குக்குளு குளு குளு குளு  

Posted by Matangi Mawley


சனிக்கிழமைகளில் அம்மாவிற்கு evening shift. அப்பாவிற்கு அரை நாள் விடுமுறை. அம்மாவிற்கு இரவு நேர சாப்பாடு தயார் செய்து கட்டிக் கொடுத்து விட்டு, அப்பா என்னை கவனித்துக் கொள்ளவேண்டும். சனிக்கிழமை மாலை நேரங்களில் அப்பாவின் வாலைப் பிடித்துக் கொண்டு அவர் எங்கெல்லாம் கூட்டிச் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்வது வழக்கம். திருச்சியில் பார்ப்பதற்கு இடங்கள் அவ்வளவு இல்லை. அதே கோவில், குளம் , யானை, அம்மா மண்டபம் படித்துறை , Main Guard Gate தான். தவறாமல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்ர வீதி மார்கெட்டில் பூசணிக்காய் காரியிடம் பூசணிக்காயும் , மற்ற காய் கறிகளும் வாங்கிக்கொண்டு, Sunday Special ( அப்பா சமையல் )- அவியல் கான ஏற்பாடுகளை செய்து கொண்டு வீடு திரும்புவோம்.

திருவானைக்கோவில் ஒரு தனி சுவாரஸ்யம். நான் மீண்டும மீண்டும் போகவேண்டும் என்று ஆசைப் பட்டு போகும் கோவில். அங்கு பிரகாரங்களில் நிறைய பெரிய பெரிய frame போட்ட படங்கள். அந்தப் படங்களுக்குக் கீழே , அந்தப் படங்கள் பற்றின கதைகள். சம்பந்தருக்கு ஞானப்பால் கிடைத்த கதை, ராவணன் தன் கைகள் , தலை, நரம்புகளால் ஆன வீணை ஒன்றை வாசித்து ஈசனிடம் ஆசி பெற்ற கதை என்று பல கதைகளை அப்பாவை படிக்கச் சொல்லிக் கேட்கவேண்டும் , எனக்கு. சில சமயங்களில் இந்த படங்களில் இல்லாத கதைகளும், கோவில் பிரஹாரத்தை சுற்றி வரும் சமயங்களில் அப்பா சொல்லிக் கேட்கும் வழக்கம். ஜம்புகேஸ்வரர் சந்நிதியில், பின் புறம் ஸ்தல வ்ரிக்ஷம் ஜம்பு பல ( நாகைப்பழ ) மரத்தின் முன் என்னை நிற்க வைத்து என் அப்பா கூறிய கதை தான் "குக்குளு குளு குளு குளு" !

காளிதாசரின் கவித்திறனை சோதிக்க எண்ணிய அரசர் - "குக்குளு குளு குளு குளு"- என்ற வாக்கியத்தைக் கொடுத்து பாடல் அமைக்கச் சொன்னாராம். மறுநாள் காளிதாசர் அரசரிடம் சென்று -

|| जम्भू पलानि पक्वानि
पतन्ति विमले जले गुग्गुलु ग्लु ग्लु ग्लु ||

(Jamboo phalaani pakhwaani
Padanthi vimale jale
Guggulu Glu Glu Glu)

- என்றாராம். இது தான் அந்தக்கதை ...
அதாவது பழுத்த நாவல் பழங்கள் தெளிந்த நீரில் விழும்போது, குக்குளு குளு குளு குளு-
என்ற சப்தம் வந்ததாம். இந்த இரட்டை வரி கதை - இத்தனை வருடங்களாக என் மனதில் ஆழமாக பதிந்து போன ஒன்றானது .

சப்தங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. எண்ணங்களுக்குக் கூட உருவம் கொடுத்து விடலாம். சப்தங்களுக்கு..? Dictionary யில்அர்த்தம் பார்க்கத்தெரிந்த பல பேர்களுக்குக் கூட Pronunciation (phonetics) படித்துப் பார்த்து புரிந்து கொள்ளத் தெரிந்திருப்ப்பதில்லை. நம் அன்றாட வாழ்கையில் நாம் எத்தனையோ சப்தங்களை உள் வாங்கிக்கொள்கிறோம். இதில் சில நம் ஆழ் மனதின் அமைதியை குலைக்கும் நாராசங்களாக இருக்கிறது. ஆனால் ஒருசில சப்தங்கள், நமக்கு மட்டுமே சொந்தமானவைகளாக, அழகான நினைவுகளாய் மாறிவிடுகின்றன. இந்த சப்தங்களை வார்த்தைகளில் பகிர்ந்துகொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது. ஆனால் நான் காளிதாசராக பிறக்கவில்லையே!

