பொட்லம்
அந்த வீதிகள் முழுவதுமே- பல்வேறு விதமான மலர்களின் மணம் வீசிக்கொண்டு, மனமே ஒரு புது மணம் உணர்ந்த மகிழ்ச்சியில் அமைதி கண்டு- மகிழ்ந்திருக்கும். புடலங்காய்- கொடிகளில் தொங்கிக்கொண்டு நிற்பது போல, பூக்களும் அழகாக நாருகளில் கட்டப் பட்டு தங்களை சூடப்போகும் எஜமானர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். அது ஒரு அழகு. ஒரு சரம் சந்தன முல்லையை எடுத்து- நீர் துளிகள் படிந்த- காய்ந்து போன தாமரை இலையில் மடித்து, வாழை நாரில் கட்டிக் கொடுப்பார்கள். நிறம் இழந்த அந்த தாமரை இலையும்- அந்த சந்தன முல்லையின் வாசத்தை தழுவிக்கொண்டு- தூக்கி எறியப் படுவதற்கு முன்னர், ஒரு சில நொடிகள், அதன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போகும்.
அங்கே கால் எடுத்து வைத்த நொடியே- புது வெண்ணையின் மணம், ஆழ் மனம் வரை பாய்ந்து- பல ருசிகளையும் நாவில் தூண்டச் செய்யும். பல அடுக்குகளில் வெள்ளை வெளுப்பாக, ஓரிரு இடங்களில் வெளிச்சம் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த வெண்ணை. மெல்லிய தாள் ஒன்றை எடுத்து- மரத்தால் ஆன ஒரு வட்டக் கரண்டியால் வழித்து எடுத்து- அந்த வெண்ணையை தாளின் மீது வைத்து இடை பார்த்து சரி செய்வர். அந்த மெல்லிய தாளில் அந்த வெண்ணையை மடித்துக் கட்டுகையில்- அது அந்த தாளை கிழித்துக் கொண்டு வெளி வந்துவிடும் போன்ற எண்ணம் என்னைத் தழுவியதுண்டு. சணல் கொண்டு கட்டிப் போட்டு விடுவர். தாளை விட்டுப் பிரிய மனம் இல்லாத வெண்ணை- அதில் ஒட்டிக் கொள்ளும்- பிரியா விடை கொடுக்கும்.
அப்பொழுதுதான் அறைக்கப்பட்டதனால் கிளம்பியது- சூடு. அந்த சூட்டுடன் கலந்த காபி விதையின் வாசம். அந்த நிறத்திலேயே ஒரு தனித்துவம். அதை நுகர்ந்த உடனே அதைப் பருக வேண்டும் என்ற ஒரு உள் உணர்வு. பல்வேறு விஷயங்கள், மனதினுள் அங்கேயும், இங்கேயும் அலைந்து கொண்டு ஒரு விதமான வெறுப்பை உற்பத்தி செய்யும் சமயத்தில்- எங்கிருந்தோ வரும் புத்துணர்ச்சியாக, எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடும் ஒரு நறுமணம் அது. காகித போட்லத்திளிருந்து அதைத் தனியே பிரித்த பிறகும்- அந்த காகிதத்தில் ஒட்டிக் கொண்டு நிற்கும் காபி துகள்கள். அந்த நறுமணத்தை விட்டு பிரிய முடியாத காகிதம்- அதனுடையே வீசி எறியப் பட்டுவிடும்.
போட்லங்களுக்கு அதன் உள் இருப்பதின் தன்மை பற்றிக் கொண்டு விடுகிறது. ஆயினும், அந்த பொட்லங்களுக்கு தனியே மதிப்பு இல்லை. என்னதான் அது சந்தன முல்லையின் மணம் தழுவிக்கொண்ட தாமரை இலையாக இருந்தாலும்- முல்லையின் மணம் வீசுகிறதே என்று அதை யாரும் தலையில் சூடப் போவதில்லை.
