திரை  

Posted by Matangi Mawley


தெய்வங்கள் பூமிக்கு வந்தார்களாம். "பொய்" என்ற திரையை நெய்தார்களாம். அவர்கள் வரைந்த உலகத்தில் மனிதர்கள் ஆனந்தமாக தங்களது வாழ்வை கழித்தார்களாம். "பொய்"யை மறைக்க வேண்டும். உலகில் "மெய்" ஓங்க வேண்டும் என்று ஒரு தெய்வம் கூற  மற்ற தெய்வங்கள் இதை மறுத்து விட- அந்த தெய்வம் மற்ற தெய்வங்களுக்கு தெரியாமல் பூமியிலிருந்து "பொய்" என்ற திரையை விலக்கி விட்டாளாம். 

"மெய்" கண்ட உலகம்-அந்த உண்மையின் பாரம் தாங்க முடியாமல் தவித்துப் போனதாம். மனிதர்களின் சுயம் மற்றவர்களுக்கு தெரிய வந்து விட்டதாம். தெய்வங்களது அடிமைகள் என்று எண்ணியிருந்த பலர்- "கொலையாளிகளாக" மாறிப் போனார்களாம். "உண்மை" புலப்பட வேண்டும் என்று உழைத்திருந்த பலர் பொய்யான முகத்திரை மாட்டிக்கொண்டிருந்தது தெரிய வந்ததாம். 

"உண்மை" காண்பித்த தெய்வத்தை உலகம் தூற்றியதாம். அவளை அழித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார்களாம் மற்ற தெய்வங்கள். அவர்கள் கட்டியிருந்த அழகான கூட்டை கலைத்த அந்த "மெய்" தெய்வத்தை அவளது இருப்பிடத்திலிருந்து துரத்தி விட்டார்களாம். அவள் "தெய்வம்"- என்ற பதவியிலிருந்து விலக்கப் பட்டாளாம். பூமியில் மற்ற மனிதர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று சபிக்கப் பட்டாளாம். 

தெய்வங்கள் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க- "மதம்" என்ற ஒரு போர்வையால் உலகை மறைத்து- பத்திரப்படுத்தி வைத்தார்களாம். "மதம்" என்ற போர்வையினுள் உண்மையை ஆதரிக்கும் அந்த தெய்வத்திற்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும், அப்படிக் கொடுத்தால் "உலகம்" மீண்டும் அதன் அழிவை நோக்கி நகர நேர்ந்து விடும் என்று எச்சரித்தார்களாம்- தெய்வங்கள். உண்மையின் வலு அறிந்த அனைவரும் "அப்படியே நடக்கும்"- என்று தெய்வங்களுக்கு வாக்குறுதி அளித்தார்களாம். "மெய் - என்ற திரை விலகட்டும். பொய்யில் வாழ்வு மலரட்டும்"- என்று கொஷமிட்டார்களாம். தெய்வங்களை வணங்கினார்களாம். 

"மெய்"- போதித்த தெய்வம்- உலகின் ஒரு மூலையில் வசித்து வந்தாளாம். உலகில் அவளுக்கென்று தனி இடம் தேடிக்கொண்டிருந்தாளாம். ஆனால் "மதம்" என்ற போர்வையினுள் அவளால் நுழைய முடியவில்லையாம். உலகின் எல்லையில்- யாரும் அறியாத வண்ணம் சாவதை விட- அடிமையானாலும் "வாழ்வே" உன்னதமானது என்று போர்வையினுள் நுழைந்தாளாம். "உண்மையை வென்றுவிட்டோம்"- என்று உற்சாகமடைந்தார்களாம்- பொய்யில் சுகம் கண்ட மனிதர்கள். ஆயிரக்கணக்கான வருடங்களாக- இந்த வெற்றியை கொண்டாடி வந்தார்களாம். "மெய்" யின் ஜனனத்தை எப்படி உண்மைப் படுத்துவது- என்ற யோசனையில் அந்த தெய்வம்- அடிமைத்தனத்தையும், மௌனத்தையும் ஒரு தவமாகக் கருதி வாழ்ந்து வந்தாளாம். 

ஒரு "நாள்"- அந்த தவத்தின் பலன் கிட்டியதாம். "தெய்வமாக"- இருந்ததிலிருந்து- பூமியில் தள்ளப் பட்ட நாள் முதல் அவளது "குரல்" அவளிடமிருந்து பறிக்கப் பட்டிருந்ததாம். ஆனால் அவளது தவத்தின் பலனால்- அவளது குரல்- அவளிடம் வந்து சேர்ந்ததாம். அவளது குரல் எழும்பிய அந்த தருணத்தில்- "மதம்" என்ற போர்வை உலகை இன்னும் வலுவாக சுற்றிக்கொண்டதாம்.  "பொய்" என்ற திரை- லேசாக அசையத் துவங்கியதாம்...

சாரல்  

Posted by Matangi Mawley

நாற்காலியை தரையோடு தேய்த்து நகர்த்திய போது- "க்ரீச்" என்ற சத்தம். அது இல்லாமல் கூட- அந்த சத்தம்- அது இல்லாமல் கூட நகர்த்தி இருக்கலாம். நகர்த்தி இருக்க வேண்டும். நாம் இந்த சத்தத்தை நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. அரை வினாடி- அந்த சத்தத்தின்  வாழ்க்கை. ஆனால் எத்தனை  ஜென்மங்கள் அதற்க்கு! 

ஜன்னலின் சிறு விரிசல்களின் ஊடே நுழைந்து  முகத்தின் மீது தெளிக்கும் சாரல். ஜன்னல்களை திறந்து வைத்திருக்கத் தோன்றும் சில தருணங்கள். மழையை- மிகுதியாக நினைக்கின்ற சில நேரங்களில், சாரல் ஒரு குட்டி மழையாக மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மிகுதியின் மீது சில சமயம் - அதை "வெறுப்பு" என்று சொல்லலாமா? "வெறுப்பை" விட சிறிதளவு குறைவான - உணர்வு. "வெறுப்பும்" "மிகை"யை குறிக்கிறது. 

