தெய்வங்களின் பசி தீர்த்த பின்னரே தங்களின் பசி தீர்த்துக்கொள்வர் சிலர். "கணீர்" என்ற மணியின் ஓசை கேட்டு தெய்வங்கள் ஓடி வந்துவிடுவார்களாம்! நன்கு பொங்கிய- தும்பைப்பூ போன்ற சாதமும், பருப்பும்- நெய்யினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன! அந்த சின்னஞ்சிறு அறையினுள் பல்வேறு விதமான கடவுள்கள்! இத்தனை கடவுள்கள் இருந்தும் - ஒருவருமே அழைத்தவுடன் ஏன் வருவதில்லை? ஒரு வேளை- கடவுள்களும் மாளிகை வாசிகளின் பளிங்கு பூஜை அறையில் தங்கி விட்டார்களோ- என்னவோ!
ஆயிரக்கணக்கான கடவுள்களின் மத்தியில் அங்கு ஓர் புதுவரவும் உண்டு! ஸ்படிக லிங்கம்! அதை அங்கு கொண்டு வந்ததே பெரும் கதை! அந்த லிங்கத்தை வீட்டில் பிரதிஷ்டை செய்வதற்கு ஆன செலவு- லிங்கத்தை விட விலை அதிகம்! மற்ற கடவுள் பிரத்மைகளை விட இதன் மதிப்பு கூடுதல் என்பதனாலோ என்னவோ- ஸ்படிக லிங்கத்தின் மீது பக்தியும் கூடுதலாகத்தான் இருந்தது- பாலனுக்கு!
"நம்பிக்கையினால் தான் வாழ்கை" என்ற வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு பார்க்கப்போனால்- கடந்த மூன்று ஆண்டுகளாக- பாலனுக்கு வாழ்கை என்பதே இல்லை என்றுதான் கூறவேண்டும்! அவனது வாழ்கையின் லட்சியம், அவனது தாயாரின் இறுதி மூச்சுவரை அவளுக்கு பணிவிடை செய்வது- அவனது இறுதி மூச்சு வரை- தெய்வங்களுக்கு தொண்டு புரிவது! வாழ்கையின் முன்னேற்றம்- வெற்றி, தோல்வி, போன்ற- மனிதர்களுக்கு சொந்தமான சிறு சந்தோஷங்களிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் அவனது மனம் விலகி விட்டது! பங்குச்சந்தைகளும் கடவுள்களைப் போலத்தான். அவைகளால் கொடுக்கவும் இயலும், பறிக்கவும் இயலும்! அதனாலேயோ என்னவோ- பாலனுக்கு இப்போது எப்படி கடவுள் மோஹம் பற்றிக்கொண்டதோ- அதே போல, சில வருடங்களிக்கு முன்னர் வரை பங்குச்சந்தை மோஹம் பற்றியிருந்தது! ஆனால் அதனால் கூட அவனுக்கு நம்பிக்கை விலகவில்லை! அதற்கு வேறு காரணம் இருந்தது!
உன்னி- பாலனை விட ஐந்து வயது சிறியவன்தான்! ஏதோ! விதியின் வினோத புத்தியினால் விளைந்த ஓர் விபத்தில் தவறிவிட்டான் உன்னி! ஓர் வங்கியில் பணிபுரிந்து வந்த உன்னியின் சம்பாத்தியத்தில் தான் அவர்களின் குடும்பம் பிழைத்திருந்தது! பாலனின் கொஞ்ச-நஞ்ச சேமிப்பும் உன்னியின் மருத்துவ செலவில் கரைந்தது! கடவுள்களுக்கு இதெல்லாம் தெரியாது! தெரிந்திருந்தால் உதவியிருப்பார்கள்! தனியாக நின்று இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்து, தங்கள் கால்களில் நிறுத்திய சீதா அம்மாவும், உன்னியின் மறைவிற்குப் பின்னர், நொடிந்தே போனாள்! அவளுக்கு வயதும் ஆகிவிட்டது! அவளது கணவரின் பழைய ரேடியோவில் தஞ்சம் புகுந்தாள்! பாலன்- கடவுள்களின் பிரதிமைகளில் அமைதி கண்டான்!
