"வீடு வாடகைக்கு"  

Posted by Matangi Mawley


"நம்ம 127 வாடகைக்கு விட்டாச்சு, தெரியுமோன்னோ"?
சாந்தா மாமிக்கு மட்டும் எல்லா விஷயமும் அத்துப்படி! "ரேடியோ மாமி" ன்னு தான் அவாளுக்கு பேரே, தெருல!
"யாரு வரப்போறாளாம்"?
"யாரோ Bank Manager -ஆம். ஒரே பொண்ணாம். அதனால தான் உன் காதுல போட்டு வச்சேன். நம்ப கிஷ்ணனுக்கும் வயசாறதே" அப்டின்னா ரேடியோ மாமி.
"நல்ல காரியம் பண்ணினேள் மாமி! நானும் இந்த வருஷம் எப்படியும் கிருஷ்ணன் கல்யாணத்த முடிச்சுடணும்னு ஒரு வைராக்யத்தோட இருக்கேன். இவரான்னா- நடக்க வேண்டியது நடக்கும்-னு இருக்கார். நம்ப புள்ளைக்கு நம்ப பண்ணலேன்னா யாரு பண்ணுவா? நீங்களே சொல்லுங்கோ"!
"வாஸ்தவம் தான்". அப்டின்னா ரேடியோ மாமி. அந்த மாமிக்கு வந்த வேல முடிஞ்சுது.
"அது சரி..! அவா நம்பளவாளா"? ஆச்சு! சாவி மாமிக்கு அடுத்த கவலை.
"அப்டிதான் நெனைக்கறேன். வரட்டுமே! இங்க தானே இருக்கப் போறா! தெரிஞ்சுண்டா போச்சு..."- அதானே! ரேடியோ மாமியா கொக்கா!

***

"பொண்ணு நல்ல துரு துரு-ன்னு இருப்பாளாம். எல்லாம் நம்மளவாதான். இப்போதைக்கு அவ அப்பா மட்டும்தான் ஜாக வந்துருக்காராம். அம்மாவும் பொண்ணும் அப்பறமா வருவாளாம்"- இது ரேடியோ மாமியோட latest news !
"நீங்க Manager -அ பாத்தேளா மாமி"? ன்னு சாவி மாமி கேட்டா.
"இல்ல-இல்ல. 128 ல நம்ம சுஜி இருக்கோன்னோ? அது சொல்லித்து"!
"அம்மாவும் பொண்ணும் எப்ப வராளாம்"?- சாவி மாமி கவலை அவாளுக்கு.
"அடுத்த வாரமே வந்துடறதா கேள்விப் பட்டேன். நீ எதுக்கும் கிருஷ்ணன் காதுல போட்டு வை. நம்ப பண்ணறத பண்ணிண்டு- அப்புறம் அவன் மாட்டேன்னுட்டான்னா"?- அப்டின்னு நூறு வார்த்தைக்கு ஒரு வார்த்தையா சொன்னா ரேடியோ மாமி!
"தோ! இன்னிக்கே கிருஷ்ணன ஒரு வார்த்த கேட்டுட்டா போச்சு..."- சாவி மாமி களத்துல எறங்கிட்டா!

***

"அவாள்ளாம் வந்துட்டாளா, மாமி"?- சாவி மாமி ஆர்வமா கேட்டா.
"எல்லாம் வந்தாயுடுத்து..."- அப்டின்னு சலிச்சுண்டா, ரேடியோ மாமி!
"ஏன் மாமி? என்னாச்சு? நம்பளவா இல்லையா என்ன"?- அப்டின்னா சாவி மாமி.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல..."ன்னு இழுத்தா ரேடியோ மாமி!
"நீங்க சொன்னேளேன்னு கிருஷ்ணன் காதுல வேற போட்டு வெச்சேன்.. என்ன நடந்துதுன்னு சொல்லுங்கோ மாமி.."- சாவி மாமிக்கு suspense தாங்கல!
"நேத்திக்கு தான் அவாள பொய் பாத்துட்டு வந்தேன்..."- அப்டின்னு ஆரம்பிச்சா ரேடியோ மாமி...

***

இருவது வருஷம் கழிச்சு, ஒரு நாள்-

மாலி:
Bank Manager - அவரோட ஒரே பொண்ணோட, மாமிய அழைசிண்டு குடி வரார்னு தான் அவாளுக்கு தெரியும். அந்த பொண்ணு இப்போதான் L .K .G படிக்க போறதுன்னு அவாளுக்கு தெரியுமா என்ன...?
மாதங்கி: ச! Superb plot பா! Blog -ல போடலாம்....
மாலி: Serious - ஆ எழுதி- நீ எப்போதும் English ல எழுதும்போது பண்ணறாப்ல யாரயாது close பண்ணிடாதடா....

