பரமபதம்
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" கேட்டுத் துவங்கிய பல காலை வேலைகளின் விளைவே "மஞ்சகாப்பு" கட்டுரை. அதன் பிற்பாடு ஒரு சில சமயங்களில் நான் "திரும்பிப் பார்த்திருக்கும்" பொழுதுகளில் ஒரு சில விஷயங்களைப் பற்றிய என் கருத்துக்களில் பல்வேறான எண்ணங்களின் தாக்கம். "இருப்பது", "இல்லாதது" என்று பல வேதாந்தங்களும், சித்தாந்தங்களும் அவ்வபோது மனதினில் இடம் பிடித்துக் கொண்டும், விடை பெற்றுக்கொண்டும் இருக்கும் இந்த வேளையில் தான், நான் இவர்கள் இரு தரப்பையுமே சாரவில்லை என்ற ஞானம் எனக்கு உதித்தது. ஏனெனில்- நான் "இருப்பது" என்பவர்களின் பக்தியையும் ரசிக்கத் தெரிந்திருக்கிறேன், "இல்லாதது" என்பவர்களின் வாதங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவை அனைத்திற்கும் இடையில், நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்திற்கு எடுத்துச் செல்வது என்ற பொறுப்பு- யாரும் நமக்கு அளிக்காவிட்டாலும், நம்முடையது- என்பதும் உண்மை.
நம் கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் "பக்தி" எனப்படும் அந்த உணர்விற்கு நம் கலாசார முன்னேற்றத்தில் ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது. ஆயிரம் வருடங்களாக உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலாக இருக்கட்டும், "நம்ம தாயார் என்ன அழகா இருக்கா, பாரேன்"- என்று சிலைகளின் அழகில் உணர்ச்சிகள் தேடும் சாதாரண மக்களின் "பக்தியாக" இருக்கட்டும். "தப்பு பண்ணினா சாமி கண்ணா குத்தும்"- என்ற உணர்வு, குழந்தை முதல் ஒரு மனிதனை ஒழுக்கத்தின் பாதையில் நடக்க உதவியிருக்கிறது.
நம் கலாசாரத்திலும், பக்தியிலும் இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள். "வைகுண்ட ஏகாதசி" அன்று "சுவர்க்க வாசல்" திறக்கப்படும், கோவில்களில். அதில் நுழைந்தால்- "சுவர்க்கம் நிச்சயம்" என்பது ஐதீகம். அது ஒரு உணர்வு. 80 - 90 வயது நிரம்பிய ஒருவர், தன கடமைகளை எல்லாம் முடித்தவர், முழுமையாக உணர்ந்து அனுபவிக்கும் ஓர் "மன நிறைவு" அது. ஆனால் இன்றைக்கு, வளர்ந்த சூழ்நிலையும்- சுற்றி நடக்கும் நினைவுகளினாலும் பாதிக்கப்பட்ட சிந்திக்கும் திறனானது- 50 ரூபாய் கொடுத்து, வரிசையில் நின்று, சுவர்க்கத்தில் ஒரு 'seat reserve ' செய்கிறோம், என்றுதான் நினைக்க முடிக்கிறதே தவிர- "மன நிறைவு" என்ற "பக்தி" எனப்படுவதற்கே உரிய உணர்வு இங்கு இல்லை.
"ராதா-கிருஷ்ணா" என்ற எண்ணம், அதனுடைய காவியத் தன்மயினால் அமரத்துவம் பெற்றது என்பது என் கருத்து. சில நேரங்களில், காவியங்களினால்தான் "பக்தி" உருவாக்கப் படுகிறது. மொகல் மன்னர்களின் படைகளிலேர்ந்து ரங்கனையும்-தாயாரையும் பாதுகாக்க, தாயாரை வில்வ மரத்தினடியில் புதைத்து; ரங்கனை ஒரு குழு ஒன்று, வேறு தேசம் கொண்டு சென்றது. பல வருடங்கள் ஆகியும், அக்குழு திரும்பாததால் வேறொரு "ரங்கன்" செய்து வழிபட துவங்கிவிட்டார்கள். ஆனால் தாயாரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து, குழுவில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து, மொகல் படைகளிடமிருந்து ரங்கனைக் காத்து எடுத்து வந்தார். ஆனால் புது-ரங்கனால் பிழைத்திருக்கும் தற்போதைய குழு- இந்த ரங்கனை ஒப்புக்கொள்ளவில்லை. 90 வயது நிரம்பிய, கண் பார்வை மங்கிப்போன ஒரு வண்ணான்- பழைய ரங்கனின் ஆடை நறுமணம் கொண்டு, அவரே "உண்மையான ரங்கன்" என்று கூறிய பிற்பாடே அந்த ரங்கனை ஒப்புக்கொண்டார்கள். தாயார், அவளது உண்மையான கணவன் வந்தவுடன், கோவில் தர்மகர்த்தாவின் கனவில் தோன்றி "புதைத்த இடத்திலேயே என்னைத் தேடு, நான் கிடைப்பேன்", என்றாளாம். இப்படிப்பட்ட சில கதைகளும் "பக்தி"/நமது கலாச்சாரத்திற்கு அடையாளமாக விளங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில்- நமது பல கோவில்களை சீர் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தபோது- பல வவ்வால் தோட்டங்கள் காணாமல் போயிருந்தன. நல்லதுதான். ஆனால் எனக்கு என்னவோ அங்கு வவ்வால்களைப் பார்த்தல் தான் அந்தக் கோவிலின் பழமையையும், பெருமையையும் முழுமையாக உணர முடிகிறது. கோவில்கள், எந்த காலகட்டத்திலுமே பல ஜீவராசிகளுக்கு இருப்பிடமாக உள்ளது. "Renovation " எனப்படுவது அந்த கீவராசிகளையும் பாதிக்காது இருத்தல் அவசியம். அதே போல பரீட்சை roll number ஐ கரியில் கோவில் சுவறுகளில் கிறுக்கும் "கலாசாரத்தை" நம் காலத்தோடு நிறுத்திக் கொள்ளுதலும் அவசியம்.
கலாசாரத்தை வருங்காலத்திற்கு கொண்டு செல்வது என்னும் பொறுப்பானது- வெறும் கோவில்களையும், அங்குள்ள சிலைகளையும் குழந்தைகளுக்கு காட்டுதலாகிவிடாது. 1000 வருடங்களாக ஒரு கோவில் இருக்கிறது என்றால்- அது கற்களும் மணலும் சேர்ந்த கலவை மட்டுமல்ல. அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வைப்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை புரிந்து கொண்டாலே அந்தக் கோவிலின் இருப்பதை புரிந்துகொள்ள இயலும். இப்படிப்பட்ட சில விஷயங்களை நினைத்துப் பார்க்கையில்- நம் அறிவையும்- சித்தாந்தங்களையும்- நாம் நம்பாத நம்பிக்கைகளையும் பின்னே வைத்து விட்டு விட நேரும் இந்த கலாசாரத்தை முன்னே எடுத்துச் சல்ல வேண்டிய பொறுப்பானது, மிக மிக கடினம் தான்- என்று நினைக்க வைக்கிறது.