Kaleidoscope -இன் ஊடே  

Posted by Matangi Mawley

ஒரு மிகப் பெரிய ஜன வெள்ளத்தில் ஒரு துளி நான். கடல் அலை, மடிவதற்கு முன் மற்றும் ஒரு அலையை உருவாக்கி விட்டு மடிவது போல, நானும் உருவாக்கப் பட்டேன். என்னை உருவாக்கிய அந்த பெரும் அலைக்கு நான் யார் எனத் தெரிந்திருக்கக் கூடுமா? நான் ஜனித்த தருணம், நான் இருந்த பதத்திலிருந்து நான் ஏதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப் படுவேன் என்று அந்த அலைக்குத் தெரியுமா? அது எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? என் பதத்தை நான் அடைவதற்கு முன்னரே அந்த அலை கரைந்து போய் விடும். இது ஒரு வினோதமான பயணம் தான். ஒரே துளி நீரினால் ஆன இரண்டு அலைகள் எப்படி உருவத்திலும், வலுவிலும் வெவ்வேராகின்றதோ, எப்படி தனித்து பயணிக்கின்றதோ, அந்த பயணம்- ஒரு வினோதமான பயணம் தான். சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் இந்த பயணத்தின் போக்கு ஏதோ ஒரு பைத்திக்காரனின் கிறுக்கல் போலத்தான் அமைந்திருக்கிறது. வழிகாட்டி இல்லாது வானத்தில் பறக்கும் பறவை போல. ஆனால் அதில் கூட ஒரு திட்டம் இருக்கிறது.

சில விஷயங்களின் நடப்பிற்க்கு வேர் கிடையாது. அவை நடக்கும் . அவை நடப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக நம்மிடம் காட்டிக் கொள்ளாது இருக்கும். ஆனால்- வேர் தெரியாத நடப்புகளின் அஸ்திவாரம், பல சமயங்களில் அந்த விஷயத்திலேயே புதைந்து கிடப்பதும் உண்மை தான். அதைத் துருவிப் பார்பதற்கு பயம். மனிதனின் மூடத் தனமான பல பயங்களில் இந்த பயமும் ஒன்று. தன்னுள் பார்க்க பயம். தன்னைக் கண்டு பயம். தன்னுள் தானே ஒளித்து  வைத்திருக்கும் பல விஷயங்களினால் தான் உருவானதை எண்ணி பயம்.

ஆனால் இந்த வாதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது மனிதனின் மனப் போக்கு. பல சமயங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு எந்த விதமான அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. மொசைக் தரையில் சிதறித் தெளிக்கப்பட்டிருக்கும் அர்த்தமில்லாத வண்ணத் துகள்களைப் போல. ஆனால்- kaleidoscope உம் கூடத்தான் அர்த்தமில்லாத உடைந்து போன கண்ணாடித் துண்டுகளால் ஆனது. அதில் மட்டும் அழகான வடிவங்கள் எப்படித் தெரிகிறது?  எண்ணங்களையும்  kaleidoscope ல் பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அழகு மட்டும் கொண்டது கிடையாதே- இந்த எண்ணங்கள்! அழகாக இல்லாத எண்ணங்களை பார்க்க வழி? கட்டிடப் பணியில் கரகரப்பான cement கலவையை நீளமான குச்சியைக் கொண்டு சீர் படுத்தும் அதே சமயம்- பாலைவன மணலின் நெளிவுகள் பிடிக்காத ஒரு பாம்பு, தான் மணலில் நெளிந்து மணலின் நெளிவை தன்னுடையதாக மாற்றி அழகு பார்த்தது. மனிதனின் தன்மையும் அந்த பாம்பைப் போலத்தான். கோணல் எண்ணங்களையும் ஞாயப் படுத்தி அழகு பார்ப்பது அவன் வழக்கம்.

