எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். நல்ல ஜுரம். அப்பா, office இற்கு leave சொல்லிவிட்டு, என்னை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் நான் சாப்பிடும்போது அப்பா கதை சொல்லுவது வழக்கம். இப்பவும் கூட. சமயம் கிடைக்கும் போது. எனக்கு தெரியாத கதை அப்பா-வுக்கு நினைவு வரும் போது. சரி. அன்று- அப்பா-வின் கண்ணில் கண்ணீர். அந்த கண்ணீருடன் பரிச்சயம்- அதுவே முதல் தரம், எனக்கு. ஒரு மாவீரன். சிறுவன். அவனை சூழ்ந்து கொண்ட பல பகைவர்கள்- அவனைக் காட்டிலும் நிறைய வாழ்ந்தவர்கள். அவனது உறவுகள். இறக்கும் தருவாயிலும் அவனது வீரத்தின் உச்சத்தை- தேர் சக்கரத்தை உடைத்து எடுத்து அவன் போர் புரிந்து காட்டினான்- என்ற விஷயம் தான், அந்த கண்ணீர். அந்த கதை- எனக்கு அப்போது புரியவில்லை. என்னை அபிமன்யு-வின் வீரத்தைக் காட்டிலும், அப்பாவின் கண்ணீர் தான் மிகவும் பாதித்தது. அது தான் முதல் முறையாக நான் மகாபாரதக் கதை கேட்டது.
நமது கலாசாரத்திற்க்கே உண்டான ஒரு சில விஷயங்களில்- நாம் இன்னார்- என்று நமக்கு எடுத்துக் காட்டுவதற்கு அத்யாவசியமானது- ராமாயணமும், மகாபாரதமும். இந்த உண்மையை புரிந்து கொள்ளும் பக்குவம் என் சஹ வயதினருக்கே இருப்பதாகத் தோன்றவில்லை. அது போகட்டும். எனக்கும் என் அப்பாவிற்க்குமே ஒரு சில வாதங்கள் உண்டு. ராவணன் மீதும், துரியோதனன் மீதும் எனக்கு ஒரு பரிவு உண்டு- என்பதைக் குறித்து. ராமன்- சீதையை "அக்னி பிரவேசம்" செய்யத் தூண்டியது குறித்து. அவளை நாடு கடத்தியது குறித்து. "அந்த கால வழக்கங்கள்- இன்றைய கால கட்டத்தோடு அதை ஒப்பிட்டு பார்ப்பது தகாது"- என்று அப்பா என்னை சமாதானப் படுத்தினாலுமே- இந்தக் கதைகளில் கூறப்படும் ஒரு சில விஷயங்களுடன் எனக்கு ஒப்புதல் கிடையாது.
எனக்கு இந்தக் கதைகளின் மீது பற்றுதல் இருந்தாலும், ஈர்ப்பு இல்லாததற்கு மற்றும் ஒரு காரணம்- இந்தக் கதைகளில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. அதற்காக நான் ஒரு "Feminist" என்று கொடி தூக்கவில்லை. எனக்கு அந்த சித்தாந்தத்தில் அவ்வளவாக ஈடுபாடும் கிடையாது. ஆனாலும்- ஒரு சில சமயங்களில், ஒரு சில விஷயங்கள்- இந்தக் கதைகளில், என் புரிதலுக்கு அப்பால் இருப்பது, கொஞ்சம் வருத்தம். "காலகட்டம்", "தேவ ரஹசியம்" என்றெல்லாம் எத்தனை விதமாக இந்த விஷயங்களை ஞாயப் படித்தினாலும்- என்னால் அவைகளை ஏற்க முடியவில்லை.
அதுபோகட்டும். மகாபாரத கதை- இரண்டு, மூன்று எழுத்தாளர்களின் பாணிகளில் படித்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறை படித்த போதும் ஒவ்வொரு அனுபவம் ஏற்படும். எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை எத்தனை எண்ணங்கள். எண்ணப் போக்குகள். ராஜாஜி-யுடைய மகாபாரதமே முழுமையான ஒரு மகாபாரதக் கதை படித்த உணர்வு அளித்தது. ஆனாலும்- இவை எந்த பரிமாணமுமே- இந்தக் கதையின் பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய/தகுந்த மதிப்பை அளிக்கவில்லை- என்ற குறை மட்டும் மீதம் இருந்தது. இத்தகைய ஒரு சந்தர்பத்தில் தான், சமீபத்தில் Chithra Banerjee Divakaruni அவர்கள் எழுதிய "The Palace of Illusions" என்ற புத்தகம் படிக்க நேரிட்டது.
