நத்தை
என்னுடைய மூன்றாவது வயதில், பள்ளியின் ஏதோ ஒரு மூலையில் கும்பலோடு முட்டி மோதிக்கொண்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். அதுதான் நான் முதல் முறையாக நத்தை கண்டது. 'கொளுக்-கொளுக்' என்ற உடலுக்கு, ஒரு ஓடு நிழல் தர அது கடந்து வந்த பாதையை எத்தனை ஆண்டுகளாகக் கடந்து கொண்டிருந்ததோ- என்று பல நாள் யோசித்ததுண்டு. யோசிப்பதுண்டு...
இலையின் அடிப்புறத்தில் ஒட்டிக்கொண்டு, அந்த இலை அசையும் தருணங்களில் அதை விட்டு விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும், அந்த நத்தை. "இந்தச் சிறியதொரு உருவிற்கு இத்தனை வலுவா"? என்று எண்ணி வியந்ததுண்டு. எத்தனை வருடங்கள் ஆயினவோ, அந்த இலையின் மீதிருந்து கீழே இறங்கி வர! கீழே- உடைந்து கிடந்த நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள் அதன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன.
எத்தனை-எத்தனையோ கல்பங்கள் கடந்து வந்த புவியில், அற்ப காலத்தில் தோன்றிய மனிதன் மட்டும் எவ்வாறு வேறுபடுகிறான்? எதற்காக அவன் அவனையே இவ்வாறு உயர்த்திக் கொள்கிறான்? சொற்ப காலத்தைத் தவழ்ந்து வந்து, தற்காலத்தைப் பிடித்துக்கொண்டவன், அவன். பல்வேறு பிரளயங்களையும், அதன் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களையும் தனக்குச் சாதகமாகச் சித்தரித்துக்கொண்டு, பூமியில் தன்னைத் தானே பிரதானித்துக் கொண்டு திகழ்கிறான். அவனே உருவாக்கிக் கொண்ட, பல்வேறு விதமான ஆக்கங்களாலும், அழித்தல்களாலும்- அசைந்துகொண்டும் கசிந்துகொண்டும் இருக்கும் பூமியின் மேல் தன்னையும் ஒட்டவைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
கடலின் ஆழத்திற்கும், மலைச் சிகரங்களுக்கும், நிலப்பரப்பின் எல்லைகளுக்கும் உரிமை சம்பாதித்துக் கொண்ட மனிதன், விண்வெளிக்கும் சென்றான். ப்ரபஞ்சத்தை விலை பேசினான். அவன் தக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமியின் வறுமை பொறுக்காமல்- அதை உதறிவிட்டுச் சென்று, வேறொரு இடம் தேடி, ப்ரபஞ்சத்தில் மிதந்துகொண்டிருக்கிறான். மனிதனின் ஆறாம் அறிவின் ஆற்றலுக்கு முன்னால், ப்ரபஞ்சம் எம்மாத்திரம்?!- என்று இருமாந்திருக்கிறான்.
விண்ணிர்க்கப்பாலும், மண்ணிர்க்கடியிலும் வளர்ந்து நிற்கிறது- ஒரு சக்தி. கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியின் நாடி எவ்விடத்தில் இருக்கிறது- என்பதை ஆராய எண்ணியிருக்கிறது- மனிதனின் ஆறாம் அறிவு.
நத்தையின் வேகம்- அதனை உற்று நோக்கிக்கொண்டிருப்பவர்களை பொறுமை இழக்கச் செய்துவிடும். அதற்க்கு உதவி செய்யும் பொருட்டு- அதை ஒரு இலையின் மீது வைத்து, சற்று தொலைவில் விட்டு விடுவதற்குத் தூண்டிவிடும், அந்த நத்தையின் வேகம். ஆனால் அப்படிக் கொண்டு விடப்பட்ட நத்தை, உண்மையில் எங்கே செல்ல எத்தனித்திருந்தது? - என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்? அந்த நத்தையின் விருப்பம் இல்லாமல் அதைக் கொண்டு சேர்பித்த இடம்- அந்த நத்தைக்கு உவந்ததா? அதனால் அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் இயங்க இயலுமா? அதற்க்கு அந்த இடம் பழக்கப் பட்டு விடுமா? - என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.
விண்ணிற்கும், மண்ணிற்கும், அதற்கப்பாலும்- உயர்ந்து நின்றிருக்கும் அந்த சக்தியும்- கிட்டத் தட்ட அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும். எனவேதான்- நாடித் துடிப்பின் சப்தம் மட்டும் கேட்டிருக்கும் மனிதனால், அந்த நாடியின் நாதம் குடிகொண்டிருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அப்படி அந்த இடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டால், புறியாத கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போல- மனிதன் திணறிப் போகக் கூடும். சரியான கேள்விகளையே கேட்டிராத மனிதனுக்கு- விடையைக் காண்பித்து, பூமிக்கு ஏற்பட்ட நிலையை தானும் அடைய வேண்டாம், என்றுதான் நினைத்துக் கொண்டதோ, அந்த சக்தி.
கேள்விகளைத் தேடிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கிட்டியதேன்னவோ- ப்ரபஞ்சத்தின் ஒரு துளி கண்டத்தில் அவன் அடைந்த ப்ரமிப்பு ஒன்றே தான்! அந்த ப்ரமிப்பின் தாக்கத்தினால்- அங்கேயே மிதந்துகொண்டிருக்கிறான்.
நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள்- அதன் பயணத்தைத் தொடர்ந்தன...