கோணல்-நேர் என்று யார் பிரிப்பது? அவரவர் பார்வையைப் பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக மட்டுமே இருக்கிறதோ என்னவோ! ஒரு மனிதனின் செயலுக்கு, அவனது எண்ணங்கள் தான் உந்துதல் என்றாலும்- எண்ணங்களுக்கு அந்த செயலின் பலனினால் தாக்கம் ஏற்படுமா? எண்ணம் தான் தோன்றியவுடனே மறைந்து விடுமே? எப்படித் தாக்கம் ஏற்படும்? Science Fiction கதையைப் போல- ஒரு  எண்ணம் யோசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் பலனும், மருந்து bottle களில் வரும் "குறிப்பைப்" போல, தோன்றிவிட்டால்? மனித அறிவின் வரையறை இதை சாத்தியமாக்காது. அதற்க்கு ஒரு யந்திரம் செய்துவிட்டால்? யந்திரன்களால் மனிதனின் எண்ணங்களோடு போட்டி போட முடியாது. எத்தனை உன்னதமான விஷயம்- எண்ணம்!

புத்திக்கும், மனதிற்கும் நடுவில் உலவும் எண்ணங்கள்- ஒரு மனிதனின் அடையாளத்தை தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டும், அவ்வபோது மனதின் ரகசியங்களை புத்தியினிடமிருந்து மறைத்துக்கொண்டும் வேகமாக பறந்து கொண்டிருக்கிறது! எந்த தருணத்தில் அதை நிறுத்தினால் எப்படிப்பட்ட நிலையில் அது இருக்குமோ- என்று அதனை நினைக்கும் மனிதனுக்கும் தெரியாது! அவனுக்கும் தெரியாமல்- அவனைப் பற்றிய ரகசியங்களை அது எங்கே எடுத்துச் செல்கிறது...?

This entry was posted on 03 November, 2012 at Saturday, November 03, 2012 . You can follow any responses to this entry through the comments feed .

13 comments

Anonymous  

பிரமாதம்! அருமையாக எழுதி இருகிறீர்கள். தொடர்ந்து மீண்டும் மீண்டும் படித்தேன்.
அழகான எண்ணங்கள். குரூரமான எண்ணங்கள். பல நேரங்களில் எண்ணங்கள் வேறு செயல்கள் வேறாகிதான் விடுகின்றன. சில நேரங்களில் அழகான எண்ணங்களை செயல்படுத்த முடியாதபோது குரூரமான எண்ணங்கள் தானாகவே செயலில் வந்து நிற்கின்றன.
//எண்ணங்களையும் kaleidoscope ல் பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும்! //
//கோணல்-நேர் என்று யார் பிரிப்பது? அவரவர் பார்வையைப் பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக மட்டுமே இருக்கிறதோ என்னவோ! //
கிளாஸ்!

//ஒரு எண்ணம் யோசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் பலனும், மருந்து bottle களில் வரும் "குறிப்பைப்" போல, தோன்றிவிட்டால்?//
எண்ணங்கள் எழும்போதே அதற்கான பலன்களும் மனதில் எழுவதை தவிர்க்க முடிவதில்லை. இதனால் எண்ணங்கள் முழுவதுமாய் செயலுக்கு வருவது தடை படுகிறது. ஒருவேளை நீங்கள் எழுதி இருப்பது போல எண்ணங்களுக்கான பலன்கள் தோன்றி விட்டால் முக்கால்வாசி எண்ணங்கள் செயலுக்கே வராது என்பது என் கருத்து. :)

அபூர்வராகங்கள் படத்தில் வரும் ஒரு டயலாக் 'எண்ணங்கள் ஓடற அளவுக்கு நாட்கள் ஓடுவதில்லை' நான் என்றுமே ரசிக்கும் வரி. என் மனதில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் வரி.

நான் படித்து மிகவும் ரசித்த சிறந்த பதிவில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள்!

3 November 2012 at 21:24

ஹல்லொ மைத்தி, என்ன இவ்வளவு ஆழமான சிந்தனை.ஆனாலும் ம்றுக்கமுடியாத உண்மைகள்.
பாலைவனத்தில் நெளிந்து வரும் பாம்பாக நெளிந்து வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டாலும், இறை கொள்ளக் காத்திருக்கும் பருந்துகளுக்கு அது தப்பிப்பதில்லை.
அதுபோலத்தான் எண்ணங்களும் நேராகப் போகவேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் சுற்றுப்புறமோ உறவுகளோ அவர்கள் எண்ணங்களாலோ செய்கைகளாலோ
நம்மைத் திருப்பிவிடுகிறார்கள்.
இத்தனை சின்னவயதில் இத்தனை தீர்க்கமான சிந்தனைகளுக்கும் எழுத்துக்கும் என் வாழ்த்துகள்.

