாடக சந்கீதத்துக்கே உரியதான ஒரு விஷயம். ஒரு பாட்டோட ஒவ்வொரு வரியோ, ஒவ்வொரு சரணமோ- வெவ்வேறு ராகத்துல அமைக்கப்பட்டிருந்தா அத ராகமாலிகை-ன்னு சொல்லலாம். ஒரு அழகான விஷயம் இதுல என்னன்னா- ஒரு கர்நாடக கச்சேரி-ல ஒரு வித்வானுக்கு, ஒரே பாட்டுல வெவ்வேற ராகங்கள "explore"/"experiment" பண்ண, இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனா சினிமா-ல ராகமாலிகை-ங்கறது, ஒரு தனி விஷயம் தான். சினிமா-ல ஒவ்வொரு scene /situation கு ஏத்தாப்ல பாடல்கள் அமைக்கப்படும் சூழ்நிலைல, ராகமாலிகைகள கையாளறது-ங்கறது ஒரு தனித்துவம் வாய்ந்த விஷயம்- அப்டீங்கறது என் கருத்து. அந்த காலத்துல, தமிழ் சினிமா பாடல்கள்-ல நல்ல strong கர்நாடக சங்கீத சாயல் இருந்தது. "Light music ", "சினிமா music "- வரதுக்கு கொஞ்சம் காலம் ஆச்சு. அது வரைக்கும், சினிமா பாடல்கள்-ல கர்நாடக சங்கீதம் தான் ப்ராதாநித்து இருந்தது.

Romance, comedy, Sentiment -னு எத்தனையோ விஷயங்கள் நிரஜ்ஞ்சு இருக்கும் சினிமா-ல, கர்நாடக சந்கீதத்துக்குன்னே உரியதான, ராகமாலிகைகள- எப்படி use பண்ணினார்கள்- அந்த காலத்துல-அப்டீங்கரதுதான் ஆச்சர்யம்!

ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. அதன் தன்மை இருக்கு. அதிகாலை நேரத்த வரவேற்கும் ராகம், தூக்கத்தை அழைக்கும் ராகம், மோஹம் அளிக்கும் ராகம்- கல்லையும் கரைத்திடும் ராகம், இருட்டில் ஒளி தரும் ராகம்- னு எத்தனையோ ராகங்களும், அதற்க்கான தன்மைகளும் உண்டு. இத போல தனித்துவம் வாய்ந்த ராகங்களோட ஆற்றல, நான் test பண்ணி பாத்ததில்ல. ஆனா, அந்த கால music directors, இத test பண்ணிருப்பார்கள் போல தான் தோணறது. ராகமாலிகைகள சினிமா-ல use பண்ண வசதியான situations அமஞ்சிருந்துது, அந்த கால சினிமாக்கள்ல. உதாரணத்துக்கு, ராகங்கள பத்தியும், அதன் தன்மைகள பத்தியும் பேசினோம், இல்லையா? "சம்பூர்ண ராமாயணம்" ங்கற சினிமா-ல ராவணனோட அபூர்வமான வித்வத்-அ வெளி கொண்டுவரும் ஒரு காட்சி. ராவணன், அவர் சபைல பாடறது போல ஒரு scene. இந்த பாட்டுல என்ன interesting விஷயம்-னா, இந்த பாட்டுல கேள்விகள் கேட்பார்கள்- "காலையில் பாடும் ராகம்? யுத்த ராகம்"? னு. ராவணன், அந்தந்த கேள்விகளுக்கான பதில அழகா பாடி காமிப்பார். அந்த ஒரு வரி-ல அந்த ராகத்தோட முழு சாயலும் வரும், அந்த ராகத்தோட பெயரும் வரும்! இத விட அழகா, common man கு சங்கீதத்த கொண்டு சேர்க்க முடியுமா, தெரியல. அந்த பாட்ட கேக்க- click here.

சம்பூர்ண ராமாயணத்துல பாட்டுக்கா பஞ்சம்? எல்லா பாட்டுமே ரொம்ப அழகான பாட்டு தான்! "இன்று பொய் நாளை வா"-ன்னு திலங் ராகத்துல அமைக்கப்பட்ட அந்த பாட்டு கூட எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே போல ராகத்தோட பெயர் வராப்ல "அகஸ்தியர்", அப்டீங்கற சினிமா- லயும் ஒரு ராகமாலிகை இருக்கு. "வென்றிடுவேன்"- ங்கற அந்த பாட்ட கேக்க- click here.

