ஆ... ஆ.. அம்.. ம்..ம்..  

Posted by Matangi Mawley


அப்போலாம் இது சாப்படணும்னா ஒண்ணு டிவி ஓடனும், இல்ல ஏதாவது ஆடு, மாட கட்டி போட்டு வேடிக்க காட்டணும், இல்ல- கத சொல்லணும். கதையும், சும்மா "பாட்டி இருந்தா... காக்கா வந்துது"ன்னு லாம் இருக்கப்டாது. பேய், பிசாசு, ராஜகுமாரி, பூதம், மந்த்ரவாதி- இத போல சில characters அந்த கதைல கண்டிப்பா இருக்கணும். எல்லாம் அதோட பாட்டி பண்ணின வேல. இதுக்கு பேய்-பிசாசு கதையா சொல்லி சொல்லி பழக்கி விட்டுருக்கா, நன்னா! எனக்கா, கதையே சொல்ல வராது. இது அடுத்த வாய்-க்கு வாய துறக்காத "உம்... உம்..." ங்கும். நான் எங்க போவேன், கதைக்கு?

"அப்புறம் கிச்சு என்ன பண்ணித்து, டொய்ங்.... னு அந்த அஞ்சு தல பாம்பு தலேல குதிச்சுது. சோனி கிட்ட-'டேய், நீ போய் எல்லாரயும் கூட்டிண்டு வாடா'ன்னு சொல்லித்து..." ன்னே நானும் எத்தன நாள் சொல்லி ஓட்ட முடியும்? இது அப்பா நன்னா அளப்பார். செத்த இது சாப்படற வரைக்கும் ஏதாவது சொல்லுங்கோ-ன்னா ஒழியாது. நாம சொன்னாதான் கேக்கப்டாதே! ஆனா நான் office போய்டா, ரெண்டும் ஒத்துமையா plate ல சாப்பாடெல்லாம் எடுத்து வெச்சுண்டு கத பேசிண்டே சாப்டும்!

என்னென்னமோ கத! இன்னிக்கு என்னடா கத சொன்னா, உங்கப்பா? ன்னா, "நடகம்-சொக்கம்" ங்கும். அது என்ன கதையோ... "நரகத்துல என்ன இருக்கும், சொர்கத்துல என்ன இருக்கும்"- இது தான் கத. அதுலயும் "நரகம்" தான் இதோட favourite! ஏன்னா அதுல தான் பூதம், பிசாசு-லாம் வரும். "அலிபாபா..." சினிமா ல வராப்ல "எண்ண கொப்பற"லாம் வரும். இந்த கத கேட்டு-கேட்டு, அப்புறம் இந்த "முன்ஷி தோதா ராம்" னு "அமர் சித்ர கதா" ல ஒண்ணு இருக்கும். அது பிடிக்கும். அதுல பாத்தேள்னா இந்த தோதா ராம் நரகத்துல போய் அவனோட கணக்குல-லாம் fraud பண்ணறாப்ல லாம் வரும்.

"சத்யமூர்த்தி" கத தான் அடுத்த favourite. அதுல மோஹினி பிசாசெல்லாம் வரும். கொழந்தேள்- னா "ராமர்", "கிருஷ்ணர்", "தேவதை"-ன்னு ஏதாவது சொல்லணும். இது பேய்-பிசாசு கத தான் கேப்பேன்-ங்கறது! அது பாட்டி பழக்கி விட்டது, அத்தனையும். அவா ஊர் கதையெல்லாம் இப்புடி தான் 'மந்த்ரம்-மாந்த்ரீகம்'னு லாம் இருக்கும். எங்க அம்மா ஆனா- சும்மா சொல்லப்டாது. ரொம்ப நன்னா கத சொல்லுவா! பாட்டி கதையெல்லாம் வேற மாதிரி இருக்கும். காளி கோவில், பலி, தல தலையா தொங்கறது, மந்திர வாள், யந்த்ரத்துக்கு நடுப்ற கறுப்பு பொம்ம- இப்புடி இருக்கும். பேய்-பிசாசு-லாம் அப்பா. மந்த்ரமெல்லாம் பாட்டி!

"கொழந்த பயபடும், சொல்லாதேள்" னா, பேச்ச கேட்டா தானே! அது கேக்கறது-ன்னு இவரும் சொல்றாராம். நான் evening duty போனாலும் போனேன், கொழந்த ஒரு வாரமா ராத்ரிலாம் சரியாவே தூங்கல. ஒரே ஜுரம். அப்புறம் தான் விஷயம் வெளீல வருது.