4 November 2012 at 07:15

//மனிதனின் தன்மையும் அந்த பாம்பைப் போலத்தான். கோணல் எண்ணங்களையும் ஞாயப் படுத்தி அழகு பார்ப்பது அவன் வழக்கம்.//

சிறப்பான சிந்தனைகள் மாதங்கி....

4 November 2012 at 07:46

// புத்திக்கும் மனதிற்கும் நடுவில் உலாவும் எண்ணங்கள். //

எண்ணங்களைத் தோற்றுவிப்பது மனமா ? புத்தியா ?
இந்த வாக்கியத்தை பயலாஜிகலா பார்த்தா ஒரு விடை.
ஆன்மீகமா பார்த்தா இன்னொரு விடை.

நான் நினைக்கிறேன். நான் இருக்கிறேன். என்கிறது ஒரு பக்கம்.
( I think, I am .)
நான் இருக்கிறேன். ( அதனால்) நான் நினைக்கிறேன். என்பது ந்யூரோ சயின்டஸ்டிஸ் வாதம்.
( I am .(Therefore) I think.)

இந்த நினைப்புக்கும் இருப்பதற்கும் இடையே உள்ள பிரயாணம் தான்
வாழ்வு என்று சொன்னால் அதுவும் ஓரளவுக்குத் தான் சரி என்கிறார்கள்.

தொடருங்கள். க்வைட் இன்டரஸ்டிங்.

சுப்பு ரத்தினம்.

4 November 2012 at 09:11

ப்ரிய மாதங்கி! கூர்மையான பார்வையில் அழுத்தமான பதிவு. ஆச்சரியமாய் இருக்கிறது.. எண்ணம் எழுத்தாவதில் உங்களுக்கு எந்த சிக்கலும் இருப்பதில்லை. சபாஷ்!

நாமனைவரும் மனவெளி மனிதர்களே! அலைஅலையாய் எண்ணங்கள் ஓயாது மோதும் பொங்குமாங்கடல் மனிதமனம்.
‘சித்த விருத்தி நீரோதயா’ என்பார்கள். சரம்சரமாய் மனம் தொடுத்துக் கொண்டே போகும் கதம்பமான எண்ண மாலை.
காகிதப்பூக்களும், ரோஜாக்களும், அரளியும், ஊமத்தையும், வர்ஜ்யாவர்ஜ்யமின்றி கலந்துகட்டிபோகும் அந்த மாலை.

சில வித்தியாசமான புள்ளிவிவரங்கள் மனோவியலில் அறியக் கிடக்கின்றன. நாள்தோதோறும் புற்றீசலைப் போல் புறப்படும் எண்ணங்களில் 1,48,000 எதிர்மறையானவை. நல்லவையோ வெறும் 30000 சொச்சமென்கிறார்கள். முயற்சியில் இவற்றை மேம்படுத்தல் இயலும்.. தியானம், நல்ல சூழலை அமைத்துக் கொள்ளல் போன்ற பிரயத்தனங்களில் மனவளத்தைப் பெருக்கிக் கொள்ளவியலும்.

ஒரு பழைய செய்யுள்:

எண்ணத்தறியில் சிறுநினைவு இழையோட இழையோட
முன்னுக்குப்பின் முரணாய், முற்றும் கற்பனையாய்
பன்னும்பகற் கனவாய், பாழாய், பழம்பொய்யாய்
என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!

மாதங்கி.. மீண்டும் ஒரு சபாஷ் உன் எழுத்துக்கு

அன்பு

மோகன்ஜி

4 November 2012 at 12:23

sorry for coming again
A request to Sri Mohan ji.
//நாள்தோதோறும் புற்றீசலைப் போல் புறப்படும் எண்ணங்களில் 1,48,000 எதிர்மறையானவை. நல்லவையோ வெறும் 30000 சொச்சமென்கிறார்கள்.//


மோஹன் ஜீ. நமஸ்காரம்
ஒரு நாளைக்கு ஒரு அடல்ட் விழித்திருக்கும்பொழுது அவனது மூளையில் ( ஃப்ரன்டல் லோபில்)
சராசரியாக எழுபதாயிரம் எண்ணங்கள் தான் அப்படின்னு
ந்யூரோ சயின்ஸஸ் சொல்லுதே. அதுவும் இந்த எழுபது ஆயிரத்தில் தொடர் எண்ணங்களா , இன்டிபென்டன்ட்
அதாவது வேறுபட்ட எண்ணங்களா என்று சொல்ல இயலவில்லை என்று எம்.ஆர்.ஐ. சொல்வதாக‌
சொல்கிறார்கள்.