ஒரு புது விதமான பாரதம். இப்படி நடந்ததோ- என்று எனக்குத் தெரியாது. ஆனால்- இப்படியும் நடந்திருக்கலாம்- என்றுத் தோன்றியது. இதில் என்ன புதுமை? மகாபாரத்தின் நாடி- த்ரௌபதி. அவள் கதை இது. இதற்கு முன்னர் நான் படித்திடாத கதை இது. ஒரு பெண்ணால் ஆன/அழிந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதையை- அவளே கூறுவது தானே தகும்? அது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
எதிர் பாராத தருணத்தில் ஜனித்த மகள். அவளது பிறப்பின் பயன் யாது- என்று வியந்த அவள் உறவுகள். தமது அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள பெற்ற மகனுடன்- ஏன் இப்படிப்பட்ட ஒரு மகள் நமக்கு? என்று வியந்த தந்தை. மணக்கப் போகும் கணவர் யார் எனத் தெரியாத மணமகள். மணந்த கணவனுடன் சேர்த்து, நால்வர்- அவனது சஹோதரர்களுக்குப் பங்கு போடப்பட்ட மனைவி. மயன் அமைத்த "மாயா மாளிகை"யின் மகாராணி. கணவர்களாலும், சொந்தங்களாலும், ஞாயமெனும், தர்மமெனும் காரணங்கள் பல கூறி கை விடப்பட்ட ஒரு பெண். கணவர்கள் ஐந்து பேர் இருக்க- ஆறாவதாக ஒருவரின் மீது ஏன் இந்த லயிப்பு? என்பதற்கு விளக்கம் தேடும் ஒரு பெண்ணின் பயணம்- இந்த "The Palace of Illusions".
ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்- என்று வ்யாசர் அளித்த வரம். இந்த வரத்தைக் காட்டிலும்- அடுத்த கணவனிடம் செல்லும் தருணத்தில்- முந்தைய கணவனுடன் கழித்த நினைவுகளை மறக்க இயலும்படியான வரம் அளித்திருக்கக் கூடாதோ- என்கிறாள்! த்ரௌபதியின் மன நிலையை இதை விட அழகாக நான் இது வரை எந்த பாரதத்திலும் படித்திருக்கவில்லை. ஒரு பெண்ணாக அவளை முன்னே வைத்து அவளை இப்படி யாரும் சித்தரிக்கவும் இல்லை.
கர்ணன், அவளது சுயம்வரத்தில் பங்கேற்க முயல்கிறான். அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு. அவனைப் பார்க்கவோ, அவனைப் பற்றி ஆர்வம் கொள்ளவோ தடை விதிக்கப் பட்டிருந்தாலும்- தடை விதிக்கப் பட்டிருக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீதுமே இயல்பாக இருக்கக்கூடியதொரு ஈர்ப்பு. திருஷ்டத்யும்னன் கர்ணனைத் தடுக்க- கௌரவர்கள் கர்ணனுக்கு ஆதரவு தர- குடும்பத்தின் மானம் காத்திட, போர் புரியவும் தயாராக த்ரௌபதிக்கு முன்னே நிற்கும் அவள் அண்ணனைப் பார்க்கிறாள். தூண்டில் புழுக்களாக வளர்க்கப் பட்டவர்கள்- அவள் அண்ணனும், அவளும்; பழி தீர்த்துக்கொள்ள... உலகெங்கும் தன் புகழ் பரப்ப... அவள் மீது உண்மையாகவே அன்பு கொண்டவனாக இருந்தவன் அவள் அண்ணன் மட்டுமே. கௌரவ சேனையுடன் போரிட்டு அவன் மீளுவது கடினம். அது அவனுக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தில்- அவன் உயிர், கர்ணனின் மீதிருந்த அந்த லயிப்பை விட உயர்ந்து நின்றது. "தங்கள் தகப்பன் பெயர் கூறிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்"- என்று கர்ணனிடம் அவள் கூறியது, அவள் வாழ் நாள் முழுவதும், அவளைத் துரற்றியது. இப்படியொரு விளக்கம்- அவளது கேள்விக்கு- நான் இது வரையில் படித்திடவில்லை. இப்படிதான் அவள் மனதில் தோன்றியிருக்கும். அவள் கர்வம் கொண்டவள்-அல்ல. தருணம் அப்படி. அந்தத் தருணத்தை, இப்படி யாரும் வருணிக்கவில்லை.
கீசகன். இப்படியும் ஒரு உலகம். ராஜகுமாரியாக, ராணியாக இருந்த நான்- இப்படி ஒரு பணிப்பெண்ணாக! இப்படியா நடத்தப் படுகிறார்கள்- சாதாரணப் பெண்கள்? அரண்மனை ஆண்கள் இவர்களை இப்படியா பார்க்கிறார்கள்? நான் இந்த சூழ்நிலைகளிலிருந்து மீண்டு, மீண்டும்- மகாராணியானால்- என் மாளிகையில் பணிபுரியும் சாதாரணப் பெண்களுக்கு இப்படிப் பட்ட கஷ்டங்கள் வராமலிருக்கச் செய்வேன்- என்று நினைக்கிறாள்- த்ரௌபதி. இதுவரை நான் படித்திருந்த பாரதக் கதைகளில், இது வெறும் ஒரு அத்யாயம். ஆனால் இங்கு- இது ஒரு கதாபாத்திரத்தின் ஜனனம். பிற்காலத்தில், ஒரு பெரும் ராணியாக போற்றப்படப் போகும் ஒரு ராணியின்- ஜனனம்.
