இதுக்கெல்லாம் ஒத்தி சமைச்சு போடறேன் பாருங்கோ! மொதல்ல என்ன சொல்லணும்! நான் என்ன பண்ண முடியும்? நேக்கு தெரிஞ்சது இவ்வளவுதாண்டாப்பா! ஏதோ ஒரு உப்மாவ பண்ணி- "இது எங்க பேபியே அவ கையால செஞ்சது"-ன்னு பாவம் என்ன இவர் தலேல கட்டிட்டா- எங்காத்துல! இப்ப நான் பண்ணறது எல்லாம் நானா கத்துண்டு பண்ணறது தான்! ஒத்தி கஷ்ட பட்டு நாலு மணிக்கு எழுந்துண்டு சமைச்சு வெச்சுட்டு வேலைக்கு ஓடறாளே- செத்த நன்னா இருக்குன்னுதான் சொல்லுவோமே- ன்னு உண்டா? "பாட்டி சம்பாராட்டம் இல்லை"- யாம்!
இத மொதல்ல அது பாட்டியாத்துல லீவுக்கு உட்டதுதான் தப்பு! ஒண்ணர மொழ நீளத்துக்கு நன்னா நாக்க வளத்துண்டு வந்து நிக்கறது! எங்கம்மா ப்ரமாதமா சமப்பாதான். இல்லங்கல. சில பேர் கை பக்குவம் அப்டி. அப்டியே கண கச்சிதமா அமஞ்சுடும்! தோ! இவரும் அப்டிதான். எம்பொண்ண கேளுங்கோ! அதோட "Ranking" படி 1st rank பாட்டி சமையல், 2nd rank- அதோட அப்பா சமையல்!
சனிக்கழம சாயந்தரமா ரெண்டுமா கெளம்பி- ஸ்ரீரங்கம் தெக்கு சித்தர வீதி Market லேர்ந்து எல்லா காரிகாயும் வாங்கிண்டு வந்து- ஞாயத்தி கெழமயானா- காத்தால அவியல்! அவ அப்பா special! ஏதோ- அவர் புண்ணியத்துல நாலு கரிகா உள்ள போரதேன்னு சந்தோஷ பட்டுக்கணும். ஒரு சில அப்பா special இருக்கு- அப்புறம் பாட்டி special! அம்மாக்கெல்லாம் ஒண்ணும் கெடயாது! அதுக்கே எட்டூருக்கு இருக்கு நாக்கு! இவர் வேர கூட சேந்துண்டு நன்னா ஏத்திவிட வேண்டியது!
School போறதுக்கு முன்னாடி, பருப்புஞாம் சாப்டு போடான்னு hot pack ல வெச்சுட்டு போனா- எங்காத்து மஹானுபாவர் அதுல மிளகு, ஜீரகம்- அது இதுன்னு என்னன்னத்தையோ போட்டு- ஆஞ்சநேயர் கோவில் பொங்கல் பிரசாதமாட்டம் பண்ணி கொடுக்க வேண்டியது!
வீணை வாசிப்பாரே- சிட்டி பாபு- ரொம்ப வருஷம் முன்னாடி அவர ஒரு train ல போறச்ச பாத்து friends ஆய்ட்டாராம்! சங்கீதத்த பத்தி பேசினாளா இல்லையான்னு நேக்கு தெரியாது! அவாத்து மாமி, அவருக்கு tiffin டப்பால bread மேல மிளகா பொடி, ஜீனி ரெண்டுத்தையும் வெண்ண போட்டு கலந்து தடவி கொடுத்துருந்தாளாம்! அவ்வளவுதான்! இதுக்கு பழக்கி விட்டாச்சு! இது farex சாப்ட காலத்லையே அதுல ரசத்த கலந்து குடுடீங்கும்! இப்டி காரமா சாப்டா கோவம் தான் வரும்!
நம்பளால இந்த வேலைளாம் செய்ய முடியாதுடாப்பா! நேக்கு தெரிஞ்சதுதான் நான் பண்ணுவேன்! ஏதோ- ஒரு தோசயாது பண்ணி இது கிட்ட ஒரு rank வாங்கிடலாம்னு பாத்தா- "தாயி தான் தோச நன்னா பண்ணுவா" ங்கறது! அதுக்கு சின்ன வயசுல "ர" வராது! அதனால அது பெரியம்மாவ தாயி-ன்னு கூப்டும். ஆனா இன்னி வரைக்கும் அந்த வார்த்த அதுக்கு எங்கேர்ந்து கடச்சுதுன்னு தெரியல!
