"ஊர்மக்கள்"  

Posted by Matangi Mawley

எதப்பாத்தாலும் உடனே பண்ணி பாக்கணும்! டி.வி. "ஓம் நாம ஷிவாய" பாத்துட்டு ஒரே பக்தி! நடு கூடத்துல சாமி ரூம் லேருந்து உம்மாச்சி படத்தஎல்லாம் எடுத்துண்டு வந்து கூடத்துபரத்தி கட்டிண்டு கூத்தடிச்சுண்டுருக்கு. கேட்டா பூஜ பண்ணரதாம்! ஏதோ ஒரு episode ராவணன், ஷிவனுக்கு கர்பூரமெல்லாம் காட்டி, பாட்டு பாடி பூஜ பண்ணறத பாத்துடுத்து. அவ்வளவுதான்- புடிச்சுண்டுடுத்து!

வாங்கின கர்பூரமெல்லாம் காலி! எல்லாத்தியும் கொளுத்தி போட்டு- மேல-கீழ பட்டு சுட்டுதுன்னா "அம்மே-அம்மே"னு நம்புள்ட தானே ஓடி வரணும்கற புத்தி இருக்கணும். அட அத விடுங்கோ! ஆத்துக்கு வரவா யாராது பாத்தா என்ன நெனப்பா? நாலு செலைய வெச்சுண்டு, அதுக்கு அபிஷேகமென்ன, பூவென்ன! ஆனா சும்மா சொல்லப்டாது! வாய முணுமுனுத்துண்டு- ஒரு கைக்கு கீழ இன்னொண்ண வெச்சுண்டு- அழகா தான் பண்ணித்து!

அது என்னமோ தெரியல! எத பாத்தாலும் உடனே பண்ணி பாக்கணும். அன்னிக்கு யாரோ எங்காத்துக்கு வந்துருந்தா. இவரா, யாரு வந்தாலும் இத கூப்டு- "மாமா/மாமி கு ஒரு பாட்டு பாடி காமி"ம்பார். எல்லாருக்கும் ஒரே பாட்டு தான். எல்லாரும் அத தான் கவனிக்கணும். ஒரு துணிய தலேல சுத்திண்டு அத ribbon வெச்சு கட்டிண்டு "நான் அந்த டி.வி. வந்த sheik" ங்கும். அதே துணிய வேற மாறி போட்டுண்டு "பாரதியார்"ங்கும்.

இது 1st std. படிக்கறச்ச- craft miss எதோ கலர் paper எல்லாம் வெட்டி ஓட்ட கத்துகொடுத்தாளாம். கத்ரிகோல வெச்சு வெட்றதுக்கு practice பண்ணறேன் பேர்வழின்னு எம்பொடவலேர்ந்து கொட வரைக்கும் எல்லாத்தியும் வெட்டி வச்சிருந்துது!

இன்னொரு நா எங்கயோ கீழ விழுந்து அடி பட்டு ஒரே அழுக. என்ன பண்ணினன்நேன். "ஸ்ரீநாத் மாதிரி பண்ணினேன்"நுது. என் தங்க புள்ள ஸ்ரீநாத் வினோதமா தூங்குவான், சின்ன வயசுல. அந்த posture அ இது try பண்ணிருக்கு. அத படி கட்ல நின்னுண்டா பண்ணும்? கீழ விழுந்துடுத்து!

இது எல்லாம் நன்னா பண்ணரதேன்னு, அவா school drama ல லாம் சேத்துப்பளா- என்ன வேஷம் நு ஒரு தடவ கேட்டேன். "ஊர்மக்கள்"நுது. அவ்வளவுதான். ஒரு மாசம் அன்ன ஆகாரமில்லாம, ராப்பகலா- class எல்லாம் மட்டம்- practice practice practice தான். ஜெக ஜெக ன்னு பட்டு பொடவைய கட்டி விட்டுருந்தா. இத்தனூண்டு கொழந்தைய அவளோ பெரிய பொடவைல பொட்லமா கட்டியாச்சு! அழகாதான் இருந்துது.