நான் மலையிலிருந்து விழுந்த தருணம்- பீமன் பதறியது. "அவள் ஏன் விழவேண்டும்"? என்று யுதிஷ்டிரரைக் கேட்டது. "நம்மை அவள் மணந்தாள்- ஆனால் ஒருவரின் மீது அவள் அதிகம் அன்பு கொண்டாள்". என்று அவர் பதில் கூற- என் மீது அதிகம் பிரேமை கொண்ட பீமன்- "யார்"? எனக் கேட்க- கொஞ்சம் பொறுத்தார், யுதிஷ்டிரர். என்னைப் பற்றி யாரும் அறிந்திட முடியாத ஒரு ரஹசியம்- என்று என்னில் நான் கொண்ட கர்வம்! யுதிஷ்டிரரின்- மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றலின் மீது என்றைக்குமே எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவரை நான் புரிந்துகொண்டதில் தான் தவறிவிட்டேன். நான் ஏன் பதறுகிறேன்? அவர் கூறப் போகும் பதிலின் மீது- ஏன் இத்தனை ஆர்வம், எனக்கு? என்னைப் பற்றி அவர் புரிந்து கொண்ட விவரத்தை அவர்க் கூறுவாரா? இந்த தருணத்திற்குப் பிறகு என் கணவர்களை நான் பார்க்கப் போவதுமில்லை. பிறகு ஏன் என்னைப் பற்றின அவர்களின் கடைசி அபிப்ராயத்தைக் கேட்டிருக்க இத்தனை ஆவல்? "அர்ஜுனன்..." என்றார். சத்தியத்தை விடவும், இரக்கமே பெரிதென எண்ணினார்- அவர். என் கீர்த்திக்கு பங்கம் நேராமல் காக்க- அவர் வாழ்நாளில்- அவரது இரண்டாவது பொய்யை, எனக்காகக் கூறினார்...
வாழ்கை என்பது, ஒரு சில சம்பவங்கள்- பல பல உணருதல்கள். த்ரௌபதியின் வாழ்வில் அவளுக்கு நிகழ்ந்த/அவளால் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களைப் பற்றியே இது வரை படித்ததுண்டு. ஆனால்- அவளது வாழ்க்கையைக் கண்டது, அவள் உணர்ந்தவைகளை அவளுடன் சேர்ந்து நானும் உணர்ந்து, அவளுடன் வாழ்ந்தது- இதுவே முதல் முறை!
பாரதக் கதையில்- எத்தனையோ கதா பாத்திரங்கள். பெண் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரு பட்டியல் எடுத்தால் எத்தனை பெயர்கள் வரும்- என்று கணக்கு போடலாமே. த்ரௌபதி, குந்தி, காந்தாரி, சுபத்திரை, அம்பா, சுதேஷ்ணா, பானுமதி, உத்தரா, சத்யவதி, கங்கா... வேறு பெயர்கள் தோன்றவில்லை. சரி. இந்தப் பட்டியலில்- எத்தனைப் பெண் கதாபாத்திரங்கள்- தங்களை பாதித்தன? தங்கள் மனத்தைக் கவர்ந்தன? அப்படி பாதித்தது/கவர்ந்தது- என்றால்- அது ஏன்? இதே- பெண் கதாபாத்திரங்கள் என்று சுருக்கிக் கொள்ளாமல்- மகாபாரதம்- என்று எடுத்துக் கொண்டோமேயானால்- எத்தனையோ கதாபாத்திரங்கள் கூறலாம். கர்ணன், அபிமன்யு, கிருஷ்ணன், பீஷ்மர், பீமன், ஏகலைவன், கடோத்கஜன்- என்று. ஆனால்- இந்த புத்தகம் படித்த பிற்பாடு- கர்ணன்/கிருஷ்ணன் மீது கூட ஏற்படாத அளவிற்கு ஒரு ப்ரீத்தி- த்ரௌபதியின் மீது எனக்கு ஏற்பட்டு விட்டது. ஒரு சில சமயங்களில், மிகவும் வருத்தமாகவும் இருக்கும். ஒரு பெண்ணாக- என்னால் ஏன் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள இயலவில்லை- என்று. இந்த புத்தகத்தில்- என் கேள்விக்கான விடை கண்டுகொண்டேன் :: இது வரையில்- அவளை ஒரு பெண்ணாக- யாரும் சித்தரிக்கவில்லை. இது தான் விடை. இது தான் உண்மை...
- Thapasaa cheeyathe Brahma
மனதில் நினைத்து முடித்த நினைவுகளின் தாக்கம். மாதம் ஒன்றிற்குப் பேனா மூன்று என்ற என் கணக்கிற்கு விடை இதுவாகவும் இருக்கலாம் போலும். என் நினைவுகளின் முதல் நண்பனான என் பேனா, அந்த நினைவுகளின் தாக்கங்களால் வேறு நினைவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றது. நினைவுகளின் சக்தியையும், ஆற்றலையும் அந்த பேனாவினால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பேனா முனை, வற்றிப்போய் விடுகிறது. புது நினைவுகள்- புது பேனாவைத் தேடிக்கொள்கின்றன.
