சரஸ்வதி பூஜ  

Posted by Matangi Mawley


நம்பாத்ல தினமும் சரஸ்வதி பூஜ தான். விஜயதசமி உட்பட! யாரோ சொல்லிட்டா- சரஸ்வதி பூஜ அன்னிக்கு சரஸ்வதிக்கு rest- படிக்கப்டாது-ன்னுட்டு! அவ்வளவுதான். நல்ல நாள்லேயே நாழிப் பால்! படிக்கற நேரத்துல தான் வேற என்னல்லாமோ பண்ணத் தோணும். இன்னிக்கு கேக்கணுமா?

அதோட desk மேல சந்தனம் குங்குமம் எல்லாம் வச்சு- புஸ்தகத்து மேல லாமும் எல்லாம் வச்சு- அடுக்கி வச்சுடணும். Holiday Homework குடுத்துருக்கரத இன்னும் தொட்டு கூட பாக்கல! கேட்டா- "இன்னிக்கு படிச்சா அந்த subject - நல்ல mark வராது"-ன்னு வேற ஒரு பதில்!

இந்த exam பொது எல்லாம் ஒரு பெரிய "சந்திரலேகா" cinema-வே ஓடும்! "Lucky பேனா", "Lucky pencil", "Lucky set uniform", "Lucky.." எல்லாமே! இதோட "Lucky uniform"- வேற daily தோய்ச்சு போடணும்! Office-லேர்ந்து வந்து இதோட அடுத்த பரீட்சைக்கு மன்னாடரதோட சேந்துண்டு இந்த தோக்கற வேல வேற! "Lucky பாட்டு" கூட உண்டு தெரியுமோ? சொன்னா சிரிப்பேள்! தெனம்- ஒரு மூணு பாட்டு ஏதோ- அத பாடிட்டு போனா தான் exam நன்னா எழுதுமாம்! இப்டி கடேசி ஒரு நாள், அர நாள் ஏன் படிக்கணும்? எல்லாத்தியும் முன்னாடியே படிச்சு வச்சிக்க ப்டாதா? ப்டாதே! அதெப்படி முடியும்? எத்தன வேல கெடக்கு!? TV பாக்கணும், notebook- கிறுக்கனும், புதுசா வாங்கி குடுத்த sketch பேனா அத்தனையும் colour அடிச்சு காலி பண்ணனும்!

அன்னிக்கு எதையோ சுத்தம் பண்ணிண்டு இருக்கறச்ச இதோட L.K.G. Progress Report கடச்சுது! "Spelling" நு போட்டு 86% நு போட்டுருந்துது! இது அவளோலாம் Mark வாங்கிருக்குன்னே எங்களுக்கெல்லாம் ஞாபகமில்ல! நெஜத்த சொல்லனும்னா- இது serious- உட்கார்ந்து படிச்சதையே நாங்க என்னிக்குமே பாத்ததே இல்ல! ஆனா Rhymes-லாம் நன்னா சொல்லும். அங்க ஒரு sister-dance ஆடிண்டே Rhymes சொல்லிக்கொடுப்பா. அதுக்கு ரொம்ப புடிக்கும் அதெல்லாம்.

"Humpty Dumpty" Rhyme- அ drama வாட்டம் போட்டாளாம். இது தான் "Humpty Dumpty"யாம். ஒரே அழுக! ஏண்டா அழற? அதானே டா Main Role னா- இது சொல்றது- வெறும் அந்த குட்டி chair- ஏறி நின்னுண்டு உழறது மட்டும் தான் இது பண்ணுமாம். ஆனா, Lalith, Vasanth- எல்லாரும் அந்த மர- குதிர ஏறிண்டு ஆடுவாளாம். இது அந்த குதிர மேல ஏறணும்-னு அவாள்ட கேட்டுதாம். அவாள்லாம்- "Practice பண்ணனும்" னு இதுக்கு தரவே இல்லையாம்!

வந்துது அங்கேர்ந்து. "அம்மா, இன்னிக்கு பாட்டு class-க்கு லீவு தானே"? ன்னுது. ஏன்னா- இன்னிக்கு பாடினா பாட்டு நன்னா வராதாம். அது நான்னா வரலேன்னாலும் பரவா இல்லன்னு இத தர-தர ன்னு இழுத்துண்டு போயாச்சு! "மாமாவது ஸ்ரீ சரஸ்வதி"ன்னு ஒரு பாட்டு சொல்லிக் குடுத்தா பாட்டு மாமி! அந்த சரஸ்வதி- நெனச்சுண்டு தானே இதுக்கு "மாதங்கி"-ன்னு பேர் வச்சுது! பாட்டும், படிப்பும் வராம எப்புடி போகும்?

துப்பாண்டி புராணம்- அத்யாயம் 3  

Posted by Matangi Mawley

நமக்குன்னு வந்து வாய்க்கறது பாரு! இப்ப இது நமக்கு தேவையா? இத யாரு விருந்துக்கு அழச்சாளாம்? வேற ஆத்துக்கு போகப்டாதா? இது இப்டி கடக்கரத பாத்தா எவளோ கஷ்டமா இருக்கு? நம்மள tolerate பண்ணிண்டு சாப்பாடு போடராளேன்னு கொஞ்சமாது எண்ணம் இருக்கணும்... இதுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்க- கதைய நீங்க மொதல்லேர்ந்து தெரிஞ்சுக்கணும்.

