புழுதி  

Posted by Matangi Mawley


மணல் கோபுரங்கள். கற்களும், இரும்பும் இல்லாத போதிலும் அழியாநினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும் நினைவுக் கட்டிடங்கள். காலங்காலமாக, காற்றுக்கு இரையாகி, கொஞ்சம்கொஞ்சமாக அதனுடன் கலந்து- இல்லை மற்றும் சரகுகளுடன் இணைந்து; பூமி, ஆகாயம்; இவை இரண்டிற்கும் மத்தியில் சஞ்சரித்துக்கொண்டிருன்தது- புழுதி.

***

கதிரவனின் கிரணங்கள் பூமியை தகித்துக்கொண்டிருந்தது. உயிர்நீர், உடலினுல்லிளிருந்து, அக்கிரனங்களை காணும் பொருட்டு வெளிவரத் துவங்கும் நேரம். காற்றும் அப்போதுதான் அங்கிருந்த ஓரிரு இலைகளை அசைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

***

அந்த காற்றின் மென்மை, உயிர்நீரின் மீது மேவிய பொது, ஆழ்கடலின்ஆழத்திற்கே போய்வந்தார்போன்ற ஓர் உணர்வு. பஞ்சபூதங்களும் இணைந்த அந்த தருணம். மெதுவாக துவங்கிய அந்த காற்றின் ஆற்றல், வலுவடைந்து கொண்டது. திடீரென்று, எங்கிருந்தோ கிளம்பிவந்த அந்த புழுதி- என் கண்களில் நினைவுகளாக மாறிப் படர்ந்தது.

***

என் ஒவ்வொரு பாதத்துளியும் அப்புழுதியின் சீற்றத்தை அதிகரித்தது. கடந்துபோன காலத்தின் நிழல் உருவங்கள். என் கண்கள் அதைக் காண விரும்பாத போதிலும், கட்டாயமாக என் மூடிய கண்களை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

***

அப்புழுதியின் சீற்றத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல்- அந்த காற்றின் திசையைஎதிர்த்து, வருங்காலத்தை நோக்கி விரைந்தேன்...

***
புழுதி "யூத்புல் விகடனில்"- http://youthful.vikatan.com/youth/Nyouth/puzhuthi100510.asp

மஞ்சகாப்பு  

Posted by Matangi Mawley

கல்லைக் கடவுள் என்பவர்களும் சரி- கடவுளைக் கல் என்பவர்களும் சரி- இவர்கள் இருவருமே என் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இது இப்படியாயிருக்க, நான் என் எண்ணக்கிளர்ச்சியின் மத்தியில் மெய்மறந்துஉலாவிக்கொண்டிருந்த அந்த சமயத்தில்- திடீரென்று, ஸ்ரீரங்கம்- "ரங்கா ரங்கா" கோபுரம் என் கண் முன்னே தோன்றியது! இது "தெய்வத்தின் குரல்" அல்ல! என்மூளைக்குள் அடங்கிய ரசாயனக் கலவையின் வேலை! என் நினைவுகள், நான்குதிசைகளிலிருந்தும் உருவங்களைப் பற்றி வரையத் தொடங்கியது. நானும் அந்தஎண்ண அலைகள் என்னை ஈர்த்த திசையை நோக்கி விரைந்தேன்!

யாராக இருந்தாலும் சரி! கல்லாயினும், கடவுளாயினும், அதை உயிர் என்று நம்பியதால் உருவெடுத்திருக்கும் அந்த பிரம்மாண்டனான கோபுரமும், அதன் வேலைப்பாடுகளும்! மதுரை கோவிலே சிறந்த வேலைப்பாடு நிரம்பிய கோவில் என்றாலும்- கோவில் என்று பொதுவாகவே எடுத்துக்கொள்வோமே- கோவில் என்பது ஓர் அதிசயமே! இது என் கருத்து!

கோபுரத்தின் உள் நுழைந்த உடனே கடைகள். பாத்திரங்கள், ஆன்மீக நூல்கள், தெய்வங்களின் படங்கள், என்று அநேக சந்தைகள். சிறு வயதினில், பரமபதத்திற்கும், தாயத்திற்கும் ஆசைப் பட்டு கோவிலுக்குப் போனதுண்டு. அந்த பரமபதத்திற்கும், தாயத்திற்கும் இப்போது விலை மிகவும் கூடிவிட்டது! பின்னே சந்நிதிகளின் துவக்கம். நாங்கள் சமீபத்தில் கண்டறிந்த 'விநாயகர்' சிலை, உள்ளே முதல் கோபுரத்தில், ஓரிடத்தில். வைணவ கோவில்களில், விநாயகர் சிலைகள் நான் கண்டது குறைவே!