எண்ணங்களும் கூட- சாரல் போதும் என்ற இடத்தில் பொழியும் மழை போலத்தான். பல வண்ணங்களின் சிறு துளிகள்- கண்களின் முன்   விரைந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு துளியைக் கூட நிதானமாக   ரசிக்க முடிவதில்லை. "ஜிகு-ஜிகு" வென மின்னிக்கொண்டிருக்கும் காகிதத் தோரணங்கள். காற்றில் அசைந்து கொண்டிருக்கையில் பல வண்ண ஒளிக் கீற்றுகள் அதனிலிருந்து. ஒரு மாடு- அதன் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சத்தம். ஒரு குருவி அதன் உறவுகளை அழைத்துக்கொண்டிருந்தது. 

கண்களை மூடவும் முடியவில்லை. எண்ணங்களுக்கு கண்கள் தேவையில்லையே! வானமும், மேகமும்- போர் வதைத்த நாடுகளின் நிழல் பட காட்சிகளும், கோவில் வாசலில் துலைந்து போன புதுச் செருப்பும், எழுத நினைத்து மறந்து போன எழுத்துக்களும், பாத்திரங்களில் பெயர் பதிப்பதை பார்த்த அனுபவமும் என- மூடிய கண்களினுள் எத்தனை காட்சிகள்!

மிகுதியை குறைத்துக் கொள்ளலாமே. எண்ணங்களின் மிகுதியை கட்டுப் படுத்த பல வழிகள் இருக்கின்றனவாம். "த்யானம்". ஏதேனும் ஒரு செயலில் "ஈடுபடுத்தி"க் கொள்ளலாம். நண்பர்கள் வட்டத்தை கூட்டிக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்புத் தானே!? இப்படி சில வழிகளும் மிகுதியாகவே இருக்கின்றன. அவைகளும் எண்ணங்களில் பங்கு கேட்டு போட்டி போட்டுக் கொள்கின்றன. சரி. எல்லா எண்ணங்களுக்கும் "சம உரிமை" உண்டு இந்த நினைவோட்டத்தில்- என்று ஒரு எண்ணத்துளியை அணைக்கட்டாக கொடுத்து தடுப்புப் போட்டு விட்டு எண்ணங்களின் மிகுதியை எண்ணிப்பார்தே குறைத்து விடலாம் என்று  எண்ணலானேன்.

குருவியின் அழைப்பும்- மாட்டின்  சலங்கை ஒலியும் ஒன்றாகிப் போனது. ஒரு பெரிய அரச மரம் குறைந்து கொண்டே வந்து- ஒரு செடியாக மாறியது. வண்ணச் சிதறல்கள்- தன் சுய உருவெடுத்து முதலில் வண்ணங்களாகவும்- பிண்பு அந்த வண்ணன்களுக்குச் சொந்தமான உருவங்களாகவும் மாறத் துவங்கின. வேகமாக சுற்றிக்கொண்டிருந்த ராட்டினம், மெதுவாக சுற்றி- நின்ற பிறகும் லேசாக ஆடுவது போல எண்ணங்களின் மிகுதி குறைந்து கொண்டிருந்தது. 

எண்ணிக்கொண்டிருந்தேன். நினைவுகளில் வண்ணங்களை  தேடிக்கொண்டிருந்தேன். கறுப்பும் வெள்ளையுமாக- கண்களின் பார்வை எதை நோக்கிப் போகிறதோ- அந்த காட்சியே எண்ணமாக- வேறேதும் இல்லை. மிகுதியில்லை. சாரலுமில்லை. ஜன்னல் கதவுகள் மூடியே  இருந்தன. அதன் விரிசல்களை கைகளால் அடைத்தால்- "சில்" என்ற சீரான-மென்மையான "காற்றை" விட- அது "தென்றலு"ம் இல்லை- "தென்றல்-துளி" யையும் தாண்டி- துளியான "தென்றல்". 

"மிகுதி"- எங்கே போனது? சாரலில், "மிகுதி"- அதன் இருப்பிடம் கண்டது...

கணினி அனுபவம் - "Tag"  

Posted by Matangi Mawley

கணினி அனுபவம்-  பற்றிய தொடர் பதிவில் எழுத என்னை அழைத்திருக்கும் GMB அவர்களுக்கு நன்றி. சில மாதங்களாக வலைதளத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியாததால்- "கணினி அனுபவம்" பற்றிய மற்ற பதிவர்களின் பதிவுகளை என்னால் படிக்க  முடியவில்லை. "கணினி அனுபவம்"- என்ற தலைப்பு மிகவும் "பொதுவாக" உள்ளதால்- என்னால் அதை ஒரு வட்டத்தில் நிறுத்தி வைத்துப் பார்க்க முடியவில்லை. தவிர- நான் முதன் முதலில் கணினியை பார்த்தது/ அந்த துறையில் வேலை பார்த்தது - போன்ற பல விஷயங்களை ஒரு பதிவில் பதிவிட்டு- வாசகர்களைக் குழப்புவதை விட- "என் பதிவுலக அனுபவம்"- என்ற எனது "கணினி அனுபவத்தின்" ஒரு அத்தியாயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். 

Oct 2006 ல் துவங்கியது எனது பதிவுலக பயணம். இதற்க்கு முன் ஒரு diary ல் சில ஆங்கில கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்திருந்தேன். 1998-99 ஆண்டுகளில் நான் முதல் முதலில் எழுதத் துவங்கினேன். எனது 6 ஆம் வகுப்பு ஆங்கில மற்றும் Geography teacher Ms சுலோசனா  சாரி அவர்கள் தான் என்னை முதல் முதலில் எழுத ஊக்குவித்தவர். (சமீபத்தில்- அவரது மரணச் செய்தி என்னை மிகவும் வருத்தியது. ஒரு வகையில்- இதனால் தான் எனது பதிவுலக அனுபவத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றும் தோன்றியது...). நான் முதலில் எழுதிய கட்டுரையின் தலைப்பு- "A Rainy Day in Calcutta". அப்போது கல்கத்தாவில் படித்துக் கொண்டிருந்தேன். எங்களது வகுப்பில் அறிவித்து இருந்த கட்டுரை போட்டிக்கு கொடுத்து இருந்த மூன்று தலைப்புகளில் நான் மட்டுமே இந்த தலைப்பில் எழுதியிருந்தேன் என்றும், அதை அழகாகவும் எழுதியிருந்தேன் என்றும் என்னை எனது teacher பாராட்டினார். மேலும் எழுத ஊக்குவித்ததோடு இல்லாமல்- நான் எழுதிய கட்டுரை மற்றும் கவிதைகளில் நான் செய்த சின்னச் சின்னத் தவறுகளையும் திருத்திக் கொடுப்பார். 


பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு- மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காலம் அது. சில வருடங்களாக ஒன்றுமே எழுதப்படாது இருந்த எனது கவிதை/கட்டுரை diary - எனது அறையின் எதோ ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் The Hindu பத்திரிக்கையின் "Young World" ல் "Blogging" என்றால் என்ன என்ற அறிமுகக் கட்டுரையை படிக்க நேரிட்டது. அதே தினத்தன்று- ஒரு வலைத்தளத்தையும் துவங்கினேன். ஆனால்- அதை சரியாக திட்டமிட்டு துவங்காததால்- அந்த தளத்தில் ஏதும் எழுதவுமில்லை, அந்த தளம் இப்போது இருக்கிறதா என்றும் தெரியாது. பின்னர் ஒரு நாள்- எனது பழைய diary யை படிக்க நேரிட்டது. "Blogging"- மீண்டும் என் நினைவில் வந்தது. ஆனால்- எனக்கு "commitment"-phobia உண்டு என்று எனக்குத் தெரியும். ஆதலால்- நான் பதிவுலகில் அதிக காலம் இருக்க மாட்டேன்- என்றும்- "போற வரை போகட்டும்"- என்ற எண்ணத்தோடு- "self-criticism" ஆக- என் ஆங்கில வலைதளத்தின் URL - allsettodonothing.blogspot.com

முதலில் கவிதை எனத் துவங்கி பின்பு கட்டுரைகள் கதைகள் என- பதிவுலகம் என்னை நான் அதுவரை கண்டிடாத பல உலகங்களுக்கு அழைத்துச் சென்றது. வாசகர்கள் வட்டம் பெருகப் பெருக- எழுத்தில் ஆர்வமும் கூடிக்கொண்டே போயிற்று. மாதம் ஒரு பதிவு என எனக்கு நானே ஒரு இலக்கிட்டுக் கொண்டு பதிவுகள் எழுதத் துவங்கினேன். நான் எழுதிய முதல் கதை- "A Zulu Encounter" நான் 11th class படிக்கும் பொது "Gokulam" என்ற குழந்தைகளுக்கான ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது. ஆனாலும்- அதை எனது வலைப்பதிவாக "publish" செய்ததில்- எனக்கு கூடுதல் மகிழ்ச்சி தான். முதல் முதலில் மிகவும் அதிகமான "comments" பெற்ற என் பதிவு- "Rajanigandha". ஆனால்- ஒரு கட்டத்தில் "பதிவு" என்று இல்லாமல்- எனது உள்  இருந்த மகிழ்ச்சி, துக்கம், கோவம், வெறுப்பு போன்ற பல உணர்வுகளின் வெளிப்பாடாக மாறிப்போனது எனது வலைத் தளம். "Death of hate" மற்றும் "What did I do"?- என்னுடைய எதோ ஒரு கோவத்தின் எழுத்து வடிவம். அதே போல- சில கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு கிடைக்காத போதும்- வலைத்தளம் இருந்ததால்- பெரிய கவலை இல்லை. "The other end of a cigarette" - என்ற தலைப்பில் ஒரு போட்டிக்காக எழுதிய கட்டுரையும் பதிவுலகத்தில் பதிவாக மாறியது. "The Tunnel" மற்றும் "Goddess of Sin" போன்ற கட்டுரைகள்- நான் அதற்க்கு முன்னர் நினைத்தும் பார்த்திடாத சில முயற்ச்சிகளை என்னை எடுக்கத் தூண்டிய கட்டுரைகள். சிறுகதைகளும் சில எழுத முயற்சிக்கத் தூண்டியதும் வலைத்தளம் தான். "The Marble Game",  "Old man under the Tamarind tree" போன்ற சில கதைகளும் எழுத நேரிட்டது. என்னுடன் சேர்ந்து எனது வலைத் தளமும் வளர்ந்தது. பக்குவமடையத் துவங்கியது.

Dec 2009 ல் Christmas தினத்தன்று அலுவலகத்தில் தனியாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு நாள். திடீரென்று- "நமக்கு தமிழ் மொழி எழுத்து- நினைவில் இருக்கிறதா"? என்று தோன்றியதது. MS Paint ல் என் பெயரை தமிழில் எழுதிப் பார்த்தேன். கோர்வையாக ஏதேனும் தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும்- அப்போது தான் தமிழில் எழுதுவது நினைவில் இருக்கிறதா என்று தெரியும் என்று எண்ணி- ஒரு paper ல் ஏதோ எழுதத் துவங்கினேன். அதுவரையில் தமிழில் எதுவும் எழுதியது கிடையாது. ஆனால்- எழுதிவிட்டு படித்துப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் முதல் முதலில் எழுதிய தமிழ் கட்டுரை- "காகிதம்". தமிழில் எழுத எழுத தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கூடியது. அதுவரை எனது அம்மா படித்துக் கேட்டிருந்த தமிழ் novel களை- நானே படிக்க முயற்சி செய்தேன். தமிழில் பதிவிடும் போது ஒரு விஷயம் உணரக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு "சிந்தனை" அதன் மொழியை அதுவே நிர்ணயித்துக் கொள்கிறது. மற்றும் ஒரு சில விஷயங்களை தமிழில் எழுத எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உதாரணமாக- எனது சில சிறு வயது அனுபவங்களை- எனது அம்மாவின் மொழியில் எழுதிய கட்டுரைகள்- கடந்து போன காலத்தை மீண்டும் வாழ்ந்தது பார்த்ததுபோல இருந்தது. தமிழில் எழுதத் துவங்கிய போது- ஒரு புது உலகம்- தமிழ் பதிவர்கள் உலகம் என் முன்னே தோன்றியது. சில மிக அழனாக பதிவுகளை படிக்க வாய்ப்பும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக- நான் பல வருடங்களாக ஆங்கிலத்தில் கட்டுரைகள்/கதைகள் எழுதியிருந்தாலும்- தமிழில் நான் எழுதத் துவங்கிய போது எனது பெற்றோரிடமிருந்து நான் பெற்ற பாராட்டு- ஒரு தனி அனுபவம். எனது ஆங்கில கட்டுரைகளையும் அவர்கள் பாராட்டினார்கள் தான். ஆனாலும்- தமிழில் எழுத முயற்சித்ததில் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

கணினி- மற்றும் வலைத்தளங்கள்- ஒரு பொழுதுபோக்கு என்பதை விட என்னை பக்குவப் படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. "கணினி அனுபவம்" என்ற தலைப்பில் இப்படி "சுய புராணம்" பாடிக்கொள்வது சரியா என்று தெரியவில்லை. ஆனாலும்- "கணினி"- என்னும் சாதனம் எனக்கு எப்படி பயனளித்தது என்ற கேள்விக்கு- என் வலைத்தள அனுபவங்களைப் பற்றி பேசாமல் விடை கூருவது கடினம். எனவே- எனக்கு கொடுத்த தலைப்பிற்கு நான் எடுத்துக்கொண்ட "interpretation" "செல்லுமா, செல்லாதா" என்று இந்த தொடர் பதிவு எழுத என்னை அழைத்த GMB sir தான் கூறவேண்டும்...