நினைவுகளின் தாக்குதல் பேனாவை மற்றுமின்றி, அதனால் உருவாகும் எழுத்துக்களையும் தாக்கும் சமயங்களும் உண்டு. எழுத்து, எண்ணங்களின் வேகங்களுக்கு ஈடு கொடுக்க மறுத்து விட- எண்ணங்கள் அதன் கோவத்தை எழுத்தின் மீது எய்து விட- எழுத்தின் மாறுபட்ட கோணங்களும், சீரில்லாத கோடுகளும்- எண்ணங்களின் கோபக் கனலில் வெந்து பிறந்த சாம்பலானது. எழுத்து- உருயில்லா எண்ணங்களில் ஒன்றிப் போனது...
எண்ணங்களின் தாக்கம், காகிதத்தின் மீதும். வெண்மையின் நிறங்கள். அந்த நிறங்களுக்கு- காகிதத்தின் வெளுப்பின் மீது கோவம். அந்த வெளுப்பின் ஒவ்வொரு புள்ளியையும் தேடி- அதில் எண்ணங்களின் நிறம் நிரப்பி- அந்த காகிதத்தின் அவலத்தையும் ரசித்தது, அந்த எண்ணம். எண்ணங்களின் தாக்கம்- பேனாவின் வழி எழுத்தில் புகுந்து, காகிதத்தில் படர்ந்து விட- காகிதத்தின் வலி மூன்று மடங்காக உயர்ந்தது.
"எண்ணங்களை நிறுத்தி விட வேண்டும்"- என்றது காகிதம். எழுத்தும், பேனாவும் ஆமோதித்தன. பேனா எழுத மறுத்தது. எழுத்துகளும், பிழைகளைக் கொட்டித் தீர்த்தன. காகிதம் கசங்கிக் கொண்டது. எண்ணங்கள் வெளியேற முடியாமல் திணறிப் போனதைக் கண்டு, களித்தன அவை. எண்ணங்களின் கொட்டத்தை அடக்கி விட்டதாக எண்ணிப் பெருமை கொண்டன. மகிழ்ந்தன.
அவைகளின் வாழ்வை வெறுத்தன. எழுதாத அந்த பேனா- அதன் அவலத்தைத் தாளாது உடைந்தது. பிழையான எழுத்துகள்- அந்தப் பிழைகளினால் வெட்கிப் போனது. கசங்கிய காகிதமும் அதன் தோற்றத்தை வெறுத்தது.
எண்ணங்களிடம் சென்று முறையிட்டது. தங்களை வருத்தும்படி கேட்டுக் கொண்டது. எண்ணங்களின் தாக்கத்தை அனுபவிக்காத பேனாவோ, எழுத்தோ, காகிதமோ- எதற்கும் பயன்படாதவை என்று அவைகள் உணர்ந்தன. எண்ணங்களின் வருத்தலில் சுகம் கண்டு துளிர்த்தன. எண்ணங்கள் மலர்ந்தன...
இதுக்கு இதே வேலையா போச்சு! எங்கயாவது போய், யார் கிட்டயாவது வாலாட்ட வேண்டியது. அவா குடுக்கற அடி, கடியெல்லாம் வாங்கிண்டு இங்க வந்து "மியாவ் ...." ங்க வேண்டியது! கழுத்து கிட்ட-லாம் ஏதோ கடி. முன்ன போல இல்ல, துப்பாண்டி. ஆகாரம் போறல. நாங்க குடுக்கரதையாவது திங்கணும். மேல் மாடியாத்து "Sunday Special" சாப்பாடு தான் வேணும்-னா நான் என்ன பண்ண முடியும்? நாள் முழுக்க அங்க நின்னுண்டு கத்தி என்ன ப்ரயோஜனம்? ஏதாவது தேரித்தா? திரும்பி வால தூக்கிண்டு இங்க தானே வந்த!
அதுவே இந்த Bushy -ய பாரு! எவ்வளோ சமத்து! "டா"ன்னு வந்து கேக்கறது.
கொடுக்கறத சாப்படறது. கடிகாரத்த முழுங்கினாப்ல நாலு-ன்னா நாலு, ஆறு-ன்னா ஆறு மணிக்கு வந்து கேக்கும். 4:10 கு வந்து அதட்டும். என் ப்ரமையோ என்னவோ- கடிகாரத்த வேற காட்டி-காட்டி அதட்டராப்ல தோணும்.
கொஞ்ச நாளா பத்தியம் வேற. முறுக்கு- cup cake லாம் நப்பாச பிடிச்சு திங்கற பழக்கதெல்லாம் விட்டுடுத்து, Bushy! அதோட "புளியங்கொட்டை" cat food மட்டும் தான். வயறு வேற ஒரு தினுசா இருக்கு. முன்ன மாதிரி gate ல இடுக்குல நுழைஞ்சு வர முடியறதில்ல. வயறு இடிக்கறது. வெளீலேர்ந்து குரல் கொடுக்கும். Gate அ தொறந்து விடணும்.