பின் 'சக்ரத்தாழ்வார்' சந்நிதி! இந்த சந்நிதியின்பால் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஆன்மீக ரீதியாக சொல்லவில்லை. அந்த சந்நிதியின் அருகே வசதியான இடம் உண்டு. நண்பர்களோடு அமர்ந்து உரையாட! அங்கே எழுத்தாளர் சுஜாதா"வும் முன்னொரு காலத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு! அப்போதிலிருந்து அந்த சந்நிதியின்பால் ஒரு மதிப்பு!

ரங்கனின் சந்நிதிக்கு வெளியே, ஓர் இடத்திலிருந்து தங்க கோபுரம் தெரியும். அங்கேயே, ஒரு பேசும் கிளியும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் அந்த கிளி பேசுவதில்லை. ஆனால் முன்னர், அந்த கிளி "ரங்கா!"என்னும் போதெல்லாம் என் ஆச்சர்யத்திற்கு அளவே கூற இயலாது! "பேசும் கிளி" வேண்டும் என்று பிரார்த்தித்தது கூட உண்டு! ரங்கனின் சந்நிதி தீர்த்தம், மிகவும் ருசியாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறைகள் கூட பருகிய அனுபவங்கள் உண்டு! பின் எனக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடம். "தாயார்" சந்நிதிக்கு செல்லும் வழி. அங்கு நானும் என் அப்பாவும் விளையாடுவது உண்டு. சிறு பிராயத்தில் ஓட்டப்பந்தயத்தில் அப்பாவுடன் அந்த இடத்தில் ஓடியதுண்டு.

"தாயார்" சந்நிதியின் உள் பூக்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அங்கே "ஜம்பகப்பூ" என்ற பூ உண்டு. இரண்டு பூக்களே வாங்கமுடியும். அதை பத்திரப்படுத்திக்கொண்டு, வீட்டில் அம்மாவிடம் கொண்டு கொடுத்த நினைவுகள் உண்டு. "தாழம்பூ" வேண்டும் என்று அழுது புலம்பிய நாட்களும் உண்டு. அதைக்காண்பதற்குக் கூட விலை உண்டு போலும்!

"தாழம்பூ ஏன்?" சிறு வயதில், அப்பா கதைகள் சொல்லி கேட்பதுண்டு. இப்பொழுதும் கூடத்தான். அந்த கதைகளில் ஒரு கதை- ஆயிரம் வருடங்கள் ஜீவித்த நாகத்தின் தலையில் ஒரு நாகமணி தோன்றியதாம்! தாழம் காட்டினுள், மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று, அந்த நாகம், தனது ரத்தினத்தை அவிழ்த்துவிட்டு, அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு இறை தேடுமாம். அந்த மணியைக் கைப்பற்றுவது எப்படி என்பதே அந்த கதை! தாழம்பூ அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றானது!

சந்நிதிக்கு முன், "அஞ்சு குழி மூணு வாசல்" என்று ஒன்று உண்டு. இன்று வரை அந்த கதை எனக்கு விளங்கவில்லை. அதாவது, தாயார், ரங்கனின் வருகையை, தனது விரல்களை தரையில் ஊன்றி எதிர் பார்த்துக் கொண்டிருந்தாளாம். அங்கே, அவரவர், தங்கள் விரல்களை நுழைத்து சுற்றும்-முற்றும் பார்ப்பது வழக்கமாகியது. சிறு வயதில்- தாயார் மிகவும் பருமனானவராய் இருந்திருக்கக் கூடும், எனவேதான் அப்படி ஒரு குழி அந்த கற்களால் ஆன தரையில் தோன்றியிருக்கிறது, என்ற எண்ணங்களும் வந்ததுண்டு!

