கணினி அனுபவம் - "Tag"  

Posted by Matangi Mawley

கணினி அனுபவம்-  பற்றிய தொடர் பதிவில் எழுத என்னை அழைத்திருக்கும் GMB அவர்களுக்கு நன்றி. சில மாதங்களாக வலைதளத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியாததால்- "கணினி அனுபவம்" பற்றிய மற்ற பதிவர்களின் பதிவுகளை என்னால் படிக்க  முடியவில்லை. "கணினி அனுபவம்"- என்ற தலைப்பு மிகவும் "பொதுவாக" உள்ளதால்- என்னால் அதை ஒரு வட்டத்தில் நிறுத்தி வைத்துப் பார்க்க முடியவில்லை. தவிர- நான் முதன் முதலில் கணினியை பார்த்தது/ அந்த துறையில் வேலை பார்த்தது - போன்ற பல விஷயங்களை ஒரு பதிவில் பதிவிட்டு- வாசகர்களைக் குழப்புவதை விட- "என் பதிவுலக அனுபவம்"- என்ற எனது "கணினி அனுபவத்தின்" ஒரு அத்தியாயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். 

Oct 2006 ல் துவங்கியது எனது பதிவுலக பயணம். இதற்க்கு முன் ஒரு diary ல் சில ஆங்கில கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வந்திருந்தேன். 1998-99 ஆண்டுகளில் நான் முதல் முதலில் எழுதத் துவங்கினேன். எனது 6 ஆம் வகுப்பு ஆங்கில மற்றும் Geography teacher Ms சுலோசனா  சாரி அவர்கள் தான் என்னை முதல் முதலில் எழுத ஊக்குவித்தவர். (சமீபத்தில்- அவரது மரணச் செய்தி என்னை மிகவும் வருத்தியது. ஒரு வகையில்- இதனால் தான் எனது பதிவுலக அனுபவத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றும் தோன்றியது...). நான் முதலில் எழுதிய கட்டுரையின் தலைப்பு- "A Rainy Day in Calcutta". அப்போது கல்கத்தாவில் படித்துக் கொண்டிருந்தேன். எங்களது வகுப்பில் அறிவித்து இருந்த கட்டுரை போட்டிக்கு கொடுத்து இருந்த மூன்று தலைப்புகளில் நான் மட்டுமே இந்த தலைப்பில் எழுதியிருந்தேன் என்றும், அதை அழகாகவும் எழுதியிருந்தேன் என்றும் என்னை எனது teacher பாராட்டினார். மேலும் எழுத ஊக்குவித்ததோடு இல்லாமல்- நான் எழுதிய கட்டுரை மற்றும் கவிதைகளில் நான் செய்த சின்னச் சின்னத் தவறுகளையும் திருத்திக் கொடுப்பார். 


பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு- மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காலம் அது. சில வருடங்களாக ஒன்றுமே எழுதப்படாது இருந்த எனது கவிதை/கட்டுரை diary - எனது அறையின் எதோ ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் The Hindu பத்திரிக்கையின் "Young World" ல் "Blogging" என்றால் என்ன என்ற அறிமுகக் கட்டுரையை படிக்க நேரிட்டது. அதே தினத்தன்று- ஒரு வலைத்தளத்தையும் துவங்கினேன். ஆனால்- அதை சரியாக திட்டமிட்டு துவங்காததால்- அந்த தளத்தில் ஏதும் எழுதவுமில்லை, அந்த தளம் இப்போது இருக்கிறதா என்றும் தெரியாது. பின்னர் ஒரு நாள்- எனது பழைய diary யை படிக்க நேரிட்டது. "Blogging"- மீண்டும் என் நினைவில் வந்தது. ஆனால்- எனக்கு "commitment"-phobia உண்டு என்று எனக்குத் தெரியும். ஆதலால்- நான் பதிவுலகில் அதிக காலம் இருக்க மாட்டேன்- என்றும்- "போற வரை போகட்டும்"- என்ற எண்ணத்தோடு- "self-criticism" ஆக- என் ஆங்கில வலைதளத்தின் URL - allsettodonothing.blogspot.com