இதுகிட்ட சொன்னா கேக்கறதா பாரு! அந்த "Pet Shop" கடைக்காரி என்ன சொன்னா? "குட்டி போட்டா அளகா இருக்கும். 2 மாசத்துக்கு ஒரு தடவ குட்டி போட்டுகிட்டே இருக்கும்"னு சொன்னாளா இல்லையா? பூனை பண்ணையா போய்டும் நம்பாம். அத இப்போவே எங்கயாவது விட்டுட்டு வந்தா தேவல. ஆனா பாவம், சாப்ட ஏதாவது கிடைக்குமோ, கிடைக்காதோ!
ஸ்பஷ்டமா "ங்கா..." ங்கும், என் முகத்த பாத்து!
அது வயறு, அத விட பெருசா இருக்கு! அத தூக்கிண்டு அத்தன படி ஏறி "ஜிங்கு-ஜிங்கு"ன்னு ஓடி வரும்! பயம்மா இருக்கும், எனக்கு. அன்னிக்கு ஒரு நாள், அந்த கொழுப்பெடுத்த நாய் ஒண்ணு- Bushy ய பாத்து "உர்..." னு உறுமறது. பாவம் Bushy! எங்காத்லேர்ந்து அடுத்தாத்து மதில்- அத்தன உயரத்துல தாவறது! கீழ-கீழ விழுந்து ஏதாவது ஆச்சுன்னா?! என்ன தைரியம்!
ஒரு சில சமயத்துல, ரெண்டு நாய் படுத்துண்டுருக்கும். அதுகளுக்கு இடுக்குல பூந்து- இது வருது-ன்னு அந்த நாய்கள் கவனிக்கரதுக்குள்ள ஆத்துக்கு ஓடி வந்து "ங்கா.." ங்கும்! இந்த துப்பாண்டி- "வே...ஓ...ங்...வ்..." ன்னு ஒரு வித்யாசமா ஒரு குரல் கொடுக்கும். நம்ப பொய் நாய்கள விரட்டி விடணும். அதுகள் போயிடுத்தா-ன்னு 5 நிமிஷம் நின்னு பாத்துட்டு- அப்புறம் ஜம்முன்னு மினுக்கிண்டு வரும்!
ஈஷிக்கரதோட சரி! காரியத்துல ஒண்ணும் காணும். ஆனா Bushy- "கொஞ்சரியா? கொஞ்சிக்கோ... தூக்கரியா? தூக்கிக்கோ... ஆனா எல்லாம் பண்ணினப்ரம்- ங்கா- கொடுத்துடு..." ன்னு காரியத்துல தான் இருக்கும், அது கண்ணு!
மே 1st . நானும் வெளீல போயிருந்தேன். இவரும், எங்கயோ "லோ-லோ". இது மட்டும் தான் இருந்துது, ஆத்துல. Bushy ஒரே பொலம்பல். இதுக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல. ஆச்சு குட்டி போட போறது போலருக்கு. கொஞ்ச நாளாவே இடம் பாத்துண்டுருந்துது. Shelf குள்ள பொய் உக்காந்துண்டு வெளீல வரவே மாட்டேங்கறது! அத எப்படியோ வெளீல துரத்தி விட்டாச்சு. ரொம்ப நேரம் ஆத்து வாசல்ல நின்னுண்டு கத்திண்டே இருந்துது. அப்புறம் போய்டுத்து. எனக்கு வேற ஒரே கவலை!
அடுத்த நாள்- பழைய படி ஆய்டுத்து, வயறு. "ங்கா"- ங்கறது! புடுங்கி எடுத்துடுத்து. அதோட வயிர நிரப்பி அனுப்பினா போய்டும்-னு ஆய்டுத்து. அது குட்டி போட்டுதா? இல்லையா? ஒண்ணும் புரியல.
கொஞ்ச நாளா- சாப்டு-சாப்டு வெளீல ஓடி போய்டறது! குட்டிய எங்கயோ பத்தரமா ஒளிச்சு வெச்சுருக்கு போலருக்கு. இவருக்கு ரொம்ப
தேவை! Bushy ய தூக்கி வெச்சுண்டு கொஞ்சராராம்! "உன் குட்டியலாம் அழைஷுண்டுவாடா... பாக்கணும் னு ஆசையா இருக்கு..." ன்னு ஒரே கொஞ்சல்.
அன்னிக்கு சாயந்தரம். எப்படி வந்துது? எப்ப வந்துது? ஒண்ணும் தெரியல. ரெண்டு குட்டிய தூன்க்கிண்டு வந்து, ஒரு மர பலகைக்கு இடுக்குல போட்டுருக்கு. இது வேற ஒரே "தை-தை"... "Photo எடுக்கறேன்.... Facebook ல போடறேன்..." ன்னு! "செத்த அமைதியா இரு"ன்னா கேக்கரதுகளா பாரு, ரெண்டும்! அது எத்தன கஷ்ட பட்டுதோ! இன்னும் கண்ணே சரியா தொறக்கல. நடக்க கூட தெரியல, அந்த குட்டிகளுக்கு! குரல் கூட எழும்பல!
