மஞ்சகாப்பு
கல்லைக் கடவுள் என்பவர்களும் சரி- கடவுளைக் கல் என்பவர்களும் சரி- இவர்கள் இருவருமே என் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இது இப்படியாயிருக்க, நான் என் எண்ணக்கிளர்ச்சியின் மத்தியில் மெய்மறந்துஉலாவிக்கொண்டிருந்த அந்த சமயத்தில்- திடீரென்று, ஸ்ரீரங்கம்- "ரங்கா ரங்கா" கோபுரம் என் கண் முன்னே தோன்றியது! இது "தெய்வத்தின் குரல்" அல்ல! என்மூளைக்குள் அடங்கிய ரசாயனக் கலவையின் வேலை! என் நினைவுகள், நான்குதிசைகளிலிருந்தும் உருவங்களைப் பற்றி வரையத் தொடங்கியது. நானும் அந்தஎண்ண அலைகள் என்னை ஈர்த்த திசையை நோக்கி விரைந்தேன்!
யாராக இருந்தாலும் சரி! கல்லாயினும், கடவுளாயினும், அதை உயிர் என்று நம்பியதால் உருவெடுத்திருக்கும் அந்த பிரம்மாண்டனான கோபுரமும், அதன் வேலைப்பாடுகளும்! மதுரை கோவிலே சிறந்த வேலைப்பாடு நிரம்பிய கோவில் என்றாலும்- கோவில் என்று பொதுவாகவே எடுத்துக்கொள்வோமே- கோவில் என்பது ஓர் அதிசயமே! இது என் கருத்து!
கோபுரத்தின் உள் நுழைந்த உடனே கடைகள். பாத்திரங்கள், ஆன்மீக நூல்கள், தெய்வங்களின் படங்கள், என்று அநேக சந்தைகள். சிறு வயதினில், பரமபதத்திற்கும், தாயத்திற்கும் ஆசைப் பட்டு கோவிலுக்குப் போனதுண்டு. அந்த பரமபதத்திற்கும், தாயத்திற்கும் இப்போது விலை மிகவும் கூடிவிட்டது! பின்னே சந்நிதிகளின் துவக்கம். நாங்கள் சமீபத்தில் கண்டறிந்த 'விநாயகர்' சிலை, உள்ளே முதல் கோபுரத்தில், ஓரிடத்தில். வைணவ கோவில்களில், விநாயகர் சிலைகள் நான் கண்டது குறைவே!
பின் 'சக்ரத்தாழ்வார்' சந்நிதி! இந்த சந்நிதியின்பால் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஆன்மீக ரீதியாக சொல்லவில்லை. அந்த சந்நிதியின் அருகே வசதியான இடம் உண்டு. நண்பர்களோடு அமர்ந்து உரையாட! அங்கே எழுத்தாளர் சுஜாதா"வும் முன்னொரு காலத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு! அப்போதிலிருந்து அந்த சந்நிதியின்பால் ஒரு மதிப்பு!
ரங்கனின் சந்நிதிக்கு வெளியே, ஓர் இடத்திலிருந்து தங்க கோபுரம் தெரியும். அங்கேயே, ஒரு பேசும் கிளியும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் அந்த கிளி பேசுவதில்லை. ஆனால் முன்னர், அந்த கிளி "ரங்கா!"என்னும் போதெல்லாம் என் ஆச்சர்யத்திற்கு அளவே கூற இயலாது! "பேசும் கிளி" வேண்டும் என்று பிரார்த்தித்தது கூட உண்டு! ரங்கனின் சந்நிதி தீர்த்தம், மிகவும் ருசியாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறைகள் கூட பருகிய அனுபவங்கள் உண்டு! பின் எனக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடம். "தாயார்" சந்நிதிக்கு செல்லும் வழி. அங்கு நானும் என் அப்பாவும் விளையாடுவது உண்டு. சிறு பிராயத்தில் ஓட்டப்பந்தயத்தில் அப்பாவுடன் அந்த இடத்தில் ஓடியதுண்டு.
"தாயார்" சந்நிதியின் உள் பூக்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அங்கே "ஜம்பகப்பூ" என்ற பூ உண்டு. இரண்டு பூக்களே வாங்கமுடியும். அதை பத்திரப்படுத்திக்கொண்டு, வீட்டில் அம்மாவிடம் கொண்டு கொடுத்த நினைவுகள் உண்டு. "தாழம்பூ" வேண்டும் என்று அழுது புலம்பிய நாட்களும் உண்டு. அதைக்காண்பதற்குக் கூட விலை உண்டு போலும்!
