காகிதம்
என் கதையைப் படிப்பது யார்?
- அதை எழுதும் நானே அதைப் படிக்கத் தகுதியும் பெற்றேன். தான் நடக்கும் பாதையைக் கூட பின்னே திரும்பிப் பார்க்க நேரமில்லாத இந்த உலகத்திற்கு, எனது கதையைப் படிக்க மட்டும் நேரம் இருக்கவா போகிறது! உண்மைதான். நேரத்தைத் தவிற இந்த உலகத்தில், ஏல்லோரிடத்திலும் எல்லாம் இருக்கிறதுபோலும்!
காற்றின் போக்கில் போகும் காகிதத் துளி போன்ற ஒரு வாழ்கை. காற்று வீசும்திசையில் மிதந்து கொண்டிருக்கும் அந்த காகிதம்- சில நேரங்களில் நின்றும், மற்றும் சில சமயங்களில் மிதந்துகொண்டும் இருந்தது. இன்னும் அது ஏத்தனை நேரம் வரை அப்படி மிதந்துகொண்டிருக்குமோ- என்று எனக்குத் தெரியாது! அந்த காகிதத்தின் வாழ்க்கையில் ஒரு சில நொடிகள், என் கண்முன்னே நடக்க வேண்டும் போலும்!
பேருந்து நகர நகர, காகிதமும் மறையத் தொடங்கியது! ஜன்னலின் வழியாக பின்னே பார்த்துக்கொண்டே- முன்னே போகும் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்தேன். அதை ஆட்டிவைக்கும் அந்த காற்றுக்குக்குத்தான் எத்தனை எண்ணமாற்றங்கள்? ஒரு சில நொடிகளில் மெதுவாகவும்- திடீரென்று வலுவாகவும்- அப்பப்பா! பாவம் அந்த காகிதம். என்னதான் செய்யுமோ?
வாழ்கையெனும் காற்றின் போக்குகேற்றார்போல் நாமும் ஆடத்தானே வேண்டியிருக்கிறது!
பேருந்தின் வேகம் அதிகரிக்கவே, காகிதத்தின் மறைத்தாலும் கூடிக்கொண்டே இருந்தது! திடீரென்று ஒரு அமைதி. காற்று, சற்று இளைப்பாறியது போலும். ஆனால் அந்த காகிதத்தைக் காண முடியவில்லை! சற்றே முயற்சித்தேன். அதோ! ஆனால்...
காகிதமும் இளைப்பாறியது! நிரந்தரமாக. அங்கே திறந்து கிடந்த ஒரு சாக்கிடைக்குள்- அங்குள்ள ஏராளமான குப்பைகளோடு, ஒரு குப்பையாக- அதுவும் இளைப்பாறியது! என் பேருந்தும்விரைந்தது...