யோசிச்சு பாக்கும் போது, அந்த காலத்துல இத போல ராகத்தோட பெயர் பாட்டிலேயே வராப்ல அமைக்கப்பட்ட பாடல்கள் நிறையாவே இருக்கு-ன்னு தான் தோணறது. எனக்கு, இந்த பட்டியல்-ல ரொம்பவே பிடிச்ச ஒரு ராகமாலிகை- 'சிவகவி' ('47) சினிமா-ல, பாபநாசம் சிவன் music ல அமஞ்ச "வசந்த ருது"-ங்கற பாட்டு! அந்த கால "Super Star"- MKT பாடின பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

அந்த காலத்துல ராஜா/ராணி/மாய மந்திரம் படங்கள் நிறையா வந்ததும், ராகமாலிகைகள அழகா சினிமால பிரயோகிக்க வசதியா அமஞ்சுருந்துது. ஏன்னா- இத போல Mythological சினிமாக்கள்-ல situation கு பஞ்சமே இருந்ததில்ல. இதனாலேயே- பல ரொம்ப அழகான ராகமாலிகைகள்- சினிமாக்கள்-ல நமக்கு கிடைச்சுது. "வேதாள உலகம்" சினிமா-ல DKP அம்மா பாடின பாரதியார் பாட்டு- "தீராத விளையாட்டு பிள்ளை"! இன்னுமும் அது ஒரு "concert favourite". இந்த பாட்டுக்கான situation லாம் Mythological கதைகள்-ல தானாவே அமைந்து போய்டும். ராஜ- சபைல நடக்கும் நடன காட்சியா. இன்னொரு ரொம்பவே அழகான பாரதியார் பாட்டு, ராகமாலிகை- '57 ல வந்த, கலைஞர் எழுதின "மணமகள்" அப்டீங்கற social drama ல இருக்கு. ரொம்ப பிரபலமான பாட்டும் கூட. Lyrics அ முழுசா உணர்த்தக்கூடிய ஒரு music. அமைதியான 'காபி' ல ஆரம்பிச்சு- கொஞ்ச கொஞ்சமா affection கும் passion கும் நடுவில் உலவும் 'மாண்டு' ராகத்த தொட்டு, ஒரு rage ஓட அந்த border அ 'வசந்தா' ராகத்தால கடந்து- கடந்தப்ரம் 'திலங்' ஒரு விதமான அமைதி- அமைதி-கப்ரம் ஏதோ ஒரு சொஹம் கலந்த சுகம்- 'சிவரஞ்சனி' ராகத்துல- ன்னு அந்த "சின்னஞ்சிறு கிளியே பாட்டு" ஒரு encyclopedia of ராகமாலிகா தான்!

இதே சினிமா-ல MLV -P லீலா combination ல இன்னும் ஒரு அபூர்வமான ராகமாலிகா இருக்கு. இந்த combination ல நிறைய பாடல்கள் இருந்தாலுமே- இந்த பாட்டுக்கு ஒரு தனி இடம் தான். "எல்லாம் இன்பமயம்" பாட்டு கேக்க- click here.

60s ல மறுபடியும் ராகமாலிகைகள பிரயோகிக்கும் கடமை- Mythological சினிமாக்களுக்கு போய் சேர்ந்தது. K. V. மஹாதேவன் அவர்களோட அபாரமான music ல "திருவிளையாடல்" சினிமால- வரும் "ஒரு நாள் போதுமா" பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here. இந்த பாட்டு பிரமாதம் தான். பாலமுரளிக்ருஷ்ணா அவர்களோட குரலும் பிரமாதம் தான். ஆனா- இத எல்லாத்த காட்டிலும்- T. S. பாலைய்யா-வோட histrionics - Chance ஏ இல்ல!

Romance ராகமாலிகைகள்-ல குறைவு தான்- என்றாலும்- அந்த area லயும் கொஞ்சம் பாடல்கள் கொண்டு வந்தது- பெரிய விஷயம் தான். Dance கு dance, romance கு romance- ங்கற விதத்துல அமைந்த பாட்டு- "உத்தம புத்திரன்" சினிமா-ல வந்த "காத்திருப்பான் கமல கண்ணன்". இந்த பாட்ட கேக்க- click here. ஆனா- இந்த ராகமாலிகா பாடல்களிலேயே- என்னோட ரொம்ப ரொம்ப இஷ்டமான பாட்டு- "மணாளனே மங்கையின் பாக்கியம்" சினிமா-ல வரும், ஆதிநாராயண ராவ்-ஓட inimitable music ல ஒலிக்கும்- "தேசுலாவுதே". இந்த படத்த, சின்ன வயசில 30-40 தடவ பாத்த அனுபவம் இருக்கு. பறக்கும் பாய், மந்திர தந்திர கமண்டலம்-னு- குழந்தைகளுக்கு தேவையான எல்லா சமாசாரமும் இருக்கும். இந்த பாட்டு- இத பாட தெரிஞ்சாச்சு-ன்னா எந்த Music contest யும் win பண்ணினடலாம். அத்தன கஷ்டமான- but அபூர்வமான பாட்டு. இந்த பாட்ட கேக்க- click here.