முதலில் கவிதை எனத் துவங்கி பின்பு கட்டுரைகள் கதைகள் என- பதிவுலகம் என்னை நான் அதுவரை கண்டிடாத பல உலகங்களுக்கு அழைத்துச் சென்றது. வாசகர்கள் வட்டம் பெருகப் பெருக- எழுத்தில் ஆர்வமும் கூடிக்கொண்டே போயிற்று. மாதம் ஒரு பதிவு என எனக்கு நானே ஒரு இலக்கிட்டுக் கொண்டு பதிவுகள் எழுதத் துவங்கினேன். நான் எழுதிய முதல் கதை- "A Zulu Encounter" நான் 11th class படிக்கும் பொது "Gokulam" என்ற குழந்தைகளுக்கான ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தது. ஆனாலும்- அதை எனது வலைப்பதிவாக "publish" செய்ததில்- எனக்கு கூடுதல் மகிழ்ச்சி தான். முதல் முதலில் மிகவும் அதிகமான "comments" பெற்ற என் பதிவு- "Rajanigandha". ஆனால்- ஒரு கட்டத்தில் "பதிவு" என்று இல்லாமல்- எனது உள்  இருந்த மகிழ்ச்சி, துக்கம், கோவம், வெறுப்பு போன்ற பல உணர்வுகளின் வெளிப்பாடாக மாறிப்போனது எனது வலைத் தளம். "Death of hate" மற்றும் "What did I do"?- என்னுடைய எதோ ஒரு கோவத்தின் எழுத்து வடிவம். அதே போல- சில கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு கிடைக்காத போதும்- வலைத்தளம் இருந்ததால்- பெரிய கவலை இல்லை. "The other end of a cigarette" - என்ற தலைப்பில் ஒரு போட்டிக்காக எழுதிய கட்டுரையும் பதிவுலகத்தில் பதிவாக மாறியது. "The Tunnel" மற்றும் "Goddess of Sin" போன்ற கட்டுரைகள்- நான் அதற்க்கு முன்னர் நினைத்தும் பார்த்திடாத சில முயற்ச்சிகளை என்னை எடுக்கத் தூண்டிய கட்டுரைகள். சிறுகதைகளும் சில எழுத முயற்சிக்கத் தூண்டியதும் வலைத்தளம் தான். "The Marble Game",  "Old man under the Tamarind tree" போன்ற சில கதைகளும் எழுத நேரிட்டது. என்னுடன் சேர்ந்து எனது வலைத் தளமும் வளர்ந்தது. பக்குவமடையத் துவங்கியது.

Dec 2009 ல் Christmas தினத்தன்று அலுவலகத்தில் தனியாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு நாள். திடீரென்று- "நமக்கு தமிழ் மொழி எழுத்து- நினைவில் இருக்கிறதா"? என்று தோன்றியதது. MS Paint ல் என் பெயரை தமிழில் எழுதிப் பார்த்தேன். கோர்வையாக ஏதேனும் தமிழில் எழுதிப் பார்க்க வேண்டும்- அப்போது தான் தமிழில் எழுதுவது நினைவில் இருக்கிறதா என்று தெரியும் என்று எண்ணி- ஒரு paper ல் ஏதோ எழுதத் துவங்கினேன். அதுவரையில் தமிழில் எதுவும் எழுதியது கிடையாது. ஆனால்- எழுதிவிட்டு படித்துப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் முதல் முதலில் எழுதிய தமிழ் கட்டுரை- "காகிதம்". தமிழில் எழுத எழுத தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கூடியது. அதுவரை எனது அம்மா படித்துக் கேட்டிருந்த தமிழ் novel களை- நானே படிக்க முயற்சி செய்தேன். தமிழில் பதிவிடும் போது ஒரு விஷயம் உணரக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு "சிந்தனை" அதன் மொழியை அதுவே நிர்ணயித்துக் கொள்கிறது. மற்றும் ஒரு சில விஷயங்களை தமிழில் எழுத எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உதாரணமாக- எனது சில சிறு வயது அனுபவங்களை- எனது அம்மாவின் மொழியில் எழுதிய கட்டுரைகள்- கடந்து போன காலத்தை மீண்டும் வாழ்ந்தது பார்த்ததுபோல இருந்தது. தமிழில் எழுதத் துவங்கிய போது- ஒரு புது உலகம்- தமிழ் பதிவர்கள் உலகம் என் முன்னே தோன்றியது. சில மிக அழனாக பதிவுகளை படிக்க வாய்ப்பும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக- நான் பல வருடங்களாக ஆங்கிலத்தில் கட்டுரைகள்/கதைகள் எழுதியிருந்தாலும்- தமிழில் நான் எழுதத் துவங்கிய போது எனது பெற்றோரிடமிருந்து நான் பெற்ற பாராட்டு- ஒரு தனி அனுபவம். எனது ஆங்கில கட்டுரைகளையும் அவர்கள் பாராட்டினார்கள் தான். ஆனாலும்- தமிழில் எழுத முயற்சித்ததில் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

கணினி- மற்றும் வலைத்தளங்கள்- ஒரு பொழுதுபோக்கு என்பதை விட என்னை பக்குவப் படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. "கணினி அனுபவம்" என்ற தலைப்பில் இப்படி "சுய புராணம்" பாடிக்கொள்வது சரியா என்று தெரியவில்லை. ஆனாலும்- "கணினி"- என்னும் சாதனம் எனக்கு எப்படி பயனளித்தது என்ற கேள்விக்கு- என் வலைத்தள அனுபவங்களைப் பற்றி பேசாமல் விடை கூருவது கடினம். எனவே- எனக்கு கொடுத்த தலைப்பிற்கு நான் எடுத்துக்கொண்ட "interpretation" "செல்லுமா, செல்லாதா" என்று இந்த தொடர் பதிவு எழுத என்னை அழைத்த GMB sir தான் கூறவேண்டும்...