பாட்டி வீட்டிற்கு விடுமுறைகளில் செல்லும்போதெல்லாம் வெந்நீர் தவலைக்கருகில் உள்ள அலுமினியத் தவலை ஒன்றைக் கவிழ்த்துப் போட்டு, அதில் என்னை உட்கார வைத்து, மிளகாய் வற்றல், உப்பு கொண்டு 'சுற்றிப் போட' --வெந்நீர் தவலை அடியில் அது வெடிக்கும் சப்தத்தோடு சேர்த்து, அது வெடித்து கிளம்பும் சிறுசிறு கரித்துகள்கள் பறந்து பறந்து வெந்நீர் தவலையின் அடிப்புறத்தில் மோதும் அதே தருணத்தில், தவலையின் உட்புறத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் வெந்நீரின் கொப்புளிக்கும் சப்தம். கொல்லையில் பறித்த தேங்காய்களை கடப்பாறையில் உரிக்கும் பொழுது எழும் சப்தம். குந்துமணிகளை கைகளால் அளையும் பொழுது வரும் சப்தம். இரும்பு gate இன் விளிம்புகளின் மீது ஏறிக்கொண்டு, காலால் தரையை உந்திக்கொண்டு, உள்ளே-வெளியே என்று, முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டு விளையாடும்பொழுது , அந்த gate -கதவு "போதும்" என்பது போல் லேசாக ஒரு குரல் கொடுக்கும் --அந்த சப்தம்.

School விட்டு வீடு திரும்பும் நேரங்களில், வீடுகள் கட்ட குவித்து வைத்திருக்கும் ஜல்லிக் கற்கள் மீது ஏறி விளையாடுபோது எழும் சப்தம். Aeroplane பறக்கும் சப்தம் கேட்டு -எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அதை விட்டு விட்டு -தலை தெறிக்க மாடிக்கு ஓடிப்போய் அதைப் பார்க்க போகும் வேளைகளில், ஓட்டத்தின் வேகத்தில் இடறி கீழே விழும் தேய்த்து வைத்திருந்த பாத்திரங்களின் சப்தம். Aeroplane பார்த்து விட்டு திரும்பும் போது அம்மா திட்டுவாளே என்ற பயத்தில் கூடுதல் ஒலியில் துடிக்கும் இருதய துடிப்பின் சப்தம்!

ஆனால் இவை கூட எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்த சப்தங்கள் தான். இன்னும் சில சப்தங்கள் உள்ளன. வார்ததைகளால் விவரிக்க முடியாத சப்தங்கள். நமக்கு மட்டுமே தெரிந்த, நாம் மட்டுமே உணர்ந்த, ரசித்த சப்தங்கள்...

"அப்பா-அம்மா" பலூன் விற்கும் பாட்டி. ஒருநாள் கூட அவள் கொடுத்துக்கொண்டு செல்லும் அந்த பலூன் சப்தம் மாறுபட்டதே இல்லை. ஆனால் அந்த சப்தத்தை, நான் உணர்ந்த உணர்வை- வார்த்தைகளால் எப்படித் தெரிவிக்க முடியும்? ரோஜாப்பூ, சைக்கிளில் விற்றுச் செல்லும் ரோஜாப்பூக்காரன் கொடுக்கும் சப்தம். அவன் " ரோஜாப்" என்று ஒருமுறை கூவிவிட்டு , அதைக் கேட்டுவிட்டு அவனை ஓடிப்போய் பிடிப்பதற்குள் அவன் எங்கோ தெருக் கோடிக்குச் சென்றிருப்பான். தினமும் அவன் வரவை எதிர் நோக்கி, balcony யிலேயே காத்திருக்கும் நாட்கள் உண்டு. கல்கத்தாவில் புதன்கிழமைகளில் ஒரு அம்மாவும் அவளுடைய இரண்டு குழந்தைகளும் "ஹாரே ராமா, ஹாரே கிருஷ்ணா " என்று harmonium & தப்ளம் வாசித்துக்கொண்டு பாடுவார்கள். நாங்கள் இருந்த 6 -வது மாடி வரை கேட்கும் அவர்களது சுருதி சுத்தமான, வளமான குரல். அவர்கள் எந்த விதமான academy களிலும் சென்று சங்கீதம் கற்றவர்கள் இல்லை. அந்த ஒரு வரியை தான் அவர்கள் திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால்- பக்தி, கலாசாரம் போன்ற சொற்களுக்கு அப்பாற்பட்டு, நமது அந்தராத்மாவின் மூல ஷ்ருதியை ஒரு க்ஷணம் சுண்டிப் பார்த்து விட்டு வரச்செய்யும்- த்வனி அது. 1/2 மணி நேரம் அங்கு நின்று பாடினால் ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் தேறுமோ என்னவோ. அந்த 1/2 மணி நேரம்- நம் வாழ்வில் நமக்கு கிடைத்தது எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்து திருப்தி பட்டுக்கொள்ள தோன்றும்.