இது எப்படா வரும்-வரும் னு stage ஏ பாத்துண்டு உக்காண்டுருன்தேன்! மீராபாய் கு கல்யாணம் நடக்கறது. அதுல "ஊர்மக்கள்" நாலு பேர் கலந்துக்கறா. அந்த நாலு பேர்ல ஒண்ணு, இது! மைக்க புடிச்சுண்டு, ஒரு ஒத்த வரி வசனம்-

"என்ன இருந்தாலும் மீரா கொடுத்துவெச்சவ. அவ அதிர்ஷ்டசாலி. மீராவின் பாக்யமே பாக்கியம்"

னுட்டு போய்டுத்து. "ஏண்டா இதைத்தானா சிந்து miss உனக்கு ஒரு மாசமா 'நல்ல பாவத்தோட சொல்லும்மா' ன்னு உன்ன திட்டி திட்டி சொல்லி கொடுத்தா"? ன்னு கேட்டேன். அதுக்கு இதெல்லாம் பத்து எங்க கவல? stage ல போய் பேசியாச்சு. அவ்வளவுதான்! ஒரே குஷி!

"எங்கேர்ந்து எடுத்தியோ- அங்கியே கொண்டோய் வை" னு ஒத்தி
காலேலேர்ந்து கத்திண்டுருக்காளே! பாவம் இவ ஒத்தி கத்தராளே- அவ சொல்ற பேச்ச கேப்போமே, ஒரு நா நல்ல கொழந்தையா இருப்போமேன்னு இருக்கா? இன்னும் அந்த பூஜ சாமானெல்லாம் எடுத்து வெச்ச பாடில்ல.

ஸ்லோக class note book ல good deeds எழுதும்போது மட்டும் "அம்மா கு இட்லி கு அரச்சு கொடுத்தேன், கால அமுக்கி விட்டேன், வைர மூக்குத்தி வாங்கி கொடுப்பேன்"நு paper கிழிய எழுத தெரியறது...

இது என்னதான் எல்லாம் அழகா பண்ணினாலும், கடேசில எல்லாத்தியும் எடுத்து அடுக்கி வைக்க மட்டும் வர மாட்டேங்கறது. அதுதான் எப்பிடி ன்னு நேக்கு புரியறதில்ல! போட்டது போட்டபடி அப்புடியே கெடக்கு! ஆனா இதத்தான் ஆள காணும்! தேடிப்போய் பாத்தா- வேலைக்காரி துணி தோய்க்கரத உக்காந்து வேடிக்க பாத்துண்டுருக்கு.

மொதல்ல- இந்த surf , brush எல்லாத்தியும் எடுத்து, மேல் தட்டுல ஒளிச்சு வெக்கணும்!

ஸ்படிக லிங்கம்  

Posted by Matangi Mawley



தெய்வங்களின் பசி தீர்த்த பின்னரே தங்களின் பசி தீர்த்துக்கொள்வர் சிலர். "கணீர்" என்ற மணியின் ஓசை கேட்டு தெய்வங்கள் ஓடி வந்துவிடுவார்களாம்! நன்கு பொங்கிய- தும்பைப்பூ போன்ற சாதமும், பருப்பும்- நெய்யினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன! அந்த சின்னஞ்சிறு அறையினுள் பல்வேறு விதமான கடவுள்கள்! இத்தனை கடவுள்கள் இருந்தும் - ஒருவருமே அழைத்தவுடன் ஏன் வருவதில்லை? ஒரு வேளை- கடவுள்களும் மாளிகை வாசிகளின் பளிங்கு பூஜை அறையில் தங்கி விட்டார்களோ- என்னவோ!

ஆயிரக்கணக்கான கடவுள்களின் மத்தியில் அங்கு ஓர் புதுவரவும் உண்டு! ஸ்படிக லிங்கம்! அதை அங்கு கொண்டு வந்ததே பெரும் கதை! அந்த லிங்கத்தை வீட்டில் பிரதிஷ்டை செய்வதற்கு ஆன செலவு- லிங்கத்தை விட விலை அதிகம்! மற்ற கடவுள் பிரத்மைகளை விட இதன் மதிப்பு கூடுதல் என்பதனாலோ என்னவோ- ஸ்படிக லிங்கத்தின் மீது பக்தியும் கூடுதலாகத்தான் இருந்தது- பாலனுக்கு!