ராகமாலிகைகள்- சினிமா பாடல்கள்-ல இப்போலாம் அவ்வளவாக இல்லாம போய்டலாம். ஆனா- இந்த பாடல்கள் எல்லாமே- கடந்த காலம், நமக்கு கொடுத்த ஒரு பரிசு. இந்த பாடல்கள வருங்காலத்துக்கு கொண்டு போறது, நம்ம கடமை. இது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

PS: Degree காபி Series: மி மராதி -- GR -- Degree காபி

Paper - ல பேரு...  

Posted by Matangi Mawley

"The Hindu"- 13th July ., 2011 - "Letters to the Editor"...

"Paper ல பேரு வர அளவுக்கு நன்னா படிக்கணும்"னு- என் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது... :)

Tag டோய்...  

Posted by Matangi Mawley

கொஞ்ச நாளைக்கு முன்னாடி- "என்னடா இது... அவ்வளவு தான் தமிழ் blog ஆ?? ஒண்ணுமே எழுத தோணலையே..." அப்டீன்னு யோசிச்ச போது-- தக்குடு boss "உங்கள tag பண்ணிருக்கேன்...." அப்டீன்னார்! சரி--- நம்ம blog கு இன்னும் கொஞ்ச காலம் இருக்கு போலருக்கு-ன்னு தோணித்து...

குறிப்பு: 1 ... 2 ... ன்னு குறிப்பிடற order ல தான், அந்த விஷயங்களோட முக்கியத்துவம்- னு கிடையாது...

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

"இன்னது"- ன்னு சொல்லவே முடியாது. அப்பப்போ, ஒவ்வொண்ணு பிடிக்கும். "Mood" அ பொறுத்தது. இருந்தாலும்--

> உபயோகமுள்ள பேச்சு- அறிவுக்கு பயனளிக்கற பேச்சு. நல்ல விஷயங்கள பத்தி. Music /Books பத்தி. நல்ல மனிதர்கள பத்தி. நல்ல மொழி-ல அமைந்த பேச்சு. சொற்பொழிவு. எனக்கு Obama வோட Speeches ரொம்ப பிடிக்கும். அவர் ஏதாவது செய்யராரோ, இல்லையோ-- அவர் குரல்/content /அத அவர் வெளிப்படுத்தற விதம்! எனக்கு Amitabh Bachchan குரலும் ரொம்ப பிடிக்கும். "Main Aazaad Hoon" ன்னு ஒரு படம். அதுல அவர் ஒரு Speech கொடுப்பார். (click here) முடிஞ்சா அந்த படம் கூட பாக்கலாம். அந்த Speech ல அவர் குரல்!!!! பாஷ புரியணும் னு அவசியம் இல்ல. அந்த ஒலி போதும்...
> Books. கொஞ்ச நாளைக்கு முன்னாடி- என்னோட படிக்கற பழக்கத்துக்கு கொஞ்சம் இடையூறு வந்தது. அப்போ தான் நான் realize பண்ணினேன். என்கிட்ட இருக்கற ஒரே நல்ல குணம் இது தான். இதுவும் போச்சு-ன்னா, என்ன பத்தி பெரும பட்டுக்கக்கூடிய விஷயம்-னு எதுவுமே கிடையாது-ன்னு. அந்த பழக்கத்த விடாம எப்புடியோ திருப்பி படிக்க ஆரம்பிச்சாச்சு. மறுபடியும் அத நிறுத்தாம தொடர முயற்சி பண்ணிண்டு இருக்கேன்.
> இசை/ Fountain pen/ தாழம் பூ/ பழங்கதைகள்/ பாட்டி/ வையாளி [இத போல ஒரு விஷயத்த எங்க ஸ்ரீரங்கத்துல மட்டுமே பாக்கலாம்- click here]/ பெரிய பெரிய கோலம்/ ஜிமிக்கி/ கனவு/ சிரிப்பு/ அழகான கையெழுத்து (hand writing)/ புழுக்க pencil/ ஓவியம்/ தூக்கம்/ நூலகம்/ ஜோல்னா பை/ மழைல football விளையாடற பசங்க... எத்தனையோ சொல்லலாம்...

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

> தேவ இல்லாம அதிகாரம் பண்ணறது
> மனிதாபிமானமில்லாத [ஜீவராசிகளித்தலும் கூட] செயல்கள்...
> Gossiping [வம்பு] / வத்தி வைக்கறது/ அவதூறு/ டம்பம் / அடுத்தவன் செய்யறானே-ன்னு தானும் செய்யறது...