நீங்கள் தரும் புள்ளி விவரம் அதிசயிக்கத்தக்கதாக இருக்கிறது. அதுவும் பாஸிடிவ் , எதிர்மறை என்று
பிரித்து வேறு சொல்கிறீர்கள்.

ஏதேனும் மேற்கோள் காட்ட முயன்றால் உதவியாக இருக்கும். ( ஸயின்டிஃபிக் ஆகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
ஏதேனும் உபனிஷத்துகளில் இருந்து கூட தரலாம். அவைகளிலும் எண்ணங்கள் அவற்றின் எண்ணிக்கை,
தன்மை அவற்றைப் பற்றிப் பேசப்பட்டு இருக்கிறது.)


சுப்பு ரத்தினம்.

4 November 2012 at 17:09

//ஆனால்- வேர் தெரியாத நடப்புகளின் அஸ்திவாரம், பல சமயங்களில் அந்த விஷயத்திலேயே புதைந்து கிடப்பதும் உண்மை தான். அதைத் துருவிப் பார்பதற்கு பயம். மனிதனின் மூடத் தனமான பல பயங்களில் இந்த பயமும் ஒன்று. தன்னுள் பார்க்க பயம். தன்னைக் கண்டு பயம். தன்னுள் தானே ஒளித்து வைத்திருக்கும் பல விஷயங்களினால் தான் உருவானதை எண்ணி பயம்.//

அருமையான விவரிப்பு. உண்மையின் ஒளிவீச்சும் இதான்.
இதனால் தான், எண்ணங்களில் விளைந்த அந்த 'தன்' அனுபவிப்பு கூட எழுத்துக்களில் இன்னொருவராக அவதாரம் காண்பதுண்டு. எண்ணத்திற்கான சாபவிமோசனமே இது தான். எப்படியாயினும் வெளிப்பட்டேயாக வேண்டும் அது.

பார்வையில் பார்ப்பதும், படிப்பதும் தன் சொந்த கிளைபரப்பலில் எண்ணங்களாகப் படிந்து விடுவதுண்டு. பார்த்ததும், படித்ததுமே அதற்கான வேர்.கனவில் கூட வேரின் பொம்மலாட்டம் உண்டு. பதிந்தது எதுவும் வீணாவதேயில்லை. எந்த நேரத்தில் எது வெளிப்படும் என்பது தான் பிரம்ம ரகசியம்.

4 November 2012 at 17:53

ரொம்ப நாளைக்குப் பிறகு எழுதியிருக்கீங்க - welcome back.

எண்ணங்களின் பலன்கள் பற்றிய குறிப்புடன் வந்தால் - சுவாரசியமான கற்பனை. பாலைவனப் பாம்பும்.

socratic musing.

6 November 2012 at 08:37

எண்ணம் என்று தனியாக எதுவும் கிடையாது என்று ஒரு school of thought (ஆ!) இருக்கிறது. சில நேரம் அது யதார்த்தமோ என்று தோன்றும்.

எண்ணம் என்பது ஒரு பயிற்சியின் விளைவு என்கிறார்கள். மனிதருக்கு எண்ணம் என்பதும் எண்ணத்துக்கு உருக்கொடுப்பதும் பயிற்சியின் வழியாக வருகிறது என்கிறார்கள். ஒருவர் போல் இன்னொருவர் எண்ணாததன் காரணம் இதுவாகவும் இருக்கலாம்.

ஒரு குட்டிப் பரிசோதனை. பிறந்த குழந்தைக்கு எண்ணம் வருமா? (குட்டிப் பரிசோதனை என்றது அதனால் அல்ல) எத்தனையாவது வயதில் குழந்தைக்கு எண்ணம் தோன்றுகிறது? வெளிப்படுத்தத் தெரிந்தக் காலத்தில் எண்ணம் இருப்பதை அறிய முடிகிறது.