மூணு பூனை குட்டி இருந்துதொல்யோ? அதுல இந்த Vasco- அது என்ன பேரோ! நான் அத துப்பாண்டின்னுதான் கூப்படறது- அது எங்காத்துல நன்னா settle ஆய்டுத்து. ஏதோ நம்பாந்தான் ங்கராப்ல ஒரு சுவாதீனம். பந்தங்கள் வேண்டான்னு பாத்தா- நம்பள அது தேடி தேடி வருது! நாங்க அத adopt பண்ணிக்கல, அது தான் எங்கள adopt பண்ணிண்டுருக்கு. அது பசி ன்னு கேட்டா வெரட்ட மனசு வரதில்ல. என்னமோ தின்னு கிழிக்கராப்ல- கால்-கால்-கால் னு கத்தும். பால கொண்டோய் ஊத்தினா ரெண்டு வா சாப்டு அப்படியே வச்சுடும். மறுபடியும் கத்தும். மஹா வாலு! துரு-துறுன்னு ஏதாது பண்ணிண்டே இருக்கும். Fridge - அ தொறக்கற சத்தம் கேட்டா போரும்- ஓடி வரும் உள்ள. அத தொரத்தரதுக்கு அத்தன பிரயத்ன படணும். அவர் கிட்ட தான் ரொம்ப கொஞ்சல். காலுக்கு இடுக்குல பூந்து பூந்து வரும்.

ஒரு நாலு-அஞ்சு கொரல் வச்சுருக்கு அது. அப்ப-அப்ப சமயத்துக்கேத்தாப்ல ஒவ்வொண்ணு அவுத்து உடும். பசில கத்தரதுக்கு ஒண்ணு. அது கத்தும்போதே அப்டியே உலகத்தல இருக்கற அத்தன பாவப்பட்ட ஜீவன்களோட அழுகுரலையும் சேத்து பெசஞ்சு பண்ணினாப்ல ஒரு கொரல் அது. அத கேட்டா அதுக்கு ஏதாது போட்டே ஆகணும். போடாம இருக்க முடியாது. இன்னொண்ணு- அப்டியே கொஞ்சிண்டு- என்ன கொஞ்சு-ங்கராப்ல ஒரு கொரல். இன்னொண்ணு- இந்த சாப்ட அப்புறம்- என்ன disturb பண்ணாம உன் வேலைய நீ பாரு-ங்கராப்ல அலுத்துண்டு ஒரு கொரல்.

இதுக்கு ஒரு தங்கச்சி இருக்கோன்னோ! தங்கச்சியோ, தம்பியோ. தெரியல! Mosco ன்னு பேர் வச்சிருந்துது. இந்த China காராளும் சரி. பூனையும் சரி. எல்லாருமே ஒரே மாதிரி தான் இருப்பா என் கண்ணுக்கு. ஆனா வால் மட்டும் துப்பாண்டிக்கு மொழுக்குன்னு இருக்கும். இதுக்கு அணிலாட்டமா பொம்முன்னு இருக்கும். அதனால இத நான் Bushy ன்னு தான் கூப்படறது. ரொம்ப சமத்து. துப்பாண்டி என்னெல்லாம் இல்லையோ அதெல்லாம் Bushy . அதுக்கு கெட்ட பழக்கமெல்லாம் பழக்கி விடறதே இந்த துப்பாண்டி பய தான். "நீ என் கூட வாடா. உனக்கு நான் சாப்பாடு வாங்கி தரேன்"ன்னு சொல்லி இந்த Bushy ய கூட்டிண்டு வந்துடுத்து. இந்த Bushy அவளோ சமத்து. போட்டத ஓட்ட நக்கி சாப்டுடும் பாவம். இந்த துப்பாண்டி தான். அதுக்காவும் எதுவும் தேடிக்க தெரியாது- போட்டதையும் ஒழுங்கா சாப்டாது. இந்த Bushy யும் துப்பாண்டியும் அத்தன அன்யூன்யம். ரெண்டும் அப்டியே ஈஷிண்டு தான் படுத்துக்கும். அடிச்சிக்கும், புடிச்சுக்கும். ஆனா- ஒண்ணுக்கொண்ணு அத்தன கொஞ்சலும் நடக்கும்! ரெண்டும் ஜோடியா ஒண்ணுக்கொண்ணு மூக்க ப்ராண்டுண்டு வந்து நின்னுதுகள் அன்னிக்கு!

ஒரு நாள், என்னடாது- ரொம்ப நேரமா ஆள காணுமேன்னு நெனச்சுண்டே இருந்தேன். சௌக்யமா chair மேல ஏறி- நாலு காலையும் ceiling-அ தாங்கி புடிச்சுக்கற தோரணல, அவரோட dress-கு மேல நல்ல மெத்-மெத் ன்னு, சொஹுசா- சாவகாசமா தாச்சிண்டு, ஜம்முன்னு தூங்கிண்டுருக்கு இந்த துப்பாண்டி! அப்புறம் என்ன- தொரத்தி விட்டோம். திரும்ப வால தூக்கிண்டு இங்க தான் வரணும். என்ன பண்ணும்- அதுக்கு தெரியும். நம்ப ஏதோ தப்பு பண்ணிருக்கோம்னு. இந்த Bushy -ய அனுப்சு "டேய்! மொதல்ல நீ போய் கேளு டா. அப்புறம் நான் வரேன்" ன்னு சொல்லி அனுப்பும். Bushy வந்து கேட்டா இல்லன்னா சொல்ல போறோம். அதுக்கு போட்டப்ரம்- இது அப்டியே ஒண்ணுமே தெரியாத மாதிரி- வந்து சாப்டும். பயங்கர ஆளு!

அது பாட்டுக்கு இருந்துட்டு போறது போ! எம்பொண்ணுக்கும் போட்டி வேண்டிருக்கு. உனக்கு அது செல்லமா- நான் செல்லமா-ன்னுண்டு, அந்த பூனயோட வளயாடிண்டு- அது கூட சண்டையும் போட்டுண்டு கெடக்கட்டும்- னு விட்டுட்டோம்.

ஆனா நேத்திக்கு லேர்ந்து- துப்பாண்டி ஒரே dull ! ராத்திரி ஆனா ஒரு கத்து கத்தும். சாப்பட. ஆனா அது கூட கேக்கல. இந்த Bushy யும் ஆள காணும். அதுக்கு ஏதாது ஆயடுத்தா- அதனால தான் இது dull -ஆ ன்னு வேற கவலை. ராத்திரி எல்லாம்- முழிப்பு வரும் போதெல்லாம் இவர்- வெளீல பொய் பாத்துண்டே இருந்தார். துப்பாண்டி தூங்கவே இல்லையாம்! காலம்பரையும் சத்தத்தையே காணும். ஒரே கவலயாடுத்து! இப்படி எல்லாம் இருக்கவே இருக்காது. துரு துறுன்னு தான் எப்போதும் இருக்கும். கஷ்டமா இருக்கோன்னோ- பாக்கரவாளுக்கு!