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

> என் Future அ பத்தி- ரொம்பவே பயம் உண்டு. ஏன் ன்னு தெரியாது.
> துப்பாண்டி-யோட அம்மா போனதுலேர்ந்து- அவன் தூங்கும்போது "மூச்சு விடரானா"ன்னு பாத்துண்டே இருக்கேன்...
> அப்பா கூட வெளீல போனா-- வண்டிய பாத்துக்கோ-- ன்னு நிக்க வெச்சுட்டு எங்கயாவது போய்டுவா. ரொம்ப ரொம்ப ரொம்ப பயமா இருக்கும். சின்ன வயசுல ஒரு தடவ அப்படி பண்ணினதுல நான் ரொம்ப பயந்து போய்- கெட்ட கனவு வந்து- விடியற் காலேல எழுந்து அழுது- அம்மா-கிட்ட அப்பாக்கு நல்ல dose வாங்கி கொடுத்தேன். இப்போ கூட எப்போவாவது அப்படி விட்டுட்டு போறப்போ- பயமா தான் இருக்கும்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

நிறையா விஷயங்கள் இருக்கு-- இன்னது-ன்னு சொல்ல முடியல...
எங்க துப்பாண்டி பேசறது புரிஞ்சா நன்னா இருக்கும்...
ஒரு சில சமயத்துல என் mind ல தோணற விஷயங்கள் எனக்கும் கூட புரியல...

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

மேஜை-ன்னு தனியா எதுவும் கிடையாது. Office ல-ன்னா ஒரு ஓட்ட computer னு சொல்லலாம். வீட்டுல-- மேஜை மேல உக்காந்து வேல பண்ணற பழக்கமெல்லாம் கிடையாது. நிறையா books அங்க இங்க கெடக்கும். பேனா - இடறி விழுந்தா ஒரு பேனா கடைக்கும்... Laptop - அது இல்லாம நம்ளால இருக்கவே முடியாது... இன்னும் எத்தனையோ விஷயங்கள்...

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

> இந்த Tag கொடுத்த "தக்குடு" Boss ஓட blog
> Tom and Jerry / Harry Potter books ல ஒரு சில இடங்கள்/ Jim Carrey படங்கள்...
> காரணமே இல்லாம கூட சிரிப்பு வரும்... Bus ல auto ல போகும் போது- ஏதாவது திடீர்னு தோணும்-- சிரிப்பு வரும்... என்ன பாத்தது இன்னும் சில பேருக்கும் சிரிப்பு வரும்...

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

ஒரு சில "planning" வேலையெல்லாம் பண்ணிண்டு இருக்கேன்...
இந்த Tag அ எழுதிண்டு இருக்கேன்...

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

பொறந்து இந்த 24 வருஷம் உருப்படியா எதுவுமே செய்யல! உண்மை என்னன்னா- இன்னது செய்யணும்- னு தோணல... யோசிச்சு பாக்கும் போது-

> ஏதாவது ஒரு விஷயத்த பத்தி- முழுசா தெரிஞ்சுக்கணும். இந்த விஷயத்துல- இந்த பொண்ண கேட்டா போரும்- வேற யாரையும் கேக்க வேண்டாம்-ங்கற அளவுக்கு ஏதாவது ஒரு விஷயத்த பத்தி தெரிஞ்சுக்கணும்.
> நிறையா travel பண்ணனும். பல ஊர்கள/நாடுகள பாக்கணும். ஒரு தடவையாவது Paris/ Venice/ Egypt -கு போகணும். India பூராவும் ஒரு tour போகணும். ஒவ்வொரு குக்க்ராமமும் பாக்கணும். மக்களை பாக்கணும். கொவில்கள பாக்கணும். அந்த ஊர் கலாச்சாரத்த பத்தி தெரிஞ்சுக்கணும். அந்த ஊர் சாப்பாடு சாப்டனும்.
> எங்க அப்பா படிச்சிருக்கற எல்லா புஸ்தகங்களையும் நானும் படிக்கணும்... அதுக்கு மேலையும் படிக்கணும்... ஒரு Book ஆவது எழுதணும்.
> ஒரு தடவையாவது J . K . Rowling யும், ரஹ்மான் யும் நேர்ல பாக்கணும்!

9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?

நல்ல விஷயங்கள கேக்க முடியும்.
நல்ல விஷயங்கள பாத்தா ரசிக்க முடியும்.
நல்ல விஷயங்கள பத்தி பேச முடியும்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

> போலித்தனம் நிறைந்த எந்த விஷயத்தியுமே கேக்க பிடிக்காது.
> "உன்ன பத்தி அவ அப்படி சொல்லரா"-ன்னு என்கிட்ட ஒருத்தர் சொன்னா- அத கேக்க பிடிக்காது.
> Negative opinions - கெட்ட அவிப்ராயங்கள்-- கேக்க பிடிக்காது.
> ஒருத்தரோட வருத்தம் தரக்கூடிய "embarrassment" அ பத்தி கேக்க பிடிக்காது.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