"தாழம்பூ ஏன்?" சிறு வயதில், அப்பா கதைகள் சொல்லி கேட்பதுண்டு. இப்பொழுதும் கூடத்தான். அந்த கதைகளில் ஒரு கதை- ஆயிரம் வருடங்கள் ஜீவித்த நாகத்தின் தலையில் ஒரு நாகமணி தோன்றியதாம்! தாழம் காட்டினுள், மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று, அந்த நாகம், தனது ரத்தினத்தை அவிழ்த்துவிட்டு, அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு இறை தேடுமாம். அந்த மணியைக் கைப்பற்றுவது எப்படி என்பதே அந்த கதை! தாழம்பூ அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றானது!
சந்நிதிக்கு முன், "அஞ்சு குழி மூணு வாசல்" என்று ஒன்று உண்டு. இன்று வரை அந்த கதை எனக்கு விளங்கவில்லை. அதாவது, தாயார், ரங்கனின் வருகையை, தனது விரல்களை தரையில் ஊன்றி எதிர் பார்த்துக் கொண்டிருந்தாளாம். அங்கே, அவரவர், தங்கள் விரல்களை நுழைத்து சுற்றும்-முற்றும் பார்ப்பது வழக்கமாகியது. சிறு வயதில்- தாயார் மிகவும் பருமனானவராய் இருந்திருக்கக் கூடும், எனவேதான் அப்படி ஒரு குழி அந்த கற்களால் ஆன தரையில் தோன்றியிருக்கிறது, என்ற எண்ணங்களும் வந்ததுண்டு!
ஒருசில வவ்வால் தோட்டங்களும் இடையிடையே வந்துபோவதுண்டு! அவைகளை கண்டாலே எனக்கு பயம்தான். சிறு வயதினில், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பாதபடியால், "ஒருவர்" நான் ஒவ்வொரு முறை பிடிவாதம் செய்யும் போதும் "பெற்றோர்களை மதிக்காதவர்கள், அடுத்த ஜன்மத்தில் வவ்வால்களாவார்கள்" என்று சொல்லி பயமுறுத்தியது உண்டு. அதுவும் ஒரு காரணம். முதலில், அதை நான் நம்பவில்லைதான். அதெப்படி முடியும் என்று யோசித்ததும் கூட உண்டு! ஆனால் "மை டியர் குட்டிச்சாத்தான்" படம் பார்த்தது முதல், எனக்கு அந்த வாக்கியத்தின் மீது அபார நம்பிக்கை! அதனாலேயே, அந்த வவ்வால் தோட்டங்களை பார்க்கும் போது, ஒரு புறம் பயம் இருந்தாலும் கூட, மறு புறம், "அடுத்த ஜன்மத்தில் இதுவே என் வீடு" என்று எண்ணி, அந்த இடங்களை, நெடு நேரம்வரை நின்று வேடிக்கை பார்த்ததும் உண்டு!
"மடிசார்" புடவையில், இரண்டு மூக்குத்திகள் ஜொலிக்க, தலையை இருக்கவாரிப் பின்னி, கதம்பம் பூண்டு, உதடுகள் மெதுவாக "சஹஸ்ரநாமம்" பாடிக்கொண்டு, அந்த மஞ்சகாப்பை நெற்றியில் அவர்கள் பூணுவர். அவர்களுக்கு அதுவே உண்மை, அதுவே ப்ரஹ்மம். என்னைப் பொறுத்த வரையில், அது ஆயிரக்கணக்கான வருடங்களாக, வழி முறையிலும், வாழ்கை முறையிலும் நம்மோடு கலந்துபோன ஓர் உணர்வு. கலாசாரம். அழகு.
நாம் என்னதான் வேதாந்தம் பேசினாலும், அறிவியல் புழுக்களாக மாறிய போதிலும், நம் நினைவுகளிலிருந்து அந்த "கலாசாரம்" எனப்படுவதை அழிப்பதுசற்றே கடினம். அதை நம்மால் மட்டுமே ரசிக்க இயலும். எனக்கு தெய்வங்களின்மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். அப்படிப் போய்விட்டது என்றும் கூறவில்லை. அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை! ஆனால், என் நினைவுகளில் இருக்கும் இந்த கோவிலை என்னால் மறக்க இயலாது! அதை நான் விரும்பவும் இல்லை!
எனவே, என்னை ஆன்மீகமா, அறிவியலா என்ற தர்கத்திற்குஆளாக்கிக்கொள்ளாமல், என் நினைவுகளிலிருந்து என்னை மீட்டுக்கொண்டேன்!