ஒருசில வவ்வால் தோட்டங்களும் இடையிடையே வந்துபோவதுண்டு! அவைகளை கண்டாலே எனக்கு பயம்தான். சிறு வயதினில், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பாதபடியால், "ஒருவர்" நான் ஒவ்வொரு முறை பிடிவாதம் செய்யும் போதும் "பெற்றோர்களை மதிக்காதவர்கள், அடுத்த ஜன்மத்தில் வவ்வால்களாவார்கள்" என்று சொல்லி பயமுறுத்தியது உண்டு. அதுவும் ஒரு காரணம். முதலில், அதை நான் நம்பவில்லைதான். அதெப்படி முடியும் என்று யோசித்ததும் கூட உண்டு! ஆனால் "மை டியர் குட்டிச்சாத்தான்" படம் பார்த்தது முதல், எனக்கு அந்த வாக்கியத்தின் மீது அபார நம்பிக்கை! அதனாலேயே, அந்த வவ்வால் தோட்டங்களை பார்க்கும் போது, ஒரு புறம் பயம் இருந்தாலும் கூட, மறு புறம், "அடுத்த ஜன்மத்தில் இதுவே என் வீடு" என்று எண்ணி, அந்த இடங்களை, நெடு நேரம்வரை நின்று வேடிக்கை பார்த்ததும் உண்டு!

"மடிசார்" புடவையில், இரண்டு மூக்குத்திகள் ஜொலிக்க, தலையை இருக்கவாரிப் பின்னி, கதம்பம் பூண்டு, உதடுகள் மெதுவாக "சஹஸ்ரநாமம்" பாடிக்கொண்டு, அந்த மஞ்சகாப்பை நெற்றியில் அவர்கள் பூணுவர். அவர்களுக்கு அதுவே உண்மை, அதுவே ப்ரஹ்மம். என்னைப் பொறுத்த வரையில், அது ஆயிரக்கணக்கான வருடங்களாக, வழி முறையிலும், வாழ்கை முறையிலும் நம்மோடு கலந்துபோன ஓர் உணர்வு. கலாசாரம். அழகு.

நாம் என்னதான் வேதாந்தம் பேசினாலும், அறிவியல் புழுக்களாக மாறிய போதிலும், நம் நினைவுகளிலிருந்து அந்த "கலாசாரம்" எனப்படுவதை அழிப்பதுசற்றே கடினம். அதை நம்மால் மட்டுமே ரசிக்க இயலும். எனக்கு தெய்வங்களின்மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். அப்படிப் போய்விட்டது என்றும் கூறவில்லை. அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை! ஆனால், என் நினைவுகளில் இருக்கும் இந்த கோவிலை என்னால் மறக்க இயலாது! அதை நான் விரும்பவும் இல்லை!

எனவே, என்னை ஆன்மீகமா, அறிவியலா என்ற தர்கத்திற்குஆளாக்கிக்கொள்ளாமல், என் நினைவுகளிலிருந்து என்னை மீட்டுக்கொண்டேன்!

ஆரண்யகாண்டம்  

Posted by Matangi Mawley

காடுதான். மனிதத் தன்மையற்ற மிருகங்கள். மதம், மொழி, இவற்றைத் தவிர சோம்பேறித்தனமும், அலட்சியத்தன்மையும் கொண்டு, வாழ்கை என்பது இது என்ற ஓர் அடிப்படை அறிவு இல்லாமல்- ஓர் மிருகம் போன்ற வாழ்கை வாழும்இடம். இது காடுதான்.

காடோ, நாடோ என்ற எண்ணமே இல்லாது- உடுத்தியிருக்கும் துணியின் மீதுள்ளஅழுக்கில் சிறிதும் உள்ளத்தில் கிடையாத, தான் இன்னார் என்ற உணர்வேஇல்லாத ஓர் ஜீவன். பசி, தாகம், சுகம், துக்கம்- இவை எல்லாமே அந்த ஜீவனுக்குச் சமமே. அப்படிப்பட்ட நிஸ்சலமான ஓர் தூய ஆத்மாவை நாம்காணவே முடியாது. வெளுப்பின் உச்சகட்டம்.

ஓர் குட்டிச்சுவற்றின் அடியில்- சினிமாப்பட போஸ்டர்களை கொண்டு தன்னை மூடியவாறு அமர்ந்து கொண்டிருந்த அந்த ஜீவன்- எதை பற்றிதான் அவ்வளவு நிச்சிந்தனையாக நினைத்துக்கொண்டிருன்ததோ; என்று எனக்கு ஓர் எண்ணம். அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தால், பயம்.

பயமென்ன பயம்? அந்த உயிருக்குதான் இரண்டு கை இல்லையா? கால் இல்லையா? அதுதான் பேசாதா? பிறகு என்ன பயம்? தெரியவில்லை. புறியவும் இல்லை. எதோ பயம். ஆரண்யத்தில் பயத்திர்கா பஞ்சம்? நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா! பயம்தான்.