போரும்! போரும்! எல்லாம் எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சமச்சா போரும். நேக்கு கல்யாணமான புதுசுல "மீனாக்ஷி மாமி" புஸ்தகத்லேர்ந்து படிச்சு கத்துண்டதுதான் இப்ப இதுக்கு lunch box கட்டி தரது! அது போரும்! அதுக்கா என்ன தெரியும்? முருங்கக்கா மாங்கா போட்ட சாம்பார்-லேர்ந்து, முருங்கக்கீர தேங்கா போட்ட கரி வரைக்கும் பாட்டி சமையல் ருசி நாக்குல ஏறி கடக்கு, அதுக்கு! இதுக்கெல்லாம் இப்ப தெரியாது! இதுக்கு ஒண்ணு பொறந்து- அதுக்கு இது வடிச்சு கொட்டும்போது- அது- "எங்க பாட்டி சமையல் தான் ஒசத்தி"ங்கும் பாருங்கோ- அப்ப புறியும், என் அரும!
ஒரு சிந்தனைச் சிறையில் அகப்பட்டுக்கொண்டுவிட்டேன், என்னையும் அறியாமல். இருப்பதற்கும், இல்லாததர்க்கும் இடையில்- நிராதரவாக, நிராகாரமாக சஞ்சரித்துக் கொண்டிருக்கும் "மாயை" எனப்படுவத்தின் உண்மைகளே வாழ்க்கையா- அல்லது உண்மை இல்லாதது வாழ்கையா? ஆன்மீகவாதிகளும், மதத்தலைவர்களும், கற்ற பல ஞானிகளும் வாழ்கையை "மாயை" என்றே கூறி விடுகிறார்கள். கல்லாத பலரும்- அவர்கள் கூறுவதை உண்மை என்று நம்புகிறார்களோ இல்லையோ- அப்படிச் சொன்னால் "கற்றவர்", "அறிந்தவர்" என்ற பட்டியலில் தாமும் சேர்ந்து விடுவோம் என்று நம்பி அப்படியே கூறிவிடுகிரார்கள்.
எதை எடுத்தாலும் இருப்பதை மறுப்பதே ஒரு சிலருக்கு வேலையாகப் போய் விட்டது. "நீ கடவுள் உண்டு என்கிறாயா? நான் இல்லை என்பேன். நீரில் ஈரம உண்டு என்பாயா? நான் இல்லை என்பேன்"! என்று கூறும் இவர்கள்- தாம் மறுத்துப் பேசும் விஷயத்தை வெறும் வார்த்தைகளோடு விட்டுவிடுவதில்லை. அதற்குப் பல அறிய, புதிய, பெரிய விளக்கங்களைக் கொடுத்து- விஞ்யான பெயர்களால் கட்டி, புரியாத கணக்குகள் பல கோர்த்து- பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். இதில் என்னைப் போன்றவர்கள்- இவர்கள் கூறும் அனைத்திலும் உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டதாக நினைக்கையில்- ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கணிதம் தவறு என்றும் நினைக்கத் தோன்றி விடுகிறது!
எனவே துரு பிடித்துப்போன என் சிந்தனை வகுப்புகளை தட்டி எழுப்ப முயற்சித்தேன். அந்த சிறையில் அகப்பட்டுக் கொண்டேன். சிந்தனைகளின் தாக்கத்தையும் மறந்து- அங்கிருந்து வெளி வர வாயில் உண்டோ என்று தேடினேன். "உண்மையே வாயில்" என்ற அறிக்கை அங்கு இருக்கக் கண்டேன். ஆறுதல் கூறிக் கொண்டேன். சிந்தனைச் சிறைச்சாலையின் கம்பிகளை எண்ணத் துவங்கினேன்.
