மியாவ் - மியாவ்
இப்போதான் செத்த அக்காடான்னு அப்டியே உக்காந்தேன். ஒரே ஏறச்ச காடா இருக்கு! அந்த டி.வி. பொழுதன்னிக்கும் கத்திண்டே இருக்கணுமா? Off பண்ணுன்னா கேக்கரதா பாரு! யாராது வாசல்ல வந்து கூப்டா கூட தெரியாது. அக்கம் பக்கத்ல இருக்கறவாள்லாம் சண்டைக்கு வருவா. ஆனா வெளீலையே ஏதோ சத்தம் கேக்கறாப்ல இருந்தது. என்னடான்னு எட்டி பாக்கலாம்னா முடியல! இத போய் பாருடான்னேன். இது அப்டியா-இப்டியான்னு மொனகிண்டே மெதுவா நகந்து வாசலுக்கு போய் பாத்துது!
"அம்மா! அம்மா! ஓடி வா... சீக்கரம்... " னு கத்தித்து!
நானும் கஷ்டப்பட்டு எழுந்து போய் பாத்தா, மூணு பூனை குட்டி! பசி பாவம். எங்காத்து படிக்கட்டு பக்கத்ல நின்னுண்டு "மியாவ்- மியாவ்" னு chorus- ஆ கத்திண்டுருந்துதுகள்!
பாரதியாராத்து பூனகளாட்டமா- ஒன்னு சாம்பல் நிறம், ஒன்னு கரும் பாம்பின் நிறம், இன்னொண்ணு பாலின் நிறம். மூணும் மூஞ்சிய பாவமா வெச்சுண்டு எங்காத்தயே நோட்டம் உட்டுண்டுருந்துதுகள்!
எம்பொண்ண பத்திதான் கேக்கணுமா! செரியான ஆள கண்ட சமுத்ரம்! ஒரே "தை தை" தான். தூக்கி வெச்சுண்டு கொஞ்சணுமாம். அது அழுக்கு பண்ணித்துன்னா மட்டும் clean பண்ண அம்மா வரணும். இது தான் ஒரு துறும்ப கிள்ளி அண்ணண்ட போடாதே!
பாவம். பொறந்து ஒரு வாரம் தான் இருக்கும் போலருக்கு. நல்ல பசி அதுகளுக்கு. பால தூக்கி fridge- ல வெச்சுட்டேன். ஜில்லுன்னு இருக்கு. அதுகளுக்கு ஒத்துக்குமோ, ஒத்துக்காதோ! லேசா சூடு பண்ணி ஜில்லுப்ப மாத்தலாம்னு அடுப்புல வெச்சேன்.
"அம்மா... உள்ள வருது.. உள்ள வருது.." னு கத்தித்து!
பாத்தா- அதுல இந்த சாம்பல் குட்டி- grill- ல தாண்டி ஜம்முன்னு உள்ள வருது. அத பாத்துட்டு இது ஒரே ஓட்டம். "தூக்கி வெச்சுண்டு கொஞ்சணுமாம்" இந்த அழகுல! இது பயந்தத பாத்து அந்த குட்டி பயந்து போய்- ஓடி போய்டுத்து வெளீல! மித்த ரெண்டு குட்டிகளும் நடுங்கிண்டு வெளீலயே நின்னுண்டு கத்திண்டுருந்துதுகள்!
பால் ஜில்லுப்பு போய்டுத்து. குட்டிகள் எங்கடான்னு பாத்தா- காணல!
மழை!
பாவம்- எங்கயோ ஓடி போய் ஒளிஞ்சுடுத்துகள். பக்கத்தாத்து மாமி- அங்கேர்ந்து வந்து- அக்கறையா சொன்னா- "எதுத்தாத்து மாமி இப்டிதான் ஒரு நா பூனைக்கு பால் வெச்சா! அதுகள் அவாத்லயே permanent- ஆ டேரா போட்டுடுத்துகள்" னு! அதுக்காக வாசல் வந்து கேக்கற குட்டிகள வெரட்டவா முடியும்?
மழை நின்னப்ரம், குட்டிகள் மெதுவா வெளீல வந்துதுகள். பால் விடறதுக்கு இவர் போனார். இவர் வரத பாத்துட்டு- எல்லாம் தூரக்க ஓடி போய் நின்னுண்டு பாத்துண்டே இருந்துதுகள். அவர் விட்டுட்டு போனப்றம் போய் குடிச்சுதுகள்.
அதுக்குள்ள எம்பொண்ணு அதுகள photo எடுக்கறேன் பேர்வழின்னு- ஒரு camera வ தூக்கிண்டு வந்து "சலங்கை ஒலி" ல வர photo எடுக்கற குண்டு பையனாட்டம் வித- விதமா எப்டி எப்டியோ photo எடுத்துது!
அன்னிலேர்ந்து தெனம் டான்னு- 6:45 க்கு சாயந்தரம் வந்துடும், மூணும். வந்து வாசல்ல நின்னுண்டு குரல் குடுக்கும். அதுகளுக்கு இது பேரு வெச்சுருக்கு.
அதுல ஒண்ணு உள்ள வந்துதே- சாம்பல்குட்டி- அது பேரு "Vasco" வாம் (Vasco da Gama மாதிரி அது explore பண்ணறதாம்). இன்னொண்ணு கருப்பு- அது "Bosco" (சினிமா ல வில்லன்லாம் Boss- தானே- கருப்பு பூனை வில்லன் பூனையாம்). மூணாவது "Mosco". அது என்னதுன்னு நேக்கு தெரியாதுடாப்பா!
ஏதோ! அதுகள் புண்ணியத்ல பொழுது போறது! ஒரு அர மணி நேரத்துக்குஆத்துல டி.வி. சத்தம் இருக்காது!