"ராத்திரி 12 மணி. வெள்ள screen லாம் மெது உ உ வா ஆடறது. உனக்கு தெரியாம வரும். பெருஸ்ஸ்ஸ்ஸா இருக்கும். வெள்ள வெள்ளேர்னு இருக்கும். கருப்ப்ப்பு dress போட்டுண்டுருக்கும். இதோ இந்த இடத்துல, கழுத்துல கடிச்சு ரத்தத்த எல்லாம் உறிஞ்சிடும். அதோட முன் பல் ரெண்டுத்தோட mark மட்டும் இருக்கும், தொ- இந்த இடத்துல இருக்கும்- Draculla ..." ன்னு கத சொல்லிருக்கார் மனுஷர். இதுவும் பயந்து நடுங்கிண்டு, தூங்காம ராத்திரி முழுக்க ஜன்னல் பக்கத்ல உக்காண்டு "Draculla வருதா வருதா" ன்னு பாத்துண்டுருந்திருக்கு!

இனிமே பேய்-பிசாசு ன்னு யாராவது இந்தாத்ல சொன்னேளோ தெரியும்! பாய்-ல design பாத்தப்போவே நேக்கு ஸம்ஷயம். மருந்து மாத்தர கொடுத்து தூங்க பண்ணிருக்கு, பாவம்- இப்போதான். கொழந்தைக்கு இப்புடியா கத சொல்லுவா? Office -லேர்ந்து வரட்டும், பேசிக்கறேன்... கதையா சொல்றேள் கத...?

"சற்றே விலகி யிரும், பிள்ளாய்..."  

Posted by Matangi Mawley

நேரான ஒரு கோட்டில் திடீரென்ற கோணலைப் போல ஒரு எதிர்பாரா பயணம். புதிய இடங்கள் தேடிக் கொண்டு, போன இடங்கள் அத்தனையும் என்னவோ கோவில்கள் தான். பயணங்களில் பலன் தேடிப் போகவில்லை. பலன்கள் கிட்டுமோ என்ற எதிர் பார்ப்பும் இல்லை. சென்று வந்தோம். ஒரு சில மறக்க முடியாத நினைவுகளை/நிகழ்வுகளை, கொண்டு வந்தோம்.

விடியற்
காலை 4:30 மணிக்கும் திறந்து விரிந்த ராமேஸ்வரம் கோவில் கதவுகள். ஒலித்த பாடல்கள் என்னவோ 'அருணாச்சலமே போற்றி' என்று தான்! அத்தனை நேர பிரயாணத்திற்குப் பிறகு படுத்துறங்க மட்டும் தான் சம்மதித்தது, மனம். 'அக்னி குண்டத்தில்' குளிக்க வேண்டும்- என்றார்கள். பாவங்கள் எல்லாம் கரைந்து போகுமாம். பாபாத்மாக்களுக்கு 'அக்னி குண்டத்தில்' பஞ்சமில்லை. அவர்கள் அனைவரின் பாபங்கள் தூவப்பட்ட மலர்களும், பூஜையில் உபயோகித்த மற்ற சாமான்களும் நாங்கள் மூழ்கி எழுந்த பின், எங்களின் மீது.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் இருந்த ஓர் இடம் ஒன்று, இப்போது இல்லை. கடல் கொண்டு சென்ற 'தனுஷ்கோடி' யின் எஞ்சி இருக்கும் நினைவுகளில் பங்கு போட்டுக்கொள்ள சென்றிருந்தோம். மணலும், கடலும் மட்டும் வசிக்கும் அந்த இடத்தில் ஆங்காங்கே ஓரிரு மீனவ கிராமங்கள். ஒரு புறம் வங்காள விரிகுடா. மறுபுறம் இந்து மஹா சமுத்திரம். பல கடற்கரைகளில் அலைகளோடு மல்லு கட்டி நின்று தோற்றுப்போன செருப்புகளின் கடைசி இருப்பிடம், அங்கிருந்த மணல்.

அவசர அவசரமாக சிறகுகளை அடித்துக் கொண்டு கடலை நோக்கி விரைந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியை பார்த்து அம்மாவிற்கு வருத்தம். "அது பாட்டுக்கு கடல்-ல போறதே... எங்க rest எடுத்துக்கும்.."? என்று! பறந்து விரிந்த அவனியில் கடலையும், வானத்தையும் தவிர வேறொன்றுமில்லை. மிகுதியை மட்டும் கண்டு வியந்திருந்த என் கண்களுக்கு அந்தச் சிறிய பட்டாம்பூச்சியை காண முடியவில்லை. அம்மாவின் பார்வை- என் மிகுதியின் நிறைவில் முடிவு கண்டிருந்த மனதிற்கு மீண்டும் ஒரு துவக்கத்தைக் காட்டியது!

வைதீஸ்வரன் கோவில். ஸ்தல வ்ருக்ஷமான வேப்பமர நிழலில் அநேக மந்திகள். பூஜையில் படைக்கப்பட்ட பழுத்த வாழைப்பழங்களினால் அழகாக ஓடிக்கொண்டுருந்தது அந்த கொழுத்த மந்திகளின் சுக ஜீவனம். புறாக்களின் சிறகுகளின் பட படப்பிலும், வவ்வால்களின் மிகுதி உணர்த்திய அந்த கந்தத்திலும், மந்திகளின் குறும்பிலும், தெப்ப குளப் படிக்கரை பாசியிலும் உயிர் பெற்று இருந்தது அக்கோவிலின் பழமை வாய்ந்த அழகு. அம்பாள் சந்நிதி குருக்களின் அட்டகாசமான பஞ்சகச்சம்- 'திருவிளையாடல்' படத்தின், 'தருமி' கதையில்- சிவாஜி-க்கு கட்டப் பட்டிருந்த அதே பாணியில்!