ஒண்ணு- துப்பாண்டி, Bushy-யாட்டமா கருப்பு-வெள்ள. ரொம்ப அழகா இருக்கு! பாட்டிய கொண்டுருக்கு... இன்னொண்ணு, அட்ட கரி! அது கண்ணு மட்டும் தான் தெரியறது! மீதி சமயத்துல அது இருக்கறதே தெரியல. அதுவும் அழகு தான்!
ரெண்டுத்தையும் கொண்டு வந்து இங்க போட என்ன அவஸ்த பட்டுதோ- Bushy! ஒவ்வொரு குட்டியா, ரெண்டு தடவ- மதில தாவணும், மாடில ஏறணும்! "ங்கா"... ன்னுது. தடவி கொடுத்தேன். அமைதியா செத்த நேரம் மூச்சு வாங்க படுத்துண்டுருந்துது. அதுவே குட்டியா இருக்கு! அதுக்கு ரெண்டு குட்டி! பாவம்... "ங்கா" தானே? தோ தரேன்...
PS: குட்டிகள் விளையாடற video பாக்க-- click here.
குட்டிகளை சுவீகரிக்க இஷ்ட பட்டால்- பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
என்னுடைய மூன்றாவது வயதில், பள்ளியின் ஏதோ ஒரு மூலையில் கும்பலோடு முட்டி மோதிக்கொண்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். அதுதான் நான் முதல் முறையாக நத்தை கண்டது. 'கொளுக்-கொளுக்' என்ற உடலுக்கு, ஒரு ஓடு நிழல் தர அது கடந்து வந்த பாதையை எத்தனை ஆண்டுகளாகக் கடந்து கொண்டிருந்ததோ- என்று பல நாள் யோசித்ததுண்டு. யோசிப்பதுண்டு...
இலையின் அடிப்புறத்தில் ஒட்டிக்கொண்டு, அந்த இலை அசையும் தருணங்களில் அதை விட்டு விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும், அந்த நத்தை. "இந்தச் சிறியதொரு உருவிற்கு இத்தனை வலுவா"? என்று எண்ணி வியந்ததுண்டு. எத்தனை வருடங்கள் ஆயினவோ, அந்த இலையின் மீதிருந்து கீழே இறங்கி வர! கீழே- உடைந்து கிடந்த நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள் அதன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன.
எத்தனை-எத்தனையோ கல்பங்கள் கடந்து வந்த புவியில், அற்ப காலத்தில் தோன்றிய மனிதன் மட்டும் எவ்வாறு வேறுபடுகிறான்? எதற்காக அவன் அவனையே இவ்வாறு உயர்த்திக் கொள்கிறான்? சொற்ப காலத்தைத் தவழ்ந்து வந்து, தற்காலத்தைப் பிடித்துக்கொண்டவன், அவன். பல்வேறு பிரளயங்களையும், அதன் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களையும் தனக்குச் சாதகமாகச் சித்தரித்துக்கொண்டு, பூமியில் தன்னைத் தானே பிரதானித்துக் கொண்டு திகழ்கிறான். அவனே உருவாக்கிக் கொண்ட, பல்வேறு விதமான ஆக்கங்களாலும், அழித்தல்களாலும்- அசைந்துகொண்டும் கசிந்துகொண்டும் இருக்கும் பூமியின் மேல் தன்னையும் ஒட்டவைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
கடலின் ஆழத்திற்கும், மலைச் சிகரங்களுக்கும், நிலப்பரப்பின் எல்லைகளுக்கும் உரிமை சம்பாதித்துக் கொண்ட மனிதன், விண்வெளிக்கும் சென்றான். ப்ரபஞ்சத்தை விலை பேசினான். அவன் தக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமியின் வறுமை பொறுக்காமல்- அதை உதறிவிட்டுச் சென்று, வேறொரு இடம் தேடி, ப்ரபஞ்சத்தில் மிதந்துகொண்டிருக்கிறான். மனிதனின் ஆறாம் அறிவின் ஆற்றலுக்கு முன்னால், ப்ரபஞ்சம் எம்மாத்திரம்?!- என்று இருமாந்திருக்கிறான்.
விண்ணிர்க்கப்பாலும், மண்ணிர்க்கடியிலும் வளர்ந்து நிற்கிறது- ஒரு சக்தி. கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியின் நாடி எவ்விடத்தில் இருக்கிறது- என்பதை ஆராய எண்ணியிருக்கிறது- மனிதனின் ஆறாம் அறிவு.
நத்தையின் வேகம்- அதனை உற்று நோக்கிக்கொண்டிருப்பவர்களை பொறுமை இழக்கச் செய்துவிடும். அதற்க்கு உதவி செய்யும் பொருட்டு- அதை ஒரு இலையின் மீது வைத்து, சற்று தொலைவில் விட்டு விடுவதற்குத் தூண்டிவிடும், அந்த நத்தையின் வேகம். ஆனால் அப்படிக் கொண்டு விடப்பட்ட நத்தை, உண்மையில் எங்கே செல்ல எத்தனித்திருந்தது? - என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்? அந்த நத்தையின் விருப்பம் இல்லாமல் அதைக் கொண்டு சேர்பித்த இடம்- அந்த நத்தைக்கு உவந்ததா? அதனால் அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் இயங்க இயலுமா? அதற்க்கு அந்த இடம் பழக்கப் பட்டு விடுமா? - என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.