தினந்தோறும் காலையில் குளித்துவிட்டு- கடவுள்களின் பிரதிமைகளை சுத்தம் செய்திருப்பான் பாலன்! அவைகளை நீர், பால், சந்தனம், மஞ்சள்- போன்றவற்றினால் நீராட்டி- நன்கு சுத்தம் செய்வான். தங்கம் போன்று ஜொலித்து மின்னிக்கொண்டிருக்கும் அந்த கடவுள்களுக்கு, நெய்யும், பருப்பில் நனைத்த சாதமும் லஞ்சம் அளித்து- "இப்படி எப்படி நடக்க முடியும்"? என்பது போன்ற அசாதாரணமான வரம் கேட்டு பக்தியில் மூழ்கி நிற்பான்- பாலன்! "புதியதொரு கதிரவன் தோன்ற- நான் இதுவரையில் கண்டிடாத அளவிற்கு செல்வம் பெற்று வாழ வேண்டும்", என்று உருகுவான்!
கடவுள்களின் மீது அளவிற்கு மீறிய நம்பிக்கை இருப்பவர்களுக்கு என்றுமே கடவுள் அலுத்துப்போவதே இல்லை! வேப்பமர தாயத்து சாமியார் முதல்- ஹிமாலய மலைச்சாரல்களின் மகிமை கண்ட ப்ரஹ்மானந்த சாமியார் வரை- யாராக இருந்தாலும் அவர்களின் மகிமையில் மெய்மறந்து போவர்- பக்தர்கள்! இப்படிப்பட்ட ஓர் சாமியாரின் உபயம் தான் அந்த ஸ்படிக லிங்கம்! சிவனின் அம்சமெனக் கருதப்படும் அந்த ஸ்படிக லிங்கத்தின் மகிமை யாதெனில்- கேட்பது கிடைக்கும், நினைத்தது நடக்கும்! பாலனுக்கு அதை வீட்டிற்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து- நேம நிஷ்டைகளை முடிக்கவே ஒருமாத காலம் ஆனது!
அதில் அவனுக்கு நம்பிக்கை வருவதற்கும் சரி, வலுவடைந்ததற்கும் சரி- ஒரு காரணம் இருந்தது! உன்னி, வேலையில் இருக்கும் பொழுது காலம் சென்றதனாலும், அவனது ஒரு வருமானத்தில் தான் குடும்பம் பிழைத்தது என்றதனாலும்- சீதா அம்மா, வங்கிக்கு, ஏதேனும் உதவி கோரி கடிதம் இட்டிருந்தாள்! அவர்களும், கூடிய விரைவில் பரிசீலித்து பதில் போடுவதாக பதில் அனுப்பியிருந்தார்கள்! பாலனுக்கு இது ஸ்படிக லிங்கத்தின் மகிமை என்றே தோன்றியது! அவனது பக்தியும் அந்த லிங்கத்தின்பால் நாளுக்கு நாள் வலுவடைந்தது!
டி. எம். எஸ் ஸின், "ஒளி மயமான எதிர்காலம்" பாடல் பழைய ரேடியோவில் ஒலிக்க- பகல் வெயில் பாலனுக்கு தூக்கத்தை அளித்தது! முற்றத்தில் அமர்ந்தபடி பேப்பரில் பங்குச்சந்தை செய்திகளை படிக்க முயற்சித்துக்கொண்டிருக்கையில் ராமன் வருகை தந்தார். பாலனின் ஆரம்ப காலங்களில் அவர் அவனுக்கு நிறைய உதவியிருக்கிறார். அவனது மானசீக குரு அவர் என்றே கூட கூறலாம்! இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் ராமன். பாலனின் "நலம்-விரும்பி" என்ற உரிமையில் அவ்வபோது அவன் வீட்டிற்கு அவர் வந்துபோவதுண்டு.