"மேட்ரிக்ஸ்" சினமாவில் வருவது போலத்தான் நம் வாழ்கை என்று நினைக்கத் தோன்றியது. மனிதர்களை, இயந்திரங்கள்- தங்களின் சக்திக்காக எப்படி உற்பத்தி செய்கிறதோ- அதே போலத்தான் "சக்தி"/"பிரமம்", எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்- "சக்தி" எனப்படுவது, தன் "சக்தி" எனப்படுவதை நிலைக்க வைப்பதற்காக நம்மை உருவாக்கிக் கொண்டதாக நினைக்கத் தோன்றியது. நம் நினைவில் அதன் உயிர். "என் கரு- பிரபஞ்சம். அதில் உயிர் என்னும் விதை நான் விதிக்கிறேன்"- என்பதற்கும், "மேட்ரிக்ஸ்" கும் எந்த வித வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சரி, இதிலிருந்து தான் அது.
நான் இருக்கிறேன். எனக்குத் தெரியாத, புரியாத விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சிந்தனைகளை நான் சிந்தித்து- அதிலிருக்கும் கருத்துக்களை அறிய முயற்சித்துக் கொண்டிருத்தல்- "மாயை" எனப்படுவத்தின் மெய்யா? பொய்யா? எதை "மெய்" என்றும்- "பொய்" என்றும் ஒப்புக்கொள்வது? ஏனெனில் "உடல்" என்பதையும் "மாயை" என்கிறார்கள். "மனஸ்" என்பதையும் "மாயை" என்கிறார்கள். எனவே இங்கு "மெய்", "பொய்" எனக் கூறப்படுவது- இருப்பதும் இல்லை- இல்லை என்று மறுத்துவிட முடியாததும்- ஆனால் இல்லை என்பதே இருப்பது என்று நினைத்துக்கொண்டிருப்பதும் இல்லை.
"நாம் தூக்கத்தில் இருக்கிறோம்" என்கிறார்கள். "ஆழ்ந்த நித்திரை" என்ற தன்மையிலிருந்து உதித்ததே "மாயை" என்கிறார்கள். அதாவது- மனிதர்களுக்குரிய முதல் மூன்று நிலைகள் "ஜாக்ரத்", "ஸ்வப்ன", "ஸுஷுக்தி" என்ற மூன்று நிலைகளில், "ஸுஷுக்தி" என்ற நிலையிலிருந்து "மாயை" எனப்படுவது பிறக்கிறது என்கிறார்கள். "மாயையும்", "உண்மையும்" பிணைந்து- இருப்பதையும், இல்லாததையும் உருவாக்கியது என்கிறார்கள் ("sathyam chaa nrutham cha sathyam abhavath"). இப்படியே சிந்தித்துக்கொண்டிருக்கையில் தான் தோன்றியது என் சிந்தனையின் வடிவம் வட்டம் என்று!
சிறை வாயில் திறந்தது!
மியாவ்-மியாவ் - Part 2
நான் சொன்னேனா- கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கோம் இந்த பூனகளாலன்னு? ஒண்ணு விட்டா ஒண்ணுன்னு எதையாவது புடிச்சுண்டு நிக்கறது! டி.வி இல்லையா. பூனை!
தெனம் இது வெளீல போம்போதும் வரும்போதும் எட்டி எட்டி, அந்த பூனைகள் தூங்கறதா என்னன்னு பாத்துண்டே போகும். ஆத்துல இருக்குன்னா பூனைகள் எப்ப வரும் எப்ப வரும்னு கேட்டுண்டே இருக்க வேண்டியது!
அந்த குட்டிகளா- படு சமத்து! அதுல இந்த கருப்பு- Bosco இருக்கே! "கருமமே கண்ணா" இருக்கும். மொதல்ல அதுதான் வந்து கோரல குடுக்க ஆரம்பிக்கும். அது எதோ ஒரு பரி பாஷ வச்சிண்டுருக்குகள். இது சாப்ட வந்து கோரல கொடுத்தாலே மத்ததுகளும் வந்துடும். chorus-ஆ மியாவ்-மியாவ்-ங்கும், எல்லாமே. Vasco வும் துரு-துரு தான். ஆனா Bosco பூனை தான் சாப்படரதுல correct- ஆ இருந்துக்கும்.