ஒவ்வொரு சப்தமும் ஒரு நினைவு. நம் வாழ்வெனும் தவத்திற்கு - பிரணவத்தின் பலன் அளிக்கும் மந்திரங்கள், இந்த சப்தங்கள். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு இந்த மந்திரங்களை மனத்தில் நினைவு கூர்ந்து தான் பார்ப்போமே...

This entry was posted on 12 August, 2011 at Friday, August 12, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

21 comments

அத்தனை ரசனைகூடிய சப்தங்களையும் பிரணவத்தில் அடக்கியது சிறப்பு..

குக்குளு குளு குளு குளு முதன் முதலாக கேட்கும் குளுமையான சப்தம்...

12 August 2011 at 00:42

அந்த குக்குளு குளு குளு குளு கவிதை மாதிரி இன்னொன்றும் கேள்வி பட்டதுண்டு.
திடீரென்று ராஜா தன்னுடைய தர்பாரில் உள்ள புலவர்களை பார்த்து क ख़ ग घ முடியற மாதிரி கவிதை மறு நாளைக்குள் புனைய சொன்னான். மறு நாள் காளிதாசன் சபைக்கு செல்லும் பொழுது ஒரு சிறுமியை பார்த்தான்.அவர்கள் சம்பாஷணை பின் வருமாறு
கா தே காந்தா (நீ யார் பெண்ணே )
காஞ்சனமாலா (காஞ்சனமாலா )
கஸ்யா புத்ரி (யாரோட பெண்)
கனகலதாயா (கனகலதாவினுடைய )
ஹஸ்தே கிம் தே (கையிலே என்ன )
தாலி பத்ரம் (பனை ஓலை)
கா வா ரேகா (என்ன எழுதி இருக்கு )
क ख़ ग घ
இதை அப்படியே சபையில் சொல்லி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் காளிதாசன்.

12 August 2011 at 04:01

ஒவ்வொரு சப்தமும் ஒரு நினைவு. நம் வாழ்வெனும் தவத்திற்கு - பிரணவத்தின் பலன் அளிக்கும் மந்திரங்கள், இந்த சப்தங்கள். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு இந்த மந்திரங்களை மனத்தில் நினைவு கூர்ந்து தான் பார்ப்போமே...


.....வாவ்! அப்படியே, கண்முன் காட்சிகள் தெரியும் அளவுக்கு உணர்வு பூர்வமாக எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

12 August 2011 at 04:29

நல்ல பகிர்வு.

12 August 2011 at 15:47

'ஒலி'யில் ஒழிந்திருக்கும் ஒளியினை வ‌ர்ணித்திருந்த விதம்...புது வித‌ம்.

12 August 2011 at 16:10

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்னு வைரமுத்து எழுதிய பாட்டைக் கேட்கும் போதெல்லாம் என்னை அரிக்கும் ஒரு கேள்வி. “சத்தம் இல்லாத இடம் எது?”. அமைதியான அத்துவானக் காட்டில் கூட காதில் “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்”னு ஒரு சப்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கும்..

சப்தங்களை கூர்ந்து கவனிப்பது ஒரு கலை. உங்களுக்கு இசை மூலமாக அது வசியமாயிருக்கிறது என்று நினைக்கிறேன். அற்புதம்...

காளிதாசனை இணைத்தது சூப்பர்.

