வண்டல்
தெளிவில் தெளிந்த நீர். அதன் ஆழத்தில் அமைதி கண்டிருந்தது மணலும், கற்களும்- வண்டல் . நீரின் தெளிவில் தெரிந்ததாம் அதன் ஆழத்து வண்டல். ஒரு சிறிய கல் கொண்டு வண்டலை மேலே எழுப்ப முயற்சித்துப் பார்த்தால் என்ன? வேண்டாம். அது ஆழத்தில் இருப்பதே நன்மை. அதற்கும் சரி- நமக்கும் சரி.
வண்ணம் பொடிந்து கீழே விழுந்த சுவற்றை வேறொரு வண்ணம் கொண்டு மூடி விடுகிறோம். அந்த சுவற்றை அப்படியே விட்டு விட்டால் தான் என்ன? கூடாது! அப்படி எப்படி விட்டு விட முடியும்? அதன் மீது வேறு வண்ணம் பூசுவதிலேயே நன்மை. சுவற்றிற்கும் சரி- நமக்கும் சரி.
குழப்பங்களை தாழ்த்திக்கொண்டு விடுகிறோம். அதன் தாக்கங்கள் மனதின் ஆழங்களில் படிந்து விடுகின்றன. அதை நாம் தட்டி விட முயற்ச்சிப்பதில்லை. அச்சம். கண்களின் பார்வைகளின் ஒளி எங்கே அந்த குழப்பங்களின் தாக்கத்தினால் மங்கிப் போய் விடுமோ என்ற அச்சம். இருட்டில் பார்க்கும் திறன் தெரியாதவர்கள் மனிதர்கள். இருட்டிற்கு ஒரு உன்னத குணம் உண்டு. எல்லாவற்றிலும் அது தன்னைப் படரச் செய்துவிடும். இருட்டு- தம்மையும் தாக்கி விடும் என்ற அச்சத்தில் இருட்டை தம்முள் பூட்டி விடுவர் மனிதர்கள்.
மனதின் ஆழங்களில் படிந்து போன அந்த இருட்டை, படர விடாமல் தடுத்து விட்டதாக எண்ணிக் கொண்டு திருப்தி அடைந்து விடுவர் அவர். அவர்களின் "சிறிய வெற்றிகளில் மகிழ்ச்சி அடையும்" இந்த குணத்தை- அந்த இருட்டு நன்கு புரிந்து கொண்டிருந்தது. அவர்களையும் மீறி அந்த இருட்டு அவர்களுள் பரவுவதை அவர்கள் கவனிப்பதில்லை.
காற்றின் வேகம் தாள முடியாமல் தன கூட்டிலிருந்து கிழித்து எறியப்பட்ட ஒரு இலை- கலக்கமில்லாத நீரில் விழுந்தது. இது காற்றின் தவறல்ல! இலையின் பிழையல்ல! நீரின் விதியுமல்ல! இயற்கை.
வண்டல்- வெளிச்சம் காணும் பொருட்டு ஆர்வத்துடன் மேல் எழும்பியது. வண்டலின் வாழ்க்கையில் அது வெளிச்சத்தை கண்டதே இல்லை. அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அதற்க்கு ஆர்வமாக இருந்தது. அதன் ஆர்வத்தால், நீரில் ஒரு சில சலனங்கள். "நீரையும் மீறி விட வேண்டும்; வெளிச்சத்தை கண்டு விட வேண்டும்"- என்று அது துடித்தது. வண்டலின் சுயம் அதை எதிர் கொண்டது. அதை மீறி வெளிச்சம் நீரை எட்டாது- என்று தெரியுமா என்ன வண்டலுக்கு! வெளிச்சம் அதன் மீதே வீற்றிருந்தும் வண்டலால் அதைக் காண முடியவில்லை.
நீரின் எல்லைகளைக் கடந்தது. எழும்பியது. நீரைத் துள்ளச் செய்தது. ஆயினும், வெளிச்சத்தை அதனால் காண முடியவில்லை. ஏங்கியது. தன்னையே சலித்துக் கொண்டது. சில காலம் காத்திருந்தது- வெளிச்சம் தோன்றும் நம்பிக்கையில். ஏமாற்றம் அடைந்தது. நீரின் ஆழத்தில் தாழ்ந்து போனது. வண்டலானது.