> நிறையா பாஷ- பேச/எழுத/படிக்க- கத்துக்கணும்.
> நிரவல்/கல்பனா ஸ்வரம்/ ஆலாபன- எல்லாமா இருக்கறாப்ல ஒரு பாட்டாவது பாட கத்துக்கணும். [Especially - "
இன்னுதய பாராதே"-ன்னு கல்யாண வசந்தத்துல ஒரு புரந்தரதாசர் பாட்டு இருக்கு. அத விஸ்தாரமா பாட கத்துக்கணும்-னு ரொம்ப ஆசை...]/ நிறையா Musical instruments வாசிக்கவும் ஆசை...
> Effective ஆ- ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காம- பயனுள்ளதா மாத்தி வாழறது எப்புடி-ன்னு கத்துக்கணும்... அதுக்கு ரொம்ப அவசியமா- ஒரு சமயத்துல- ஒரு விஷயத்துல மட்டுமே கவனம் செலுத்தறது எப்புடி-ன்னு கத்துக்கணும். தொ பாருங்கோ-- 11th question எழுதிண்டு இருக்கேன்... இன்னும் mind 8th question லியே இருக்கு...

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பாட்டி சமையல
தவிர்த்து...

> ஆவக்கா மாங்கா ஊருகாய போட்டு mix பண்ணின rice
> மாகாளி ஊருக்காய்/ சத்தரம் bus stand "ரகுநாத் hotel " ரவா dosa/ Degree coffee/ இஞ்சி morabba/ Puchkaa [Calcutta ல road ஓரத்துல -பானி பூரி கிடைக்கும்... அத Puchka ன்னு சொல்லுவா- அங்க]/ Calcutta Chetla Mod -ங்கற எடத்துல இருக்கற "DiDi கட" Shingaadaa [samosa]/ கத்தரிக்காய் ரசவாங்கி-பொடலங்காய் கரி...
> வடாம் மொட்ட மாடில காய போட்டுருக்கறத "திருடி" திங்க பிடிக்கும்...

13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?

[லிஸ்ட் பெருசானதுக்கு-- sorry ...]
தல ரஹ்மான் பாடல்கள தவிர்த்து--

> தமிழ்: பூங்கதவே தாள் திறவாய்... கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே [அதுல பானுமதி அம்மா குரல்-- ஆஹா!] ... உன் சிரிப்பினில்... மலரே மௌனமா... கல்யாண தேன் நிலா...
> ஹிந்தி: Aap ki nazron ne samjha ... E Ajnabi [தல பாட்டு தான்-- எழுதாம இருக்க முடியல...] ... Jaaiye aap kahaan jaayenge ... Tere Ishq mein [ரேகா பரத்வாஜ் குரல்-- chance ஏ இல்ல...] ... Agar Tum mil jao [பழைய version ...] ... Jiya dhadak dhadak ...
> மலையாளம்: பிணக்கமாணோ ... [இந்த பாட்ட கேக்கரத விட பாக்கறது தான் பிடிக்கும்... அதுக்கு Ravi Varma paintings ல கொஞ்சம் பரிச்சயம் இருக்கணும்..அவரோட நிறையா paintings பாக்க- click here ... ]... நாதா நீ வரும்போள்... பொன்னில் குளிச்சு நின்னு... தீபம் கையில் சந்த்யா தீபம்... ஸ்வர ராக கங்கா பிரவாஹம்... கோபிகே நின் விரல்... ஸ்வர்ண சாமரம்... தேவாங்கனங்கள்...

14) பிடித்த மூன்று படங்கள்?

[லிஸ்ட் பெருசானதுக்கு-- sorry ...]

> ஹிந்தி: Abhimaan, Wednesday, Dhobi Ghat, Chamatkaar [இதுல Naseeruddin Shah வ ரொம்ப பிடிக்கும்], Ankur
> தமிழ்: மணாளனே மங்கையின் பாக்கியம், நாயகன், மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, மைக்கேல் மதன காம ராஜன், திருவிளையாடல் -ல தருமி பகுதி மட்டும், தில்லானா மோகனாம்பாள், சென்னை 28
> English: Sound of Music, animation movies [Lion king /Shrek /Finding Nemo , etc ], Gladiator, Cast Away, You ve got mail , Bruce Almighty
மலையாளம்: பெருமழக்காலம், வானப்ரஸ்தம், வாஸ்தவம், My Dear குட்டிச்சாத்தான், மனிச்சித்ரதாழம், தேன் மாவின் கொம்பத்து, காட்டத்தே கிளிக்கூடு...
> Bengali : Agantuk, charulatha, Unneeshe April, Seemaabadhdha, Shob Charitro Kalponik
மொழிக்கு அப்பாற்பட்டவை: The Bicycle Thief, Life is Beautiful, Pushpak, the kid /city lights (Chaplin ), Children of Heaven

List இன்னும் இருக்கு... profile page ல...

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?

books / music / passion for life and to live ...

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

யாருக்கு இந்த Tag பிடிச்சிருந்துதோ- அவங்க எல்லாருமே இத எழுதலாம்...