“ஐஸோ...ஐஸு... பால் ஐஸ்.. குச்சி ஐஸ்... ஐஸோ ஐஸு....” எனக்கும் ஞாபகம் வந்துடிச்சு. :-))

12 August 2011 at 17:13

பலூன்காரன் பலூனோட கைபிடியை நசுக்கி நசுக்கி ஒரு சத்தம் உண்டாக்குவான் கேட்டுஇருக்கேளா மாதங்கி! எங்க ஊர் கந்தஷஷ்டி காவடில ஒரு பண்டாரம் விருத்தம் பாடர்துக்கு விரல்ல ஒரு வளை போட்டுண்டு டேபிள்டென்னிஸ் மட்டை மாதிரியான ஒரு வஸ்துல 'டிக்கிரி டிக்கிரி'னு அடிப்பார். எல்லாம் ஞாபகத்துக்கு வருது. காளிதாசர் கதை அருமை! ரசித்தேன்!

12 August 2011 at 20:22

தெரிந்த கேட்ட விசயங்களாவே இருந்தாலும், நீங்க சொல்ல கேட்கும் போது அது இன்னும் அழகா இருக்கற மாதிரி தோண வெக்கறீங்க... how many ever times I've told before, your writing is amazing... குக்குளு குளு குளு குளு கதை சூப்பர்... திருவானைக்கோவில் ஒரு முறை பாட்டி கூட போய் இருக்கேன், ஆனா அதிகம் நினைவில்ல... சப்தங்களை மந்திரத்துக்கு ஒப்புமை படுத்தி சொன்னது க்ளாஸ்...:)

13 August 2011 at 00:30

பாட்டி வீட்டிற்கு விடுமுறைகளில் செல்லும்போதெல்லாம் வெந்நீர் தவலைக்கருகில் உள்ள அலுமினியத் தவலை ஒன்றைக் கவிழ்த்துப் போட்டு, அதில் என்னை உட்கார வைத்து, மிளகாய் வற்றல், உப்பு கொண்டு 'சுற்றிப் போட' --வெந்நீர் தவலை அடியில் அது வெடிக்கும் சப்தத்தோடு சேர்த்து, அது வெடித்து கிளம்பும் சிறுசிறு கரித்துகள்கள் பறந்து பறந்து வெந்நீர் தவலையின் அடிப்புறத்தில் மோதும் அதே தருணத்தில், தவலையின் உட்புறத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் வெந்நீரின் கொப்புளிக்கும் சப்தம். கொல்லையில் பறித்த தேங்காய்களை கடப்பாறையில் உரிக்கும் பொழுது எழும் சப்தம். குந்துமணிகளை கைகளால் அளையும் பொழுது வரும் சப்தம். இரும்பு gate இன் விளிம்புகளின் மீது ஏறிக்கொண்டு, காலால் தரையை உந்திக்கொண்டு, உள்ளே-வெளியே என்று, முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டு விளையாடும்பொழுது , அந்த gate -கதவு "போதும்" என்பது போல் லேசாக ஒரு குரல் கொடுக்கும் --அந்த சப்தம்.

என்னவென்று சொல்ல.. சப்தங்களின் தொகுப்பு.. சில நேரங்களில் நிசப்தத்தின் பேச்சொலி..
அருமை.. அருமை..

13 August 2011 at 09:02

உன் எழுத்துத் திறனில் மிளிர்வு கூடிவருவதில் , எனக்கு மிக்க மகிழ்ச்சி;
அப்பாவி தங்கமணி கூறியிருப்பது போல , மீண்டும் வாழ்த்துக்கள்.
மாலி.
.

13 August 2011 at 15:00

மௌனத்தின் சப்தம், உணர்ந்திருக்கிறீர்களா.?அலட்சியத்தின் சப்தம் உணர்ந்திருக்கிறீர்களா.?காதால் உணரப்படாத சப்தம், உள்ளத்தால் மட்டுமே உணரக்கூடிய சப்தங்கள். நாராசமானவை. இனிய சப்தங்களுக்கு நடுவே இவையும் உண்டு என்று அனுபவம் நிறைய போதிக்கும். சத்தம் இல்லாத தனிமை எல்லாம் Wishful thinking. என் சின்ன வயசில் சென்னையில் (அப்போதைய மெட்ராஸ்) காலையில் தயிர் விற்பவர்கள் ஒரு மாதிரி “கூ”என்று கூவி தயிர் விற்பார்கள்.

13 August 2011 at 16:45

எனக்கு நிசப்தம் என்கிற வார்த்தை ரொம்பவும் பிடிக்கும். சப்தத்திற்கு நேர் எதிர்மறைச் சொல் தான். இருப்பினும் அந்த நிசப்தத்திற்கும் ஒரு சப்தம் இருப்பதாக உள்ளுணர்வு கிரகித்துச் சொல்லும்.

