கறைகளும் அந்தச் சுவருகளில் ஒரு சித்திரம் தான் போலும். பழுதடைந்துவிட்ட அந்த கட்டடத்தை புதுப்பித்தால், அந்தக் கட்டிடத்தின் அழகு குறைந்து விடும். சுண்ணாம்பு உடைந்து கீழே விழுந்து கொண்டிருந்தது, அந்தச் சுவருகளிலிருந்து. என்ன ஒரு அழகான ஓவியம், அது! இரண்டு பேர் தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரவிற்கு கிடைத்த ஒரே ஒளி, அவர்கள் இருவரில் ஒருவர் அருகில் இருந்த ஒரு தூங்கா விளக்கு. அந்த விளக்கின் ஒளி- அவர்களின் நிழலை தீட்டிக்கொண்டிருந்தது. அங்கு இன்னும் ஒரு ஓவியம் உண்டு. பள்ளிக்கு, ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் சிறுவர்கள். அந்த ரிக்ஷாவை இழுத்துச் சென்றுகொண்டிருப்பவன்- அவனும் ஒரு சிறுவன்தான். ரிஷாவில் அமர்ந்திருப்பவர்களின் வயது தான் அவனுக்கும்.
இந்த ஓவியங்களைப் பற்றி அப்போது எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் ஓவிய "வீட்டுப் பாடத்தை" வரைவதில் மூழ்கி இருப்பேன். ஓவிய வகுப்பின் மிகவும் கடினமான பகுதி- மனதில் இருப்பதை வரைவது. நான் முயற்சிக்காமல் இல்லை. ஆனாலும், என் ஓவியத்தை பார்பவர்கள் என்னை அழைத்து- "பேய், பிசாசு சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது", என்று அறிவுரை கூறுவார்கள்.
பெற்றோர்கள், பொதுவாகவே அவர்களது குழந்தை- போன ஜென்மத்தில் ஒரு பாடகியாக, ஓவியனாக, ஒரு விஞ்ஞானியாக, கற்றறிந்த ஞானியாகவெல்லாம் இருந்திருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எனக்கு மகள் பிறக்கும் போது- நானும் இப்படித் தான் நினைப்பேன் போலும். ஆனால்- எனக்கு ஓவியத்தில் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஓவியர்கள் பிடிக்கும். ஆனால் என்னால் 'ஓவியம் தீட்டுவது' என்பது இயலாத காரியம்.
ஆனால் ஆசை உண்டு. ஒரு சில விஷயங்கள் காட்சிகளாக, நினைவுகளாக என்னுள் மட்டுமே இருக்கின்றன. அதைச் சொற்களால் வருணிப்பது என்பது சாத்தியமில்லை. அந்தச் சிறிய த்வாரத்தை திறந்தவுடன், "சஷ்.." என்ற சத்தத்துடன் கொட்டும் அரிசி நிறைந்த பத்தாயம். பாசி படிந்த சுவரில், சிகப்பான பூச்சி. இதையெல்லாம் எப்படி வருணிப்பது?
நாம் எத்தனையோ விஷயங்களை செய்ய நினைக்கிறோம். சிறு குழந்தைகளைப் போல. எனக்குத் தெரிந்த ஒரு ஆறு வயது சிறுமிக்கு 'Ornithologist' ஆகவேண்டுமாம்! ஆனால், அச்சிறுவர்கள், மிக விரைவிலேயே அவர்களின் அந்தக் கனவுகளை- 'வெறும் கனவுகள்' என்று புரிந்து கொண்டு விடுகிறார்கள். 'Ornithology' விரைவிலேயே ஒரு ஆறு வயது சிறுமியின் அம்மாவின்- ஆறாவது பிராயத்தின் ஒரு அபத்தமான கானவாக் மாறிவிடும்.
எனக்கு பல அபத்தமான் கனவுகள் உண்டு. நான் ஒரு பேருந்தில் செல்கிறேன். எங்கு செல்கிறேன் என்ற கவலையின்றி சென்றுகொண்டே இருக்கிறேன். கையில் ஒரு பேனாவும், சில பேப்பர்களையும் தவிர வேறொன்றுமில்லை. என் பயணத்தின் முடிவை தவிர்த்துக் கொண்டே- நான் சென்று கொண்டே இருக்கிறேன்...
சில சமயங்களில்- என் அபத்தமான கனவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில்- 'இந்தக் கனவு என்னுடையதில்லையோ' என்று தோன்றும். 18- ஆவது மாடியில், நான். மிகப் பெரிய ஜன்னல். ஜன்னலுக்கு வெளியில்- உண்மைகளின் கொடூரமான அழகு! ஜன்னலின் விளிம்பில் அமர்ந்தபடி நான்- புகை பிடித்துக்கொண்டு. மழை. ஆனால் மழையில் என் cigarette ஐ நான் அணைக்க என்னதான் முயற்சித்த போதும், அதன் முனையில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு- எரிந்து கொண்டே இருந்தது. மழையை அவமானப் படுத்துகிறேன், cigarette- சாம்பலை கீழே தட்டியவாறு.
கூட்டமான ஆட்டோ-வில் வேலைக்குச் செல்ல ஓட்டம், கணினியின் கருப்பு- வெள்ளை தோற்றம், cafeteria வில் coffee. ஆனால் இப்படிப்பட்ட சில சாரமில்லா உண்மைகளுக்கு நடுவிலே- என்னை நான் என் கனவுகளிடம் தோற்றுவிட்டேன். நான் என்னதான் உண்மைகளை நோக்கி விரைய முயற்ச்சித்தாலும், இன்னும் எனக்குப் பிடித்திருக்கும் ஓவியம்- உண்மைகளில் ஊறிப்போன இருவர்- அதை மறக்கும் பொருட்டு, தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அருகே இருக்கும் அந்த தூங்கா விளக்கு, அவர்களின் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக தீட்டிக்கொண்டிருந்தது. அந்த நிழல் நீண்டுகொண்டிருந்தது...
பின் குறிப்பு: படங்கள்- என் கிறுக்கல்கள்...