"நம்பிக்கையினால் தான் வாழ்கை" என்ற வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு பார்க்கப்போனால்- கடந்த மூன்று ஆண்டுகளாக- பாலனுக்கு வாழ்கை என்பதே இல்லை என்றுதான் கூறவேண்டும்! அவனது வாழ்கையின் லட்சியம், அவனது தாயாரின் இறுதி மூச்சுவரை அவளுக்கு பணிவிடை செய்வது- அவனது இறுதி மூச்சு வரை- தெய்வங்களுக்கு தொண்டு புரிவது! வாழ்கையின் முன்னேற்றம்- வெற்றி, தோல்வி, போன்ற- மனிதர்களுக்கு சொந்தமான சிறு சந்தோஷங்களிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் அவனது மனம் விலகி விட்டது! பங்குச்சந்தைகளும் கடவுள்களைப் போலத்தான். அவைகளால் கொடுக்கவும் இயலும், பறிக்கவும் இயலும்! அதனாலேயோ என்னவோ- பாலனுக்கு இப்போது எப்படி கடவுள் மோஹம் பற்றிக்கொண்டதோ- அதே போல, சில வருடங்களிக்கு முன்னர் வரை பங்குச்சந்தை மோஹம் பற்றியிருந்தது! ஆனால் அதனால் கூட அவனுக்கு நம்பிக்கை விலகவில்லை! அதற்கு வேறு காரணம் இருந்தது!

உன்னி- பாலனை விட ஐந்து வயது சிறியவன்தான்! ஏதோ! விதியின் வினோத புத்தியினால் விளைந்த ஓர் விபத்தில் தவறிவிட்டான் உன்னி! ஓர் வங்கியில் பணிபுரிந்து வந்த உன்னியின் சம்பாத்தியத்தில் தான் அவர்களின் குடும்பம் பிழைத்திருந்தது! பாலனின் கொஞ்ச-நஞ்ச சேமிப்பும் உன்னியின் மருத்துவ செலவில் கரைந்தது! கடவுள்களுக்கு இதெல்லாம் தெரியாது! தெரிந்திருந்தால் உதவியிருப்பார்கள்! தனியாக நின்று இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்து, தங்கள் கால்களில் நிறுத்திய சீதா அம்மாவும், உன்னியின் மறைவிற்குப் பின்னர், நொடிந்தே போனாள்! அவளுக்கு வயதும் ஆகிவிட்டது! அவளது கணவரின் பழைய ரேடியோவில் தஞ்சம் புகுந்தாள்! பாலன்- கடவுள்களின் பிரதிமைகளில் அமைதி கண்டான்!

தினந்தோறும் காலையில் குளித்துவிட்டு- கடவுள்களின் பிரதிமைகளை சுத்தம் செய்திருப்பான் பாலன்! அவைகளை நீர், பால், சந்தனம், மஞ்சள்- போன்றவற்றினால் நீராட்டி- நன்கு சுத்தம் செய்வான். தங்கம் போன்று ஜொலித்து மின்னிக்கொண்டிருக்கும் அந்த கடவுள்களுக்கு, நெய்யும், பருப்பில் நனைத்த சாதமும் லஞ்சம் அளித்து- "இப்படி எப்படி நடக்க முடியும்"? என்பது போன்ற அசாதாரணமான வரம் கேட்டு பக்தியில் மூழ்கி நிற்பான்- பாலன்! "புதியதொரு கதிரவன் தோன்ற- நான் இதுவரையில் கண்டிடாத அளவிற்கு செல்வம் பெற்று வாழ வேண்டும்", என்று உருகுவான்!