அது வந்து கூப்டு நம்ப கேக்கலேன்னா இவர் உக்காந்து வேலபாக்கர computer room கு நேரா இருக்கற மதில்ல ஏறிண்டு இவற பாத்து கேக்கும்! நன்னா தெரியும் அதுகளுக்கு எங்க எப்டி யார கேட்டா விஷயம் நடக்கும்னு. இவர் உடனே பால் ஆச்சா- கொண்டாம்பார்! அதுகளுக்குன்னு ஒரு cup வச்சிருக்கோம். இது இருக்கே! அதுகள் சத்தம் கேட்டா போரும்! நா-நா- நான்தான் பால் ஊத்துவேன்னு ஒரே தை-தை. இது எங்க அதுகளுக்கு பால் கொடுக்க போய்- அதுகள பாத்து பயந்து விழுண்டதுடுமோன்னு ஒரே பயம் எனக்கு.
அதுகளா- நம்முளுக்கு தான் பால் வருதுன்னு தெரிஞ்சா போரும்! மியாவ்-மியாவ்ங்கும். நம்ம மோகத்த பாத்துக்கும். ஒன்னும் சொல்லலைன்னா- ரெண்டு படி ஏறி மேல வரும். மறுபடியும் கோரல கொடுக்கும். நம்மள பாத்துக்கும். ரெண்டு படி ஏறும். அதுகள கீழ போங்கன்னு சொல்லி பால எடுத்துண்டு போய் விடரதுக்குள்ள அதுகளுக்கு தாங்காது. காலையே சுத்தி சுத்தி வரும். cup- அ கீழ வைக்கரதுக்குள்ள Bosco பூனை இருக்கே- அது முன் கால் மேல தூக்கிண்டு ஒரு jump ஒண்ணு பண்ணும். விட்டா கை லேர்ந்து தட்டி குடிக்கும் போலருக்கு.
ஆனா- ரொம்ப கொழுப்பு தெரியுமோ..? பால் விடற வரைக்கும் தான் இந்த கொஞ்சலெல்லாம். விட்டப்ரம், அதுகள் குடிச்சு முடிச்சப்ரம்- பெப்பே-ங்கும்.
அதுல- இந்த Mosco இருக்கே- செரியான அம்மா-கோண்டு. அம்மாவோட தான் வரும், போகும். ஆனா ஒரு நா என்னாச்சு, எல்லா பூனைகளும் அத தனியா உட்டுட்டு எங்கயோ போய்டுத்துகள், பாவம். சாப்ட ஏதுமில்லாம- காலேல 5 மணி. Hall- ல light- அ போட்டுட்டு வெளீல வந்து பாக்கறேன்! பாவமா வெளீல நின்னுண்டு கோரல கொடுத்துண்டுருக்கு. அதுக்கேன்னமோ double கொரலா இருக்கும். அது மியாவ்-மியாவ் ங்கும் போதெல்லாம், ஒரு கண்ணு வேற முடிக்கும். அந்த கொரலும், அது மொகமும்! அத்தன பாவமா இருக்கும்! பால காச்ச கூட இல்ல! அது பசின்னு கேட்டுடுத்து பாவம். அப்டியே கொடுத்தேன். முழுக்க குடிச்சுடுத்து. மீதி பூனை- especially அந்த Bosco துப்பாண்டி இருந்தா, இதுக்கு துளியோண்டு தான் கடைக்கும். பாவம்!
ஏதோ! மூணும் நல்ல ஒத்துமையா இருக்குகள். எம்பொண்ணு- பால் விட போகும்போதெல்லாம் அதுகள தடவி உட்டுட்டு- "தொட்டேனே- தொட்டேனே" ங்கும். "நீ தொட்டுக்கோ, கொஞ்சிக்கோ- என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆத்துக்குள்ள வந்து அழுக்கு பண்ணித்துன்னா நீதான் clean பண்ணனும்" னு பயமுறுத்தி வச்சிருக்கேன். அதனால அமைதியா இருக்கு.
அன்னிக்கு, எங்காத்துலேர்ந்து என் உடன் பிறப்புகளெல்லாம் phone பண்ணி பேசித்துகள். இது எங்காத்ல மூணு பூனை இருக்குன்னு வேற டமாரம் அடிச்சுது, இது. உடனே எம் பரம்பரையே phone பண்ணி- ஆத்துக்குள்ள வராம பாத்துக்கோ. Allergy- அது, இது ன்னு free advice- ஆன free advice!
ஆனா அதுகள் எத்தன நாளேக்கு தான் இப்டி துரு-துரு துப்பாண்டியாவே, குட்டிகளாவே இருக்க போரதுகள்! அதுகளும் பெருசா போய்டும்! நாமள எல்லாம் நெனச்சுக்குமோ, நெனச்சுக்காதோ! எங்காத்து துப்பாண்டியும், எத்தன நாளேக்கு தான் இப்டியே இருந்துடும்! தோ! வாசல்ல கொரல் கேட்டுடுத்து.. பால் ready பண்ணனும்...