ஒரு ஜீவன் ஜனித்தது என்று நாம் எப்போது கூறுகிறோம்? அந்த ஜீவனின் பிறப்பின் தருணத்தில். ஆனால்- பிறப்பு என்பது எதைக் குறிக்கிறது? கண்ணுக்குத் தெரியாத அரூப நிலையில் இருந்து ஏதோ ஒரு சக்தி அதை பற்றி வந்து- உடல் என்னும் பொட்லத்தினுள் அடைத்து விடுகிற அந்த தருணமே உண்மையான "பிறப்பு" என்று எடுத்துக் கொள்வோம். உடலினுள் அடைக்கப் படுவதற்கு முன்னர் அதன் தன்மை என்ன? அதனால் சிந்திக்க முடியுமா? பிரபஞ்சத்தின் ரகசியங்களையும், உண்மைகளையும் அது அறிந்திருக்கக் கூடுமோ என்று பல்வேறாக நினைக்கத் தோன்றுகிறது! அப்படி தெரிந்திருக்கக் கூடும் என்றே வைத்துக் கொள்வோம்.
மனிதர்களால் "பஞ்ச பூதங்கள்" என்ற சித்தாந்தத்தை மீறி சிந்திக்கவே முடியாது. எனவே- "ஜீவன்" என்ற ஒன்றை "உடல்" என்ற பொட்லத்தினைக் கொண்டே அவர்களால் அறிய முடியும். ஏனெனில் "உடல்" என்ற ஒன்றே "பஞ்ச பூதங்கள்" என்ற சித்தாந்தத்தினுள் அடங்கி நிற்கிறது. அவர்களால் புறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் புரிந்துகொள்ளும் "ஜீவன்" எனப்படுவதை இப்படி ஒடுக்கி- நமக்கேற்றார் போன்று மாற்றிக்கொண்டு பார்ப்பதே தவறு!
"மனதை ஒரு நிலைப் படுத்த வேண்டும்" என்று சிலர் கூறுகிறார்கள். ஏனோ- இப்படிச் சொல்வது வினோதமாகத் தோன்றுகிறது! காரணம்- மனதின் இயல்பு அது கிடையாது! "மனஸ் ஸஞ்சலம் அஸ்திரம்". மனதின் தன்மையை புறிந்து கொள்ளாமல்- அதை "உடல்" என்னும் பொட்லத்தினுள் அடக்க வேண்டும் என்பது- அதனுடைய இயல்பை மீறியதொரு செயல். "மனம்" அதன் இயல்பான உருவத்தைத் தேடி அலைகிறது. அவ்வாறு தேடுகையில் அதற்க்கு பல்வேறு உண்மைகள் புலப் படுகின்றன. அதன் ஜனனத்தைத் தேடி அது அலைந்தாலே- உண்மைகளை உணரும். அதற்க்கு அதை இந்த உடல் எனும் பொட்லத்திலிருந்து விலக்க வேண்டும்.
ஆழ்ந்த ஒரு பிணைப்பு உருவானதாலோ என்னவோ- உள் மனதின் சிந்தனைக் கடலில் எந்தவித அலை அடித்தாலும்- அதன் தாக்கம் வெளியில் தேகத்திலும் தெரிகிறது. மனதை தேகத்தின் அடிமையாக்காமல் காத்தல் அவசியம்.
மனம் பறக்கட்டும். பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் அது தனக்கென்று ஒரு தனி கோட்டைக் கட்டட்டும். அதைத் தடுத்துப் போடா வேண்டாம். அதை இந்த உடல் என்ற பொட்லத்தினுள் அடைக்க வேண்டாம். அப்படி அடைத்தால்- உடல் அதைப் பற்றிக்கொள்ளும். உடல், மனதை மறக்கச் செய்யும். தன்னைப் புகழச் செய்யும். மனதை உடல் என்னும் பொட்லத்தினுள் பூட்டிப் போட்டு விட்டு விடாமல்- அதன் சிறகுகளைத் தீட்டி விட்டேன்... அது உயரப் பறக்கக் கண்டேன். களித்தேன்...