Dedicated to Ms Sulochana Chari... (Click Here)

அத்தி  

Posted by Matangi Mawley


"...அக்காவுக்கு வரிசையா தங்கைகள். அவா எல்லாரும் அக்காவாத்துல தான் வளருவா. So, அவா எல்லாரும் 'அத்திம்பேர்'- 'அத்தி'-'அத்தி' ன்னு கூப்டுவா. அதனால தெரு முழுசுக்கும் அவர் "அத்தி". எங்க அப்பாவுக்கும் 'அத்தி', எனக்கும் 'அத்தி'.!..."

அப்பா எனக்கு எப்படி ஒரு 'Idol'ஓ- அது போல 'அத்தி'- அப்பாவினுடைய 'Idol'. அப்பா அத்தியைப் பற்றி பேசாத நாளே கிடையாது. அவர் சாப்பிடும் பெரிய வெள்ளித்  தட்டு முதல்- நெற்றியின்  கோபி சந்தனம் வரை, எல்லாமே அத்தியின் ப்ரபாவம் தான்... நான் அத்தியைப் பார்த்தது கிடையாது. பார்க்காத ஒன்றினைப் பற்றிய கதைகளில் தான் சுவை அதிகம்- என்பது எனது கருத்து. கற்பனையில் அத்திக்கு ஒரு உருவம் கொடுத்து, அப்பாவின் வர்ணனைகளிற்கேர்ப்ப- அந்த உருவத்திற்க்கு ஒரு தன்மை கொடுத்திருப்பேன்- சிறு வயதில். அவரைப் பற்றி கதைகள் கேட்கும் பொழுது. இன்று அப்பா- அத்தியின் ஒரே ஒரு புகைப்படம் எங்கோ இருப்பதாகச் சொன்னார். அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்- பார்க்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.

"...Very practical man, அத்தி. யாரோ ஒருத்தர் ஆத்துக்கு ஒரு தடவ போனவர். அவருக்கு letter எழுதணும். 'Bus stand பக்கம் ஸ்ரீனிவாசன் தெரு.  பச்சை கேட் வீட்டிற்கு பக்கத்து வீடு'ன்னு address எழுதுவார். கேட்டா 'post man க்கு வீடு தெரியணும்- அவ்வளவுதானேடா'- அப்டீம்பார். அக்காவோட மாமா வக்கீல் குமாஸ்தாவா இருந்தார். அப்பல்லாம் 'வக்கீல் குமாஸ்தா' ன்னா ரொம்ப ஒசத்தி. எதோ 'point எடுத்து கொடுத்தார்- Justice Wallace ஏ பாராட்டினாராம்' ன்னு எல்லாம் சொல்லுவா... அவருக்கு பேனா லேர்ந்து ink எல்லாம் ஒழுகி கையெல்லாம் மையா இருக்கும்--  அப்பல்லாம் எல்லா பேனாவும் அப்படிதான் ஒழுகும்.  --அத்தி சொல்லுவார்- 'நீங்க சம்பாதிக்கறதே பேனாவினால தான். நல்லதா வெச்சிக்கக் கூடாதோ'- அப்டீன்னு. ஒரு film- - photo film ஒண்ண  எடுத்து- அவர் பேனாவோட கழுத்துக்கு கீழ சொருகி ஒழுகாத படி பண்ணிக் கொடுத்தார், அத்தி. தந்தி அனுப்பணும்னா 8 வார்த்தைக்கு முக்கால் ரூபான்னா 12 வார்த்தைக்கு ஒரு ரூபாய் ரெண்டு அணா-ன்னு correct ஆ பணம் எடுத்து வெச்சிப்பார்".

"சனிக்கிழமையானா தலைலேர்ந்து கால் வரைக்கும் எண்ணைய தடவிண்டு, ஒரு கோமணத்தையும் கட்டிண்டு வசல்லேர்ந்து கொல்ல வரைக்கும், குறுக்கையும் நெடுக்கயுமா அலைஞ்சுண்டு இருப்பார். அது ஒரு மணி நேரம் ஊரணும். அத சொல்லறதில்ல அப்படி... ஆனா 'எண்ண உள்ள போய்ட போறதோ.?.. இதுகள் சொன்னா கேட்கரதில்ல- ஜடம்' அப்டீன்னு மாமிய- அக்காவ திட்டிண்டே  உலாத்திண்டு இருப்பார். அக்கா அதெல்லாம் கண்டுக்க மாட்டா... 'கிடக்கு போ...' அப்டீன்னுட்டு எண்ணைய காச்சி வெச்சுடுவா.. தேச்சிண்டு ஆகணும்... கொல்லைல ஒரு தொட்டி நிறையா வெந்நீர் போட்டு வெச்சிருப்பார். நன்னா குளிப்பார். க்லுப்தமா சனிக்கிழமை எண்ண தேச்சுப்பார். ஆனா தனக்கு இஷ்டமில்லைன்னாலும் ஏதோ மாமி சொல்றதுக்காக தேச்சிக்கராப்ல பாவலா பண்ணிப்பார்!"