"குமார் நெனவிருக்கா? உம்பின்னாடியே ராப்பகலா அலைஞ்சுண்டுருப்பானே"? என்றார் ராமன்.
"ஓஹோ! நன்னா ஞாபகம் இருக்கே! நல்ல பையன். அந்த வயசு அப்படி- எதப்பாத்தாலும் தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்...", என்றான் பாலன்.
"சின்ன பையனா? இப்ப அவனுக்கு என்ன வயசு இருக்கும்னு நெனக்கறே? மாமா வாட்டம் ஆயிட்டான் தெரியுமோ"? என்றார் ராமன். இருவருமே சிரிக்கத்தொடங்கிவிட்டார்கள். அந்த சிரிப்பு ஓய்ந்த பின்னர் ராமன்தொடர்ந்தார்.
"என்ன தப்பா எடுத்துக்காதே! நீ எம்புள்ள மாதிரி. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். முதல் வேணும்னாலும் நான் தரேன். அந்த குமார் ஏதோ புதுசா பிசினஸ் ஆரம்பிக்கறதா நான் கேள்வி பட்டேன். நான் சொன்னா அவன் கேப்பான். நீயும் அவன்கூட சேந்துக்கோ! எனக்கென்னவோ அதுல நல்ல லாபம் வரும்னு தோணறது.. என்ன நான் சொல்லறது"? என்றார்.
பாலன் ஏதோ சிந்தித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, தொடர்ந்தார் ராமன்- "போனது போகட்டும். அத கட்டிண்டு அழறதுல பிரயோஜனமில்ல! அத மனசிலேர்ந்து விட்டு எறிஞ்சுட்டு ஆக வேண்டியத கவனி! நாள மத்யானமா ஆத்துக்கு வா..."
"நீங்க என் நல்லதுக்கு தான் சொல்றேள்னு நேக்கு புரியறது", என்று குறுக்கிட்டான், பாலன். "ஆனா நீங்க முதல் தர வேண்டாம். என்னால அத வாங்கிக்க முடியாது. பேங்க் லேர்ந்து பதில் வந்துடட்டும்! அதுக்கப்றம்..."
ராமன் பாலனை உற்றுநோக்கியிருந்தார். சில வருடங்களுக்கு முன் அந்த கண்களில் இருந்த ஒளி இப்போது இல்லை! காலத்தின் கோணல் புத்தியின் விளையாட்டிற்கு முடிவே இல்லையோ, என்று எண்ணிக்கொண்டார், ராமன்! "ஏதோ- ஒரு விடியல் வந்தா சரி", என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு புறப்பட்டார், ராமன்!
ஸ்படிக லிங்கம், நாளுக்கு நாள் ஜொலித்துக்கொண்டே போனது. ஆயினும், அதன் சக்திகள் எதையும் வெளிப்படுத்தவில்லை!
ஆனால் அன்று- வங்கியின் பதில் வந்தது! பாலனுக்கு சந்தோஷத்தில், கைகள் நடுங்கியது. சீதா அம்மா, அவனை- கடிதத்தை ஸ்படிக லிங்கத்தின் பாதங்களில் முதலில் வைக்கும்படி கூறினாள். பின்னர், நல்ல நேரத்தில் எடுத்துப் படிக்கலாம் என்று, பாலனும் ஸ்படிக லிங்கத்தின் பாதத்தில் வைத்தான்- கடிதத்தை!
