விரிபோனி
ஸ்கூல் விட்டு வந்தோடனே- மூஞ்சி அலம்பினோமா, கெளம்பினோமா-ன்னு உண்டா? ஒயட்டிண்டு நிக்கறது- அங்கயும், இங்கயும். நாங்கள்லாம் அந்தகாலத்துல இது வயசுல பத்து பேருக்கு சமச்சுபோடுவோம். இதென்னடான்னா- எல்லாத்துக்கும் என்ன ஏவிண்டு நிக்கறது! நானும் எத்தன்னாளுக்கு தான் இது பின்னாடியே குளி, பல்லு தேய், பாத்ரூம் போ ன்னு சொல்லிண்டு அலைய முடியும்? அதெல்லாம் அதுக்கா தெரியனும். மொட்ட மாடிலேர்ந்து துணி எடுத்துண்டு வரேன்னுது! ஆஹா- எம்பொண்ணும் வேல செய்யரதேன்னு நெனச்சேன்! அங்க உக்காந்து- நோட் பேப்பர்-ல ராக்கெட் பண்ணி உட்டுண்டுருக்கு! தெனத்துக்கு இது ஒரு வேல! பாட்டுக்லாஸ் போகணும்னாலே இப்படி ஏதாது பண்ணிண்டுருக்கு!
எப்போதும்போல இன்னிக்கும் லேட்டு தான். "பாட்டு மாமி திட்டறா"னா- யாருக்குதான் கோவம் வராது? சரளி முடிஞ்சு, ஜண்ட முடிஞ்சு- நாங்க உள்ள போறச்ச அலங்காரம் பாடிண்டுருந்தா. மூஞ்சிய ஒண்ணுமே தெரியாதமாரி வெச்சுண்டு அது உள்ள காலெடுத்து வெக்கும்போதே நேக்கு தெரியும் இது இன்னிக்கு நன்னா வாங்கி கட்டிக்க போறதுன்னு! "வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு" ங்கறா மாமி. "பண்ணினேன் மாமி"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது! மாமி ஒடனே என்னதான் பாக்கறா! நான் என்ன பண்ணறது?! இத பெத்தாச்சு. ஆனாலும் கோதண்டராம ஐயர் எங்கள அப்படி வளக்கலையே- பொய்யெல்லாம் சொல்லபடாதுன்னா- நான் என்ன பண்ணறது? "அதெல்லாம் பண்ணுவா"ன்னேன்!
நாலு ஸ்வரம் பாடரதுக்குள்ள பேச்சு வேற மாமிகிட்ட! ஸ்கூல் கதையெல்லாம் ஒப்பிச்சாகணுமே! என்கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறது! அது 3rd std ல A section ல படிக்கரதுங்கரதே அது மாமி கிட்ட கத சொல்லும்போது தான் நேக்கு தெரியறது! பாடினோமா, நாலு பாட்டு கத்துப்போமா.. ஒண்ணுங்கடயாது! ஒரு விஷயத்த உக்காத்திவச்சு சொல்றதுக்கே அத்தன ப்ரயத்ன பட வேண்டிருக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு ன்னு அப்டியே தாவிண்டேஇருக்கு!
"தாளமெல்லாம் தப்பு. தருவ தாளம் இப்படியா போடுவா? நீ வரதுக்கு முன்னாடி கார்திக்காவது ஒழுங்கா போட்டுண்டுருந்தான். உன்ன பாத்து அவனுக்கும் மாறிடுத்து"! இது கவனம் எங்க தாளத்துல இருக்கு? அவாத்துல "திலோ"ன்னு ஒரு பூனை இருக்கும். அது அப்போதான் பாலெல்லாம் குடிச்சுட்டு, ஜம்முனு சொஹுசா- sofa ல ஏறி படுத்துண்டுது. அத உக்காந்து நோட்டம் உட்டுண்டுருந்துது. அந்த கார்த்தி புள்ளயாண்டானுக்கு பாவம், தாளம் மறந்துபோச்சு. இது சரியா போடறதோன்னு இத பாத்து அவம்போட- மாமி உள்ளேர்ந்து வரெச்ச ரெண்டும் கரெக்ட்-ஆ தப்பு தப்பா போட்டுண்டுருக்குகள்! நேக்கு தெரிஞ்சாலாது ஏதாது சொல்லிருக்கலாம். நேக்கு எங்க இதெல்லாம் தெரியும்?
