சிறை
ஒரு சிந்தனைச் சிறையில் அகப்பட்டுக்கொண்டுவிட்டேன், என்னையும் அறியாமல். இருப்பதற்கும், இல்லாததர்க்கும் இடையில்- நிராதரவாக, நிராகாரமாக சஞ்சரித்துக் கொண்டிருக்கும் "மாயை" எனப்படுவத்தின் உண்மைகளே வாழ்க்கையா- அல்லது உண்மை இல்லாதது வாழ்கையா? ஆன்மீகவாதிகளும், மதத்தலைவர்களும், கற்ற பல ஞானிகளும் வாழ்கையை "மாயை" என்றே கூறி விடுகிறார்கள். கல்லாத பலரும்- அவர்கள் கூறுவதை உண்மை என்று நம்புகிறார்களோ இல்லையோ- அப்படிச் சொன்னால் "கற்றவர்", "அறிந்தவர்" என்ற பட்டியலில் தாமும் சேர்ந்து விடுவோம் என்று நம்பி அப்படியே கூறிவிடுகிரார்கள்.
எதை எடுத்தாலும் இருப்பதை மறுப்பதே ஒரு சிலருக்கு வேலையாகப் போய் விட்டது. "நீ கடவுள் உண்டு என்கிறாயா? நான் இல்லை என்பேன். நீரில் ஈரம உண்டு என்பாயா? நான் இல்லை என்பேன்"! என்று கூறும் இவர்கள்- தாம் மறுத்துப் பேசும் விஷயத்தை வெறும் வார்த்தைகளோடு விட்டுவிடுவதில்லை. அதற்குப் பல அறிய, புதிய, பெரிய விளக்கங்களைக் கொடுத்து- விஞ்யான பெயர்களால் கட்டி, புரியாத கணக்குகள் பல கோர்த்து- பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். இதில் என்னைப் போன்றவர்கள்- இவர்கள் கூறும் அனைத்திலும் உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டதாக நினைக்கையில்- ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கணிதம் தவறு என்றும் நினைக்கத் தோன்றி விடுகிறது!
எனவே துரு பிடித்துப்போன என் சிந்தனை வகுப்புகளை தட்டி எழுப்ப முயற்சித்தேன். அந்த சிறையில் அகப்பட்டுக் கொண்டேன். சிந்தனைகளின் தாக்கத்தையும் மறந்து- அங்கிருந்து வெளி வர வாயில் உண்டோ என்று தேடினேன். "உண்மையே வாயில்" என்ற அறிக்கை அங்கு இருக்கக் கண்டேன். ஆறுதல் கூறிக் கொண்டேன். சிந்தனைச் சிறைச்சாலையின் கம்பிகளை எண்ணத் துவங்கினேன்.
"மேட்ரிக்ஸ்" சினமாவில் வருவது போலத்தான் நம் வாழ்கை என்று நினைக்கத் தோன்றியது. மனிதர்களை, இயந்திரங்கள்- தங்களின் சக்திக்காக எப்படி உற்பத்தி செய்கிறதோ- அதே போலத்தான் "சக்தி"/"பிரமம்", எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்- "சக்தி" எனப்படுவது, தன் "சக்தி" எனப்படுவதை நிலைக்க வைப்பதற்காக நம்மை உருவாக்கிக் கொண்டதாக நினைக்கத் தோன்றியது. நம் நினைவில் அதன் உயிர். "என் கரு- பிரபஞ்சம். அதில் உயிர் என்னும் விதை நான் விதிக்கிறேன்"- என்பதற்கும், "மேட்ரிக்ஸ்" கும் எந்த வித வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சரி, இதிலிருந்து தான் அது.
நான் இருக்கிறேன். எனக்குத் தெரியாத, புரியாத விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சிந்தனைகளை நான் சிந்தித்து- அதிலிருக்கும் கருத்துக்களை அறிய முயற்சித்துக் கொண்டிருத்தல்- "மாயை" எனப்படுவத்தின் மெய்யா? பொய்யா? எதை "மெய்" என்றும்- "பொய்" என்றும் ஒப்புக்கொள்வது? ஏனெனில் "உடல்" என்பதையும் "மாயை" என்கிறார்கள். "மனஸ்" என்பதையும் "மாயை" என்கிறார்கள். எனவே இங்கு "மெய்", "பொய்" எனக் கூறப்படுவது- இருப்பதும் இல்லை- இல்லை என்று மறுத்துவிட முடியாததும்- ஆனால் இல்லை என்பதே இருப்பது என்று நினைத்துக்கொண்டிருப்பதும் இல்லை.
"நாம் தூக்கத்தில் இருக்கிறோம்" என்கிறார்கள். "ஆழ்ந்த நித்திரை" என்ற தன்மையிலிருந்து உதித்ததே "மாயை" என்கிறார்கள். அதாவது- மனிதர்களுக்குரிய முதல் மூன்று நிலைகள் "ஜாக்ரத்", "ஸ்வப்ன", "ஸுஷுக்தி" என்ற மூன்று நிலைகளில், "ஸுஷுக்தி" என்ற நிலையிலிருந்து "மாயை" எனப்படுவது பிறக்கிறது என்கிறார்கள். "மாயையும்", "உண்மையும்" பிணைந்து- இருப்பதையும், இல்லாததையும் உருவாக்கியது என்கிறார்கள் ("sathyam chaa nrutham cha sathyam abhavath"). இப்படியே சிந்தித்துக்கொண்டிருக்கையில் தான் தோன்றியது என் சிந்தனையின் வடிவம் வட்டம் என்று!
சிறை வாயில் திறந்தது!