நமக்குன்னு வந்து வாய்க்கறது பாரு! இப்ப இது நமக்கு தேவையா? இத யாரு விருந்துக்கு அழச்சாளாம்? வேற ஆத்துக்கு போகப்டாதா? இது இப்டி கடக்கரத பாத்தா எவளோ கஷ்டமா இருக்கு? நம்மள tolerate பண்ணிண்டு சாப்பாடு போடராளேன்னு கொஞ்சமாது எண்ணம் இருக்கணும்...

அப்புறம் இது போய் அத எழுந்துரு ன்னு சொல்லி பாத்துது. நிக்க வைக்க பாத்த பொது தான்- அதால நிக்கவே முடியலன்னு தெரிஞ்சுது! பின்னாடி கால் ஒன்னு- நன்னா வளைஞ்சு இருந்துது! எங்கேர்ந்தோ தாவி குதிக்க பாத்து- அடி பட்டுண்டுருக்கு! அதான் அத்தன சோர்வு! ஒரு வா சாப்படல! அதுவும் எழுந்துருக்க அத்தன பிரயத்ன படறது! அந்த கால் அத புடிச்சு பின்னாடி இழுக்கறது. ஒரு step நகர முடியல! இப்டி அவஸ்த படறதே இதுன்னு நெனச்சாலே ஒரே வருத்தம்.

எம்பொண்ணு இந்த mobile -ல map வருமே- அதுல Blue Cross எங்கயாது இருக்கான்னு பாத்துது! Besant Nagar Theosophical Society கு உள்ள
இருக்குன்னு கண்டுபிடிச்சாச்சு. துப்பாண்டிய ஒரு பை-ல போட்டு- வண்டி பின்னாடி இது புடிச்சுண்டு, அங்க கூட்டிண்டு போனா இவா ரெண்டு பேரும். யாருக்கு இப்டி தோணி ஒண்ணுபண்ணினாளோ ன்னு தெரியல. அத்தன மிருகங்கள் அங்க இருந்துதாம்! ஆட்டோ ல லாம் அவா அவா நாய் குட்டிய எல்லாம் அழச்சுண்டு வந்துருந்தாளாம். யாரு பண்ணினாலும்- அவாளுக்கு மஹா புண்ணியம்!

சாதாரண விஷயம் தான் போலருக்கு. ஒரு injection போட்டாளாம். அப்புறம் ஒரு மருந்து வாய்ல விட்டாளாம். அத எப்புடி புடிக்கணும் னு கூட தெரியாதா எங்களுக்கு! அங்க hospital -அ இது கழுத்த புடிச்சு தூக்கறா- அதுவும் பேசாத காட்டிண்டு இருந்துதாம்! ஒரே பயம் போலருக்கு அதுக்கு. கால்-எல்லாம் நடுங்கிண்டே இருந்துதாம்! அப்புடியும் injection போட்டப்ரம் அதோட பல குரல்-ல ஒரு குரல்-ல கத்திருக்கு! அந்த doctor அத தடவி குடுத்தாளாம்- "ஒண்ணுமில்ல"ன்னு! அப்புறம் பேசாத இருந்துதாம்!

ஆத்துக்கு கூட்டிண்டு வாந்தாயாச்சு! அந்த டாக்டர் அங்க- Whikosi ன்னு ஒரு fish flavour பூனை சாப்பாடு இருக்குன்னாளாம். அத வாங்கிண்டு வந்து சாதத்துல கலந்து குடுத்தாச்சு. ரெண்டு spoon சாப்டு போரும்-நுடுத்து! ஆனா காலேல யோட better ! இப்போ நொண்டறது! நொண்டிண்டே அதோட அட்ட பெட்டில பொய் படுத்துண்டுடுத்து! தூங்கிண்டு இருக்கு இப்போ!

வளந்துடுத்து! பொட்டி சின்னதா இருக்கு... பெரிய பொட்டி வாங்கணும்!

"வீடு வாடகைக்கு"  

Posted by Matangi Mawley


"நம்ம 127 வாடகைக்கு விட்டாச்சு, தெரியுமோன்னோ"?
சாந்தா மாமிக்கு மட்டும் எல்லா விஷயமும் அத்துப்படி! "ரேடியோ மாமி" ன்னு தான் அவாளுக்கு பேரே, தெருல!
"யாரு வரப்போறாளாம்"?
"யாரோ Bank Manager -ஆம். ஒரே பொண்ணாம். அதனால தான் உன் காதுல போட்டு வச்சேன். நம்ப கிஷ்ணனுக்கும் வயசாறதே" அப்டின்னா ரேடியோ மாமி.
"நல்ல காரியம் பண்ணினேள் மாமி! நானும் இந்த வருஷம் எப்படியும் கிருஷ்ணன் கல்யாணத்த முடிச்சுடணும்னு ஒரு வைராக்யத்தோட இருக்கேன். இவரான்னா- நடக்க வேண்டியது நடக்கும்-னு இருக்கார். நம்ப புள்ளைக்கு நம்ப பண்ணலேன்னா யாரு பண்ணுவா? நீங்களே சொல்லுங்கோ"!
"வாஸ்தவம் தான்". அப்டின்னா ரேடியோ மாமி. அந்த மாமிக்கு வந்த வேல முடிஞ்சுது.
"அது சரி..! அவா நம்பளவாளா"? ஆச்சு! சாவி மாமிக்கு அடுத்த கவலை.
"அப்டிதான் நெனைக்கறேன். வரட்டுமே! இங்க தானே இருக்கப் போறா! தெரிஞ்சுண்டா போச்சு..."- அதானே! ரேடியோ மாமியா கொக்கா!