ஒருவேளை பேச்சாலோ வேறெந்த வகையாலோ வெளிப்படுத்த முடியவில்லையென்றால் எண்ணம் தோன்றவேயில்லை என்றாகுமா?

அப்படியெனில் வெளிப்பாடு தான் எண்ணமா? அல்லது எண்ணம் வேறா வெளிப்பாடு வேறா? வெளிப்படாத எண்ணம் எண்ணமா? இந்தக் கேள்விகளூக்கான பதிலில் உங்கள் பதிவின் கேள்விகளுக்கும் பதிலடங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

6 November 2012 at 08:45

திரு அப்பாதுரை அவர்கள் சில கருத்துக்களை ஐயங்களை எடுத்து இருக்கிறார்கள்.
அதற்கான வழி நடத்தும் சிந்தனைகள் இங்கே.

//எண்ணம் என்று தனியாக எதுவும் கிடையாது என்று ஒரு school of thought (ஆ!) இருக்கிறது. சில நேரம் அது யதார்த்தமோ என்று தோன்றும்.//

எண்ணம் என்பது ஒரு வேதியப்பொருளாக நுண்ணிய நரம்புகளிடையே சைனாப்ஸிஸ் எனும் முடிச்சுகள் ஊடே ஒரு செய்தியாக இருக்கிறது.
இந்தச் செய்தி அடங்கிய data ஒரு இடத்தில் இல்லாது பல இடங்களில் பரவி இருக்கிறது. ஒரு கம்ப்யூட்டரில் ஒரு டிரைவில் நாம் அமைக்கும் ஒரு ஃபைலில் அடங்கும் data எப்படி இடம் இருக்கும் இடமெல்லாம் சிதறிக்கிடக்கிறதோ fragmented wherever there is space அது போலத்தான் என்று ஒரு உதாரணத்திற்காகச் சொல்லமுடியும்.

எண்ணம் என்பது ஒரு பயிற்சியின் விளைவு என்கிறார்கள். மனிதருக்கு எண்ணம் என்பதும் எண்ணத்துக்கு உருக்கொடுப்பதும் பயிற்சியின் வழியாக வருகிறது என்கிறார்கள். ஒருவர் போல் இன்னொருவர் எண்ணாததன் காரணம் இதுவாகவும் இருக்கலாம்.

எண்ணங்கள் உருவாவதே ஐம்புலன்களின் திறனில் அடிப்படையில் தான். ஒருவர் பார்ப்பது, கேட்பது, நுகர்வது இத்யாதி போல இன்னொருவர் பார்ப்பது..முதலிய வற்றைச் செய்வதில்லை. ஒன்று திறன். இரண்டு ஐம்புலன்களால் பர்ஸீவ் செய்யப்பட்டதை அப்ஸார்ப் செய்யும் திறன். இதில் ஒரு வினோதம் என்னவெனின், ஒரு விஷயம் நமக்கு வேண்டுமா, பிடிக்காதா என்றெல்லாம் நமது பழைய சரித்திரத்தின் அடிப்படையில் மூளையில் உற்பத்தியாகும் வேதியப்பொருள்கள், முக்கியமாக செரொடினின் தீர்மானித்து, அதற்குத் தக்கவாறு தான் உள்வாங்கியதை சேமிக்கிறது . உள்வாங்கும்பொழுதே நமக்குத் தேவையில்லை எனின் புறக்கணித்து விடுகிறது. ஆகவே, ஒருவர் போல இன்னொருவர் ஏன் எண்ணவில்லை என்பது அவரவர் பௌதீக இயல்புகளுக்கு உட்பட்டதே.

//ஒரு குட்டிப் பரிசோதனை. பிறந்த குழந்தைக்கு எண்ணம் வருமா? (குட்டிப் பரிசோதனை என்றது அதனால் அல்ல) எத்தனையாவது வயதில் குழந்தைக்கு எண்ணம் தோன்றுகிறது? வெளிப்படுத்தத் தெரிந்தக் காலத்தில் எண்ணம் இருப்பதை அறிய முடிகிறது.//