Dedicated to Ms Sulochana Chari... (Click Here)

This entry was posted on 29 August, 2013 at Thursday, August 29, 2013 . You can follow any responses to this entry through the comments feed .

8 comments

தங்கள் கணினியின் முதல் அனுபவமும்
தொடர் அனுபவமும் அதன் தாக்கமும் அருமை
தொடராத "முதல் "ஆல் என்ன பயன் ?
தாங்கள் தங்கள் தொடர் அனுபவங்களைப்
பகிர்ந்தது முற்றிலும் சரியே
பகிர்வுக்கும் தொடரவும் மனமர்ந்த நல்வாழ்த்துக்கள்

29 August 2013 at 05:58
This comment has been removed by the author.
29 August 2013 at 07:54

//"நமக்கு தமிழ் மொழி எழுத்து- நினைவில் இருக்கிறதா"? என்று தோன்றியது.

MS Paint ல் என் பெயரை தமிழில் எழுதிப் பார்த்தேன்.//

ஜோர்.

கையில் இருக்கும் ஒரு பழைய ஆயிரம் ரூபாய்த் தாள் செல்லுமோ என்று நினைக்கச் செய்யும் அளவுக்கு மோசம்.

அது செல்லுபடியாகி, மனது ஆசைப்படும் தேவைகளையெல்லாம் திகட்டத் திகட்ட ஈடுகட்டினால் எப்படி இருக்குமோ, அதுபோல உங்கள் தமிழ்.

அருமை மாதங்கி. அடிக்கடி தமிழைச் செலாவணி ஆக்குங்கள்.

29 August 2013 at 07:55

கணினி வலைப்பதிவு அனுபவம் அருமை..

29 August 2013 at 11:05

//தமிழில் பதிவிடும் போது ஒரு விஷயம் உணரக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு "சிந்தனை" அதன் மொழியை அதுவே நிர்ணயித்துக் கொள்கிறது.//

உங்கள் கட்டுரையில் இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்பொழுதெல்லாம் எழுதுவதில் மிகவும் அனுபவப்பட்டவர்களாக நாம் எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கூட
இந்த மாதிரியாக தான் உணர்ந்ததை வெளிப்படுத்துவதான வரிகளை எழுத மறந்து ரொம்ப நாளாச்சு.

29 August 2013 at 13:45


அன்புள்ள மாதங்கி, தொடர்பதிவு அழைத்துஇவ்வளவு நாளாகியும் பதிவேதும் காணாததால் ஓக்கே என்ன செய்ய முடியும் என்று விட்டு விட்டேன். இன்று டாஷ் போர்டில் பார்த்ததும் மகிழ்ந்தேன்.என்ன இருந்தாலும் தாய் மொழியில் எழுதுவது அலாதி சுகம்,சிந்தனை அதன் மொழியை அதுவே நிர்ணயித்துக் கொள்கிறது என்பது ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறது. நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் சிந்தனைகள் தாய் மொழியில் இருக்கும் என்று.நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று நினைக்கும்போதுதான் அந்த மொழியில் சிந்திப்பேன். கணினி அனுபவம் என்னும் பெயரில் ஒரே மாதிரி பதிவுகளைப் படிப்பதை விட இது சற்று வித்தியாசமான இடுகை. நன்றி. வாழ்த்துக்கள்.



29 August 2013 at 18:38

அன்பு மாதங்கி. அருமையான எழுத்துக்குச் சொந்தக் காரி நீங்கள். மீண்டும் தொடருங்கள்.
அருமையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
உண்மைதான் தமிழ்தான் தாயை அருகில் கொண்டுவரும்.

23 September 2013 at 18:06

சுவாரசியமான சிந்தனை.
தொலைந்து போன.. மறந்து போன.. இதெல்லாம் அடைகளாகும் என்று நினைத்தது கூட இல்லை. ஆங்கிலம் தெரிந்தால் தான் தமிழிலும் எழுத முடிகிற நிலை வரும் என்பதை நினைக்கத் .தோன்றவும் இல்லை. கணினி வாழ்க.

24 November 2013 at 09:52

Post a Comment