கடவுள்களின் மீது அளவிற்கு மீறிய நம்பிக்கை இருப்பவர்களுக்கு என்றுமே கடவுள் அலுத்துப்போவதே இல்லை! வேப்பமர தாயத்து சாமியார் முதல்- ஹிமாலய மலைச்சாரல்களின் மகிமை கண்ட ப்ரஹ்மானந்த சாமியார் வரை- யாராக இருந்தாலும் அவர்களின் மகிமையில் மெய்மறந்து போவர்- பக்தர்கள்! இப்படிப்பட்ட ஓர் சாமியாரின் உபயம் தான் அந்த ஸ்படிக லிங்கம்! சிவனின் அம்சமெனக் கருதப்படும் அந்த ஸ்படிக லிங்கத்தின் மகிமை யாதெனில்- கேட்பது கிடைக்கும், நினைத்தது நடக்கும்! பாலனுக்கு அதை வீட்டிற்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து- நேம நிஷ்டைகளை முடிக்கவே ஒருமாத காலம் ஆனது!

அதில் அவனுக்கு நம்பிக்கை வருவதற்கும் சரி, வலுவடைந்ததற்கும் சரி- ஒரு காரணம் இருந்தது! உன்னி,
வேலையில் இருக்கும் பொழுது காலம் சென்றதனாலும், அவனது ஒரு வருமானத்தில் தான் குடும்பம் பிழைத்தது என்றதனாலும்- சீதா அம்மா, வங்கிக்கு, ஏதேனும் உதவி கோரி கடிதம் இட்டிருந்தாள்! அவர்களும், கூடிய விரைவில் பரிசீலித்து பதில் போடுவதாக பதில் அனுப்பியிருந்தார்கள்! பாலனுக்கு இது ஸ்படிக லிங்கத்தின் மகிமை என்றே தோன்றியது! அவனது பக்தியும் அந்த லிங்கத்தின்பால் நாளுக்கு நாள் வலுவடைந்தது!

டி. எம். எஸ் ஸின், "ஒளி மயமான எதிர்காலம்" பாடல் பழைய ரேடியோவில் ஒலிக்க- பகல் வெயில் பாலனுக்கு தூக்கத்தை அளித்தது! முற்றத்தில் அமர்ந்தபடி பேப்பரில் பங்குச்சந்தை செய்திகளை படிக்க முயற்சித்துக்கொண்டிருக்கையில் ராமன் வருகை தந்தார். பாலனின் ஆரம்ப காலங்களில் அவர் அவனுக்கு நிறைய உதவியிருக்கிறார். அவனது மானசீக குரு அவர் என்றே கூட கூறலாம்! இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் ராமன். பாலனின் "நலம்-விரும்பி" என்ற உரிமையில் அவ்வபோது அவன் வீட்டிற்கு அவர் வந்துபோவதுண்டு.

"குமார் நெனவிருக்கா? உம்பின்னாடியே ராப்பகலா அலைஞ்சுண்டுருப்பானே"? என்றார் ராமன்.

"ஓஹோ! நன்னா ஞாபகம் இருக்கே! நல்ல பையன். அந்த வயசு அப்படி- எதப்பாத்தாலும் தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்...", என்றான் பாலன்.

"சின்ன பையனா? இப்ப அவனுக்கு என்ன வயசு இருக்கும்னு நெனக்கறே? மாமா வாட்டம் ஆயிட்டான் தெரியுமோ"? என்றார் ராமன். இருவருமே சிரிக்கத்தொடங்கிவிட்டார்கள். அந்த சிரிப்பு ஓய்ந்த பின்னர் ராமன்தொடர்ந்தார்.

"என்ன தப்பா எடுத்துக்காதே! நீ எம்புள்ள மாதிரி. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். முதல் வேணும்னாலும் நான் தரேன். அந்த குமார் ஏதோ புதுசா பிசினஸ் ஆரம்பிக்கறதா நான் கேள்வி பட்டேன். நான் சொன்னா அவன் கேப்பான். நீயும் அவன்கூட சேந்துக்கோ! எனக்கென்னவோ அதுல நல்ல லாபம் வரும்னு தோணறது.. என்ன நான் சொல்லறது"? என்றார்.

பாலன் ஏதோ சிந்தித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, தொடர்ந்தார் ராமன்- "போனது போகட்டும். அத கட்டிண்டு அழறதுல பிரயோஜனமில்ல! அத மனசிலேர்ந்து விட்டு எறிஞ்சுட்டு ஆக வேண்டியத கவனி! நாள மத்யானமா ஆத்துக்கு வா..."