குழந்தை ஒன்று அன்னையின் கருப்பையில் தோன்றிய உடனேயே எண்ணத் துவங்கி விடுகிறது என்பதைத் தான் ஆய்வுகள் முடிவாகச் சொல்கின்றன. ஒரு செல் தன்னைப் போன்று இன்னொரு செல்லை செராக்ஸ் காபி போல உண்டாக்கி ஒன்று, இரண்டாகி, இரண்டு நாலாகி, ஜ்யோமெட்ரிக் வகையிலே செல்வது மட்டுமன்றி எது எப்பொழுது எந்த அவயவமாக உறுப்பாக ஆகவேண்டும் என ஒன்று கூடி தீர்மானிப்பதையும் கவனித்தால், இந்த எண்ணச் செயல்பாடுகளின் துவக்கம் முதல் நாள் முதலே என்று தீர்மானமாகச் சொல்ல இயலும்.

//ஒருவேளை பேச்சாலோ வேறெந்த வகையாலோ வெளிப்படுத்த முடியவில்லையென்றால் எண்ணம் தோன்றவேயில்லை என்றாகுமா?//


ஒரு ஊமைக்கும் எண்ணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த எண்ணங்கள் தோன்றுவதற்கும் அந்த எண்ணங்களைத் தோன்றியவாறே
அதனை வார்த்தைகள் வடிவிலே சொற்களாக மற்றவர்கள் மத்தியிலே வைப்பதற்கும் தொடர்பு இல்லை.

ஒரு உதாரணத்திற்காகச் சொல்லப்போனால், உங்கள் பின்னூட்டத்தை ப் படித்த பலருக்கு அதன் பதில் அல்லது பதிலைத் தேடும் அவா தோன்றியிருக்கும். ஆயினும் பல்வேறு காரணங்களால், அவர்கள் அதைப் படித்து விட்டு வாளாது சென்றுவிடுகிறார்கள் என்றால் அவர்கள் சிந்திப்பதில்லை என்பது பொருளில்லை.

எனக்கு நேரமிருக்கிறது. மற்றும் உங்களுடன் கருத்துப் பறிமாறிக்கொள்வதில் எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆகவே எண்ணங்களை
எடுத்துரைக்கிறேன். அவ்வளவு தான்.//அப்படியெனில் வெளிப்பாடு தான் எண்ணமா? அல்லது எண்ணம் வேறா வெளிப்பாடு வேறா? வெளிப்படாத எண்ணம் எண்ணமா? இந்தக் கேள்விகளூக்கான பதிலில் உங்கள் பதிவின் கேள்விகளுக்கும் பதிலடங்கியிருப்பதாக நினைக்கிறேன்.//

பல சமயங்களில் எண்ணங்கள் வேறு. வெளிப்பாடு வேறு ஆக இருக்கலாம். இது தான் நீங்கள் முன்னம் சொன்ன பயிற்சியினால்
ஏற்படுவது. தீயது எனத்தெரிந்தும் தீயதைச் செய்பவன் , உதாரணமாக, காபி , மது அருந்தக்கூடாது என்று நன்றாகப்புரிகிறது. இருந்தும்
அதை செய்கிறோம். ஓவர் ஸ்பீடு போகக்கூடாது என்று தெரிகிறது. போகிறோம்.

மனதிலே எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது ஒரு வகை பயிற்சியிலே தான். இந்த டென்டன்ஸியையும் பயிற்சி மூலமாகவே தான் சரிக்கட்ட இயலும். பிராணாயாமம் போன்ற மன நல பயிற்சிகள் வழியே அபரிமிதமான எண்ணங்கள் உருவாவதையும், உருவான எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றவும் இயலும்.

ஏதோ கடந்த ஐம்பது வருடங்களில் அங்கங்கே நான் படித்த, வகுப்புகளில் எடுத்துச் சொன்னவைகளில் ஒன்றிரண்டை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான்.