பஞ்சு மிட்டாய் சுழன்று-சுழன்று வரும் காட்சி. அதன் வெட்கம் என் நாவிலும் ஒட்டிக்கொண்டது! அந்த பிளாஸ்டிக் வளையல்கள் என் கைகளில் நுழையாமல் போய் விடலாம். ஆயினும் அதன் மீதிருந்து தங்கத் துகள்கள் என் கைகளில் போடிந்தது. சிரிக்கும் கோமாளியின் டமாரம் அடித்துக்கொண்டே இருக்கும். ஒரு சில சமயங்களில் நின்றும் போய்விடும். நதிகள் அங்கே நிற்கவே நிற்காது! அதற்கு ஸ்டேஷன்களும் கிடையாது. கொடிகளும் கிடையாது.
நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா- இன்னும் எத்தனையோ வண்ணங்களில்அங்கு பலூன்கள். அதே போன்று பல்வேறு வண்ணங்கள் கொண்ட மூக்குக்கண்ணாடிகள். அதை இரவிலும் மாட்டிக் கொள்ளலாம். அந்த துப்பாக்கிகளில்தொட்டாவிற்கு பதில் நீர் இருக்கும். தொலைக்காட்ச்சியை கையில் வைத்துத் திருகினால் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படம் நம்மைப் பார்த்து சிரிக்கும். அங்கு புல்லாங்குழல்கள், பாதியில் வெட்டப்பட்டிருக்கும், விலை மலிவாகஇருக்கும். ஆனால் அதிலிருந்து இசை எழச்செய்வது என்னவோ அதைவிற்பவனால் மட்டுமே முடியும். போம்மைகளுக்கும் இனிப்புகளுக்கும் ஏங்கித்தவித்து அழும் குழந்தைகளின் நாக்கு என்னவோ மிட்டாய் நிறத்தில் தான் இருக்கும்!
என் கை சிவப்பாக மின்னிக்கொண்டிருந்தது- அதில் ஒரு மயில் தன தொகையை விரித்து, அழகாகவும், ஒயிலாகவும் ஆடியிருந்தது. "இதைப் போல் வேறொன்றை நான் என் வாழ்க்கையில் கண்டதே இல்லை" என்று என்னையும் நினைக்க வைத்தது! ஓர் அடி முன்னே எடுத்து வைத்து, நான் பல வருடங்களுக்கு முன்னே கடந்து வந்த பாதைகளை எட்டினேன். பெற முடியாததை பெற்ற குழந்தையின் குதூகலத்தை உணர்ந்தேன்.
சில சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ள சிறு விஷயங்களில் பெரும்சந்தோஷங்கள் நிறைந்துள்ளது. அதை உணரும் போது- பெரும்சந்தொஷங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆழ் மனதையும் அதன்ஏக்கங்களை மறக்கச் செய்து விடுகிறது அந்த உணர்வு. அங்கு சிறுவர்களோடுசிறுமியாக, நானும் என் கையை வண்ணங்களால் நிரப்பிய போது- இந்த உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ஒரேடியாக உள் வாங்கிக் கொண்டதை உணர்ந்தேன். அதில் கனமே இல்லை! பஞ்சைப்போல- மெலிதான ஒரு உணர்வு!
"இன்னும் கொஞ்ச காலம் நீடிக்குமோ இந்த சந்தோஷம்" என்று கூறுவதில்பயனில்லை! வாழ்கையிலும் அநேக ராட்டினங்கள் மேலும்- கீழும் போய்வருவதுண்டு. நம் கைகளில் எந்த வண்ணங்கள் நன்றாக இருக்கும் என்ற முடிவு- நம் கண்களுடயது. இங்கு மிட்டாய்கள், சில கடைகளிலேயே நன்றாக இருக்கும். இங்குள்ள பல ராட்டினங்களில் நீங்களும் சற்றுப் போய்த்தான் பாருங்களேன்....!
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
They make my day...
-
1 day ago
-
2 days ago
-
6 days ago
-
1 week ago
-
2 months ago
-
2 months ago
-
5 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".