நாடு காட்டில்- நடப்பது தவிர்த்து, அந்த ஆத்மாவையே உற்றுப் பார்த்திருந்தேன். அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இந்த ஆரண்யத்தில் இருப்பது சற்றே குறைவுதான். இங்கேயுள்ள மிருகங்கள் சிந்திப்பதில்லை. அழுக்கான ஆடைகள்அணிவதில்லை. ஆடைகளின் அழுக்கையெல்லாம் உள்ளுக்குள் போட்டு பூட்டிவிடுவர் அவர். ஓர் இடத்தில் இருப்பதில்லை. ஓர் நிரந்தர இலக்கும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இவை எதுவும் அந்த ஆத்மாவிற்குப் பொருந்தாது!

நான் உற்றுப் பார்ப்பதை ப்ஹ்ஞானத்தின் மூலம் தெரிந்துகொண்டது போலும். அந்த ஆத்மா! திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு! கையில் எதையோ எடுத்து வீசுவது போன்று தோன்றியது. மிருகம் ஓடியது!

ஆடி அமளி  

Posted by Matangi Mawley


எங்க ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படிதொறேல- கும்பல் ஒன்னும் புதுசு கெடயாது! எப்போதும் உள்ளதுதான். சும்மா 'ஜே ஜே ஜே' ன்னு இருக்கும். 'ரங்கன சேவிக்க' வரும் உள்ளூர் ஜெனங்க ஒரு பக்கம்னா, எப்போதும் வெளியூர் வந்டிகளிலேர்ந்தும் ஜெனங்க கூட்டங்கூட்டமா வந்துண்டுதான் இருப்பா! இந்த கும்பலெல்லாம் நமக்கு ஆகாது! ஆனா இந்தாத்துல நாஞ்சொன்னா யாரு கேக்கரா? எல்லாருக்கும் நாட்டாமதான். தோ! இந்த வாண்டுட்பட!

"இந்த க்ஷணம் காவேரில குளிக்கணும்னு" ஏதோ தோணிடுத்து! வீடே ஒரே அமளி! குளிக்க போறதுக்கு எதுக்கு இத்தன 'மேக்கப்'னு தான் நேக்கு புறியல. அந்த புடவை கூடாது, இந்த வள சேராது! தலேல துளி எண்ணைய வெச்சுண்டு ஒரு முழுக்கு போட போறதுக்கு எதுக்கு இத்தன கூத்து!?

நான் ஒரு வார்த்த சொல்லப்டாது! ஆடி பதுனெட்டு தேதிக்கு யாராவது ஆத்தங்கரைக்கு போவாளா? "லோகத்ல எல்லாரும் ஆடி பதினெட்டு தேதிக்கு தான் ஆத்தங்கரைக்கு போற வழக்கம்"- அப்படின்னு ஒரு கொரல் உள்ளேர்ந்து கேக்கும்! அது நேக்கு தெரியாதா? இத்தன கும்பலுக்கு மத்தில போய் அவஸ்த படணும்னு தலேல எழுதிருந்தா அது நடந்துதானே ஆகும்! போராக்கொறைக்கு இந்த வாண்டு வேற! எல்லாம் அவ அப்பா குடுக்கற எடம்! பொண்ணரசிய ஒரு வார்த்த சொல்லப்டாது! புது ட்ரெஸ்ஸ போட்டுண்டு காவேரில குளிப்பேன்னு ஒத்த கால்ல நிக்கறது! ஆரம்பத்லேர்ந்தே நாலு சாத்து சாத்தி வளக்காதது தப்பா போச்சு!

'தோ' இடுக்கு ஆம்; குளிச்சுட்டு பேசாம ஆத்துக்கு வந்து ட்ரெஸ்லாம் மாத்திக்கலாம்னா- "ம்ஹ்ம்ம்..." அதுக்கொரு பை! செரி! தொலஞ்சுபோன்னா- சாப்பாடும் அங்கதாங்கரதுகள்! அதுக்கொரு பை! எல்லா மூட்டையையும் கட்டிண்டு ஒரு வழியா கெளம்பியாயுடுத்து! ஒரு ஆட்டோ புடிச்சு போணும். பண்டிக நாள் வேரயா? ஆட்டோகாராளுக்கு குஷிதான். இருபது ரூபா கொடுக்கலாம். விருச்சிக ராசி காராளுக்கு "செலவு"ன்னு போட்ருக்கொன்னோ? அறுபது ரூபா கொடுத்து ஒரு வழியா போய் சேந்தாச்சு. நேரா போய் குளிச்சொமா வந்தோமான்னு உண்டா? அதுவும் கிடையாது! "யான பாக்கணும்னு" ஒரே அடம். வரும்போது பாக்கலாம்னா- "ப்டாது! இப்பவே..." எல்லாம் "இப்பவே"தான். போ! எல்லாத்தையும் தூக்கிண்டு நட...