***

"பொண்ணு நல்ல துரு துரு-ன்னு இருப்பாளாம். எல்லாம் நம்மளவாதான். இப்போதைக்கு அவ அப்பா மட்டும்தான் ஜாக வந்துருக்காராம். அம்மாவும் பொண்ணும் அப்பறமா வருவாளாம்"- இது ரேடியோ மாமியோட latest news !
"நீங்க Manager -அ பாத்தேளா மாமி"? ன்னு சாவி மாமி கேட்டா.
"இல்ல-இல்ல. 128 ல நம்ம சுஜி இருக்கோன்னோ? அது சொல்லித்து"!
"அம்மாவும் பொண்ணும் எப்ப வராளாம்"?- சாவி மாமி கவலை அவாளுக்கு.
"அடுத்த வாரமே வந்துடறதா கேள்விப் பட்டேன். நீ எதுக்கும் கிருஷ்ணன் காதுல போட்டு வை. நம்ப பண்ணறத பண்ணிண்டு- அப்புறம் அவன் மாட்டேன்னுட்டான்னா"?- அப்டின்னு நூறு வார்த்தைக்கு ஒரு வார்த்தையா சொன்னா ரேடியோ மாமி!
"தோ! இன்னிக்கே கிருஷ்ணன ஒரு வார்த்த கேட்டுட்டா போச்சு..."- சாவி மாமி களத்துல எறங்கிட்டா!

***

"அவாள்ளாம் வந்துட்டாளா, மாமி"?- சாவி மாமி ஆர்வமா கேட்டா.
"எல்லாம் வந்தாயுடுத்து..."- அப்டின்னு சலிச்சுண்டா, ரேடியோ மாமி!
"ஏன் மாமி? என்னாச்சு? நம்பளவா இல்லையா என்ன"?- அப்டின்னா சாவி மாமி.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல..."ன்னு இழுத்தா ரேடியோ மாமி!
"நீங்க சொன்னேளேன்னு கிருஷ்ணன் காதுல வேற போட்டு வெச்சேன்.. என்ன நடந்துதுன்னு சொல்லுங்கோ மாமி.."- சாவி மாமிக்கு suspense தாங்கல!
"நேத்திக்கு தான் அவாள பொய் பாத்துட்டு வந்தேன்..."- அப்டின்னு ஆரம்பிச்சா ரேடியோ மாமி...

***

இருவது வருஷம் கழிச்சு, ஒரு நாள்-

மாலி:
Bank Manager - அவரோட ஒரே பொண்ணோட, மாமிய அழைசிண்டு குடி வரார்னு தான் அவாளுக்கு தெரியும். அந்த பொண்ணு இப்போதான் L .K .G படிக்க போறதுன்னு அவாளுக்கு தெரியுமா என்ன...?
மாதங்கி: ச! Superb plot பா! Blog -ல போடலாம்....
மாலி: Serious - ஆ எழுதி- நீ எப்போதும் English ல எழுதும்போது பண்ணறாப்ல யாரயாது close பண்ணிடாதடா....

வண்டல்  

Posted by Matangi Mawley

தெளிவில் தெளிந்த நீர். அதன் ஆழத்தில் அமைதி கண்டிருந்தது மணலும், கற்களும்- வண்டல் . நீரின் தெளிவில் தெரிந்ததாம் அதன் ஆழத்து வண்டல். ஒரு சிறிய கல் கொண்டு வண்டலை மேலே எழுப்ப முயற்சித்துப் பார்த்தால் என்ன? வேண்டாம். அது ஆழத்தில் இருப்பதே நன்மை. அதற்கும் சரி- நமக்கும் சரி.

வண்ணம் பொடிந்து கீழே விழுந்த சுவற்றை வேறொரு வண்ணம் கொண்டு மூடி விடுகிறோம். அந்த சுவற்றை அப்படியே விட்டு விட்டால் தான் என்ன? கூடாது! அப்படி எப்படி விட்டு விட முடியும்? அதன் மீது வேறு வண்ணம் பூசுவதிலேயே நன்மை. சுவற்றிற்கும் சரி- நமக்கும் சரி.

குழப்பங்களை தாழ்த்திக்கொண்டு விடுகிறோம். அதன் தாக்கங்கள் மனதின் ஆழங்களில் படிந்து விடுகின்றன. அதை நாம் தட்டி விட முயற்ச்சிப்பதில்லை. அச்சம். கண்களின் பார்வைகளின் ஒளி எங்கே அந்த குழப்பங்களின் தாக்கத்தினால் மங்கிப் போய் விடுமோ என்ற அச்சம். இருட்டில் பார்க்கும் திறன் தெரியாதவர்கள் மனிதர்கள். இருட்டிற்கு ஒரு உன்னத குணம் உண்டு. எல்லாவற்றிலும் அது தன்னைப் படரச் செய்துவிடும். இருட்டு- தம்மையும் தாக்கி விடும் என்ற அச்சத்தில் இருட்டை தம்முள் பூட்டி விடுவர் மனிதர்கள்.

மனதின் ஆழங்களில் படிந்து போன அந்த இருட்டை, படர விடாமல் தடுத்து விட்டதாக எண்ணிக் கொண்டு திருப்தி அடைந்து விடுவர் அவர். அவர்களின் "சிறிய வெற்றிகளில் மகிழ்ச்சி அடையும்" இந்த குணத்தை- அந்த இருட்டு நன்கு புரிந்து கொண்டிருந்தது. அவர்களையும் மீறி அந்த இருட்டு அவர்களுள் பரவுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

காற்றின் வேகம் தாள முடியாமல் தன கூட்டிலிருந்து கிழித்து எறியப்பட்ட ஒரு இலை- கலக்கமில்லாத நீரில் விழுந்தது. இது காற்றின் தவறல்ல! இலையின் பிழையல்ல! நீரின் விதியுமல்ல! இயற்கை.

