ஒரு நொடி வாழ்க்கை
காலில் சக்கரமும், முதுகில் இறக்கைகளையும் அணிந்து, எந்த இடத்திலும் ஒரு நொடிக்கு மேல் அவர்கள் இருப்பவர் இலர். அவர்களின் மனமும் அவ்விடத்தில் இருப்பது கிடையாது. எதிரே நிற்பவர்களின் நிழல்- அவர்களின் கண்களில் அவ்வபோது படுவதுண்டு. "இதுவும் ஒரு வாழ்வா"? என்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு தோன்றுவதற்கு அனுமதி கிடையாது. காலத்தின் கைதிகள்.
"என் வாழ்க்கையில் இதை போல் ஒன்றை நான் கண்டதே இல்லை" என்ற வரியை உபயோகிக்காதவர்களே சற்று குறைவுதான். "அப்படி என்ன வாழ்ந்து கிழித்து விட்டீர்கள்"? என்று எனக்குக் கேட்கத் தோன்றும். வாழ்கை என்பது சின்னச் சின்ன சந்தோஷங்களின் கோர்வை- என்று சில சிந்தனையாளர்கள் கூறிக் கேட்டதுண்டு. ஒரு சின்ன சந்தோஷத்தை அடைந்த உடனேயே ஏதோ வாழ்கையின் உச்சக்கட்ட நிலையை அடைந்தவர்களை போன்ற எண்ணங்களில் மிதந்து தத்தளித்துப் போவர் சிலர்.
அவர்களைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. நம் பறக்கும் கைதிகளைப் பற்றி ஒரு சில வரிகள்...
வெளிச்சத்தைக் கண்டு, அதனால் ஈர்க்கப் பட்டு வேறு பொருளைக் காணாது- வெளிச்சத்திலேயே வாழ எண்ணி மடிந்து போகும் சிறு ஜீவன்களை நினைவு படுத்துகிறது- நம் பறக்கும் கைதிகளின் வாழ்வு. சொர்விற்கோ, சுகத்திற்கோ, துக்கத்திற்கோ, மகிழ்விற்கோ படியாத ஒரு மனித ஜாதியும் இருக்குமோ? - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம்? எந்தச் சாதனையை துரத்த இந்த பதற்றம்? கேட்கும் கேள்விகள் கேட்பவர்களேயே எதிர்நோக்கி தாக்கி நிற்க- அவர்கள் கடந்து போன பாதையில் அவர்களின் பாதச்சுவடு பதித்திருக்க நேரமில்லாது பறக்கும்- காலத்தின் கைதிகள்.
"இப்படிப்பட்ட கேள்விகளை- எங்களிடத்தில் கேட்பதற்கு உனக்கென்ன அருகதை இருக்கிறது? அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது"? என்பது போன்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு வருவதாகத் தெரியவில்லை. கேட்பவர்கள் கேட்டே நிற்க, பறக்கும் கைதிகள் பறந்தே இருக்க- கேட்பவர்கள், பறப்பவர்களின் எல்லையை அறிய ஆவல் கொண்டு கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.
அமைதியில்லா பறத்தலினால் இறகுகளும் சோர்ந்தன. சோர்ந்து போன கைதிகள் கேட்பதெல்லாம்- பருக சிறிது நீர்.
எங்கு தான் கிடைக்குமோ- அந்த நீர்? பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ? அல்லது- காலங்கள் தாண்டி- சுகங்கள் அனைத்தும் மறந்தமையால், மறத்தலின் பிழை உணர்ந்த கண்களில் மெதுவாக தோன்றி- நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போக, குளமாக தேங்கிய கண்ணீரையும் பருக இயலுமோ?
கேட்பவர்களிடம் கேட்கலாம். நீர். "ஆனால் நீர் அளிக்கக் கூலியாக விடை கொடுக்க நேரிடுமோ"? என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. "இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ?... ஏன் புரியவில்லை?..." என்று கேட்டு ஓய்ந்தார்கள்- பறக்கும் கைதிகள். கேட்பவர்களுக்கு முன்னே. கேள்விகளோடு.
கேட்பவர்களோ- "பறப்பவர்கள் அவர்கள் இலக்கை எட்டி விட்டார்கள் போலும்" - என்று எண்ணிக் கொண்டனர். "இத்தனை காலம் பறந்து- நான் சேர்ந்த இடத்திற்குத் தான் நீயும் வந்தாயா"? என்று மனதில் உள்ளூரத் தோன்றிய இறுமாப்புடன் நகையாடினார்கள்.
கேள்விகளோடு, நீர் கிட்டாமல், ஓய்ந்தார்கள்- ஒரு நொடி வாழ்ந்தவர்...