"..குழந்தைகளோட  குழந்தையா  நன்னா  ஈடு  கொடுப்பார்.. Encourage  பண்ணுவார். கிணறு முழுகரவன பார்த்து நானும் கிணறு  முழுக .. இவர் தான் எனக்கு support. அவாத்து கிணறு ரொம்ப famous. 'ஒரு ஆள் ஆழம்' ன்னு சொல்லுவா. ரெண்டு-மூணு  தெரு ல - இருக்கிற எல்லாரும் இந்த கிணற்றிலிருந்து தான் குடிநீர் எடுத்துண்டு போவா. நான்   practice-காக முழுகும் போது ,எங்க அம்மா வந்தான்னா.. 'அம்மா வரா டோய்'... ன்னு warning கொடுப்பார் ! சின்ன  பசங்க  மாதிரியே .! அம்மா பாத்துடுவா. என்ன பண்ணறது? இந்த அப்பாவுக்கு தெரியாம cigarette பிடிச்சா- வாய்ல இருக்கற புகைய வெளீல விட்டு தானே ஆகணும்... அத மாதிரி தான். எங்க அம்மா அவர indirect ஆ திட்டுவா. 'குழந்தைகள் இருந்தா தானே குழந்த அருமை தெரியும்'ன்னு. (அவளுக்குத்தெரிந்தது  அவ்வளவுதான்). என் handwriting அப்போலேர்ந்தே மோசமா தான் இருக்கும். அத்தி 'உன் handwriting இவ்வளவு மோசமா இருக்கேடா' அப்டீம்பார்... எங்க அம்மா உடனே- 'எல்லாம் தலையெழுத்து நன்னா இருந்தா போரும்'- அப்டீம்பா".

"அத்தி, பக்கா Rationalist. ஆனா அவருடைய இந்த முகம் எல்லாருக்கும் தெரியாது... For example, 'குழந்தைகுட்டி -இல்லாத பால்ய-விதவை -னா  அவளுக்கு புனர் -விவாஹம்  பண்ணி வக்கர்து  தான் சரி'- ன்னு  என்கிட்ட ஒரு private - conversation போது அத்தி  சொல்லிருக்கா... அதே போல  அத்திக்கு 'பக்தி-பைத்தியம் ' கிடையாது.. எங்க ஊர் பெரிய கோவிலுக்கு தினமும் போறவா உண்டு. கோவில்ல உற்சவத்தின் போது ஒரு நாள் அத்தியோட உபன்யாசம் நடக்கும். அன்னிக்கு  கோவிலுக்குப் போரதோட சரி. மீதி நாட்கள்ளாம் போகமாட்டார். 'அதே சிலையை தினம் தினம் பாக்க என்ன இருக்கு? மார்கழி மாத குளிரில் லொக்கு லொக்கு ன்னு இருமிண்டு போய் (விச்வ  ரூப)தரிசனம் பண்ணிட்டு, பெருமாளுடைய கல்லிழைத்த மாங்கா  மாலையை பாத்தியோடி -ன்னுதான் பேசுங்கள் ( ! )' ..என்று  பாமர பக்தியை விவரிப்பார். எங்க அம்மா சொல்லுவா, அவர பத்தி- 'படிக்கறது ராமாயணம்-இடிக்கறது பெருமா கொவில'ன்னு".

 "அத்திக்கு சம்பாத்தியமே இராமாயண ப்ரவசனம் தான். Sanskrit வாத்தியாரா இருந்து retire ஆனார். Finlay School ஓ- ஒரு school ல. 9:20 க்கு கார்த்தால டான்னு கிளம்புவார். Speed ஆ நடப்பார். "காந்தி" சினிமா ல Dandi யாத்ர போது அவர் நடப்பாரே- அத மாதிரி".

"உங்க ஊர்ல  எப்படி 'சேர்த்தி' உத்சவமோ அதுக்கு equivalent எங்க ஊர்ல 'ஏக சிம்மாசனம்'. அதுக்கு 'couple' ஆ கோவிலுக்கு போணும்னு ஒண்ணு உண்டு. எங்க அம்மா கூட எங்க அப்பாவ கெஞ்சி- அவர அழைச்சிண்டு போக சொல்லுவா. எங்க அப்பாவோட சட்டைய சுருட்டி கைல வெச்சிண்டு அவர் பின்னாலேயே நடந்து போவா, என் அம்மா. அப்பா- அங்கவஸ்திரம் போட்டுண்டு கொவில்லேர்ந்து கிளம்பும்போது அம்மா கிட்டேர்ந்து shirt அ வாங்கி மாட்டிண்டு office க்கு போவார். அத்தி அதெல்லாம் எதுக்கும் போக மாட்டார். பெரியவர் ஒரு குருக்கள் ஊர்ல இல்ல. சின்ன பையன்- அவன்தான் பிள்ளையாருக்கு பூஜ பண்ணனும். பிள்ளையாரோட வேஷ்டி அங்க சன்னதிக்குள்ள காயும். அத எம்பி எடுக்கப் போய் பையன் விழுந்துட்டான். 'பிள்ளையார் மேலேயே ஏறி எடுக்க வேண்டியதுதானேடா...'- அப்டீம்பார்".

"... 'ரகு +உத்தமன்'- ரகூத்தமன் ன்னு சொல்லணும்டா... ரகோத்தமனில்லை... ன்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறான் பாரு.. மாத்வனோல்யோ... அது அவ்வளவுதான்...' அப்டீம்பார். அதே போல ஸ்த்ரீ ஜனங்களுக்கும் intellectual flowering ஏற்படலாம்- அப்டீங்கரதுலயும் நம்பிக்கை கிடையாது அவருக்கு.... 'அதுகளுக்கு என்ன தெரியும்' அப்டீம்பார்! However disturbing may this argument be to you- but  you know, male chauvinism is after all part of our traditional intellectualism"!

"அத்தியோட உபன்யாசத்துக்கு  poster லாம் நான் தான் எழுதுவேன். Carbon paper வெச்சி அழுத்தி- ரெண்டு மூணு copy வராப்ல எழுதி- சாத பருக்கைய வெச்சு- தெருல அங்கங்க நான் தான் போய் ஓட்டிட்டு வருவேன். இத மாதிரி 'மஹாலிங்க ஸாஸ்த்ரிகளுடைய "வால்மிகி ராமாயணம்"- உபன்யாசம்..." ன்னு இருக்கும்- அந்த notice ல. அவர் பேரு மஹாலிங்க ஸாஸ்த்ரி. இராமாயண ப்ரவசனம் பண்ணரதுனால அவர் பேரே 'இராமாயண ஸாஸ்த்ரிகள்' ன்னு ஆயுடுத்து. 'ராமாய ராம பத்ராய..' அந்த ஸ்லோகம் தான் notice ல மேல எழுதியிருக்கும். 'வால்மிகி ராமாயணம்'- அதுலையும் ஒரு விஷயம் இருக்கு. அப்போலாம் சிவானந்த விஜயலக்ஷ்மி, எம்பார்- இவாள்லாம் ரொம்ப famous. சிவானந்த விஜயலட்சுமி ங்கரவா "த்ரிவேணி ராமாயணம்" ன்னு சொல்லுவா. 'கம்பர்-வால்மிகி-துளசிதாஸ்'- மூணு போரையும் compare பண்ணி சொல்லுவா. அவா குரலும் ரொம்ப நன்னா இருக்கும்- பாக்கவும் அழகா இருப்பா- அலை மோதும் கூட்டம். அக்கா கூட அத்திகிட்ட சொல்லுவா. 'நீங்களும் இந்த திருக்குறள்- கம்பர போல எதையாவது படிச்சுட்டு ப்ரவசனத்துல சேத்துக்கலாமோன்னோ' அப்டீம்பா. அவருக்கு திருக்குறள் லாம் ஒண்ணுமே தெரியாது. அவர் சொல்லுவார் அக்கா கிட்ட- 'இதுல -வால்மீகி -ல இல்லாத அழகா? இதுலேர்ந்து மீண்டு வர முடியாது... இத முடிச்சுட்டுன்னா நீ இன்னும் ஒண்ணுத்துக்கு போகணும்...' அப்டீம்பார்... ஒரு தடவ அப்பு sir உம் இவருமா 'ப்ரதி ஸ்லோக ராமாயணம்' சொன்னா... அதாவது ஒவ்வொரு ஸ்லோகமும் சொல்லுவா. 1 1/2--2 வருஷமா சொன்னா".