"நீங்க என் நல்லதுக்கு தான் சொல்றேள்னு நேக்கு புரியறது", என்று குறுக்கிட்டான், பாலன். "ஆனா நீங்க முதல் தர வேண்டாம். என்னால அத வாங்கிக்க முடியாது. பேங்க் லேர்ந்து பதில் வந்துடட்டும்! அதுக்கப்றம்..."

ராமன் பாலனை உற்றுநோக்கியிருந்தார். சில வருடங்களுக்கு முன் அந்த கண்களில் இருந்த ஒளி இப்போது இல்லை! காலத்தின் கோணல் புத்தியின் விளையாட்டிற்கு முடிவே இல்லையோ, என்று எண்ணிக்கொண்டார், ராமன்! "ஏதோ- ஒரு விடியல் வந்தா சரி", என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு புறப்பட்டார், ராமன்!

ஸ்படிக லிங்கம், நாளுக்கு நாள் ஜொலித்துக்கொண்டே போனது. ஆயினும், அதன் சக்திகள் எதையும் வெளிப்படுத்தவில்லை!

ஆனால் அன்று- வங்கியின் பதில் வந்தது! பாலனுக்கு சந்தோஷத்தில், கைகள் நடுங்கியது. சீதா அம்மா, அவனை- கடிதத்தை ஸ்படிக லிங்கத்தின் பாதங்களில் முதலில் வைக்கும்படி கூறினாள். பின்னர், நல்ல நேரத்தில் எடுத்துப் படிக்கலாம் என்று, பாலனும் ஸ்படிக லிங்கத்தின் பாதத்தில் வைத்தான்- கடிதத்தை!

சீதா அம்மாவும், பாலனும், ஆவலுடன் நல்ல நேரத்தை எதிர்நோக்கியிருந்தனர். அந்த ஓர் கடிதத்தில் தான் அவர்கள் இருவரின் நம்பிக்கையுமே இருந்தது! இருவரும் உணவு அருந்தி, ரேடியோவில் பழம் பாடல்களை ரசித்தபடி, கடிகாரத்தில் கவனம் செலுத்தியிருந்தனர். இருவரும், அப்படியே உறங்கிப் போயினர். "மஞ்சள் ஒளி! தங்கத்தைப் போல ஜொலித்துக்கொண்டு அவன் அருகில் வந்தது"! அவன் அதைத் தொடுவதற்குள்- கடிகாரம் நான்கு மணி என அறிவித்தது. கண் முழித்து, பாலன் முகம் கழுவி வந்து, சீதா அம்மாவை எழுப்ப முயற்சித்தான்...

அன்று பதிமூன்றாம் நாள்- சீதா அம்மாவின் மறைவிற்கு, துக்கம் விசாரித்துப்போக வந்த விருந்தினர்களும் விடை பெற்றுக்கொண்டு விட்டார்கள். அங்கு தனியாக அமர்ந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த பாலனுக்கு, கடந்த பதிமூன்று நாட்களில் ஒரு நாள் கூட, இந்த நாளிற்குப் பிறகு அவன் என்ன செய்வான் என்று நினைக்கவே இல்லை!

திடீரென்றுதான் வங்கியிலிருந்து வந்த கடிதத்தின் நினைவு வந்தது. ஸ்படிக லிங்கத்தை நோக்கி விரைந்து சென்று, கடிதத்தை எடுத்து, படிக்கத் துவங்கினான்:

"திருமதி. சீதா அம்மா அவர்களுக்கு,

முதலில் திரு. உன்னிக்ருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க விழைகிறோம். அவரது மறைவு, எங்கள் வங்கிக்கும் ஒரு பெரிய இழப்பே! கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு தரும் திட்டம் தற்போது அமலில் இல்லை. ஆயினும், தங்களின் குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஒரு விதி விலக்காக தங்களுக்கு ரூபாய். பத்து லட்சம் கருணைத் தொகை வழங்குவதாக எங்கள் வங்கியின் உச்ச நிலை நிர்வாகக்குழு தீர்மானித்திருக்கிறது.

