மௌனத்தில் கலந்து போன காற்றின் குரலைத் தேடிக்கொண்டிருந்தது வானம். அதன் தேடலைத் தடுக்கயிருந்த சூரியனை மறைத்தது மேகங்கள்.

(Photo Courtesy : Rahulan Rajarajan)
தன் சிறையிலிருந்து அவ்வபோது தப்பித்துக் கொண்டு அவசரமாக வெளியேறிய காற்றை மீண்டும் கட்டிப்போட்டது, மௌனம். காற்று அந்த நீரில் மிதந்துகொண்டிருந்த அல்லியிடம் முறையிட்டது.

ஈசனுடன் ஆழ்ந்த சம்பாஷணையில் உறைந்து போன நந்தியிடம் முறையிட்டது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக, வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சிகளாக நிற்கும் பாரைகளிடம் முறையிட்டது.

மௌனத்தின் சிறையில் அவர்களும் கைதிகளே. அந்தச் சிறையில் புதைந்து போன உண்மைகளுக்கு வெளியே செல்ல விருப்பமில்லை. வெளியே சென்றால்- அவை பொய்யில் கலந்து போகும். உண்மைகள்- அதன் தன்மை இழந்து போகும்.

கற்கோவில்கள். பாறைகள். யார் அந்த கடவுள்?

சைவம், வைணவம்- என்றெல்லாம் பிரிந்து போகவில்லை அந்த தெய்வங்கள். அந்த மரத்திர்க்கடியில் இருவரும் ஒன்றாக நின்றனர்.

உரு இல்லாத சில கடவுள்களும் இருந்தனர். அந்த கற்களுக்கு வடிவம் கொடுத்தவர்கள்- அவர்கள்.

தங்கள் உண்மைகளை அந்த கல் உருவங்களின் கருவில் மறைத்து வைத்தவர்கள்- அவர்கள்.

வரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களில்- மன்னர்களது பெயர்களை நிலை நாட்டிவிட்டு மறைந்து போனவர்கள் அவர்கள்.

சில நொடிகள், அந்த கல் உருவங்களுள்ளிலிருந்து ஏதேனும் சப்தங்கள் கேட்குமோ என்று காதுகளை அவை மீது சாய்த்துப் பார்த்தேன். மௌனத்தின் மொழி கற்ற அந்த சிலைகளின் வார்த்தைகள் எனக்குப் புரியவில்லை.

மதம் நிலையானது அல்ல. ஆனால் அழியக்கூடியதும் அல்ல. அது- மாற்றத்திற்கு உட்பட்டது. இதை கூறியபடி நின்றன- சில ஓவியங்கள்.

வண்ணங்கள் அழியாத அந்த ஓவியங்கள், பல கதைகளை சொல்லிக்கொண்டிருந்தன. அந்த கதைகளை கேட்டுக்கொண்டிருந்த மௌனம் கூட- ஸ்தம்பித்துப் போனது.

அந்தத் தருணம் பார்த்து- காற்று, மௌனத்தின் பிடியிலிருந்து வெளியேறியது. அந்த வண்ணங்களில் கலந்து போன கதைகளை கூறிய வண்ணம் வீசியது. தென்றலாய் மாறிப்போனது!

PS: Location: Naarthamalai, Vijayaalaya Soleeswaram- Puthukkottai Dist (2 to 2.5 hrs drive from Trichy)
This entry was posted
on 26 January, 2016
at Tuesday, January 26, 2016
. You can follow any responses to this entry through the
comments feed
.