"தலாஷ்"- ஆனால் "பேய் கதை" என்ற அளவோடு இல்லாமல்- மனிதனின் மனப்போக்கு, எண்ணங்களில் கைதியாகிவிட்ட மனம், கடந்த கால நினைவுகளை மாற்ற முயற்சிக்கும் எண்ணங்கள் என்று ஆழமான இரண்டாவது கதைக்கருவையும் கொண்ட படம். Amir Khan மற்றும் Rani Mukherji, இருவருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Farhaan Akhtar க்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள், அவரது வசனங்களுக்காக. மிகவும் நிதானமாக பிரயாணிக்கும் "தலாஷ்" படத்தின் கதை, எந்த நேரத்திலும் அதன் கருவிலிருந்து விலகாமல் இருப்பதுதான் அந்த படத்தின் விசேஷம்.
இந்த பதிவை "திரை விமர்சனம்" என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில், "தலாஷ்" சீது பாட்டியை நினைவு படுத்தியது. அவளது ஒரு சில மிகவும் அருமையான கதைகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது. உதாரனத்திர்க்கு- பாட்டியுடைய அக்கா- பள்ளியிலிருந்து ஒரு நாள் வீடு திரும்பவில்லையாம். தீப்பந்தம் எடுத்துக்கொண்டு சில பேர் அவளை தேடிச்சென்றார்களாம். அவளது தோழி ஒருத்தி- "குறுக்குப் பாதை" வழியே அவள் சென்றதாகக் கூறினாளாம். அந்த பாதை வழியே சென்று தேடுகையில், ஒரு பெரிய பாறையின் மீது ப்ரமை பிடித்ததுபோல் அவள் உட்கார்ந்திருந்தாளாம். ஒரு வாரம் போல் நடந்த ஹோமங்கள், மாந்த்ரீக விதிகள் பற்றிய வருணனைகளை பாட்டியால் மட்டுமே அழகாக கூற முடியும்! கடேசியில் "ஆனதாண்டாபுரம் ஐயங்கார்" போல ஒரு மாந்த்ரீகர் அந்த "குறுக்கு வழியின்" ரகசியத்தை சொன்னாராம். அந்த வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதி, 1400s இல் பகைவர்களை தூக்கிலிட உபயோகிக்கப்பட்ட யுத்த பூமியாம். சிறு வயதில் கதையின் இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்!
அன்று மாலை வீடு திரும்பியது நிழல் போல இருந்தது. அப்பாவும் நானும், நாங்கள் சிறு வயதில் ரசித்த பல மந்திர தந்திர கதைகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். "பேய் மீது நம்பிக்கை உண்டா"? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகள் மீது நம்பிக்கை வேண்டும் என்ற ஆசை உண்டு. பேய், பிசாசு போன்ற விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்தலும்- Santa Claus, Fairy Tales, ஏன் "கடவுள்" மீது நம்பிக்கை வைப்பது போல ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய விஷயம். அந்த உணர்வை ரசிக்கக் கிடைத்தால்- அதுவும் ஒரு தனி ரசனை.
இன்றைய காலகட்டத்தில், படம் பார்க்கப் போவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படித்து தெரிந்துகொண்டு தான் பல பேர் போகிறார்கள். "நேரப் பற்றாக்குறை" காரணமாக, கதையை முன்னரே படித்து விட்டால், 2.5-3 மணி நேரம் செலவு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ள வசதியாக இருக்குமாம். சிறு வயதில், "சந்திரலேகா", "ஹரிதாஸ்" போன்ற படங்களைப் பார்த்ததுண்டு. இப்போது- நான் நினைத்தாலும் அந்தப் படங்களை பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. ஆயினும் ஒரு சில நேரங்களில்- ஏன் 3 மணி நேரம் ஒரு படம் பார்க்கக் கூடாது என்று தோன்றும். கதை நாம் நினைத்தது போல அமையவில்லை என்ற ஏமாற்றமோ, ஆச்சரியமோ தானே விளையும்? இப்படிப்பட்ட சில ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் தானே நம் வாழ்கையை "வாழ்கை" யாக மாற்றும்... மாற்றிவிட்டு போகட்டுமே...