"காலம்பர  நின்னுண்டு சந்தன கல்லுல சந்தனம் அரைப்பார். அப்போ 'ஹரே ராம',- ன்னுசொல்லிண்டே அரைப்பார். அப்போலாம் எனக்கு கொஞ்சமும் ராகமெல்லாம் தெரியாது. ஆனா நான் அவர் கிட்ட 'கல்யாணி ல சொல்லுங்கோ அத்தி... மோஹனத்துல சொல்லுங்கோ...'ன்னு சொல்லுவேன். அவர் அதுக்கேத்தாப்ல ராகத்த மாத்துவார். குரல் ரொம்ப நன்னா இருக்கும்".

"அத்தி ராமாயணம் சொல்ல போறப்போ ஒரு குதிர வண்டியோ மாட்டு வண்டியோ வரும். நானும் போவேன் அவர் கூட. பாதி உபஞாசத்துல stage பின்னாடி போய் படுத்து தூங்கிடுவேன்... முடிஞ்சப்ரம் 'வாடா மாலி'ன்னு என்ன எழுப்பி அழச்சுண்டு போவா. சில சமயம் வெளியூரெல்லாம் போவார். சப்தாஹம்-நவாஹம் ன்னுலாம் அங்கேயே இருப்பார். அவா நடத்தரவா- நறையா வேஷ்டி, புடவையெல்லாம் கொடுப்பா. கணையாழி கொடுப்பா. தங்கத்துல ஒரு chain கொடுப்பா. அக்கா எல்லாத்தையும் பீரோ ல வைச்சுப்பா. அக்கா தான் செலவெல்லாம் பாத்துப்பா... 'நீ பாட்டுக்கு செலவு பண்ணறியே- நான் retire ஆயாச்சு தெரியுமோ'- அப்டீம்பார் அத்தி. 'அதான் நீங்க அதுக்கப்றம் நன்னா சம்பாதிக்கறேளே...' அப்டீம்பா, அக்கா. ஒரு Magistrate- அத்தியோட friend. அவர் தான் "Financial Assistance to Eminent Sanskrit Scholars" ன்னு ஒரு central government scheme ஏதோ இருக்குன்னு சொல்லி, அதுலேர்ந்து அத்திக்கு pension வராப்ல ஏற்பாடு பண்ணி கொடுத்தார். அத்தி போனதுக்கப்றம் அக்காவுக்கும் அது வந்துண்டு இருந்துது".

"1976-80 குள்ள எப்போயோ தான் அத்தி போனார். 82 வயசுக்கு மேல இருக்கும் அப்போ அவருக்கு. நான் வேலைக்கு போனதுக்கப்றம் வருஷா வருஷம் ராம நவமிக்கு அவருக்கு 10 ரூபாய் money order அனுப்புவேன். ஒரு தடவ நான் பெரியவனா வேலைல இருக்கும் போது அவர பாக்க போயிருந்தேன். படுத்த படுக்கையா இருந்தார். 'நம்ப மாலி வந்திருக்கானே'- அப்டீன்னார்"...

"அவாத்திலையே தான் எப்போபாரு நான் சின்ன வயசில இருப்பேன். அத்தி சாப்டும் போதெல்லாம் நான் உக்காந்து எதாவது பேசிண்டே இருப்பேன். அப்படியெல்லாம் இன்னொருத்தர் ஆத்துக்கு போகக்கூடாது-சாப்டும்போது இருக்கக்கூடாது அப்டீன்னு எல்லாம் தெரியவே தெரியாது எனக்கு. அவாளும் ஏதோ ஒரு குழந்த நம்பாத்துலேயே இருக்கே ன்னு நான் அங்க இருந்தத விகல்பமா நினைக்கல... அது ஒரு காலம்...".

அப்பா-அம்மா வின் சின்ன சின்ன சம்பாஷணைகளை கூட கவனிக்க முடியாத- கவனிக்க சமயமில்லாத இன்றைய காலத்தில்- அப்பா-அம்மாவையும் தாண்டி ஒருவரின் ப்ரபாவம்  அந்த சிறு வயதில் என் அப்பாவிற்கு கிடைத்தது. அத்தியின் தாக்கம்- அப்பவிர்க்கு மட்டுமல்ல, அப்பாவின் மூலமாக எனக்கும் தான்... உரு இல்லாத அவரது முகம். அதை உன்னிப்பாக கவனித்தால், அதில் தெரிவது என் அப்பாவாக இருக்கலாமோ...?

Bushy க்ரஹப்ரவேசம் : EPISODE 8  

Posted by Matangi Mawley


இப்போதான் நடந்தாப்ல இருக்கு. பாத்தா வருஷம் ஓடிடுத்து! ஆச்சு- மூணு வயசாயாச்சு Bushy-க்கு! துப்பாண்டி தான் எங்காத்துக்கு முதல்ல வந்துது. Bushy ய அப்றமா அது தான் அழச்சுண்டு வந்துது. ரெண்டு ஈத்துல- நாலு குட்டியும் போட்டுடுத்து பாவம் Bushy. 2012 April மாசம் துப்பாண்டி எங்கேயோ ஓடி போனது தான். அப்புறம் ஆளையே காணும்... Bushy க்கு தான் ஒரே கவலை. ஆனா துப்பாண்டி போனப்றம்- எங்காத்தையே அதோடதாக்கிண்டுடுத்து இந்த Bushy. அதோட ஒயிலென்ன... ஒய்யாரமென்ன... இந்த புது ஆத்துல- தெருல இருக்கற அரை ticket எல்லாம் எங்க Bushy யோட fans! ஆனா இந்த புது ஆத்துக்கு  கொண்டுவர நாங்க பட்ட பாடிருக்கே....