இந்த்ரப்ரஸ்தம்  

Posted by Matangi Mawley


எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். நல்ல ஜுரம். அப்பா, office இற்கு leave சொல்லிவிட்டு, என்னை
கவனித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் நான் சாப்பிடும்போது அப்பா கதை சொல்லுவது வழக்கம். இப்பவும் கூட. சமயம் கிடைக்கும் போது. எனக்கு தெரியாத கதை அப்பா-வுக்கு நினைவு வரும் போது. சரி. அன்று- அப்பா-வின் கண்ணில் கண்ணீர். அந்த கண்ணீருடன் பரிச்சயம்- அதுவே முதல் தரம், எனக்கு. ஒரு மாவீரன். சிறுவன். அவனை சூழ்ந்து கொண்ட பல பகைவர்கள்- அவனைக் காட்டிலும் நிறைய வாழ்ந்தவர்கள். அவனது உறவுகள். இறக்கும் தருவாயிலும் அவனது வீரத்தின் உச்சத்தை- தேர் சக்கரத்தை உடைத்து எடுத்து அவன் போர் புரிந்து காட்டினான்- என்ற விஷயம் தான், அந்த கண்ணீர். அந்த கதை- எனக்கு அப்போது புரியவில்லை. என்னை அபிமன்யு-வின் வீரத்தைக் காட்டிலும், அப்பாவின் கண்ணீர் தான் மிகவும் பாதித்தது. அது தான் முதல் முறையாக நான் மகாபாரதக் கதை கேட்டது.

நமது கலாசாரத்திற்க்கே உண்டான ஒரு சில விஷயங்களில்- நாம் இன்னார்- என்று நமக்கு எடுத்துக் காட்டுவதற்கு அத்யாவசியமானது- ராமாயணமும், மகாபாரதமும். இந்த உண்மையை புரிந்து கொள்ளும் பக்குவம் என் சஹ வயதினருக்கே இருப்பதாகத் தோன்றவில்லை. அது போகட்டும். எனக்கும் என் அப்பாவிற்க்குமே ஒரு சில வாதங்கள் உண்டு. ராவணன் மீதும், துரியோதனன் மீதும் எனக்கு ஒரு பரிவு உண்டு- என்பதைக் குறித்து. ராமன்- சீதையை "அக்னி பிரவேசம்" செய்யத் தூண்டியது குறித்து. அவளை நாடு கடத்தியது குறித்து. "அந்த கால வழக்கங்கள்- இன்றைய கால கட்டத்தோடு அதை ஒப்பிட்டு பார்ப்பது தகாது"- என்று அப்பா என்னை சமாதானப் படுத்தினாலுமே- இந்தக் கதைகளில் கூறப்படும் ஒரு சில விஷயங்களுடன் எனக்கு ஒப்புதல் கிடையாது.

எனக்கு இந்தக் கதைகளின் மீது பற்றுதல் இருந்தாலும், ஈர்ப்பு இல்லாததற்கு மற்றும் ஒரு காரணம்- இந்தக் கதைகளில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. அதற்காக நான் ஒரு "Feminist" என்று கொடி தூக்கவில்லை. எனக்கு அந்த சித்தாந்தத்தில் அவ்வளவாக ஈடுபாடும் கிடையாது. ஆனாலும்- ஒரு சில சமயங்களில், ஒரு சில விஷயங்கள்- இந்தக் கதைகளில், என் புரிதலுக்கு அப்பால் இருப்பது, கொஞ்சம் வருத்தம். "காலகட்டம்", "தேவ ரஹசியம்" என்றெல்லாம் எத்தனை விதமாக இந்த விஷயங்களை ஞாயப் படித்தினாலும்- என்னால் அவைகளை ஏற்க முடியவில்லை.

அதுபோகட்டும். மகாபாரத கதை- இரண்டு, மூன்று எழுத்தாளர்களின் பாணிகளில் படித்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறை படித்த போதும் ஒவ்வொரு அனுபவம் ஏற்படும். எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை எத்தனை எண்ணங்கள். எண்ணப் போக்குகள். ராஜாஜி-யுடைய மகாபாரதமே முழுமையான ஒரு மகாபாரதக் கதை படித்த உணர்வு அளித்தது. ஆனாலும்- இவை எந்த பரிமாணமுமே- இந்தக் கதையின் பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய/தகுந்த மதிப்பை அளிக்கவில்லை- என்ற குறை மட்டும் மீதம் இருந்தது. இத்தகைய ஒரு சந்தர்பத்தில் தான், சமீபத்தில் Chithra Banerjee Divakaruni அவர்கள் எழுதிய "The Palace of Illusions" என்ற புத்தகம் படிக்க நேரிட்டது.