விண்ணிற்கும், மண்ணிற்கும், அதற்கப்பாலும்- உயர்ந்து நின்றிருக்கும் அந்த சக்தியும்- கிட்டத் தட்ட அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும். எனவேதான்- நாடித் துடிப்பின் சப்தம் மட்டும் கேட்டிருக்கும் மனிதனால், அந்த நாடியின் நாதம் குடிகொண்டிருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அப்படி அந்த இடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டால், புறியாத கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போல- மனிதன் திணறிப் போகக் கூடும். சரியான கேள்விகளையே கேட்டிராத மனிதனுக்கு- விடையைக் காண்பித்து, பூமிக்கு ஏற்பட்ட நிலையை தானும் அடைய வேண்டாம், என்றுதான் நினைத்துக் கொண்டதோ, அந்த சக்தி.
கேள்விகளைத் தேடிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கிட்டியதேன்னவோ- ப்ரபஞ்சத்தின் ஒரு துளி கண்டத்தில் அவன் அடைந்த ப்ரமிப்பு ஒன்றே தான்! அந்த ப்ரமிப்பின் தாக்கத்தினால்- அங்கேயே மிதந்துகொண்டிருக்கிறான்.
நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள்- அதன் பயணத்தைத் தொடர்ந்தன...

ஒரு தடவ என்னாச்சு, எங்க அப்பா ஒரு white paint டப்பா வாங்கிண்டு வந்தா. Daily daily கோலம் போட வேண்டாம் வாசல்ல, அந்த paint ஆல permanent ஆ போட்டுடலாம்- அப்டீங்கற idea. First of all, என் அம்மா-கு கோலம் லாம் போட தெரியாது. ஒரு star இல்ல- ஒரு star சுத்தி வட்டம். இவ்வளவு தான் என் அம்மா-கு தெரிஞ்ச கோலம். Paint -லாம் நமக்கு தான் கொஞ்சம் நன்னா வரும்-ங்கறது நால என்ன நன்னா motivate பண்ணி வெச்சிருந்தா வாசல்ல வரைய...
நான் college லேர்ந்து வந்து பாத்தா- LKG கொழந்தைள்லாம் sketch பேனா வால கிருக்குமே- அந்த மாதிரி யாரோ வாசல்-ல Paint -ஆல கிறுக்கி வெச்சிருக்கா! நான் கூட எங்க என் cousin கும்பல்-தான் ஏதாவது பட எடுத்துண்டு வந்துருக்கோ-ன்னு நினைச்சேன்.
"டேய்... sorry டா! Paint டப்பா வ பாத்தா ஆசையா இருந்துது. பாத்தேன். போ! இதென்ன பெரிய வேல-ன்னு நானே போட்டுட்டேன்..." ன்னா என் அம்மா!
எதித்தாத்து aunty அப்போ தான் ஆத்துக்குள்ள நுழையறா. "என்னங்க இது! மாதங்கி பண்ணின வேலையா..." ? ன்னு எங்க அம்மா கிட்ட சிரிச்சுண்டே கேக்கறா...
என்ன போல ஒரு பொண்ண, எங்க அம்மாவால மட்டுமே வளர்த்திருக்க முடியும். என்னதான்- எவ்வளவு தான் திட்டினாலும்- அந்த திட்டு நால தான் என் blog இத்தன காலமா ஓடிண்டு இடுக்கு!
அதுக்காக அம்மா, Happy Mothers' Day ....!
காலில் சக்கரமும், முதுகில் இறக்கைகளையும் அணிந்து, எந்த இடத்திலும் ஒரு நொடிக்கு மேல் அவர்கள் இருப்பவர் இலர். அவர்களின் மனமும் அவ்விடத்தில் இருப்பது கிடையாது. எதிரே நிற்பவர்களின் நிழல்- அவர்களின் கண்களில் அவ்வபோது படுவதுண்டு. "இதுவும் ஒரு வாழ்வா"? என்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு தோன்றுவதற்கு அனுமதி கிடையாது. காலத்தின் கைதிகள்.
"என் வாழ்க்கையில் இதை போல் ஒன்றை நான் கண்டதே இல்லை" என்ற வரியை உபயோகிக்காதவர்களே சற்று குறைவுதான். "அப்படி என்ன வாழ்ந்து கிழித்து விட்டீர்கள்"? என்று எனக்குக் கேட்கத் தோன்றும். வாழ்கை என்பது சின்னச் சின்ன சந்தோஷங்களின் கோர்வை- என்று சில சிந்தனையாளர்கள் கூறிக் கேட்டதுண்டு. ஒரு சின்ன சந்தோஷத்தை அடைந்த உடனேயே ஏதோ வாழ்கையின் உச்சக்கட்ட நிலையை அடைந்தவர்களை போன்ற எண்ணங்களில் மிதந்து தத்தளித்துப் போவர் சிலர்.