சில தொடர்பு லிங்க் தருகிறேன்.. அவகாசமிருந்தால் படியுங்கள்.

http://www.scientificamerican.com/article.cfm?id=when-does-consciousness-arise

http://www.cbsnews.com/2100-500165_162-1421648.html

சுப்பு தாத்தா.6 November 2012 at 11:08


அன்பின் மாதங்கி, எண்ணங்களின் ஆழம் எழுத்தில் தெரிகிறது. பல கேள்விகளையும் எழுப்புகிறது. சீரிய சிந்தனைபுரிந்துகொள்ளத்துடிக்கும் ஆர்வம் , தமிழில் சரியாக எழுத வராது என்று கூறிக்கொள்ளும் உங்களிடமிருந்து
பிரவாகமாய்ப் பெருக்கெடுக்கிறது.எனக்கும் நிறைய கேள்விகள் எழும். அவ்வப்போது நிறையவே கேள்விகளை எழுப்பி பதில் காண முயற்சிக்கிறேன் “ எண்ணச் சிதறல்கள்” லிருந்து ஒரு பகுதி.
எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால்
எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்
எண்ணமது எழும்போதே இது ஏன் என்று
எண்ணத்தால் ஆராய்ந்தால், சுலபமாக
எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும்
எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்
” எல்லாம் மாயைதான்” என்ற என் பதிவுக்கு சமுத்ராவின் பின்னூட்டம் சுவையானது. பகிர்கிறேன்.
மாயை என்பது தண்ணீரில்
கிடையாக நிறுத்தி வைக்கப்படும் ஒரு கோலைப் போன்றது என்கிறார். என்ன தான் கோல் வளையவில்லை என்று நம் common sense சொன்னாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு கோல் வளைந்தே தெரிகிறது. அப்படிப்பட்டது தான் மாயை. மாயை என்று தெரிந்து கொண்டே
எல்லாவற்றியும் செய்ய வேண்டி இருக்கிறது இவ்வுலகில். மாயை என்று நாம் சொல்லும் போது
நம்மை அறியாமலேயே 'நிரந்தரம்' என்ற ஒன்றை பின்புலத்தில் கொண்டு வந்து விடுகிறோம்.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமே பகுத்தறிந்து சிந்திப்பது. நன்றாகவே சிந்திக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

6 November 2012 at 12:52

சுவாரசியமான கருத்துக்கள் சுப்பு ரத்தினம் ஐயா.

எண்ணங்களை வெளிப்படுத்தவில்லையென்றால் சிந்திக்கவில்லை என்று பொருளல்ல என்கிறீர்கள். இருக்கலாம். எனினும், எண்ணம் இருந்தது என்பது எப்படித் தெரியும்? நான் வெளிப்படுத்தவில்லை எனினும் என்னுள் எண்ணம் இருப்பதாக நீங்கள் சொல்வது உங்கள் ஊகம், உங்கள் எண்ணம். தவிர என்னிடம் எண்ணம் உண்டானதாகவோ மாறாகவோ யாராலுமே திண்ணமாகச் சொல்ல முடியாது. scientific reasoning வேறே logical reasoning வேறே இல்லையா? 'i think therefore i am' என்று நீங்கள் முன்பு குறிப்பிட்டதன் சாராம்சமும் இதே. இதன் implicational converse, 'i am therefore i think' அல்ல.

எண்ணம் என்பதும் சிந்தனை என்பதும் வேறு வேறு என்பது என் கருத்து. (போச்சுடா!)

7 November 2012 at 00:22

'என்' எண்ண‌ங்க‌ளையும், சிந்த‌னைக‌ளையும் கூட்டிக் க‌ழித்து பார்த்த பின்
தோன்றிய‌து "பூஜ்ய‌ம்".
"பூஜிய‌த்துக்குள்ளே ஒரு ராஜ்ய‌த்தை ஆள‌ விட்டு
புரியாம‌லே இருக்கும் ஒருவ‌ன்"
நல்ல‌ ப‌ல விற்ப‌ன‌ர்க‌ளின் (அப்பாஜி,மோக‌ன்ஜீ, சுப்பு ர‌‌த்தினம், ஜீவி, வெங்க‌ட், வ‌ல்லி சிம்ஹன்,மினாட்சி, பாலு சார்) ஆய்வுக‌ளை பின்னோட்ட‌த்திற்கு
கொண்டுவ‌ந்த‌ ம‌னரீதியான‌ ம்னோக‌ர‌ப் ப‌திவு.
டாக்ட‌ர் ருத்ர‌ன் வ‌ருவார்
என‌ எதிர்பார்த்தேன் /.... பார்க்கிறேன், பார்ப்போம்.. இது எண்ண‌மா? சிந்த‌னையா?
ம‌ன வோட்ட‌மா?

9 November 2012 at 16:31

Post a Comment