வண்டல்  

Posted by Matangi Mawley

தெளிவில் தெளிந்த நீர். அதன் ஆழத்தில் அமைதி கண்டிருந்தது மணலும், கற்களும்- வண்டல் . நீரின் தெளிவில் தெரிந்ததாம் அதன் ஆழத்து வண்டல். ஒரு சிறிய கல் கொண்டு வண்டலை மேலே எழுப்ப முயற்சித்துப் பார்த்தால் என்ன? வேண்டாம். அது ஆழத்தில் இருப்பதே நன்மை. அதற்கும் சரி- நமக்கும் சரி.

வண்ணம் பொடிந்து கீழே விழுந்த சுவற்றை வேறொரு வண்ணம் கொண்டு மூடி விடுகிறோம். அந்த சுவற்றை அப்படியே விட்டு விட்டால் தான் என்ன? கூடாது! அப்படி எப்படி விட்டு விட முடியும்? அதன் மீது வேறு வண்ணம் பூசுவதிலேயே நன்மை. சுவற்றிற்கும் சரி- நமக்கும் சரி.

குழப்பங்களை தாழ்த்திக்கொண்டு விடுகிறோம். அதன் தாக்கங்கள் மனதின் ஆழங்களில் படிந்து விடுகின்றன. அதை நாம் தட்டி விட முயற்ச்சிப்பதில்லை. அச்சம். கண்களின் பார்வைகளின் ஒளி எங்கே அந்த குழப்பங்களின் தாக்கத்தினால் மங்கிப் போய் விடுமோ என்ற அச்சம். இருட்டில் பார்க்கும் திறன் தெரியாதவர்கள் மனிதர்கள். இருட்டிற்கு ஒரு உன்னத குணம் உண்டு. எல்லாவற்றிலும் அது தன்னைப் படரச் செய்துவிடும். இருட்டு- தம்மையும் தாக்கி விடும் என்ற அச்சத்தில் இருட்டை தம்முள் பூட்டி விடுவர் மனிதர்கள்.

மனதின் ஆழங்களில் படிந்து போன அந்த இருட்டை, படர விடாமல் தடுத்து விட்டதாக எண்ணிக் கொண்டு திருப்தி அடைந்து விடுவர் அவர். அவர்களின் "சிறிய வெற்றிகளில் மகிழ்ச்சி அடையும்" இந்த குணத்தை- அந்த இருட்டு நன்கு புரிந்து கொண்டிருந்தது. அவர்களையும் மீறி அந்த இருட்டு அவர்களுள் பரவுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

காற்றின் வேகம் தாள முடியாமல் தன கூட்டிலிருந்து கிழித்து எறியப்பட்ட ஒரு இலை- கலக்கமில்லாத நீரில் விழுந்தது. இது காற்றின் தவறல்ல! இலையின் பிழையல்ல! நீரின் விதியுமல்ல! இயற்கை.

வண்டல்- வெளிச்சம் காணும் பொருட்டு ஆர்வத்துடன் மேல் எழும்பியது. வண்டலின் வாழ்க்கையில் அது வெளிச்சத்தை கண்டதே இல்லை. அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அதற்க்கு ஆர்வமாக இருந்தது. அதன் ஆர்வத்தால், நீரில் ஒரு சில சலனங்கள். "நீரையும் மீறி விட வேண்டும்; வெளிச்சத்தை கண்டு விட வேண்டும்"- என்று அது துடித்தது. வண்டலின் சுயம் அதை எதிர் கொண்டது. அதை மீறி வெளிச்சம் நீரை எட்டாது- என்று தெரியுமா என்ன வண்டலுக்கு! வெளிச்சம் அதன் மீதே வீற்றிருந்தும் வண்டலால் அதைக் காண முடியவில்லை.

நீரின் எல்லைகளைக் கடந்தது. எழும்பியது. நீரைத் துள்ளச் செய்தது. ஆயினும், வெளிச்சத்தை அதனால் காண முடியவில்லை. ஏங்கியது. தன்னையே சலித்துக் கொண்டது. சில காலம் காத்திருந்தது- வெளிச்சம் தோன்றும் நம்பிக்கையில். ஏமாற்றம் அடைந்தது. நீரின் ஆழத்தில் தாழ்ந்து போனது. வண்டலானது.

நன்றி...  

Posted by Matangi Mawley


கடந்த நான்கு வருடங்களாக என் வாழ்க்கை முறையையும்- பயணத்தையும்- சீர் செய்து கொடுத்து., என்னை நான் இன்றைக்கு எப்படி இருக்கிறேனோ- அப்படி ஆனதற்கான ஒரு பெரும் கருவியாக நின்று- நான் சிரிக்க மறந்த போதெல்லாம் என் சிரிப்பை மீட்டுக் கொடுத்து, நான் நினைக்க மறந்த போதெல்லாம் என் நினைவுகளை மீட்டுக் கொடுத்து- என்னை என்றுமே விட்டுப் பிரியாமல் இருந்த என் "LIGHTER SIDE" கு என் நன்றி. 100 பதிவுகள் எட்டிப்பிடிக்க வைத்தமைக்கும் என் நன்றி!