ஜாடி
பச்சை இலைகளின் மத்தியில் ஆங்காங்கு மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் இலைகள்- கிளைகளைப் பற்றிக்கொண்டு வாழ முடியாத முதிர்ச்சியால்- பற்றியிருக்கும் கிளைகளை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே! மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.
சிந்தனை மனதில் தோன்றி வார்த்தையாக உருவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தருணம். வார்த்தை தேடி அலையும் அந்த சிந்தனைகள், மனதினுள் ஏற்படும் எண்ணச் சிதரல்களுக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருக்க- அதனுள் அத்தனை மாற்றங்கள்! நாம் ஏன் உதித்தோம்? நமக்கு வடிவம் கிட்டாமல் இப்படி மூலையில் ஒடுங்கிப் போய் விடுவதற்கு நாம் உதிக்காமலேயே இருந்திருக்கலாமோ? என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா'? என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சிந்தனைகள் என்னிடம் கூறியது- 'இந்த அறிவின்மையும் அந்த கூட்டத்தில் தான் சேரப்போகிறது' , என்று!
ஒரு ஜீவராசியின் சிந்தனை- அதனுடையது. உரு இல்லாது போனால்- அது வெளி வர வேறு வழி இல்லை. உடைந்த சாமான்கள், தூசு படிந்த தரையினில் சீரின்றி படர்ந்து இருந்த அந்த அறையினுள்- வருடங்கள் பல கழிந்தும் உருவம் மாறாது, இடம் தவறாது அமர்ந்திருந்தது அந்த ஜாடி. கழுத்தை உயர்த்தி, அது வலித்து உடைந்து போகும் வரையில் அந்த ஜாடியை பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. சிலந்தி வலைகளின் திரையின் மறைவில், எழிலாய் ஒளிந்து கொண்டு, களவாய் நம்மை அழைத்திருந்தது- பழமை தட்டிப் போன அந்த பீங்கான் ஜாடி.
அதனுள் என்ன இருக்கக் கூடும்? இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச்சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன? "இருட்டு"! என்றார்கள். உருவில்லா சிந்தனைகள். இருட்டு ஜாடியினுள் சிக்கிக் கொண்டிருக்கும் என்னை- அந்த ஜாடி வான மார்கமாக பறந்து சென்று, பின்பு பூமியைத் துளைத்துச் சென்று- நாகலோகத்தில் விட்டு விடுவது போன்ற உருவில்லா சிந்தனைகள்!
அலாவுதீனின் பூதம் போன்றதொரு பூதம் கிளம்பியதாம்- ஜாடியின் உள்ளிருந்து! மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது? இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே! இப்போது கேட்க என்ன இருக்கிறது? அந்த மூன்று ஆசைகள் என்ன என்று தேடி இன்னும் அலைந்திருக்கிறது என் உருவில்லா சிந்தனைகள்.
சிந்தனையின் திரையை விலக்க மனமில்லை! ஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...