போன 2012 ஜூன் மாசம் வீட மாத்தினோம். Bushy க்காகவே flats வேண்டாம்-ன்னு தனி வீடா பாத்திருந்தோம். வீட மாத்தணும்னு பேசிண்டு இருக்கும்போதே Bushy ய என்ன பண்ணலாம் னு  தான் எங்க எல்லாருக்குமே யோசனையா போச்சு. Bushy ய நாம எங்க போறோமோ அங்க அழைச்சிண்டு போணும் னு- இது சொல்லிடுத்து. Bushy என்ன நாயா? பூனையலாம் அவ்வளோ easy யா இடத்த மாத்த வைக்க முடியுமா? அது எந்த இடத்துல பழகித்தோ அங்கேயே தான் இருக்கும். சொன்னா கேக்கவே மாட்டேங்கறது.

  
ஆனா பாவம்-- Bushy க்கு இப்போ துணைக்கு துப்பாண்டியும் இல்ல. தெரு-ல
விட்டுட்டு போனா சாப்பாட்டுக்கு எத்தன கஷ்ட படுமோ! அதுவும் இந்த sterilization operation பண்ணினதுலேர்ந்து அதோட 'புளியங்கொட்டை' cat feed அ தவிர வேற எதையுமே அது சாப்ட்ரதில்லை வேற. அதுவும் இல்லாம அந்த area தெரு பூனைகளெல்லாம் வேற அத வந்து சீண்டும். அதையும் கூட்டிண்டு புது ஆத்துக்கு போகலாம்ன்னு decide பண்ணியாச்சு.

ஆனா- பொட்டி படுக்கையெல்லாம் மூட்ட கட்டும் போது, Bushy க்கு ஒரே பயம். எல்லா அட்டை டப்பாவையும் பாக்கறது. பீரோக்குள்ள லாம் போய் என்னத்தையோ தேடறது. ரொம்ப uncomfortable/tensed ஆ feel பண்ண ஆரம்பிச்சுடுத்து. இது உடனே internet ல - "Behavioral changes in  cats" ன்னு லாம் தேடி பாத்து- அதுக்கு என்ன பண்ணனும்-னு லாம் பாத்துது. ஒண்ணும் பலிக்கல. நாங்க வீட்ட விட்டு களம்பும்போது Bushy ய  ஒரு பை-ல போட்டு எடுத்துண்டு போலாம்னு plan பண்ணினோம். கிளம்பற நேரத்துக்கு ஆளையே காணும். கூப்படறோம், கூப்படறோம்- கிட்டயே வர மாட்டேன்னுடுத்து. ஒரு மூலைலேர்ந்து எங்கள பாத்துண்டே இருந்துது. "என்ன மட்டும் இங்க விட்டுட்டு நீங்கள்லாம் போறேளே... என்ன யார் பாத்துப்பா"? ன்னு கேக்கறாப்ல இருந்துது, அது பார்வை... ஒரு பயம் அது முகத்துல. எங்களுக்கா- அழுகையா வருது! அத எப்படி எங்க கிட்ட வர வைக்கறதுன்னே தெரியல. அக்கம் பக்கத்துக் காராள்லாம் அத அப்பறமா வந்து கூட்டிண்டு போங்கோன்னா... ஒரு டப்பால அதோட சாப்பாட கொஞ்சம் போட்டு, பக்கத்தாத்து மாமி கிட்ட குடுத்து அது கேக்கும் பொது கொஞ்சம் போட சொல்லிட்டு- நாங்க கிளம்பினோம்.


புது ஆத்துக்கு வந்தப்றம்- கொஞ்சம் சாமானெல்லாம் அடுக்கி வச்சிட்டு Bushy ய கூட்டிண்டு வரலாம்ன்னு plan பண்ணினோம். ஏன்னா அது இந்த suitcase, box எல்லாம் பாத்து தான் பயப்பட்டுது. மறுபடியும் அதே போல சூழல் ல அது
எப்படி feel பண்ணுமோ! நாங்க shift பண்ணி ஒரு வாரம் கழிச்சு இவரும், இதுவுமா  பழையாத்துக்கு போனா. Bushy ய கூப்டு பாத்தாளாம். அது வந்துதாம். சாப்டுதாம். இவா தடவி குடுத்தாளாம். அத தூக்கி பைக்குள்ள போடப்போரான்ன ஒடனே எடுத்தாங்கட்டைன்னு ஓட்டமா ஓடி பொயிடுத்தாம்! பக்கத்தாத்து மதில் மேல உக்காந்துண்டு பாத்துண்டே இருந்துதாம். எப்போதுமே அது தொடப்பத்த எடுத்து பெருக்கினா வரும். அந்த தொடப்பத்தால அத தடவி விடச்சொல்லும். இது அங்க இருந்த ஒரு தொடப்பத்த எடுத்து Bushy கிட்ட காட்டித்தாம். மதில் மேலேயே நின்னுண்டு "வெளக்கமாறு பூஜை" எல்லாம் வாங்கிண்டுதாம். ஆனா கூட வர மாட்டேன்னுடுத்தாம்.

கிட்டத் திட்ட ஒரு 42 நாள் ஆகியிருக்கும். 4-5 தடவ மாத்தி மாத்தி போய் அத அழைச்சுண்டு வர try பண்ணிப் பாத்தாச்சு. வர மாட்டேன்-ன்னு வீம்பு பண்ணினா நாம என்ன பண்ண முடியும்? பக்கத்தாத்து மாமியும் எத்தன நாளைக்கு தான் சாப்பாடு போடுவா? பசி ல காஞ்சு போய், கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு போய், சோர்ந்து போய் இருந்துதாம். அன்னிக்கு இவா ரெண்டு பேரும் போய் அத கூப்ட போது அதுக்கு நடக்க கூட த்ராணியில்லையாம்! மெதுவா வந்துதாம். ஆகாரம் போட்டாளாம். சாப்டுதாம். எத்தன நாளா பட்டினியோ-பாவம்... சாப்டு முடிச்ச கையோட அத தூக்கி bag ல போட்டாளாம். கைய தள்ளி விட்டுட்டு ஓட கூட தெம்பில்லை அதுக்கு. "சரி. இவா கூடையே போயிடலாம்" ன்னு அதுக்கே எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ...