சீதா அம்மாவும், பாலனும், ஆவலுடன் நல்ல நேரத்தை எதிர்நோக்கியிருந்தனர். அந்த ஓர் கடிதத்தில் தான் அவர்கள் இருவரின் நம்பிக்கையுமே இருந்தது! இருவரும் உணவு அருந்தி, ரேடியோவில் பழம் பாடல்களை ரசித்தபடி, கடிகாரத்தில் கவனம் செலுத்தியிருந்தனர். இருவரும், அப்படியே உறங்கிப் போயினர். "மஞ்சள் ஒளி! தங்கத்தைப் போல ஜொலித்துக்கொண்டு அவன் அருகில் வந்தது"! அவன் அதைத் தொடுவதற்குள்- கடிகாரம் நான்கு மணி என அறிவித்தது. கண் முழித்து, பாலன் முகம் கழுவி வந்து, சீதா அம்மாவை எழுப்ப முயற்சித்தான்...
அன்று பதிமூன்றாம் நாள்- சீதா அம்மாவின் மறைவிற்கு, துக்கம் விசாரித்துப்போக வந்த விருந்தினர்களும் விடை பெற்றுக்கொண்டு விட்டார்கள். அங்கு தனியாக அமர்ந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த பாலனுக்கு, கடந்த பதிமூன்று நாட்களில் ஒரு நாள் கூட, இந்த நாளிற்குப் பிறகு அவன் என்ன செய்வான் என்று நினைக்கவே இல்லை!
திடீரென்றுதான் வங்கியிலிருந்து வந்த கடிதத்தின் நினைவு வந்தது. ஸ்படிக லிங்கத்தை நோக்கி விரைந்து சென்று, கடிதத்தை எடுத்து, படிக்கத் துவங்கினான்:
"திருமதி. சீதா அம்மா அவர்களுக்கு,
முதலில் திரு. உன்னிக்ருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க விழைகிறோம். அவரது மறைவு, எங்கள் வங்கிக்கும் ஒரு பெரிய இழப்பே! கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு தரும் திட்டம் தற்போது அமலில் இல்லை. ஆயினும், தங்களின் குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஒரு விதி விலக்காக தங்களுக்கு ரூபாய். பத்து லட்சம் கருணைத் தொகை வழங்குவதாக எங்கள் வங்கியின் உச்ச நிலை நிர்வாகக்குழு தீர்மானித்திருக்கிறது.
இந்தத் தொகையை பெறுவதற்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, தங்களுடைய கையெழுத்தையும் 'அட்டெஸ்ட் ' செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்கள் கையெழுத்தையும் மற்ற விவரங்களையும் சரி பார்த்த பிறகு- மேல் குறிப்பிட்டுள்ள தொகை காசோலையாக தங்களுக்கு அனுப்பி வைக்கப் படும்.
இப்படிக்கு,
ந. சொக்கல்லிங்கம்
(முதுநிலை மேலாளர்)"
ஸ்படிக லிங்கம், இன்றும் ஜொலித்து நிற்கிறது!
28 comments
@ LK...
thanks! :)
பகிர்வுக்கு நன்றி
நேர்த்தியாக சொல்லி இருக்கீங்க..... அருமை.
@ shankar..
thanks! :)
@chitra...
nanri!
நடை மிகவும் அருமை.
ஒரு சந்தேகம். வங்கியிலிருந்து
அவ்வளவு எதிர்பார்த்த கடிதம் வந்தபின்
பாலனுக்கு தூக்கம் வருமோ?
வயசாயாச்சு. வெயில் வேற ஜாஸ்தி. உண்ட களப்பு யார விட்டது? கடன் வாங்கினவன கூட விடாது..
please imagine things when u read a story..
"கத சொன்னா அனுபவிக்கணும். ஆராய கூடாது"!
எல்லாம் சுபமாக முடிந்தால் கதை என்ற ஒன்றே இருக்காது அல்லவா..இப்படி முடித்திருக்கலாம்,அப்படி முடித்திருக்கலாம் ..ஸ்படிகம் ,நல்லநேரம்... கோட்பாடுகள் எங்கு எப்படி வேலை செய்யும் ..இப்படி நிறைய யோசிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்.
@ பத்மநாபன்...
உண்மை.. இதை போன்ற விஷயங்கள்- என்னையும் சிந்திக்க வைத்தன.. அதனால் விளித்ததே இந்த கதை..