வண்டல்- வெளிச்சம் காணும் பொருட்டு ஆர்வத்துடன் மேல் எழும்பியது. வண்டலின் வாழ்க்கையில் அது வெளிச்சத்தை கண்டதே இல்லை. அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அதற்க்கு ஆர்வமாக இருந்தது. அதன் ஆர்வத்தால், நீரில் ஒரு சில சலனங்கள். "நீரையும் மீறி விட வேண்டும்; வெளிச்சத்தை கண்டு விட வேண்டும்"- என்று அது துடித்தது. வண்டலின் சுயம் அதை எதிர் கொண்டது. அதை மீறி வெளிச்சம் நீரை எட்டாது- என்று தெரியுமா என்ன வண்டலுக்கு! வெளிச்சம் அதன் மீதே வீற்றிருந்தும் வண்டலால் அதைக் காண முடியவில்லை.

நீரின் எல்லைகளைக் கடந்தது. எழும்பியது. நீரைத் துள்ளச் செய்தது. ஆயினும், வெளிச்சத்தை அதனால் காண முடியவில்லை. ஏங்கியது. தன்னையே சலித்துக் கொண்டது. சில காலம் காத்திருந்தது- வெளிச்சம் தோன்றும் நம்பிக்கையில். ஏமாற்றம் அடைந்தது. நீரின் ஆழத்தில் தாழ்ந்து போனது. வண்டலானது.

நன்றி...  

Posted by Matangi Mawley


கடந்த நான்கு வருடங்களாக என் வாழ்க்கை முறையையும்- பயணத்தையும்- சீர் செய்து கொடுத்து., என்னை நான் இன்றைக்கு எப்படி இருக்கிறேனோ- அப்படி ஆனதற்கான ஒரு பெரும் கருவியாக நின்று- நான் சிரிக்க மறந்த போதெல்லாம் என் சிரிப்பை மீட்டுக் கொடுத்து, நான் நினைக்க மறந்த போதெல்லாம் என் நினைவுகளை மீட்டுக் கொடுத்து- என்னை என்றுமே விட்டுப் பிரியாமல் இருந்த என் "LIGHTER SIDE" கு என் நன்றி. 100 பதிவுகள் எட்டிப்பிடிக்க வைத்தமைக்கும் என் நன்றி!

பாட்டி சமையல்  

Posted by Matangi Mawley

இதுக்கெல்லாம் ஒத்தி சமைச்சு போடறேன் பாருங்கோ! மொதல்ல என்ன சொல்லணும்! நான் என்ன பண்ண முடியும்? நேக்கு தெரிஞ்சது இவ்வளவுதாண்டாப்பா! ஏதோ ஒரு உப்மாவ பண்ணி- "இது எங்க பேபியே அவ கையால செஞ்சது"-ன்னு பாவம் என்ன இவர் தலேல கட்டிட்டா- எங்காத்துல! இப்ப நான் பண்ணறது எல்லாம் நானா கத்துண்டு பண்ணறது தான்! ஒத்தி கஷ்ட பட்டு நாலு மணிக்கு எழுந்துண்டு சமைச்சு வெச்சுட்டு வேலைக்கு ஓடறாளே- செத்த நன்னா இருக்குன்னுதான் சொல்லுவோமே- ன்னு உண்டா? "பாட்டி சம்பாராட்டம் இல்லை"- யாம்!

இத மொதல்ல அது பாட்டியாத்துல லீவுக்கு உட்டதுதான் தப்பு! ஒண்ணர மொழ நீளத்துக்கு நன்னா நாக்க வளத்துண்டு வந்து நிக்கறது! எங்கம்மா ப்ரமாதமா சமப்பாதான். இல்லங்கல. சில பேர் கை பக்குவம் அப்டி. அப்டியே கண கச்சிதமா அமஞ்சுடும்! தோ! இவரும் அப்டிதான். எம்பொண்ண கேளுங்கோ! அதோட "Ranking" படி 1st rank பாட்டி சமையல், 2nd rank- அதோட அப்பா சமையல்!

சனிக்கழம சாயந்தரமா ரெண்டுமா கெளம்பி- ஸ்ரீரங்கம் தெக்கு சித்தர வீதி Market லேர்ந்து எல்லா காரிகாயும் வாங்கிண்டு வந்து- ஞாயத்தி கெழமயானா- காத்தால அவியல்! அவ அப்பா special! ஏதோ- அவர் புண்ணியத்துல நாலு கரிகா உள்ள போரதேன்னு சந்தோஷ பட்டுக்கணும். ஒரு சில அப்பா special இருக்கு- அப்புறம் பாட்டி special! அம்மாக்கெல்லாம் ஒண்ணும் கெடயாது! அதுக்கே எட்டூருக்கு இருக்கு நாக்கு! இவர் வேர கூட சேந்துண்டு நன்னா ஏத்திவிட வேண்டியது!

School போறதுக்கு முன்னாடி, பருப்புஞாம் சாப்டு போடான்னு hot pack ல வெச்சுட்டு போனா- எங்காத்து மஹானுபாவர் அதுல மிளகு, ஜீரகம்- அது இதுன்னு என்னன்னத்தையோ போட்டு- ஆஞ்சநேயர் கோவில் பொங்கல் பிரசாதமாட்டம் பண்ணி கொடுக்க வேண்டியது!

வீணை வாசிப்பாரே- சிட்டி பாபு- ரொம்ப வருஷம் முன்னாடி அவர ஒரு train ல போறச்ச பாத்து friends ஆய்ட்டாராம்! சங்கீதத்த பத்தி பேசினாளா இல்லையான்னு நேக்கு தெரியாது! அவாத்து மாமி, அவருக்கு tiffin டப்பால bread மேல மிளகா பொடி, ஜீனி ரெண்டுத்தையும் வெண்ண போட்டு கலந்து தடவி கொடுத்துருந்தாளாம்! அவ்வளவுதான்! இதுக்கு பழக்கி விட்டாச்சு! இது farex சாப்ட காலத்லையே அதுல ரசத்த கலந்து குடுடீங்கும்! இப்டி காரமா சாப்டா கோவம் தான் வரும்!

