போர்  

Posted by Matangi Mawley

- Thapasaa cheeyathe Brahma


மனதில் நினைத்து முடித்த நினைவுகளின் தாக்கம். மாதம் ஒன்றிற்குப் பேனா மூன்று என்ற என் கணக்கிற்கு விடை இதுவாகவும் இருக்கலாம் போலும். என் நினைவுகளின் முதல் நண்பனான என் பேனா, அந்த நினைவுகளின் தாக்கங்களால் வேறு நினைவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றது. நினைவுகளின் சக்தியையும், ஆற்றலையும் அந்த பேனாவினால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பேனா முனை, வற்றிப்போய் விடுகிறது. புது நினைவுகள்- புது பேனாவைத் தேடிக்கொள்கின்றன.

நினைவுகளின் தாக்குதல் பேனாவை மற்றுமின்றி, அதனால் உருவாகும் எழுத்துக்களையும் தாக்கும் சமயங்களும் உண்டு. எழுத்து, எண்ணங்களின் வேகங்களுக்கு ஈடு கொடுக்க மறுத்து விட- எண்ணங்கள் அதன் கோவத்தை எழுத்தின் மீது எய்து விட- எழுத்தின் மாறுபட்ட கோணங்களும், சீரில்லாத கோடுகளும்- எண்ணங்களின் கோபக் கனலில் வெந்து பிறந்த சாம்பலானது. எழுத்து- உருயில்லா எண்ணங்களில் ஒன்றிப் போனது...

எண்ணங்களின் தாக்கம், காகிதத்தின் மீதும். வெண்மையின் நிறங்கள். அந்த நிறங்களுக்கு- காகிதத்தின் வெளுப்பின் மீது கோவம். அந்த வெளுப்பின் ஒவ்வொரு புள்ளியையும் தேடி- அதில் எண்ணங்களின் நிறம் நிரப்பி- அந்த காகிதத்தின் அவலத்தையும் ரசித்தது, அந்த எண்ணம். எண்ணங்களின் தாக்கம்- பேனாவின் வழி எழுத்தில் புகுந்து, காகிதத்தில் படர்ந்து விட- காகிதத்தின் வலி மூன்று மடங்காக உயர்ந்தது.

"எண்ணங்களை நிறுத்தி விட வேண்டும்"- என்றது காகிதம். எழுத்தும், பேனாவும் ஆமோதித்தன. பேனா எழுத மறுத்தது. எழுத்துகளும், பிழைகளைக் கொட்டித் தீர்த்தன. காகிதம் கசங்கிக் கொண்டது. எண்ணங்கள் வெளியேற முடியாமல் திணறிப் போனதைக் கண்டு, களித்தன அவை. எண்ணங்களின் கொட்டத்தை அடக்கி விட்டதாக எண்ணிப் பெருமை கொண்டன. மகிழ்ந்தன.

அவைகளின் வாழ்வை வெறுத்தன. எழுதாத அந்த பேனா- அதன் அவலத்தைத் தாளாது உடைந்தது. பிழையான எழுத்துகள்- அந்தப் பிழைகளினால் வெட்கிப் போனது. கசங்கிய காகிதமும் அதன் தோற்றத்தை வெறுத்தது.

எண்ணங்களிடம் சென்று முறையிட்டது. தங்களை வருத்தும்படி கேட்டுக் கொண்டது. எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை என்று அவைகள் உணர்ந்தன. எண்ணங்களின் வருத்தலில் சுகம் கண்டு துளிர்த்தன. எண்ணங்கள் மலர்ந்தன...

This entry was posted on 18 June, 2011 at Saturday, June 18, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

10 comments

எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை என்று அவைகள் உணர்ந்தன. எண்ணங்களின் வருத்தலில் சுகம் கண்டு துளிர்த்தன. எண்ணங்கள் மலர்ந்தன...


ஆஹா
என்ன ஒரு ஞானம்
சொல்லும்
கொப்பளிக்கும்
வார்த்தையின்
வழியே
வந்த
வார்த்தைகள் ,
பிரமித்துபோனேன்
உங்களின்
கருத்தை
எழுத்தை
நடையை
ஆளுமையை கண்டு
பிரமாண்டம்

18 June 2011 at 12:59

//எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை//

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

18 June 2011 at 14:12

இந்த பதிவின் மூலம் நிறைய எழுதி வீணான பின்னரே, பதிவு பொலிவு பெற்று விளங்குகிறது, என்று சொல்ல வருவதாக புரிந்து கொண்டேன். சரியா.?

18 June 2011 at 15:22

அற்புதமான பகிர்வு மாதங்கி. ;-))
எண்ணங்களின் போர்! சரியா?
தவறெனில் யார் புரிந்த போர் இது? ;-))

18 June 2011 at 15:29

எண்ணங்கள் , எழுதுகோல், எழுத்துகள், காகிதம், அதன் மிஞ்சும் வெண்மை, இவை ஐந்தை கொண்டு அழகான கவிதையாய் ஓரு கட்டுரை.

18 June 2011 at 15:32

//எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை என்று அவைகள் உணர்ந்தன.//

எண்ணங்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. தன்னை வெளிப்படுத்த என்ன வழி என்று யோசித்தது. வாய் வழி பேச்சென்றால், எழுத்து மாதிரி அவ்வளவு சிலாக்கியமாக அது தெரியவில்லை. எழுத்துக்கு இருக்கும் நிலைத்தல், பேச்சுக்கு இல்லாமல் இருந்தது தான் காரணம். பேச்சாக வெளிப்பட்ட எண்ணம், காற்றோடு போனது தான் கண்ட பலனாகத் தெரிந்தது. சாஸ்வதமான தனது குடியிருப்புக்கு எழுத்து இன்றியமையாத ஒரு தொடர்புச் சாதனம் என்று எண்ணம் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், பேனா, காகிதம், கணினி என்று தன்னைச் சார்ந்த சாதனங்களோடு எழுத்து படை திரட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தது. தேடிப் போன மூலிகை காலில் சிக்கிய கதை தான். எண்ணம் ஒரு புன்முறுவலுடன் எழுத்தின் முறையீடைக் காது கொடுத்துக் கேட்டு சம்மதித்த கதை தான் உங்களுக்கும் தெரியுமே!

தொடர்ந்து எண்ணத்தின் வேகத்திற்கு
ஏற்றம் கொடுக்கிற மாதிரி சிந்திப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி, மாதங்கி!

18 June 2011 at 19:12

கட்டுரையை கவிதையின் தாக்கம் மிளிர எழுதுவதும்... ஒரு கவிதையை கட்டுரையாய் கசியவிடுவதும் உங்களால் சாத்தியமாகின்றது மாதங்கி! நன்று..

18 June 2011 at 23:43

போரின் முடிவில் நன்மையே விளைந்ததில் மகிழ்ச்சி

19 June 2011 at 08:34

The last part was excellent.

19 June 2011 at 19:13

// அந்த நிறங்களுக்கு- காகிதத்தின் வெளுப்பின் மீது கோவம்.// ரசித்த வரிகள்!

19 June 2011 at 20:25

Post a comment