திட்ட வாங்கிநோடனே வாய்லேர்ந்து- ரெண்டுத்துக்கும் கொரலே காணல. இதுக்கா, கூட்டத்துல வாயசச்சே பழக்கம் அதுக்கு! கார்த்திக் வேற பாவம்- சொஹத்துல கொரலே எழும்பால அவனுக்கு! மாமி- "சத்தம்-சத்தம்" கரா! அதட்டரா! திடீர்னு, "மாமி-மாமி! கார்த்திக் அண்ணா அழறா", அப்ப்டின்னுது, வாய வெச்சுண்டு சும்மா இல்லாத! மாமி ஒடனே- "அவனுக்கு வெக்கம், மானம், சூடு, சொரண-எல்லாம் இருக்கு. அதனால அழறான்! நமக்குதான் அதெல்லாம் கெடயாதே! நீ பாடு..." அப்படின்னா. நல்ல வேள. அதுக்கு இதெக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. தெரிஞ்சாலும் பெரிசா கண்டுக்காது!
"போன கிளாஸ்-ல கல்யாணி வர்ணம் முடிஞ்சுதா...?" ன்னு இத கேட்டாஇதுக்கென்ன தெரியும்? அது பாடற அழகு, கல்யாணி, காம்போஜி, ஆரபி- எல்லாமே ஒரே போல தான் இருக்கும். அது எதோ ஒரு பக்கமா தலையஆட்டித்து. மாமி, அத அமாம்-நு எடுத்துண்டு- "நான் 'விரிபோனி' வர்ணம்எடுக்கறேன். பைரவி, அட தாள வர்ணம்! இப்ப கத்துக்க ஆரம்பிச்சாதான் ஒரு வருஷத்துல எப்போவாவது பாட வரும்..."- அப்படின்னா மாமி. கார்த்திக் அண்ணாவுக்கு குஷி தாங்கல! கஷ்டமான பாட்டாச்சே.. எம்பொண்ணா- திலோ கு உக்காண்டு மூஞ்சி காட்டிண்டுருக்கு.
"வி-ரி-போ-ஒ-ஒ-ஒ-நி-இ-இ-இ-யயி-இ.." ன்னு மாமி ஆரம்பிச்சா! ஏற்கனவே- இவா ரெண்டு பெரும் வாயே தெறக்கல! இந்த பாட்டா! எங்கேயோ ஒரு போந்துக்குள்ளேர்ந்து படராப்ல இருக்கு. மாமி வேற "சத்தம்-சத்தம்" நா என்ன பண்ணறது?
ஒரு வழியா பல்லவி முடிஞ்சுது. தமிழ் பாட்டு ஒண்ணு "நானொரு விளையாட்டு பொம்மையா". வேண்டா வெறுப்பா பாட ஆரம்பிச்சுது. "ஒழுங்கா பாடு"நா மாமி. திடீர்னு எங்கேர்ந்தோ கொரல் மேல எரிடுத்து. ஏத்தலும் ஏறக்கலுமா அது பாட பாட மாமி- "ஒழுங்கா பாடு- நீ பாடற அழகு 'பொம்மையா' ல பொம்மையோட தல தனி கால் தனி-யா வந்துடும் போலருக்கு"-நா. ஒரு வழியா "ஸா- பா- ஸா" சொல்லி முடிக்கல, மூட்டைய தூக்கிண்டு அங்கேர்ந்து கேளம்பரச்சே அதுக்கு இருக்கறசந்தொஷமிருக்கே! என்னவோ போங்கோ! இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...!