அந்த யானைய சுத்தி ஒரே கும்பல். அது குட்டியா இருக்கரச்செலேர்ந்து அத பாத்துண்டு தான் இருக்கோம். அதுக்குமே நம்பள அடையாளம் தெரிஞ்சா கூட ஆச்சர்யபடரதுக்கில்ல. கொழுக்கு-மொழுக்குன்னு, ஜம்முனு இருக்கும். அழகா நாமம் போட்டுவிட்ருப்பா! கொழந்தைள், சரி, பாக்கரதுகள்னாகூட; அந்த யானைய பாக்க, நம்புளுக்கே ஒரு சந்தோஷமாதான் இருக்கும். கொஞ்சம் பாவமா கூட இருக்கும். ஆனா, அது கைல ஒரு ரூபாய வெச்சு, அது துப்பர எச்சலவேற வாங்கிக்கணும்கர போதுதான்! அதுல என்ன சந்தோஷமோ இவாளுக்கு! நேக்கென்னமோ, இதெல்லாம் கொஞ்சம் பயம்தான்!

படிகட்ல நின்னுண்டு "தை தை"னு குதிக்கதேன்னா கேக்கறதா பாரு! கூட்டமான கூட்டம் வேற! ஒரு எடத்துல நிக்கவே எடமில்ல. அக்கம்பக்க கிராமமெல்லாம் இந்த படித்தொறேலன்னா பாத்துக்கொங்கோளேன்! இப்போதான் படுத்த வேற தோணும்! இதுக்கு! "ஆளகண்ட சமுத்ரம்"னா அது சரியாதான் இருக்கு- அவர்கூட சேந்துண்டு நீஞ்சணுமாம்! அவருக்கென்னடாப்பா! புண்யாத்மா! தேமேன்னு நீஞ்ச போயாச்சு! இத கட்டிண்டு இப்போ நான்னா அல்லாடவேண்டிருக்கு!

ரொம்ப நேரம் தண்ணில ஊராதேன்னா, இங்க என்ன யாரு மதிக்கரா? அப்ரம் ஜுரம் வரும். 'லீவு' போடணும். "மிஸ்ஸு திட்டினா, அடிச்சான்னா" நான் ஒன்னும் பண்றதுக்கில்ல. "நன்னா திட்டுங்கோ"ன்னு தான் சொல்லணும். அப்பவாவது புத்தி வராதான்னு பாக்கலாம்!

எல்லாரும் பூ, மாலை, இலையெல்லாம் தண்ணில விடுவா. எங்காத்து பொடுசு செருப்ப விட்டுட்டு வந்து நிக்கறது. வாங்கி ஒருவாரமால! நூறு ரூபா தண்டம்! நான் அப்பவே அடிச்சுண்டேன்... இந்த கூத்தெல்லாம் வேண்டான்னு! ஏதோ, போய்டு போறது! போனா போட்டும், போ! இப்ப அழுது என்ன புண்யம்? அதுக்கு பசி வந்துடுத்து! வேற ஒண்ணுமில்ல! அது வாய்ல நாலு வா தேங்கா சாதமும், தயிருஞாமும் அடச்சு, ஆத்துக்கு ஒரு வழியா கூட்டிண்டுவந்தாச்சு! அப்பாடான்னு இருக்கு....

காகிதம்  

Posted by Matangi Mawley


என் கதையைப் படிப்பது யார்?

- அதை எழுதும் நானே அதைப் படிக்கத் தகுதியும் பெற்றேன். தான் நடக்கும் பாதையைக் கூட பின்னே திரும்பிப் பார்க்க நேரமில்லாத இந்த உலகத்திற்கு, எனது கதையைப் படிக்க மட்டும் நேரம் இருக்கவா போகிறது! உண்மைதான். நேரத்தைத் தவிற இந்த உலகத்தில், ஏல்லோரிடத்திலும் எல்லாம் இருக்கிறதுபோலும்!

