திரை  

Posted by Matangi Mawley


தெய்வங்கள் பூமிக்கு வந்தார்களாம். "பொய்" என்ற திரையை நெய்தார்களாம். அவர்கள் வரைந்த உலகத்தில் மனிதர்கள் ஆனந்தமாக தங்களது வாழ்வை கழித்தார்களாம். "பொய்"யை மறைக்க வேண்டும். உலகில் "மெய்" ஓங்க வேண்டும் என்று ஒரு தெய்வம் கூற  மற்ற தெய்வங்கள் இதை மறுத்து விட- அந்த தெய்வம் மற்ற தெய்வங்களுக்கு தெரியாமல் பூமியிலிருந்து "பொய்" என்ற திரையை விலக்கி விட்டாளாம். 

"மெய்" கண்ட உலகம்-அந்த உண்மையின் பாரம் தாங்க முடியாமல் தவித்துப் போனதாம். மனிதர்களின் சுயம் மற்றவர்களுக்கு தெரிய வந்து விட்டதாம். தெய்வங்களது அடிமைகள் என்று எண்ணியிருந்த பலர்- "கொலையாளிகளாக" மாறிப் போனார்களாம். "உண்மை" புலப்பட வேண்டும் என்று உழைத்திருந்த பலர் பொய்யான முகத்திரை மாட்டிக்கொண்டிருந்தது தெரிய வந்ததாம். 

"உண்மை" காண்பித்த தெய்வத்தை உலகம் தூற்றியதாம். அவளை அழித்து விட வேண்டும் என்று திட்டமிட்டார்களாம் மற்ற தெய்வங்கள். அவர்கள் கட்டியிருந்த அழகான கூட்டை கலைத்த அந்த "மெய்" தெய்வத்தை அவளது இருப்பிடத்திலிருந்து துரத்தி விட்டார்களாம். அவள் "தெய்வம்"- என்ற பதவியிலிருந்து விலக்கப் பட்டாளாம். பூமியில் மற்ற மனிதர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று சபிக்கப் பட்டாளாம். 

தெய்வங்கள் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க- "மதம்" என்ற ஒரு போர்வையால் உலகை மறைத்து- பத்திரப்படுத்தி வைத்தார்களாம். "மதம்" என்ற போர்வையினுள் உண்மையை ஆதரிக்கும் அந்த தெய்வத்திற்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும், அப்படிக் கொடுத்தால் "உலகம்" மீண்டும் அதன் அழிவை நோக்கி நகர நேர்ந்து விடும் என்று எச்சரித்தார்களாம்- தெய்வங்கள். உண்மையின் வலு அறிந்த அனைவரும் "அப்படியே நடக்கும்"- என்று தெய்வங்களுக்கு வாக்குறுதி அளித்தார்களாம். "மெய் - என்ற திரை விலகட்டும். பொய்யில் வாழ்வு மலரட்டும்"- என்று கொஷமிட்டார்களாம். தெய்வங்களை வணங்கினார்களாம். 

"மெய்"- போதித்த தெய்வம்- உலகின் ஒரு மூலையில் வசித்து வந்தாளாம். உலகில் அவளுக்கென்று தனி இடம் தேடிக்கொண்டிருந்தாளாம். ஆனால் "மதம்" என்ற போர்வையினுள் அவளால் நுழைய முடியவில்லையாம். உலகின் எல்லையில்- யாரும் அறியாத வண்ணம் சாவதை விட- அடிமையானாலும் "வாழ்வே" உன்னதமானது என்று போர்வையினுள் நுழைந்தாளாம். "உண்மையை வென்றுவிட்டோம்"- என்று உற்சாகமடைந்தார்களாம்- பொய்யில் சுகம் கண்ட மனிதர்கள். ஆயிரக்கணக்கான வருடங்களாக- இந்த வெற்றியை கொண்டாடி வந்தார்களாம். "மெய்" யின் ஜனனத்தை எப்படி உண்மைப் படுத்துவது- என்ற யோசனையில் அந்த தெய்வம்- அடிமைத்தனத்தையும், மௌனத்தையும் ஒரு தவமாகக் கருதி வாழ்ந்து வந்தாளாம். 

ஒரு "நாள்"- அந்த தவத்தின் பலன் கிட்டியதாம். "தெய்வமாக"- இருந்ததிலிருந்து- பூமியில் தள்ளப் பட்ட நாள் முதல் அவளது "குரல்" அவளிடமிருந்து பறிக்கப் பட்டிருந்ததாம். ஆனால் அவளது தவத்தின் பலனால்- அவளது குரல்- அவளிடம் வந்து சேர்ந்ததாம். அவளது குரல் எழும்பிய அந்த தருணத்தில்- "மதம்" என்ற போர்வை உலகை இன்னும் வலுவாக சுற்றிக்கொண்டதாம்.  "பொய்" என்ற திரை- லேசாக அசையத் துவங்கியதாம்...

This entry was posted on 14 December, 2013 at Saturday, December 14, 2013 . You can follow any responses to this entry through the comments feed .

2 comments

இதே பதிவை முன்பு படித்து கருத்தும் எழுதி இருந்த நினைவு. அதில் மீண்டும் வருவேன் என்றுஎழுதி இருந்தேன். தெய்வத்தைப் பெண்பாலில் குறிப்பிட்டு எழுதியதைச் சுட்டியதும் நினைவு. ஆனால் இப்போது அதே பதிவு. என் நினைவு சக்திமேல் எனக்கு நம்பிக்கை உண்டு.இதெப்படிமாதங்கி.? காட்சிப் பிழை ஏதுமில்லையே.?இதற்கு பதில் தெரிந்தபின் மீண்டும் வருவேன். வாழ்த்துக்கள்.

15 December 2013 at 08:35

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

15 January 2014 at 21:58

Post a Comment