அநேகமாக வழக்கிலிருந்து ஒழிந்து போன நம்பிக்கைகள் குறித்த ஒரு பார்வையென எடுத்துக்கொள்கிறேன் மாதங்கி.எத்தனை பேருக்கு -நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ-சாளிக்கிராமம் பற்றித் தெரியும்? அது ஒரு உலகம்.ஸ்காண்டிநேவியாவின் கறுப்புமாயங்களையும், போர்ச்சுக்கலின் சடங்குகளையும் நோபல் பெற்ற பெறாத கதைசொல்லிகள் சொல்லும்போது கேட்க சுவாரஸ்யமாகவும் தங்கள் உத்திக்கான புது வடிவமாகவும் ஆராதிக்கத்தோன்றுகிறது.இது இந்தியாவின் அடையாளம் என்று சொல்ல சந்தோஷமாக இருக்கிறது.உங்கள் விஷயங்கள் எல்லாமே ஒரு புராதன வண்ணம் கொண்ட ஓவியம் போல இருக்கிறது.நடை அசாதாரணமான நிதானமுடன்.சபாஷ் மாதங்கி.
//உங்கள் விஷயங்கள் எல்லாமே ஒரு புராதன வண்ணம் கொண்ட ஓவியம் போல இருக்கிறது.நடை அசாதாரணமான நிதானமுடன்.சபாஷ் மாதங்கி.//
என் மனதைப் படித்து விட்டார் சுந்தர்ஜி!
Flawless flow மாதங்கி... நல்லா இருக்குங்க
@sundarji...
நல்ல கோணம் கொடுத்துள்ளீர்கள் கதைக்கு. உண்மை தான். இதை போன்ற விஷயங்களில் ஆர்வம் உண்டு எனக்கு. நம்பிக்கை கிடையாது. ஆனால் ஆர்வம் உண்டு. பாட்டி சொன்ன பழம் கதைகளை கேட்டும், ரசித்தும் வளர்ந்ததனாலோ என்னமோ!
by far the best comment I ve got... so far!
thanks!
@baradhee..
thanks!
@rishabhan...
thanks!
@ appaavi...
thanks! :)
Story narration is so gud and it makes things to visualize clearly,,, the climax is superb,,,if I say in cinematic word ‘’Its director’s touch’’ cheers…
@jai...
thanks! :)
ரொம்ப அருமையாகவும் ,ஆழமாகவும் இருக்குங்க...
ஸ்படிக லிங்கம் ஜொலிக்கிறது...
வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
@kamlesh...
thanks! :)
//ஸ்படிக லிங்கம், இன்றும் ஜொலித்து நிற்கிறது//
பாழப்போன மனம்தான் சலித்துக் கொல்(ள்)கிறது
பாலனை நினைத்து.
@vasan...
:)
நிகழ்வுகளின் வர்ணனையும், " கதா பாத்திரங்களின் " மனோநிலையும்
மிகவும் யதார்த்தமாக சித்தரிக்கப்படிருக்கின்றன. இது கதையல்ல , நிஜம் என்பதையும்,
சம்பந்தப்படவர்களின் பெரும் ஏமாற்றத்தையும்
அறிந்தவனாகையால் ,மிகவும் ரசித்தேன் என்று எழுத மனம் வரவில்லை..
தினமும் செய்தித்தாள் படித்ததும் எப்படுகின்ற, ' நமது நாடு எங்கே போய்க்க்னடிருக்கிறது
என்ற நிராசையும் , தார்மிக கோபமும்
தான் எஞ்சிநிர்கின்ற்து.மிகவும் நேர்த்தியான படைப்பு என்பதில் ஐயமில்லை
நீ பகுத்தறிவுவாதியாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே ; வாழ்த்துக்கள்!
மாலி
@ mawley...
thanks pa!
@ mawley...
thanks pa!
Post a Comment
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
16 hours ago
-
4 days ago
-
1 week ago
-
2 weeks ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".