நம்பளால இந்த வேலைளாம் செய்ய முடியாதுடாப்பா! நேக்கு தெரிஞ்சதுதான் நான் பண்ணுவேன்! ஏதோ- ஒரு தோசயாது பண்ணி இது கிட்ட ஒரு rank வாங்கிடலாம்னு பாத்தா- "தாயி தான் தோச நன்னா பண்ணுவா" ங்கறது! அதுக்கு சின்ன வயசுல "ர" வராது! அதனால அது பெரியம்மாவ தாயி-ன்னு கூப்டும். ஆனா இன்னி வரைக்கும் அந்த வார்த்த அதுக்கு எங்கேர்ந்து கடச்சுதுன்னு தெரியல!

போரும்! போரும்! எல்லாம் எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சமச்சா போரும். நேக்கு கல்யாணமான புதுசுல "மீனாக்ஷி மாமி" புஸ்தகத்லேர்ந்து படிச்சு கத்துண்டதுதான் இப்ப இதுக்கு lunch box கட்டி தரது! அது போரும்! அதுக்கா என்ன தெரியும்? முருங்கக்கா மாங்கா போட்ட சாம்பார்-லேர்ந்து, முருங்கக்கீர தேங்கா போட்ட கரி வரைக்கும் பாட்டி சமையல் ருசி நாக்குல ஏறி கடக்கு, அதுக்கு! இதுக்கெல்லாம் இப்ப தெரியாது! இதுக்கு ஒண்ணு பொறந்து- அதுக்கு இது வடிச்சு கொட்டும்போது- அது- "எங்க பாட்டி சமையல் தான் ஒசத்தி"ங்கும் பாருங்கோ- அப்ப புறியும், என் அரும!

சிறை  

Posted by Matangi Mawley


ஒரு சிந்தனைச் சிறையில் அகப்பட்டுக்கொண்டுவிட்டேன், என்னையும் அறியாமல். இருப்பதற்கும், இல்லாததர்க்கும் இடையில்- நிராதரவாக, நிராகாரமாக சஞ்சரித்துக் கொண்டிருக்கும் "மாயை" எனப்படுவத்தின் உண்மைகளே வாழ்க்கையா- அல்லது உண்மை இல்லாதது வாழ்கையா? ஆன்மீகவாதிகளும், மதத்தலைவர்களும், கற்ற பல ஞானிகளும் வாழ்கையை "மாயை" என்றே கூறி விடுகிறார்கள். கல்லாத பலரும்- அவர்கள் கூறுவதை உண்மை என்று நம்புகிறார்களோ இல்லையோ- அப்படிச் சொன்னால் "கற்றவர்", "அறிந்தவர்" என்ற பட்டியலில் தாமும் சேர்ந்து விடுவோம் என்று நம்பி அப்படியே கூறிவிடுகிரார்கள்.

எதை எடுத்தாலும் இருப்பதை மறுப்பதே ஒரு சிலருக்கு வேலையாகப் போய் விட்டது. "நீ கடவுள் உண்டு என்கிறாயா? நான் இல்லை என்பேன். நீரில் ஈரம உண்டு என்பாயா? நான் இல்லை என்பேன்"! என்று கூறும் இவர்கள்- தாம் மறுத்துப் பேசும் விஷயத்தை வெறும் வார்த்தைகளோடு விட்டுவிடுவதில்லை. அதற்குப் பல அறிய, புதிய, பெரிய விளக்கங்களைக் கொடுத்து- விஞ்யான பெயர்களால் கட்டி, புரியாத கணக்குகள் பல கோர்த்து- பூட்டு போட்டு பூட்டி விடுகிறார்கள். இதில் என்னைப் போன்றவர்கள்- இவர்கள் கூறும் அனைத்திலும் உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டதாக நினைக்கையில்- ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு கணிதம் தவறு என்றும் நினைக்கத் தோன்றி விடுகிறது!

எனவே துரு பிடித்துப்போன என் சிந்தனை வகுப்புகளை தட்டி எழுப்ப முயற்சித்தேன். அந்த சிறையில் அகப்பட்டுக் கொண்டேன். சிந்தனைகளின் தாக்கத்தையும் மறந்து- அங்கிருந்து வெளி வர வாயில் உண்டோ என்று தேடினேன். "உண்மையே வாயில்" என்ற அறிக்கை அங்கு இருக்கக் கண்டேன். ஆறுதல் கூறிக் கொண்டேன். சிந்தனைச் சிறைச்சாலையின் கம்பிகளை எண்ணத் துவங்கினேன்.

"மேட்ரிக்ஸ்" சினமாவில் வருவது போலத்தான் நம் வாழ்கை என்று நினைக்கத் தோன்றியது. மனிதர்களை, இயந்திரங்கள்- தங்களின் சக்திக்காக எப்படி உற்பத்தி செய்கிறதோ- அதே போலத்தான் "சக்தி"/"பிரமம்", எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்- "சக்தி" எனப்படுவது, தன் "சக்தி" எனப்படுவதை நிலைக்க வைப்பதற்காக நம்மை உருவாக்கிக் கொண்டதாக நினைக்கத் தோன்றியது. நம் நினைவில் அதன் உயிர். "என் கரு- பிரபஞ்சம். அதில் உயிர் என்னும் விதை நான் விதிக்கிறேன்"- என்பதற்கும், "மேட்ரிக்ஸ்" கும் எந்த வித வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சரி, இதிலிருந்து தான் அது.