ஒரு புது விதமான பாரதம். இப்படி நடந்ததோ- என்று எனக்குத் தெரியாது. ஆனால்- இப்படியும் நடந்திருக்கலாம்- என்றுத் தோன்றியது. இதில் என்ன புதுமை? மகாபாரத்தின் நாடி- த்ரௌபதி. அவள் கதை இது. இதற்கு முன்னர் நான் படித்திடாத கதை இது. ஒரு பெண்ணால் ஆன/அழிந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதையை- அவளே கூறுவது தானே தகும்? அது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

எதிர் பாராத தருணத்தில் ஜனித்த மகள். அவளது பிறப்பின் பயன் யாது- என்று வியந்த அவள் உறவுகள். தமது அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள பெற்ற மகனுடன்- ஏன் இப்படிப்பட்ட ஒரு மகள் நமக்கு? என்று வியந்த தந்தை. மணக்கப் போகும் கணவர் யார் எனத் தெரியாத மணமகள். மணந்த கணவனுடன் சேர்த்து, நால்வர்- அவனது சஹோதரர்களுக்குப் பங்கு போடப்பட்ட மனைவி. மயன் அமைத்த "மாயா மாளிகை"யின் மகாராணி. கணவர்களாலும், சொந்தங்களாலும், ஞாயமெனும், தர்மமெனும் காரணங்கள் பல கூறி கை விடப்பட்ட ஒரு பெண். கணவர்கள் ஐந்து பேர் இருக்க- ஆறாவதாக ஒருவரின் மீது ஏன் இந்த லயிப்பு? என்பதற்கு விளக்கம் தேடும் ஒரு பெண்ணின் பயணம்- இந்த "The Palace of Illusions".

ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்- என்று வ்யாசர் அளித்த வரம். இந்த வரத்தைக் காட்டிலும்- அடுத்த கணவனிடம் செல்லும் தருணத்தில்- முந்தைய கணவனுடன் கழித்த நினைவுகளை மறக்க இயலும்படியான வரம் அளித்திருக்கக் கூடாதோ- என்கிறாள்! த்ரௌபதியின் மன நிலையை இதை விட அழகாக நான் இது வரை எந்த பாரதத்திலும் படித்திருக்கவில்லை. ஒரு பெண்ணாக அவளை முன்னே வைத்து அவளை இப்படி யாரும் சித்தரிக்கவும் இல்லை.

கர்ணன், அவளது சுயம்வரத்தில் பங்கேற்க முயல்கிறான். அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு. அவனைப் பார்க்கவோ, அவனைப் பற்றி ஆர்வம் கொள்ளவோ தடை விதிக்கப் பட்டிருந்தாலும்- தடை விதிக்கப் பட்டிருக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீதுமே இயல்பாக இருக்கக்கூடியதொரு ஈர்ப்பு. திருஷ்டத்யும்னன் கர்ணனைத் தடுக்க- கௌரவர்கள் கர்ணனுக்கு ஆதரவு தர- குடும்பத்தின் மானம் காத்திட, போர் புரியவும் தயாராக த்ரௌபதிக்கு முன்னே நிற்கும் அவள் அண்ணனைப் பார்க்கிறாள். தூண்டில் புழுக்களாக வளர்க்கப் பட்டவர்கள்- அவள் அண்ணனும், அவளும்; பழி தீர்த்துக்கொள்ள... உலகெங்கும் தன் புகழ் பரப்ப... அவள் மீது உண்மையாகவே அன்பு கொண்டவனாக இருந்தவன் அவள் அண்ணன் மட்டுமே. கௌரவ சேனையுடன் போரிட்டு அவன் மீளுவது கடினம். அது அவனுக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தில்- அவன் உயிர், கர்ணனின் மீதிருந்த அந்த லயிப்பை விட உயர்ந்து நின்றது. "தங்கள் தகப்பன் பெயர் கூறிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்"- என்று கர்ணனிடம் அவள் கூறியது, அவள் வாழ் நாள் முழுவதும், அவளைத் துரற்றியது. இப்படியொரு விளக்கம்- அவளது கேள்விக்கு- நான் இது வரையில் படித்திடவில்லை. இப்படிதான் அவள் மனதில் தோன்றியிருக்கும். அவள் கர்வம் கொண்டவள்-அல்ல. தருணம் அப்படி. அந்தத் தருணத்தை, இப்படி யாரும் வருணிக்கவில்லை.

கீசகன். இப்படியும் ஒரு உலகம். ராஜகுமாரியாக, ராணியாக இருந்த நான்- இப்படி ஒரு பணிப்பெண்ணாக! இப்படியா நடத்தப் படுகிறார்கள்- சாதாரணப் பெண்கள்? அரண்மனை ஆண்கள் இவர்களை இப்படியா பார்க்கிறார்கள்? நான் இந்த சூழ்நிலைகளிலிருந்து மீண்டு, மீண்டும்- மகாராணியானால்- என் மாளிகையில் பணிபுரியும் சாதாரணப் பெண்களுக்கு இப்படிப் பட்ட கஷ்டங்கள் வராமலிருக்கச் செய்வேன்- என்று நினைக்கிறாள்- த்ரௌபதி. இதுவரை நான் படித்திருந்த பாரதக் கதைகளில், இது வெறும் ஒரு அத்யாயம். ஆனால் இங்கு- இது ஒரு கதாபாத்திரத்தின் ஜனனம். பிற்காலத்தில், ஒரு பெரும் ராணியாக போற்றப்படப் போகும் ஒரு ராணியின்- ஜனனம்.

