ரப்பர் பந்து
இந்த பூமியின் மீது என்னதான் கோபமோ!? அந்த பந்தின் தாக்கத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்திருந்தால் தெரியும். பூமியை துளைத்துக்கொண்டு பிரபஞ்சத்தின் எல்லைகளை எட்டும் போன்ற ஆற்றல்- சீற்றம் அதற்கு! ஆனால் பூமி அதற்கு சம்மதிக்கவில்லை. "உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று ஏளனமாக எள்ளி நகையாடியது- அந்த பந்தைப் பார்த்து!
பூமியின் அழுத்தத்தில் காயமடைந்த பந்து- ஓய்ந்து போய்விடவில்லை! உண்மைகளைப் புரிந்து கொள்ள ஒரு சில நிரந்தரங்களை உடைத்துத்தான் ஆக வேண்டும். கோடுகளின் கோணங்களே புதிய பாதைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன! ஆனால் நிரந்தரங்கள் வலுவானவை! பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்திருக்கும் அவைகள் "உண்மைகள்" என்ற நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டு- அழிக்க முடியா- பெரும் சக்திகளாக பரவி நின்று கொண்டிருந்தன!
அரக்கனின் தலையை வெட்ட-வெட்ட, புதிய தலை முளைப்பது போல! இதன் கருத்தை அறிந்து கொள்ள முயற்சித்தால்- அவன் உயிர் அவனுள் இல்லாது- ஏழு கடல் தாண்டிய ஓர் தீவில், பல்வேறு கணக்கான வாயில்களைத் தாண்டி- அதன் மத்தியில் இருக்கும் இயந்திரக் கிளியில் இருப்பது போன்றது, நிரந்தரத்தின் உண்மை! இந்த நிரந்தரங்களுக்கு ஓய்வும் கிடையாது- அழிவும் கிடையாது! அவைகளின் சக்தி, அவைகளின் 'இருப்பதில்' இல்லை. அவைகளின் 'இருப்பதில்' நம்பிக்கையில் இருக்கிறது!
மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்! "இதன் மூச்சுக்காற்று பட்டாலே இறந்து போய் விடுவாய்"- என்று அவன் கூவுவதை நம்பி, பணத்தை வீசும் ஏமாளிகள்! நிரந்தரங்களுக்கு, இப்படிப்பட்டவர்கள் எம்மாத்திரம்?
ஒரு சில அபூர்வமான ஜீவன்களும் ஜனித்துள்ளனர். உண்மைகளை அறிய முயற்சித்துள்ளனர்! அவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியவையே! ஆனால் நிரந்தரங்களின் கோணங்கள் மிகவும் விநோதமானவை! "உண்மையை நெருங்கினோம்" என்ற எண்ணத்தில் திளைத்துக் கொண்டிருக்கையில்- நிரந்தரங்கள் அவைகளின் மற்றொரு பொய்யை, மெய் படுத்திக் காட்டிவிடுகின்றன! ஏதோ பசியால் துடிக்கும் நாய்க்கு உணவு கொடுத்து மகிழ்விப்பது போல! அந்த ஜீவன்களும் அதன் பொய்யை 'பொய்' என அறிவதற்குள் மகாத்மாக்களாக மாற்றப்பட்டு விடுகிறார்கள்! அப்படி மாற்றப் பட்டவர்கள், அவ்வாறு மாற்றப்பட்டபின், எப்பொழுதுமே- அவர்களின் 'உண்மை தேடும்' தொழிலை மறந்தே போனார்கள்!
பந்து ஓயவில்லை! அதன் இலட்சியங்களை மறக்கவும் இல்லை! பூமியின் சீற்றத்தின் ஒரு- துளியைக் கண்டு, மிரண்டும் போய்விடவில்லை! விண்ணை நோக்கி உயர்ந்தது! புதிய சக்திகளைத் தேடி! பூமியை எதிர்கொள்ள ஆற்றலைத் தேடி! அச்சக்திகளைப் பெற்று மீண்டும் புவியைத் தாக்கியது! மீண்டும் புவியின் தாக்கத்தை அனுபவித்து- அந்த வலியில் உயிர் பெற்று விண்ணை நோக்கி விரைந்தது!
இப்படியாக, அந்த பந்து- தன்னுள் சக்தி இருக்கும் வரையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, மீண்டும் - மீண்டும் முயற்சித்தது! பந்து, நிரந்தரமானதா என்ன? பாவம்! களைப்புற்றுப் போய்விட்டது! அதன் களைப்பு- அது தாக்கிய அந்த புவியின் மீதே அதை உருளச் செய்தது!
மெதுவாக நகர்ந்து, அங்கே வெயிலில் காய்ந்து கொண்டிருந்த துணிகளின் கீழ் தாழ்ந்து போனது! அந்த துணிகளிலிருந்து விழும் ஈரத்துளிகள், பந்தின் மீது சொட்ட, பந்து, மீண்டும் உயிர்பெற்றது!