முழுமையான நிசப்தம் இந்த பூவுலகில் எங்குமே கிடையாது. காற்றை என்ன சப்தம் போடாதே என்று கட்டுப்படுத்தவா முடியும்?.. பூந்தென்றல் நம்மை வருடிச் செல்கையில் கூட அதற்கென்று அமைந்த ஓர் அசைவோட்ட கிசுகிசுப்பு உண்டு.

ஆரம்பித்துத் தான் வைத்திருக்கிறீர் கள். தொடர்ந்து நிறைய யோசிக்கலாம் போலிருக்கு. அவை நீங்கள் சொல்லிச் சென்றதின் தொடர்ச்சியாக இருக்கும்.

அழகான பதிவுக்கு நன்றி, மாதங்கி!

13 August 2011 at 18:16

ஒலி-ஓசை சமாசாரத்தை அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அமைதிக்கும் ஒலியுண்டு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் (காளிதாசன் அதைச் சொன்னதாகத் தெரியவில்லை - நல்லவேளை நீங்கள் நீங்களாகப் பிறந்தீர்கள்). முதலில் படித்து ரசித்தேன். பிறகு ரசித்துப் படித்தேன்.

14 August 2011 at 06:09

//என் சின்ன வயசில் சென்னையில் (அப்போதைய மெட்ராஸ்) காலையில் தயிர் விற்பவர்கள் ஒரு மாதிரி “கூ”என்று கூவி தயிர் விற்பார்கள்.//

ஜிஎம்பீ சார்! இதைப் பற்றி எழுத்தாளர் கு. அழகிரிசாமி ஒரு அழகான கதையே எழுதியிருக்கிறார்!

14 August 2011 at 10:34

awesome post based on sounds. nostalgic as well to read.

14 August 2011 at 12:27
This comment has been removed by the author.
14 August 2011 at 17:36

அருமையான தகவலுக்கு நன்றி KParthasarathi. கடனே என்று உட்கார்ந்திருப்போம் சம்ஸ்க்ருத வகுப்பில் - திடீரென்று இதுபோல் anecdotes எடுத்து விடுவார் ஆசிரியர். கொஞ்சம் ரசித்து விழிப்போம். மறுபடி ஐந்து நிமிடங்களில் கடனே என்று..

14 August 2011 at 17:37

ப்ரிய மாதங்கி! லேட்டாத்தான் வந்திருக்கேன். சப்தங்கள் பற்றி தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.
சில நாட்களுக்கு முன் வலைச்சரம் ஆசிரியராய் சில பதிவுகளை இட்டிருந்தேன் .அதில் சப்தங்கள் பற்றி ஒரு சீனக் கதை.சொல்லியிருந்தேன். அதன் சுட்டி இங்கே:
http://vanavilmanithan.blogspot.com/2011/07/3.html உங்களுக்கு பிடிக்கும்.
வானவில்லில் ஜானுவை பார்க்க வரலியா?

7 September 2011 at 20:55

ஒவ்வொரு சப்தத்தையும் விலாவரியாக விளக்கியுள்ளீர்கள்.. நீங்கள் மட்டும் நானும் ரசிக்கக்கூடியவைகளே அவை. நான் மட்டுமல்ல அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் பதிவில் அமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்..!!

13 September 2011 at 23:16

இந்த கதையை வேறொரு மாதிரியும் சொல்லுவார்கள், அது தெரியுமா உனக்கு, மாதங்கி?
ராஜா குளத்தங்கரையில் அமர்ந்திருக்கும்போது இந்த சப்தத்தை கேட்கிறான். சபைக்கு வந்த பின்பு இதையே ஒரு சமச்யையாக கொடுத்து இது என்ன என்று கேட்கிறான். அப்போது தான் காளிதாசன் இந்த சுலோகத்தை சொல்லுவதாக சொல்லுவார்கள்.
அருமையான பிளாக். கீப் இட் அப்.

--
K.Lakshminarayanan

24 October 2011 at 14:43

Awesome post. I am reminded of the following post (actually a Pulitzer prize winning experiment) when you refer to the ஹரே ராமா ஹரே கிருஷ்ணா singers. [http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/04/04/AR2007040401721.html]

31 October 2011 at 17:21

Post a comment