போர்  

Posted by Matangi Mawley

- Thapasaa cheeyathe Brahma


மனதில் நினைத்து முடித்த நினைவுகளின் தாக்கம். மாதம் ஒன்றிற்குப் பேனா மூன்று என்ற என் கணக்கிற்கு விடை இதுவாகவும் இருக்கலாம் போலும். என் நினைவுகளின் முதல் நண்பனான என் பேனா, அந்த நினைவுகளின் தாக்கங்களால் வேறு நினைவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றது. நினைவுகளின் சக்தியையும், ஆற்றலையும் அந்த பேனாவினால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பேனா முனை, வற்றிப்போய் விடுகிறது. புது நினைவுகள்- புது பேனாவைத் தேடிக்கொள்கின்றன.

நினைவுகளின் தாக்குதல் பேனாவை மற்றுமின்றி, அதனால் உருவாகும் எழுத்துக்களையும் தாக்கும் சமயங்களும் உண்டு. எழுத்து, எண்ணங்களின் வேகங்களுக்கு ஈடு கொடுக்க மறுத்து விட- எண்ணங்கள் அதன் கோவத்தை எழுத்தின் மீது எய்து விட- எழுத்தின் மாறுபட்ட கோணங்களும், சீரில்லாத கோடுகளும்- எண்ணங்களின் கோபக் கனலில் வெந்து பிறந்த சாம்பலானது. எழுத்து- உருயில்லா எண்ணங்களில் ஒன்றிப் போனது...

எண்ணங்களின் தாக்கம், காகிதத்தின் மீதும். வெண்மையின் நிறங்கள். அந்த நிறங்களுக்கு- காகிதத்தின் வெளுப்பின் மீது கோவம். அந்த வெளுப்பின் ஒவ்வொரு புள்ளியையும் தேடி- அதில் எண்ணங்களின் நிறம் நிரப்பி- அந்த காகிதத்தின் அவலத்தையும் ரசித்தது, அந்த எண்ணம். எண்ணங்களின் தாக்கம்- பேனாவின் வழி எழுத்தில் புகுந்து, காகிதத்தில் படர்ந்து விட- காகிதத்தின் வலி மூன்று மடங்காக உயர்ந்தது.

"எண்ணங்களை நிறுத்தி விட வேண்டும்"- என்றது காகிதம். எழுத்தும், பேனாவும் ஆமோதித்தன. பேனா எழுத மறுத்தது. எழுத்துகளும், பிழைகளைக் கொட்டித் தீர்த்தன. காகிதம் கசங்கிக் கொண்டது. எண்ணங்கள் வெளியேற முடியாமல் திணறிப் போனதைக் கண்டு, களித்தன அவை. எண்ணங்களின் கொட்டத்தை அடக்கி விட்டதாக எண்ணிப் பெருமை கொண்டன. மகிழ்ந்தன.

அவைகளின் வாழ்வை வெறுத்தன. எழுதாத அந்த பேனா- அதன் அவலத்தைத் தாளாது உடைந்தது. பிழையான எழுத்துகள்- அந்தப் பிழைகளினால் வெட்கிப் போனது. கசங்கிய காகிதமும் அதன் தோற்றத்தை வெறுத்தது.

எண்ணங்களிடம் சென்று முறையிட்டது. தங்களை வருத்தும்படி கேட்டுக் கொண்டது. எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை என்று அவைகள் உணர்ந்தன. எண்ணங்களின் வருத்தலில் சுகம் கண்டு துளிர்த்தன. எண்ணங்கள் மலர்ந்தன...