காற்றின் போக்கில் போகும் காகிதத் துளி போன்ற ஒரு வாழ்கை. காற்று வீசும்திசையில் மிதந்து கொண்டிருக்கும் அந்த காகிதம்- சில நேரங்களில் நின்றும், மற்றும் சில சமயங்களில் மிதந்துகொண்டும் இருந்தது. இன்னும் அது ஏத்தனை நேரம் வரை அப்படி மிதந்துகொண்டிருக்குமோ- என்று எனக்குத் தெரியாது! அந்த காகிதத்தின் வாழ்க்கையில் ஒரு சில நொடிகள், என் கண்முன்னே நடக்க வேண்டும் போலும்!

பேருந்து நகர நகர, காகிதமும் மறையத் தொடங்கியது! ஜன்னலின் வழியாக பின்னே பார்த்துக்கொண்டே- முன்னே போகும் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்தேன். அதை ஆட்டிவைக்கும் அந்த காற்றுக்குக்குத்தான் எத்தனை எண்ணமாற்றங்கள்? ஒரு சில நொடிகளில் மெதுவாகவும்- திடீரென்று வலுவாகவும்- அப்பப்பா! பாவம் அந்த காகிதம். என்னதான் செய்யுமோ?

வாழ்கையெனும் காற்றின் போக்குகேற்றார்போல் நாமும் ஆடத்தானே வேண்டியிருக்கிறது!

பேருந்தின் வேகம் அதிகரிக்கவே, காகிதத்தின் மறைத்தாலும் கூடிக்கொண்டே இருந்தது! திடீரென்று ஒரு அமைதி. காற்று, சற்று இளைப்பாறியது போலும். ஆனால் அந்த காகிதத்தைக் காண முடியவில்லை! சற்றே முயற்சித்தேன். அதோ! ஆனால்...

காகிதமும் இளைப்பாறியது! நிரந்தரமாக. அங்கே திறந்து கிடந்த ஒரு சாக்கிடைக்குள்- அங்குள்ள ஏராளமான குப்பைகளோடு, ஒரு குப்பையாக- அதுவும் இளைப்பாறியது! என் பேருந்தும்விரைந்தது...

மைத்துளிகள் ...  

Posted by Matangi Mawley


அன்றோர் தினம், அலுவலகத்தின் ஓர் மூலையில், வேலை ஏதுமில்லாமலும், ஆனால் வெளியேவும் செல்ல முடியாத ஓர் அவதி நிலையில், திடீரென்று தோன்றிய சிந்தனையே இந்த "மைத்துளிகளுக்குக்" காரணம்.

ஏழுத்து, கருத்து- எல்லாவற்றிலும் பிழைகள் இருக்கக்கூடும். அதில் மறுப்பு ஏதும் இல்லை. பிழைகளை திருத்திக்கொள்ளலாம். ஆனால் கருத்துக்களுக்கு இது பொருந்தாது! இது ஓர் எச்சரிக்கை மட்டுமே!

"எங்கே தமிழ்?" என்ற தர்கத்தில் எனக்கு எந்தவித ஈடுபாடும் கிடையாது. "தமிழ் என் மூச்சு/பேச்சு" என்ற கோஷங்களும் என்னைச் சாராது. தமிழை வாழ வைப்பதற்கான முயற்சி என்றும் இதைச் சொல்ல இயலாது! தமிழை வாழவைப்பதில் எனக்கு எந்தவித ஆர்வமும் கிடையாது! நாகரீகம் என்ற பெயரில், நுணி நாக்கில் தமிழ் பேசும் கும்பலை எதிர்க்கவும் எனக்கு பொறுமை கிடையாது! "தமிழ் தெரியாது" என்று தமிழர்களே கூறும் கூற்றை பார்ப்பதால் எனக்கு எந்த விதமான உணர்ச்சிப் பெருருக்கும் ஏற்படுவது இல்லை!

பிறகு ஏன் இந்த எழுத்து? இதைப் படிக்க ஒரு கூட்டம் கூட்டுவது எதற்கு?

இது ஒரு முயற்சி மட்டுமே!

நான் ஒரு உயிர். இந்த பிரபஞ்சந்த்தின் பல்லாயிரக்கணக்கான உயிர்த்துளிகளில் எனக்கும் ஒரு இடம் உண்டு. இங்கு வீசும் காற்றிலும், பொழியும் மேகத்துளிகளிலும்- அனர்கதிர்களிலும், பறந்து விரிந்த பூமியிலும் எனக்கும் பங்கு உண்டு. இங்கே மிதக்கும் அனைத்து ஜீவராசிகளின் சிந்தனைச் சொட்டுகளின் மத்தியில் என் சிந்தனைகளுக்கும் பரவ ஒரு வழி உண்டு.

இது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...