எழுதாத பக்கங்கள்  

Posted by Matangi Mawley


ஒரு வருடம் தொலைந்து போனது. வார்த்தைகளை சேகரிக்க முயலவில்லை. இந்த வார்த்தைகளை நான் தேடிச் சென்றதில்லை. அவை இந்த இடத்தை அவைகளாகவே கண்டுபிடித்துக்கொண்டன. கடந்து போன ஒரு வருடாத்த்திற்கு வார்த்தை வடிவம் கொடுத்த்ததுப் பூட்டு போட நான் விரும்பவில்லை. எழுதாத ஒரு பக்கத்‌திலிருக்கும் வெறுமையின் மாயை- எழுதி தீர்த்த்த பக்கங்கள் கண்டிருக்கும் அர்த்தங்களைக் காட்டிலும் சுவாயானது.

அது போகட்டும். இந்த எழுதா பக்கங்களின் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் ஒரு சிறிய மைத்துளி. ஓரத்தில். காற்றில் தானாகவே புரண்டு கொண்டிருக்கும் அந்த பக்கங்களின் நடுவில்- முதலில் அந்த மைத்துளி, ஒரு புள்ளியானது. பின்னர்- காற்று வலுக்கவே- அது ஒரு கோடாக மாறியது. பிறகு வார்த்தைகளாக மாறிப்போனது. எழுத வேண்டாம் என்று நினைத்திருந்த என் முடிவினை அந்த வார்த்தைகள் பஹிஷ்கரித்தன.

முடிவில்லா கதைகள். அதன் கதாபாத்திரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். முதிர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறார்கள். கதையில் பயணித்தபடியே அவர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தங்களின் கடந்த கால வாழ்க்கையில் அவர்களை அவர்களே விமர்சித்துக்கொள்கிரார்கள். தாங்கள் பின்னே விட்டுச் சென்ற சில சிக்கல்களை அவிழ்க்க முயலுகிறார்கள். தாங்களது தற்போதைய சிக்கல்களை அவிழ்க்க வழிகள் தேடுகிறார்கள். மகிழ்ச்சிகளை உணருகிறார்கள். சோகத்திலிருந்து மீளுகிரார்கள். சிரித்தும், அழுதும், கதையில் அவரவர்களது பாத்திரங்களை வாழ்கிறார்கள். வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே... ஏன் அவர்களது கதைகளை முடிக்கவேண்டும்?

முடிவு.

என்னதான் அப்படி இருக்கிறது அந்த பக்கங்களில்- தெறிந்துகொள்ள நினைத்தேன். அப்படி ஒன்றும் அதில் சுவாரசியமாக ஏதுமில்லை. அதில் யாரைப் பற்றி எழுதியிருந்தது? யாரோ தெரிந்தவர்கள் தான். ஆனால்- சரியாகத் தெரியவில்லை. சில சமயங்களில்- ஒருவரைப் போலவும், பல சமயங்களில் வேறொருவரைப் போலவுமாக- இது யாராக இருக்க முடியும்? ஒரு வேளை- இது நான் தானோ? இருக்கலாம்! அப்படியும் இருக்கலாம்...

கண்ணாடிப் ப்ரதிமை ஒன்று. பார்ப்பவர்களது வெளிப்பாடு எதுவோ அதுவே அதன் முகத்திலும். அதன் முகத்தில் புன்னகை இருக்கிறதா என்று அருகே சென்று பார்க்க வேண்டும். ஆனால்- இல்லாமல் போனால் அதன் இல்லாது இருப்பதின் உண்மை தெரிந்து போய்விடுமோ என்றும் தோன்றுகிறது. கண்ணாடிப் ப்ரதிமை யாரை பார்த்து நின்றிருந்தது? அதன் நிறம் என்ன? எப்போது பார்த்தாலும் புதிதாகவே தோற்றமளிக்கும் அந்த ப்ரதிமையை, யார் உருவாக்கினார்களோ? தெரிந்து கொள்ள வேண்டும்... தெரியாமல் இருப்பதில் தவறு கிடையாதுதான். தேடித்தான் பார்த்தால் என்ன?

தேடல்.

நான்கு சுவற்றினுள் வாழும் வாழ்வினை திடீரென புறக்கணித்து விட்டு- நான்கு நாட்கள் கண்காணாத ஒரு இடத்திற்குப் போகவேண்டும். தனியாக. சுயத்துடன் ஒரு சில நாட்கள்! இப்படி நினைத்ததுண்டா? நினைத்திருப்பீர்கள். அப்படி நடந்ததா? நடந்திருக்கும். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது ஒரு கனவு தான். நல்ல கனவா? கனவிலும் நல்லது உண்டா? கெட்டது எது? அதுவும் உண்டு தான். எந்த ஒரு கனவை வெளியே சொல்ல நேர்ந்தால்- சமுதாயத்தின் அங்கீகாரம் பெறுவது கொஞ்சம் கடினமாகிப் போகுமோ- அவை கெட்டக் கனவுகளாகுமென வைத்துக்கொள்வோம். சிக்கலான கருத்து தான்!

இப்படி ஒரு கனவைத் தான் அந்த பக்கங்களில் படித்தேன். சுயத்துடன் நான்கு நாட்கள். கண்ணிற்கெட்டிய தூரம் வரை பச்சை நிறம். பாதாளங்களை மறைத்து மிதந்த மேகங்கள். வருடம் தோறும் காய்த்திடும் ஏலக்காய் மரங்களுக்கு நிழல் தந்து நின்ற பலா மரங்கள். ரப்பர் தோட்டங்கள். தேயிலை தோட்டங்கள். களரி கேளிக்கைகள். வானை மறைத்த மரங்கள். வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக் கொடுத்த ஏரிகள். மழையை ரசிக்க உதவிய சாக்லேட்டுகள். ஆஹா! நல்ல கனவுதானே!