நான் இருக்கிறேன். எனக்குத் தெரியாத, புரியாத விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சிந்தனைகளை நான் சிந்தித்து- அதிலிருக்கும் கருத்துக்களை அறிய முயற்சித்துக் கொண்டிருத்தல்- "மாயை" எனப்படுவத்தின் மெய்யா? பொய்யா? எதை "மெய்" என்றும்- "பொய்" என்றும் ஒப்புக்கொள்வது? ஏனெனில் "உடல்" என்பதையும் "மாயை" என்கிறார்கள். "மனஸ்" என்பதையும் "மாயை" என்கிறார்கள். எனவே இங்கு "மெய்", "பொய்" எனக் கூறப்படுவது- இருப்பதும் இல்லை- இல்லை என்று மறுத்துவிட முடியாததும்- ஆனால் இல்லை என்பதே இருப்பது என்று நினைத்துக்கொண்டிருப்பதும் இல்லை.

"நாம் தூக்கத்தில் இருக்கிறோம்" என்கிறார்கள். "ஆழ்ந்த நித்திரை" என்ற தன்மையிலிருந்து உதித்ததே "மாயை" என்கிறார்கள். அதாவது- மனிதர்களுக்குரிய முதல் மூன்று நிலைகள் "ஜாக்ரத்", "ஸ்வப்ன", "ஸுஷுக்தி" என்ற மூன்று நிலைகளில், "ஸுஷுக்தி" என்ற நிலையிலிருந்து "மாயை" எனப்படுவது பிறக்கிறது என்கிறார்கள். "மாயையும்", "உண்மையும்" பிணைந்து- இருப்பதையும், இல்லாததையும் உருவாக்கியது என்கிறார்கள் ("sathyam chaa nrutham cha sathyam abhavath"). இப்படியே சிந்தித்துக்கொண்டிருக்கையில் தான் தோன்றியது என் சிந்தனையின் வடிவம் வட்டம் என்று!

சிறை வாயில் திறந்தது!

துரு துரு துப்பாண்டி  

Posted by Matangi Mawley


மியாவ்-மியாவ் - Part 2


நான் சொன்னேனா- கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கோம் இந்த பூனகளாலன்னு? ஒண்ணு விட்டா ஒண்ணுன்னு எதையாவது புடிச்சுண்டு நிக்கறது! டி.வி இல்லையா. பூனை!

தெனம் இது வெளீல போம்போதும் வரும்போதும் எட்டி எட்டி, அந்த பூனைகள் தூங்கறதா என்னன்னு பாத்துண்டே போகும். ஆத்துல இருக்குன்னா பூனைகள் எப் வரும் எப்ப வரும்னு கேட்டுண்டே இருக்க வேண்டியது!

அந்த குட்டிகளா- படு சமத்து! அதுல இந்த கருப்பு- Bosco இருக்கே! "கருமமே கண்ணா" இருக்கும். மொதல்ல அதுதான் வந்து கோரல குடுக்க ஆரம்பிக்கும். அது எதோ ஒரு பரி பாஷ வச்சிண்டுருக்குகள். இது சாப்ட வந்து கோரல கொடுத்தாலே மத்ததுகளும் வந்துடும். chorus- மியாவ்-மியாவ்-ங்கும், எல்லாமே. Vasco வும் துரு-துரு தான். ஆனா Bosco பூனை தான் சாப்படரதுல correct- இருந்துக்கும்.

அது வந்து கூப்டு நம்ப கேக்கலேன்னா இவர் உக்காந்து வேலபாக்கர computer room கு நேரா இருக்கற மதில்ல ஏறிண்டு இவற பாத்து கேக்கும்! நன்னா தெரியும் அதுகளுக்கு எங்க எப்டி யார கேட்டா விஷயம் நடக்கும்னு. இவர் உடனே பால் ஆச்சா- கொண்டாம்பார்! அதுகளுக்குன்னு ஒரு cup வச்சிருக்கோம். இது இருக்கே! அதுகள் சத்தம் கேட்டா போரும்! நா-நா- நான்தான் பால் ஊத்துவேன்னு ஒரே தை-தை. இது எங்க அதுகளுக்கு பால் கொடுக்க போய்- அதுகள பாத்து பயந்து விழுண்டதுடுமோன்னு ஒரே பயம் எனக்கு.

அதுகளா- நம்முளுக்கு தான் பால் வருதுன்னு தெரிஞ்சா போரும்! மியாவ்-மியாவ்ங்கும். நம்ம மோகத்த பாத்துக்கும். ஒன்னும் சொல்லலைன்னா- ரெண்டு படி ஏறி மேல வரும். மறுபடியும் கோரல கொடுக்கும். நம்மள பாத்துக்கும். ரெண்டு படி ஏறும். அதுகள கீழ போங்கன்னு சொல்லி பால எடுத்துண்டு போய் விடரதுக்குள்ள அதுகளுக்கு தாங்காது. காலையே சுத்தி சுத்தி வரும். cup- கீழ வைக்கரதுக்குள்ள Bosco பூனை இருக்கே- அது முன் கால் மேல தூக்கிண்டு ஒரு jump ஒண்ணு பண்ணும். விட்டா கை லேர்ந்து தட்டி குடிக்கும் போலருக்கு.

ஆனா- ரொம்ப கொழுப்பு தெரியுமோ..? பால் விடற வரைக்கும் தான் இந்த கொஞ்சலெல்லாம். விட்டப்ரம், அதுகள் குடிச்சு முடிச்சப்ரம்- பெப்பே-ங்கும்.

அதுல- இந்த Mosco இருக்கே- செரியான அம்மா-கோண்டு. அம்மாவோட தான் வரும், போகும். ஆனா ஒரு நா என்னாச்சு, எல்லா பூனைகளும் அத தனியா உட்டுட்டு எங்கயோ போய்டுத்துகள், பாவம். சாப்ட ஏதுமில்லாம- காலேல 5 மணி. Hall- light- போட்டுட்டு வெளீல வந்து பாக்கறேன்! பாவமா வெளீல நின்னுண்டு கோரல கொடுத்துண்டுருக்கு. அதுக்கேன்னமோ double கொரலா இருக்கும். அது மியாவ்-மியாவ் ங்கும் போதெல்லாம், ஒரு கண்ணு வேற முடிக்கும். அந்த கொரலும், அது மொகமும்! அத்தன பாவமா இருக்கும்! பால காச்ச கூட இல்ல! அது பசின்னு கேட்டுடுத்து பாவம். அப்டியே கொடுத்தேன். முழுக்க குடிச்சுடுத்து. மீதி பூனை- especially அந்த Bosco துப்பாண்டி இருந்தா, இதுக்கு துளியோண்டு தான் கடைக்கும். பாவம்!