நான் மலையிலிருந்து விழுந்த தருணம்- பீமன் பதறியது. "அவள் ஏன் விழவேண்டும்"? என்று யுதிஷ்டிரரைக் கேட்டது. "நம்மை அவள் மணந்தாள்- ஆனால் ஒருவரின் மீது அவள் அதிகம் அன்பு கொண்டாள்". என்று அவர் பதில் கூற- என் மீது அதிகம் பிரேமை கொண்ட பீமன்- "யார்"? எனக் கேட்க- கொஞ்சம் பொறுத்தார், யுதிஷ்டிரர். என்னைப் பற்றி யாரும் அறிந்திட முடியாத ஒரு ரஹசியம்- என்று என்னில் நான் கொண்ட கர்வம்! யுதிஷ்டிரரின்- மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றலின் மீது என்றைக்குமே எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவரை நான் புரிந்துகொண்டதில் தான் தவறிவிட்டேன். நான் ஏன் பதறுகிறேன்? அவர் கூறப் போகும் பதிலின் மீது- ஏன் இத்தனை ஆர்வம், எனக்கு? என்னைப் பற்றி அவர் புரிந்து கொண்ட விவரத்தை அவர்க் கூறுவாரா? இந்த தருணத்திற்குப் பிறகு என் கணவர்களை நான் பார்க்கப் போவதுமில்லை. பிறகு ஏன் என்னைப் பற்றின அவர்களின் கடைசி அபிப்ராயத்தைக் கேட்டிருக்க இத்தனை ஆவல்? "அர்ஜுனன்..." என்றார். சத்தியத்தை விடவும், இரக்கமே பெரிதென எண்ணினார்- அவர். என் கீர்த்திக்கு பங்கம் நேராமல் காக்க- அவர் வாழ்நாளில்- அவரது இரண்டாவது பொய்யை, எனக்காகக் கூறினார்...

வாழ்கை என்பது, ஒரு சில சம்பவங்கள்- பல பல உணருதல்கள். த்ரௌபதியின் வாழ்வில் அவளுக்கு நிகழ்ந்த/அவளால் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களைப் பற்றியே இது வரை படித்ததுண்டு. ஆனால்- அவளது வாழ்க்கையைக் கண்டது, அவள் உணர்ந்தவைகளை அவளுடன் சேர்ந்து நானும் உணர்ந்து, அவளுடன் வாழ்ந்தது- இதுவே முதல் முறை!

பாரதக் கதையில்- எத்தனையோ கதா பாத்திரங்கள். பெண் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரு பட்டியல் எடுத்தால் எத்தனை பெயர்கள் வரும்- என்று கணக்கு போடலாமே. த்ரௌபதி, குந்தி, காந்தாரி, சுபத்திரை, அம்பா, சுதேஷ்ணா, பானுமதி, உத்தரா, சத்யவதி, கங்கா... வேறு பெயர்கள் தோன்றவில்லை. சரி. இந்தப் பட்டியலில்- எத்தனைப் பெண் கதாபாத்திரங்கள்- தங்களை பாதித்தன? தங்கள் மனத்தைக் கவர்ந்தன? அப்படி பாதித்தது/கவர்ந்தது- என்றால்- அது ஏன்? இதே- பெண் கதாபாத்திரங்கள் என்று சுருக்கிக் கொள்ளாமல்- மகாபாரதம்- என்று எடுத்துக் கொண்டோமேயானால்- எத்தனையோ கதாபாத்திரங்கள் கூறலாம். கர்ணன், அபிமன்யு, கிருஷ்ணன், பீஷ்மர், பீமன், ஏகலைவன், கடோத்கஜன்- என்று. ஆனால்- இந்த புத்தகம் படித்த பிற்பாடு- கர்ணன்/கிருஷ்ணன் மீது கூட ஏற்படாத அளவிற்கு ஒரு ப்ரீத்தி- த்ரௌபதியின் மீது எனக்கு ஏற்பட்டு விட்டது. ஒரு சில சமயங்களில், மிகவும் வருத்தமாகவும் இருக்கும். ஒரு பெண்ணாக- என்னால் ஏன் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள இயலவில்லை- என்று. இந்த புத்தகத்தில்- என் கேள்விக்கான விடை கண்டுகொண்டேன் :: இது வரையில்- அவளை ஒரு பெண்ணாக- யாரும் சித்தரிக்கவில்லை. இது தான் விடை. இது தான் உண்மை...