சீர்காழியில், ஒரு பாட்டி. சிரித்த முகம், சிறிய உருவம், நெற்றி நிறைய குங்குமம். 'மீனுக்கு பொறி போடுங்க...', என்று அவள் சொல்ல- அதை தட்டிக் கழிக்க மனமில்லை. எத்தனை மீன்கள்! காலை முதல், கோவில் பிரகாரங்களை சுற்றிக்கொண்டிருந்த கால்களில், மேலும் நடக்க வலு இல்லை. 'நல்லா கால வீசி போட்டு நடங்க...' என்று அவள் குரல் மட்டும், அருகில் கேட்டது! ஆடுகள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும் குழந்தைகள்- கோவில் வழியாக போவதால் ஒரு கையில் புத்தகப் பையும், மற்றொரு கையில் செருப்புகளும் சுமந்து கொண்டு ஆடுகளுடனும், மற்ற தோழர்களுடனும் விளையாடிக்கொண்டே போன காட்சிகள். சட்டநாதர் கடவுளுக்கு இரும்புத்திரை. பெருச்சாளிகள் தொல்லை, கவுளைச் அச்சிறையில் தள்ளியதாம்! வெளிச்சமும் இல்லை. "பாவம் செஞ்சவா கண்ணுக்கு சுவாமி தெரியமாட்டார்", என்று கிண்டல் அடிக்க- கண்ணுக்குத் தெரியாத அந்த கடவுளைக் கண்டதாகச் சொல்லித் திரிந்தோம், பதிலுக்கு.

நந்தனார் பார்வை மறைத்த நந்தியை நகரச் செய்தாராம், ஈசன். விலகி இருக்கும் நந்திக்கு புகழ் கிடைத்தது, திருப்புங்கூரில். பிரம்மாண்டமான நந்தியின் காதுகளை அலங்கரித்திருந்தது, வெண்கல மணி. ப்ரதொஷநாதரும் மின் வெட்டிற்கு பலியாகியிருந்தார். இருட்டில் புதைந்திருந்த அவரை ஓரளவு கண்ணுக்கு காட்டியது, சுடர் விட்ட கற்பூரம். கோவில் வாசலில், சுந்தர ராமசாமி சொல்வது போல- 'நிக்கரை பஹிஷ்கரித்து' விட்டு அபீட் எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்கள்.

'
மானசரோவர்' இல்லத்தில், குச்சி ஐஸ். ஊஞ்சலில் பொழுதுகள் கழித்து, திண்ணையின் குளுரில் உறக்கம். முற்றத்துக் கம்பிகளின் நடுவே ஒளி தந்து கொண்டிருந்த சூரியக் கிரணங்களின் ஒளி, அவ்வபோது அந்த ஓட்டு வீட்டின் மூலையில் தொங்கிக் கொண்டிருந்த ஹரிக்கன் லைட் கண்ணாடியில் மோதி, வெளிவந்த ரஸ்மிகள். தோட்டத்தில் காய்த்துக் குலுங்கிய பலா, செவ்விளநீர் பறித்துக் கொடுத்த ஒருவர்- மரம் ஒன்றிற்கு ரூபாய் 20. முல்லை, மல்லி, செம்பருத்தி, அரளி- இன்னும் எத்தனை எத்தனையோ பல வண்ண மலர்கள். ஊசி மிளகாய் இலையில் மறைந்து நிற்க- காய்த்துக் குலுங்கிய எலுமிச்சையின் பளுவில் வளைந்த கிளைகள். வெந்நீர் தவலையை படம் பிடித்த எனக்குப் ப்ராந்தென்று கருதிய உறவுகளும் அங்குண்டு. இப்படிக் கோவில்களில் கழிந்தது 'சிவராத்திரி' பகல். அன்று இரவு கேபிள் டி-வி யில் 'மன்மதன் அம்பு' சினிமா.

'பாட்டி சமையல்'
ருசியின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்த இந்த சில நாட்களுக்கு விடை கொடுக்கும் பொழுதும் நெருங்கியது. ரயில் வண்டியில் பயணத்தின் போது பின்னே விட்டுச் செல்லும் இடங்கள் கண்ணில் தெரியும் வரையில் பார்த்துக் கொண்டே இருந்தது என் கண்கள். பழைய நினைவுகளின் தாக்கத்தினால் சாப்பிட்ட ஒற்றை குச்சி ஐஸ்-இன் பலன், தண்ணீரும் தொண்டை வழியே செல்லாது, வருத்தியது.

பத்து நாட்களாக நகரம் காணாத கண்களுக்கு, நகரத்தை உள் வாங்கிக் கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது. பத்து நாட்களில் ஒரு கிலோ இடை குறைந்திருந்தான், துப்பாண்டி!