ஒரு மிகப் பெரிய ஜன வெள்ளத்தில் ஒரு துளி நான். கடல் அலை, மடிவதற்கு முன் மற்றும் ஒரு அலையை உருவாக்கி விட்டு மடிவது போல, நானும்
உருவாக்கப் பட்டேன். என்னை உருவாக்கிய அந்த பெரும் அலைக்கு நான் யார் எனத்
தெரிந்திருக்கக் கூடுமா? நான் ஜனித்த தருணம், நான் இருந்த பதத்திலிருந்து
நான் ஏதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப் படுவேன் என்று அந்த அலைக்குத்
தெரியுமா? அது எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? என் பதத்தை நான்
அடைவதற்கு முன்னரே அந்த அலை கரைந்து போய் விடும். இது ஒரு வினோதமான பயணம்
தான். ஒரே துளி நீரினால் ஆன இரண்டு அலைகள் எப்படி உருவத்திலும், வலுவிலும்
வெவ்வேராகின்றதோ, எப்படி தனித்து பயணிக்கின்றதோ, அந்த பயணம்- ஒரு வினோதமான
பயணம் தான். சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் இந்த பயணத்தின் போக்கு ஏதோ
ஒரு பைத்திக்காரனின் கிறுக்கல் போலத்தான் அமைந்திருக்கிறது. வழிகாட்டி
இல்லாது வானத்தில் பறக்கும் பறவை போல. ஆனால் அதில் கூட ஒரு
திட்டம் இருக்கிறது.
சில விஷயங்களின் நடப்பிற்க்கு வேர் கிடையாது. அவை நடக்கும் . அவை
நடப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக நம்மிடம் காட்டிக் கொள்ளாது
இருக்கும். ஆனால்- வேர் தெரியாத நடப்புகளின் அஸ்திவாரம், பல சமயங்களில்
அந்த விஷயத்திலேயே புதைந்து கிடப்பதும் உண்மை தான். அதைத் துருவிப்
பார்பதற்கு பயம். மனிதனின் மூடத் தனமான பல பயங்களில் இந்த பயமும் ஒன்று.
தன்னுள் பார்க்க பயம். தன்னைக் கண்டு பயம். தன்னுள் தானே ஒளித்து
வைத்திருக்கும் பல விஷயங்களினால் தான் உருவானதை எண்ணி பயம்.
ஆனால்
இந்த வாதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது மனிதனின் மனப் போக்கு. பல
சமயங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு எந்த விதமான அர்த்தமும்
இருப்பதாகத் தோன்றவில்லை. மொசைக் தரையில் சிதறித் தெளிக்கப்பட்டிருக்கும்
அர்த்தமில்லாத வண்ணத் துகள்களைப் போல. ஆனால்- kaleidoscope உம் கூடத்தான்
அர்த்தமில்லாத உடைந்து போன கண்ணாடித் துண்டுகளால் ஆனது. அதில் மட்டும்
அழகான வடிவங்கள் எப்படித் தெரிகிறது? எண்ணங்களையும் kaleidoscope ல்
பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அழகு மட்டும்
கொண்டது கிடையாதே- இந்த எண்ணங்கள்! அழகாக இல்லாத எண்ணங்களை பார்க்க வழி?
கட்டிடப் பணியில் கரகரப்பான cement கலவையை
நீளமான குச்சியைக் கொண்டு சீர் படுத்தும் அதே சமயம்- பாலைவன மணலின்
நெளிவுகள் பிடிக்காத ஒரு பாம்பு, தான் மணலில் நெளிந்து மணலின் நெளிவை
தன்னுடையதாக மாற்றி அழகு பார்த்தது. மனிதனின் தன்மையும் அந்த பாம்பைப்
போலத்தான். கோணல் எண்ணங்களையும் ஞாயப் படுத்தி அழகு பார்ப்பது அவன்
வழக்கம்.
கோணல்-நேர்
என்று யார் பிரிப்பது? அவரவர் பார்வையைப்
பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக
மட்டுமே இருக்கிறதோ என்னவோ! ஒரு மனிதனின் செயலுக்கு, அவனது எண்ணங்கள் தான்
உந்துதல் என்றாலும்- எண்ணங்களுக்கு அந்த செயலின் பலனினால் தாக்கம்
ஏற்படுமா? எண்ணம் தான் தோன்றியவுடனே மறைந்து விடுமே? எப்படித் தாக்கம்
ஏற்படும்? Science Fiction கதையைப் போல- ஒரு எண்ணம் யோசிக்கப் பட்டுக்
கொண்டிருக்கும்போதே அதன் பலனும், மருந்து bottle களில் வரும் "குறிப்பைப்"
போல, தோன்றிவிட்டால்? மனித அறிவின் வரையறை இதை சாத்தியமாக்காது. அதற்க்கு
ஒரு யந்திரம் செய்துவிட்டால்? யந்திரன்களால் மனிதனின் எண்ணங்களோடு போட்டி
போட முடியாது. எத்தனை உன்னதமான விஷயம்- எண்ணம்!
புத்திக்கும், மனதிற்கும் நடுவில் உலவும் எண்ணங்கள்- ஒரு மனிதனின் அடையாளத்தை தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டும், அவ்வபோது மனதின் ரகசியங்களை புத்தியினிடமிருந்து மறைத்துக்கொண்டும் வேகமாக பறந்து
கொண்டிருக்கிறது! எந்த தருணத்தில் அதை நிறுத்தினால் எப்படிப்பட்ட நிலையில்
அது இருக்குமோ- என்று அதனை நினைக்கும் மனிதனுக்கும் தெரியாது! அவனுக்கும்
தெரியாமல்- அவனைப் பற்றிய ரகசியங்களை அது எங்கே எடுத்துச் செல்கிறது...?