ஆடி அமளி  

Posted by Matangi Mawley


எங்க ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படிதொறேல- கும்பல் ஒன்னும் புதுசு கெடயாது! எப்போதும் உள்ளதுதான். சும்மா 'ஜே ஜே ஜே' ன்னு இருக்கும். 'ரங்கன சேவிக்க' வரும் உள்ளூர் ஜெனங்க ஒரு பக்கம்னா, எப்போதும் வெளியூர் வந்டிகளிலேர்ந்தும் ஜெனங்க கூட்டங்கூட்டமா வந்துண்டுதான் இருப்பா! இந்த கும்பலெல்லாம் நமக்கு ஆகாது! ஆனா இந்தாத்துல நாஞ்சொன்னா யாரு கேக்கரா? எல்லாருக்கும் நாட்டாமதான். தோ! இந்த வாண்டுட்பட!

"இந்த க்ஷணம் காவேரில குளிக்கணும்னு" ஏதோ தோணிடுத்து! வீடே ஒரே அமளி! குளிக்க போறதுக்கு எதுக்கு இத்தன 'மேக்கப்'னு தான் நேக்கு புறியல. அந்த புடவை கூடாது, இந்த வள சேராது! தலேல துளி எண்ணைய வெச்சுண்டு ஒரு முழுக்கு போட போறதுக்கு எதுக்கு இத்தன கூத்து!?

நான் ஒரு வார்த்த சொல்லப்டாது! ஆடி பதுனெட்டு தேதிக்கு யாராவது ஆத்தங்கரைக்கு போவாளா? "லோகத்ல எல்லாரும் ஆடி பதினெட்டு தேதிக்கு தான் ஆத்தங்கரைக்கு போற வழக்கம்"- அப்படின்னு ஒரு கொரல் உள்ளேர்ந்து கேக்கும்! அது நேக்கு தெரியாதா? இத்தன கும்பலுக்கு மத்தில போய் அவஸ்த படணும்னு தலேல எழுதிருந்தா அது நடந்துதானே ஆகும்! போராக்கொறைக்கு இந்த வாண்டு வேற! எல்லாம் அவ அப்பா குடுக்கற எடம்! பொண்ணரசிய ஒரு வார்த்த சொல்லப்டாது! புது ட்ரெஸ்ஸ போட்டுண்டு காவேரில குளிப்பேன்னு ஒத்த கால்ல நிக்கறது! ஆரம்பத்லேர்ந்தே நாலு சாத்து சாத்தி வளக்காதது தப்பா போச்சு!

'தோ' இடுக்கு ஆம்; குளிச்சுட்டு பேசாம ஆத்துக்கு வந்து ட்ரெஸ்லாம் மாத்திக்கலாம்னா- "ம்ஹ்ம்ம்..." அதுக்கொரு பை! செரி! தொலஞ்சுபோன்னா- சாப்பாடும் அங்கதாங்கரதுகள்! அதுக்கொரு பை! எல்லா மூட்டையையும் கட்டிண்டு ஒரு வழியா கெளம்பியாயுடுத்து! ஒரு ஆட்டோ புடிச்சு போணும். பண்டிக நாள் வேரயா? ஆட்டோகாராளுக்கு குஷிதான். இருபது ரூபா கொடுக்கலாம். விருச்சிக ராசி காராளுக்கு "செலவு"ன்னு போட்ருக்கொன்னோ? அறுபது ரூபா கொடுத்து ஒரு வழியா போய் சேந்தாச்சு. நேரா போய் குளிச்சொமா வந்தோமான்னு உண்டா? அதுவும் கிடையாது! "யான பாக்கணும்னு" ஒரே அடம். வரும்போது பாக்கலாம்னா- "ப்டாது! இப்பவே..." எல்லாம் "இப்பவே"தான். போ! எல்லாத்தையும் தூக்கிண்டு நட...

அந்த யானைய சுத்தி ஒரே கும்பல். அது குட்டியா இருக்கரச்செலேர்ந்து அத பாத்துண்டு தான் இருக்கோம். அதுக்குமே நம்பள அடையாளம் தெரிஞ்சா கூட ஆச்சர்யபடரதுக்கில்ல. கொழுக்கு-மொழுக்குன்னு, ஜம்முனு இருக்கும். அழகா நாமம் போட்டுவிட்ருப்பா! கொழந்தைள், சரி, பாக்கரதுகள்னாகூட; அந்த யானைய பாக்க, நம்புளுக்கே ஒரு சந்தோஷமாதான் இருக்கும். கொஞ்சம் பாவமா கூட இருக்கும். ஆனா, அது கைல ஒரு ரூபாய வெச்சு, அது துப்பர எச்சலவேற வாங்கிக்கணும்கர போதுதான்! அதுல என்ன சந்தோஷமோ இவாளுக்கு! நேக்கென்னமோ, இதெல்லாம் கொஞ்சம் பயம்தான்!