ஏதோ! மூணும் நல்ல ஒத்துமையா இருக்குகள். எம்பொண்ணு- பால் விட போகும்போதெல்லாம் அதுகள தடவி உட்டுட்டு- "தொட்டேனே- தொட்டேனே" ங்கும். "நீ தொட்டுக்கோ, கொஞ்சிக்கோ- என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆத்துக்குள்ள வந்து அழுக்கு பண்ணித்துன்னா நீதான் clean பண்ணனும்" னு பயமுறுத்தி வச்சிருக்கேன். அதனால அமைதியா இருக்கு.

அன்னிக்கு, எங்காத்துலேர்ந்து என் உடன் பிறப்புகளெல்லாம் phone பண்ணி பேசித்துகள். இது எங்காத்ல மூணு பூனை இருக்குன்னு வேற டமாரம் அடிச்சுது, இது. உடனே எம் பரம்பரையே phone பண்ணி- ஆத்துக்குள்ள வராம பாத்துக்கோ. Allergy- அது, இது ன்னு free advice- ஆன free advice!

ஆனா அதுகள் எத்தன நாளேக்கு தான் இப்டி துரு-துரு துப்பாண்டியாவே, குட்டிகளாவே இருக்க போரதுகள்! அதுகளும் பெருசா போய்டும்! நாமள எல்லாம் நெனச்சுக்குமோ, நெனச்சுக்காதோ! எங்காத்து துப்பாண்டியும், எத்தன நாளேக்கு தான் இப்டியே இருந்துடும்! தோ! வாசல்ல கொரல் கேட்டுடுத்து.. பால் ready பண்ணனும்...


ராட்டினம்  

Posted by Matangi Mawley


பஞ்சு மிட்டாய் சுழன்று-சுழன்று வரும் காட்சி. அதன் வெட்கம் என் நாவிலும் ஒட்டிக்கொண்டது! அந்த பிளாஸ்டிக் வளையல்கள் என் கைகளில் நுழையாமல் போய் விடலாம். ஆயினும் அதன் மீதிருந்து தங்கத் துகள்கள் என் கைகளில் போடிந்தது. சிரிக்கும் கோமாளியின் டமாரம் அடித்துக்கொண்டே இருக்கும். ஒரு சில சமயங்களில் நின்றும் போய்விடும். நதிகள் அங்கே நிற்கவே நிற்காது! அதற்கு ஸ்டேஷன்களும் கிடையாது. கொடிகளும் கிடையாது.

நீலம்
, சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா- இன்னும் எத்தனையோ வண்ணங்களில்அங்கு பலூன்கள். அதே போன்று பல்வேறு வண்ணங்கள் கொண்ட மூக்குக்கண்ணாடிகள். அதை இரவிலும் மாட்டிக் கொள்ளலாம். அந்த துப்பாக்கிகளில்தொட்டாவிற்கு பதில் நீர் இருக்கும். தொலைக்காட்ச்சியை கையில் வைத்துத் திருகினால் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படம் நம்மைப் பார்த்து சிரிக்கும். அங்கு புல்லாங்குழல்கள், பாதியில் வெட்டப்பட்டிருக்கும், விலை மலிவாகஇருக்கும். ஆனால் அதிலிருந்து இசை எழச்செய்வது என்னவோ அதைவிற்பவனால் மட்டுமே முடியும். போம்மைகளுக்கும் இனிப்புகளுக்
கும் ஏங்கித்தவித்து அழும் குழந்தைகளின் நாக்கு என்னவோ மிட்டாய் நிறத்தில் தான் இருக்கும்!

என்
கை சிவப்பாக மின்னிக்கொண்டிருந்தது- அதில் ஒரு மயில் தன
தொகையை விரித்து, அழகாகவும், ஒயிலாகவும் ஆடியிருந்தது. "இதைப் போல் வேறொன்றை நான் என் வாழ்க்கையில் கண்டதே இல்லை" என்று என்னையும் நினைக்க வைத்தது! ஓர் அடி முன்னே எடுத்து வைத்து, நான் பல வருடங்களுக்கு முன்னே கடந்து வந்த பாதைகளை எட்டினேன். பெற முடியாததை பெற்ற குழந்தையின் குதூகலத்தை உணர்ந்தேன்.

சில சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ள சிறு விஷயங்களில் பெரும்சந்தோஷங்கள் நிறைந்துள்ளது. அதை உணரும் போது- பெரும்சந்தொஷங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆழ் மனதையும் அதன்ஏக்கங்களை மறக்கச் செய்து விடுகிறது அந்த உணர்வு. அங்கு சிறுவர்களோடுசிறுமியாக, நானும் என் கையை வண்ணங்களால் நிரப்பிய போது- இந்த உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ஒரேடியாக உள் வாங்கிக் கொண்டதை உணர்ந்தேன். அதில் கனமே இல்லை! பஞ்சைப்போல- மெலிதான ஒரு உணர்வு!

"இன்னும் கொஞ்ச காலம் நீடிக்குமோ இந்த சந்தோஷம்" என்று கூறுவதில்பயனில்லை! வாழ்கையிலும் அநேக ராட்டினங்கள் மேலும்- கீழும் போய்வருவதுண்டு. நம் கைகளில் எந்த வண்ணங்கள் நன்றாக இருக்கும் என்ற முடிவு- நம் கண்களுடயது. இங்கு மிட்டாய்கள், சில கடைகளிலேயே நன்றாக இருக்கும். இங்குள்ள பல ராட்டினங்களில் நீங்களும் சற்றுப் போய்த்தான் பாருங்களேன்....!