இந்தத் தொகையை பெறுவதற்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, தங்களுடைய கையெழுத்தையும் 'அட்டெஸ்ட் ' செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்கள் கையெழுத்தையும் மற்ற விவரங்களையும் சரி பார்த்த பிறகு- மேல் குறிப்பிட்டுள்ள தொகை காசோலையாக தங்களுக்கு அனுப்பி வைக்கப் படும்.

இப்படிக்கு,
ந. சொக்கல்லிங்கம்
(முதுநிலை மேலாளர்)"

ஸ்படிக லிங்கம், இன்றும் ஜொலித்து நிற்கிறது!

விரிபோனி  

Posted by Matangi Mawley


ஸ்கூல் விட்டு வந்தோடனே- மூஞ்சி அலம்பினோமா, கெளம்பினோமா-ன்னு உண்டா? ஒயட்டிண்டு நிக்கறது- அங்கயும், இங்கயும். நாங்கள்லாம் அந்தகாலத்துல இது வயசுல பத்து பேருக்கு சமச்சுபோடுவோம். இதென்னடான்னா- எல்லாத்துக்கும் என்ன ஏவிண்டு நிக்கறது! நானும் எத்தன்னாளுக்கு தான் இது பின்னாடியே குளி, பல்லு தேய், பாத்ரூம் போ ன்னு சொல்லிண்டு அலைய முடியும்? அதெல்லாம் அதுக்கா தெரியனும். மொட்ட மாடிலேர்ந்து துணி எடுத்துண்டு வரேன்னுது! ஆஹா- எம்பொண்ணும் வேல செய்யரதேன்னு நெனச்சேன்! அங்க உக்காந்து- நோட் பேப்பர்-ல ராக்கெட் பண்ணி உட்டுண்டுருக்கு! தெனத்துக்கு இது ஒரு வேல! பாட்டுக்லாஸ் போகணும்னாலே இப்படி ஏதாது பண்ணிண்டுருக்கு!


எப்போதும்போல இன்னிக்கும் லேட்டு தான். "பாட்டு மாமி திட்டறா"னா- யாருக்குதான் கோவம் வராது? சரளி முடிஞ்சு, ஜண்ட முடிஞ்சு- நாங்க உள்ள போறச்ச அலங்காரம் பாடிண்டுருந்தா. மூஞ்சிய ஒண்ணுமே தெரியாதமாரி வெச்சுண்டு அது உள்ள காலெடுத்து வெக்கும்போதே நேக்கு தெரியும் இது இன்னிக்கு நன்னா வாங்கி கட்டிக்க போறதுன்னு! "வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு" ங்கறா மாமி. "பண்ணினேன் மாமி"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது! மாமி ஒடனே என்னதான் பாக்கறா! நான் என்ன பண்ணறது?! இத பெத்தாச்சு. ஆனாலும் கோதண்டராம ஐயர் எங்கள அப்படி வளக்கலையே- பொய்யெல்லாம் சொல்லபடாதுன்னா- நான் என்ன பண்ணறது? "அதெல்லாம் பண்ணுவா"ன்னேன்!

நாலு ஸ்வரம் பாடரதுக்குள்ள பேச்சு வேற மாமிகிட்ட! ஸ்கூல் கதையெல்லாம் ஒப்பிச்சாகணுமே! என்கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறது! அது 3rd std ல A section ல படிக்கரதுங்கரதே அது மாமி கிட்ட கத சொல்லும்போது தான் நேக்கு தெரியறது! பாடினோமா, நாலு பாட்டு கத்துப்போமா.. ஒண்ணுங்கடயாது! ஒரு விஷயத்த உக்காத்திவச்சு சொல்றதுக்கே அத்தன ப்ரயத்ன பட வேண்டிருக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு ன்னு அப்டியே தாவிண்டேஇருக்கு!