படிக்க விட்டுப்போன சில பக்கங்களை படித்தது பற்றி எழுதியிருந்தது. புத்தகங்கள் படித்தது பற்றி. அட! ஒரு பூனை ஒன்று எங்கோ ஓடிப் போய் விட்டதாம். வாழ்கையின் ஒரு முக்கியமான பகுதியை தொலைத்து விட்டதாக எழுதியிருந்தது! பாவம். அந்த பூனை எகிருந்தாலும் நன்றாக இருக்கும். ஆனால் இதற்குப் போய் வாழ்க்கையை தொலைத்தது போல ஏன் தோன்றவேண்டும்? இதை புரிந்து கொள்ள முயன்று தான் பார்க்க முடியும். "என்ன செய்ய முடியும்... விதி..." என்று எல்லோரும் கூறுவது போல ஆறுதல் கூறலாம். ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடலாம். அதுதான் சரி...

ஈரமான புல் தரையின் மீது கால்களை பதித்து நடக்கும் போது ஏற்ப்படும் உணர்வு. இந்த உணர்வை எல்லோராலும் உணர முடியுமா? அப்படி முடியுமானால்- இதை ரசிப்பவர்கள் எத்தனை பேர்? இதை ரசிப்பவர்களை மட்டும் தனியே சந்தித்து பேசவேண்டும். அவர்கள் உணர்ந்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது எல்லா ரசனைகளையும் பதிவு செய்ய வேண்டும். புதிய ரசனைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ரசனையில்லா மனிதர்களையும் சந்திக்க வேண்டும். அவர்கள் கிடைத்தால்- அவர்களது ரசனையின்மையின் ரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதையும் ரசித்துப் பார்க்க வேண்டும்... ரசனையில்லாது இருந்திட இயலுமா?

இருத்தல்.

எழுதி முடிக்காத அந்த பக்கங்கள். படித்தால் மட்டும் அதன் முடிவு தெரிந்து விடவா போகிறது? சில பக்கங்களில் வார்த்தைகள் சரியாகத் தெரியவில்லை. அவைகள் தெரியப் பட வேண்டாம் என்று நினைத்தனவோ என்னவோ...! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவும் வேண்டாம். புரியாத அந்த பக்கங்கள்- புரிந்து கொள்ள முடியாதவையாகவே இருக்கட்டும். ஏன் அப்படி இருக்கவேண்டும்? ... அப்படியாவது இருந்துவிட்டுத்தான் போகட்டுமே...!


This entry was posted on 14 April, 2015 at Tuesday, April 14, 2015 . You can follow any responses to this entry through the comments feed .

6 comments

"ரசனையில்லா மனிதர்களையும் சந்திக்க வேண்டும். அவர்கள் கிடைத்தால்- அவர்களது ரசனையின்மையின் ரகசியத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதையும் ரசித்துப் பார்க்க வேண்டும்... ரசனையில்லாது இருந்திட இயலுமா?"

தி.ஜானகிராமானுடன் ஒரு கலந்துரையாடலின் பொழுது, அவர் சொன்னார் " என் நண்பன் ஒருவன்இருந்தான் ..ரொம்ப விசித்திரமானவன் ! இந்த மரம் எவ்வளவு பெரிசா இருக்கு பாத்த்த்தியாடா..ஆமாம்
பெரிசா இருக்கு..எவ்வளவு மழை, வெய்யிலை பார்த்திருக்கும். ஆமாம். பார்த்திருக்கும் .எவ்வளவு பேரோட பேச்சை கேட்டிருக்கும்..ஆமாம் கேட்டிருக்கும் !ஆச்ச்ரியமா இல்ல?..இதுல என்ன ஆச்சரியம் ! "--இப்படியும்

சில பேர் ( பலர் ?)..இருக்கலாம்
தான் ..

மாலி

14 April 2015 at 15:16

இன்னும் சிலர் ஏதும் புரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்தது போல் தலையைத் தலைதை ஆட்டி ரசிப்பது போல் பாவனை செய்வார்கள். அவர்களையும் சொல்லிக் குற்றமில்லைஅர்த்தம் புரிய விடாமல் எழுதினால் இப்படியும் நேரலாம்

14 April 2015 at 15:51

Why pretend then blame the writer? Makes no sense!

14 April 2015 at 16:44

தன்னை முதலில் ரசிக்க ஆரம்பித்து விட்டால் எதையும் ரசிக்கலாம்...

அதை அழகாக சொல்லியுள்ளீர்கள் + செய்துள்ளீர்கள்...

15 April 2015 at 07:56
This comment has been removed by the author.
20 April 2015 at 12:19

மாதங்கி !
நலம் தானே.. மனம் பிரண்டு பிரண்டு ,பார்த்ததையெல்லாம் சில்லுகளாய் சிதறடித்து,அச்சிதறல்களை கெலிடாஸ்கோப் குழாயில் நிரப்பி... உருட்டிஉருட்டிப் பார்க்கும் முடிவில்லா நாடகம்.....

ஒரு படைப்பாளி மனவோட்டத்தை அதன் போக்கிலேயே அறிந்து கொள்ளும் முயற்சி...

நானும் கூடவே பயணித்துப் பார்க்கிறேன்...

கெடிலநதி கேட்டகதையை பதிவிடக் கேட்டிருந்தீர்கள் அல்லவா? 'அங்கிங்கெனாதபடி' எனும் கதை வானவில் மனிதனில் போட்டிருக்கிறேன். பாருங்கள். மாலி சாரையும் பார்க்கக் சொல்லுங்கள் .

20 April 2015 at 12:21

Post a Comment