புது ஆத்துக்கு கூட்டிண்டு வந்தாச்சு. இது, முனாடியே- பூனைய இடம் மாத்தினா என்னல்லாம் precautions எடுத்துக்கணும்னு internet ல படிச்சு வெச்சிருந்துது. 10-15 நாளைக்கு அத வெளீலையெ விடப்டாது. ஆத்துக்குள்ளையே வெச்சிருக்கணும். Bathroom உம் "litter training" பண்ணி
ஆத்துக்குள்ளையே போக வைக்கணும் னு போட்டுருந்துதாம்-net ல. Bushy ய கொண்டு வந்து ஒரு room ல வச்சாச்சு. பைக்குள்ளேர்ந்து மெதுவ்வ்..வா வெளீல வந்துது. எங்கள எல்லாம் அடையாளம் கண்டுண்டுது. அந்த பயம் போகல இன்னும்! Room அ எல்லாம் நோட்டம் விட்டுது. எத்தன நேரம் ஒரே இடத்துல அடைச்சு வைக்கறது- பாவம்! Room கதவ திறந்த ஒடனே மெதுவா வீடு முழுக்க எல்லா இடத்துக்கும் போய் மோந்து பாத்துண்டுது. நன்னா சாப்டுது. எத்தன நாளா பசியோ- பாவம்... சமயகட்டுல cylinder க்கு பின்னாடி ஒரு இடுக்குல போய் படுத்துண்டுடுத்து, சோர்ந்து போய்!

அன்னிக்கு ராத்திரி- அதுக்கு பாத்ரூம் போக எல்லாம் ஏற்பாடெல்லாம் பண்ணினா இவா ரெண்டு பெரும். அதுக்கு பிடிக்கல. சரி- வெளீல கொண்டு போய் விட்டு பாக்கலாம்-ன்னு வெளீல கூட்டிண்டு போனா- அவ்வளவுதான். எங்க போச்சுன்னே தெரியல! Bushy...Bushy ன்னு கூப்டு பாக்கறா. தெரு ல இருக்கரவாள்லாம் வெளீல வந்து வெடிக்க பாக்கறா... இத கூட்டிண்டு வந்திருக்கக் கூடாதோ. At least அதுவான்னா அது பழகின இடம். புது இடத்துல இது எப்புடி இருக்குமோன்னுலாம் ஒரே கவலை. அடுத்த நாள் முழுக்க ஆளையே காணும்! அப்பரமா இவர் மொட்ட மாடிக்கு போய் பாத்துட்டு- parapet ல தான் படுத்துண்டு இருக்குன்னு சொன்னப்ரம் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துது. அன்னிக்கு சாயங்காலம் வந்து நன்னா சாப்டுது. ஒரு வாரமாச்சு- settle ஆக.

இதுக்கு நடுவுல- "ஒரு புது girl பூனை வந்திருக்கு"ங்கற விஷயம் இந்த area ல இருக்கற மத்த பூனைகளுக்கெல்லாம் தெரிஞ்சுடுத்து. இது இங்க வந்த மூணாவது நாள்- எங்காத்து வராண்டாவுல ரெண்டு மஸ்தான் பூனைகளுக்குள்ள ஒரே சண்டை. அக்கம் பக்கத்ல இருக்கரவாள் -லாம் வேற- புதுசா வந்திருக்கரவா வீட்டு பூனை தான் சத்தம் போடறதுன்னு complaint பண்ண ஆரம்பிச்சுட்டா. Bushy வாயே தெறக்கல- ன்னு அவாளுக்கெல்லாம்
சொல்லறதுக்குள்ள போறும்-போறும் ன்னு ஆயுடுத்து!


ஒரு "இஞ்சி color" பூனை ஒண்ணுத்த Bushy friend புடிச்சுண்டுது. அது இது கூட இருந்தா இந்த மஸ்தான் பூனைகளெல்லாம் வராதுன்னு நினைச்சுதோ என்னவோ... எப்படியோ! ஒரு வழியா பழைய Bushy யா மாறிடுத்து... ஆனா- இப்பயும் அதோட குட்டிகள video எடுத்தத போட்டு பாக்கும் போது- அதுகள் கத்தர சத்தம் கேட்டா தேடிண்டு ஓடி வரும்... சுத்தி-முத்தி பாக்கும்... பழைய வீட்டையும், துப்பாண்டியையும், அதோட குட்டிகளையும் நினைச்சுக்குமோ என்னவோ...  


The Story so far... Episodes: 1 ... 2 ... 3 ... 4 ... 5 ... 6 ... 7  (Click on the numbers to read the post)

DAMINI  

Posted by Matangi Mawley

A meeting was organised, to discuss "Women's Rights".


The netas attended the meeting but few had anything to say. Suddenly, one of them thought of something "intelligent" to say and came up with a plan to cover up the "dented and painted" women with "over-coats".

"Let's forbid them to speak with the boys".

"Let's ban skirts for school girls".

"Let's stop women from going out on the streets after 6 pm"- another said.

"Let's enact a 'Nirbhaya Act'...", one said.

“Clever plan”! A few shouted.

“Wait-wait”, said a spiritual guru. “We need to teach them Indian culture”, he said.

The politicians had not thought of that earlier. So they invited the Swami to their meeting.

“We need to ask the girls to address the rapists as ‘brothers’..” said the Swami. “She needs to fall at his feet and plead for mercy”, he said. “She must chant Saraswathi mantra”, he said.

Politicians were mesmerized with this Swamiji. They lauded him.

“A woman is bound by contract to serve her husband” said a neta.

“A woman”, another said “shouldn’t talk back at men. Shouldn’t stay out at night or wear clothes- that are inappropriate”.

As they spoke, reports are in, that say: Girls/Women raped. Aged: 2 yrs old, 5 yrs old, 6 yrs old, 10 yrs old, 15 yrs old, 16 yrs old, 23 yrs old, 29 yrs old, 33 yrs old, 40 yrs old, 45 yrs old....70 yrs old, 75 yrs old...

Damini: As she breathed her last, a nation lay exposed.