"தாளமெல்லாம் தப்பு. தருவ தாளம் இப்படியா போடுவா? நீ வரதுக்கு முன்னாடி கார்திக்காவது ஒழுங்கா போட்டுண்டுருந்தான். உன்ன பாத்து அவனுக்கும் மாறிடுத்து"! இது கவனம் எங்க தாளத்துல இருக்கு? அவாத்துல "திலோ"ன்னு ஒரு பூனை இருக்கும். அது அப்போதான் பாலெல்லாம் குடிச்சுட்டு, ஜம்முனு சொஹுசா- sofa ல ஏறி படுத்துண்டுது. அத உக்காந்து நோட்டம் உட்டுண்டுருந்துது. அந்த கார்த்தி புள்ளயாண்டானுக்கு பாவம், தாளம் மறந்துபோச்சு. இது சரியா போடறதோன்னு இத பாத்து அவம்போட- மாமி உள்ளேர்ந்து வரெச்ச ரெண்டும் கரெக்ட்-ஆ தப்பு தப்பா போட்டுண்டுருக்குகள்! நேக்கு தெரிஞ்சாலாது ஏதாது சொல்லிருக்கலாம். நேக்கு எங்க இதெல்லாம் தெரியும்?

திட்ட வாங்கிநோடனே வாய்லேர்ந்து- ரெண்டுத்துக்கும் கொரலே காணல. இதுக்கா, கூட்டத்துல வாயசச்சே பழக்கம் அதுக்கு! கார்த்திக் வேற பாவம்- சொஹத்துல கொரலே எழும்பால அவனுக்கு! மாமி- "சத்தம்-சத்தம்" கரா! அதட்டரா! திடீர்னு, "மாமி-மாமி! கார்த்திக் அண்ணா அழறா", அப்ப்டின்னுது, வாய வெச்சுண்டு சும்மா இல்லாத! மாமி ஒடனே- "அவனுக்கு வெக்கம், மானம், சூடு, சொரண-எல்லாம் இருக்கு. அதனால அழறான்! நமக்குதான் அதெல்லாம் கெடயாதே! நீ பாடு..." அப்படின்னா. நல்ல வேள. அதுக்கு இதெக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. தெரிஞ்சாலும் பெரிசா கண்டுக்காது!

"போன கிளாஸ்- கல்யாணி வர்ணம் முடிஞ்சுதா...?" ன்னு இத கேட்டாஇதுக்கென்ன தெரியும்? அது பாடற அழகு, கல்யாணி, காம்போஜி, ஆரபி- எல்லாமே ஒரே போல தான் இருக்கும். அது எதோ ஒரு பக்கமா தலையஆட்டித்து. மாமி, அத அமாம்-நு எடுத்துண்டு- "நான் 'விரிபோனி' வர்ணம்எடுக்கறேன். பைரவி, அட தாள வர்ணம்! இப்ப கத்துக்க ஆரம்பிச்சாதான் ஒரு வருஷத்துல எப்போவாவது பாட வரும்..."- அப்படின்னா மாமி. கார்த்திக் அண்ணாவுக்கு குஷி தாங்கல! கஷ்டமான பாட்டாச்சே.. எம்பொண்ணா- திலோ கு உக்காண்டு மூஞ்சி காட்டிண்டுருக்கு.

"வி-ரி-போ----நி----யயி-.." ன்னு மாமி ஆரம்பிச்சா! ஏற்கனவே- இவா ரெண்டு பெரும் வாயே தெறக்கல! இந்த பாட்டா! எங்கேயோ ஒரு போந்துக்குள்ளேர்ந்து படராப்ல இருக்கு. மாமி வேற "சத்தம்-சத்தம்" நா என்ன பண்ணறது?

ஒரு வழியா பல்லவி முடிஞ்சுது. தமிழ் பாட்டு ஒண்ணு "நானொரு விளையாட்டு பொம்மையா". வேண்டா வெறுப்பா பாட ஆரம்பிச்சுது. "ஒழுங்கா பாடு"நா மாமி. திடீர்னு எங்கேர்ந்தோ கொரல் மேல எரிடுத்து. ஏத்தலும் ஏறக்கலுமா அது பாட பாட மாமி- "ஒழுங்கா பாடு- நீ பாடற அழகு 'பொம்மையா' பொம்மையோட தல தனி கால் தனி-யா வந்துடும் போலருக்கு"-நா. ஒரு வழியா "
ஸா- பா- ஸா" சொல்லி முடிக்கல, மூட்டைய தூக்கிண்டு அங்கேர்ந்து கேளம்பரச்சே அதுக்கு இருக்கறசந்தொஷமிருக்கே! என்னவோ போங்கோ! இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...!