படிகட்ல நின்னுண்டு "தை தை"னு குதிக்கதேன்னா கேக்கறதா பாரு! கூட்டமான கூட்டம் வேற! ஒரு எடத்துல நிக்கவே எடமில்ல. அக்கம்பக்க கிராமமெல்லாம் இந்த படித்தொறேலன்னா பாத்துக்கொங்கோளேன்! இப்போதான் படுத்த வேற தோணும்! இதுக்கு! "ஆளகண்ட சமுத்ரம்"னா அது சரியாதான் இருக்கு- அவர்கூட சேந்துண்டு நீஞ்சணுமாம்! அவருக்கென்னடாப்பா! புண்யாத்மா! தேமேன்னு நீஞ்ச போயாச்சு! இத கட்டிண்டு இப்போ நான்னா அல்லாடவேண்டிருக்கு!

ரொம்ப நேரம் தண்ணில ஊராதேன்னா, இங்க என்ன யாரு மதிக்கரா? அப்ரம் ஜுரம் வரும். 'லீவு' போடணும். "மிஸ்ஸு திட்டினா, அடிச்சான்னா" நான் ஒன்னும் பண்றதுக்கில்ல. "நன்னா திட்டுங்கோ"ன்னு தான் சொல்லணும். அப்பவாவது புத்தி வராதான்னு பாக்கலாம்!

எல்லாரும் பூ, மாலை, இலையெல்லாம் தண்ணில விடுவா. எங்காத்து பொடுசு செருப்ப விட்டுட்டு வந்து நிக்கறது. வாங்கி ஒருவாரமால! நூறு ரூபா தண்டம்! நான் அப்பவே அடிச்சுண்டேன்... இந்த கூத்தெல்லாம் வேண்டான்னு! ஏதோ, போய்டு போறது! போனா போட்டும், போ! இப்ப அழுது என்ன புண்யம்? அதுக்கு பசி வந்துடுத்து! வேற ஒண்ணுமில்ல! அது வாய்ல நாலு வா தேங்கா சாதமும், தயிருஞாமும் அடச்சு, ஆத்துக்கு ஒரு வழியா கூட்டிண்டுவந்தாச்சு! அப்பாடான்னு இருக்கு....

காகிதம்  

Posted by Matangi Mawley


என் கதையைப் படிப்பது யார்?

- அதை எழுதும் நானே அதைப் படிக்கத் தகுதியும் பெற்றேன். தான் நடக்கும் பாதையைக் கூட பின்னே திரும்பிப் பார்க்க நேரமில்லாத இந்த உலகத்திற்கு, எனது கதையைப் படிக்க மட்டும் நேரம் இருக்கவா போகிறது! உண்மைதான். நேரத்தைத் தவிற இந்த உலகத்தில், ஏல்லோரிடத்திலும் எல்லாம் இருக்கிறதுபோலும்!

காற்றின் போக்கில் போகும் காகிதத் துளி போன்ற ஒரு வாழ்கை. காற்று வீசும்திசையில் மிதந்து கொண்டிருக்கும் அந்த காகிதம்- சில நேரங்களில் நின்றும், மற்றும் சில சமயங்களில் மிதந்துகொண்டும் இருந்தது. இன்னும் அது ஏத்தனை நேரம் வரை அப்படி மிதந்துகொண்டிருக்குமோ- என்று எனக்குத் தெரியாது! அந்த காகிதத்தின் வாழ்க்கையில் ஒரு சில நொடிகள், என் கண்முன்னே நடக்க வேண்டும் போலும்!

பேருந்து நகர நகர, காகிதமும் மறையத் தொடங்கியது! ஜன்னலின் வழியாக பின்னே பார்த்துக்கொண்டே- முன்னே போகும் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்தேன். அதை ஆட்டிவைக்கும் அந்த காற்றுக்குக்குத்தான் எத்தனை எண்ணமாற்றங்கள்? ஒரு சில நொடிகளில் மெதுவாகவும்- திடீரென்று வலுவாகவும்- அப்பப்பா! பாவம் அந்த காகிதம். என்னதான் செய்யுமோ?

வாழ்கையெனும் காற்றின் போக்குகேற்றார்போல் நாமும் ஆடத்தானே வேண்டியிருக்கிறது!

பேருந்தின் வேகம் அதிகரிக்கவே, காகிதத்தின் மறைத்தாலும் கூடிக்கொண்டே இருந்தது! திடீரென்று ஒரு அமைதி. காற்று, சற்று இளைப்பாறியது போலும். ஆனால் அந்த காகிதத்தைக் காண முடியவில்லை! சற்றே முயற்சித்தேன். அதோ! ஆனால்...

காகிதமும் இளைப்பாறியது! நிரந்தரமாக. அங்கே திறந்து கிடந்த ஒரு சாக்கிடைக்குள்- அங்குள்ள ஏராளமான குப்பைகளோடு, ஒரு குப்பையாக- அதுவும் இளைப்பாறியது! என் பேருந்தும்விரைந்தது...