அவர்களைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. நம் பறக்கும் கைதிகளைப் பற்றி ஒரு சில வரிகள்...
வெளிச்சத்தைக் கண்டு, அதனால் ஈர்க்கப் பட்டு வேறு பொருளைக் காணாது- வெளிச்சத்திலேயே வாழ எண்ணி மடிந்து போகும் சிறு ஜீவன்களை நினைவு படுத்துகிறது- நம் பறக்கும் கைதிகளின் வாழ்வு. சொர்விற்கோ, சுகத்திற்கோ, துக்கத்திற்கோ, மகிழ்விற்கோ படியாத ஒரு மனித ஜாதியும் இருக்குமோ? - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம்? எந்தச் சாதனையை துரத்த இந்த பதற்றம்? கேட்கும் கேள்விகள் கேட்பவர்களேயே எதிர்நோக்கி தாக்கி நிற்க- அவர்கள் கடந்து போன பாதையில் அவர்களின் பாதச்சுவடு பதித்திருக்க நேரமில்லாது பறக்கும்- காலத்தின் கைதிகள்.
"இப்படிப்பட்ட கேள்விகளை- எங்களிடத்தில் கேட்பதற்கு உனக்கென்ன அருகதை இருக்கிறது? அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது"? என்பது போன்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு வருவதாகத் தெரியவில்லை. கேட்பவர்கள் கேட்டே நிற்க, பறக்கும் கைதிகள் பறந்தே இருக்க- கேட்பவர்கள், பறப்பவர்களின் எல்லையை அறிய ஆவல் கொண்டு கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.
அமைதியில்லா பறத்தலினால் இறகுகளும் சோர்ந்தன. சோர்ந்து போன கைதிகள் கேட்பதெல்லாம்- பருக சிறிது நீர்.
எங்கு தான் கிடைக்குமோ- அந்த நீர்? பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ? அல்லது- காலங்கள் தாண்டி- சுகங்கள் அனைத்தும் மறந்தமையால், மறத்தலின் பிழை உணர்ந்த கண்களில் மெதுவாக தோன்றி- நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போக, குளமாக தேங்கிய கண்ணீரையும் பருக இயலுமோ?
கேட்பவர்களிடம் கேட்கலாம். நீர். "ஆனால் நீர் அளிக்கக் கூலியாக விடை கொடுக்க நேரிடுமோ"? என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. "இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ?... ஏன் புரியவில்லை?..." என்று கேட்டு ஓய்ந்தார்கள்- பறக்கும் கைதிகள். கேட்பவர்களுக்கு முன்னே. கேள்விகளோடு.
கேட்பவர்களோ- "பறப்பவர்கள் அவர்கள் இலக்கை எட்டி விட்டார்கள் போலும்" - என்று எண்ணிக் கொண்டனர். "இத்தனை காலம் பறந்து- நான் சேர்ந்த இடத்திற்குத் தான் நீயும் வந்தாயா"? என்று மனதில் உள்ளூரத் தோன்றிய இறுமாப்புடன் நகையாடினார்கள்.
கேள்விகளோடு, நீர் கிட்டாமல், ஓய்ந்தார்கள்- ஒரு நொடி வாழ்ந்தவர்...
இது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, "மாதங்கி மாலி" ன்னு ஒரு post போடணும்-னு தான் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு "வல்லியசிம்ஹன்" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல "பெயர் காரணம்" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி படிக்கும் போதெல்லாம் "நாமளும் எழுதணும்" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.
Mr. X: பேரு?
நான்: மாதங்கி
Mr. X: மாதவி-யா?
நான்: மாதங்கி-மாதங்கி...
Mr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா?
நான்: மா-த-ங்-கி, sir...
அதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர்! Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல! 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.
"தில்லானா மோகனாம்பாள்" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. "என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா!
எனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம "குறிஞ்சி மலர்" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த "மாதங்கி" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு! (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம்! "நல்ல வேள" ன்னு நினைச்சுப்பேன்...)
உலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்கலாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். "சித்ரா-பௌர்ணமி", "புத்த பூர்ணிமா", "சித்ர ஸ்வாதி"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு "தோ- இருக்கேன்-இருக்கேன்" ங்கரதுகள்! எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....
சின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் "மாடங்கி" ("Mod-dong-gee") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும்! School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல "pause" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்!
நாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. "மாதன்கி" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு? "போடா-- ! எவ்வளவு ஒசத்தியான பேரு! எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ"? ன்னு அளப்பா! எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்!
Calcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது "perspective" கடைச்சுது. Perspective என்ன perspective? ஒரு புது "கோணம்" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன்! அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். "மாதங்கி" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- "மாதொங்கி"! "மாதொங்கினி" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த "தொங்கலுக்கு" முன்னாடி இந்த "தொங்கல்" எடுபடல.
ஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல "அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்" னு ஒரு பறவைய பத்தி வரும். "மாதங்கி" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறையா பேரு "D" sound use பண்ணுவா- "த" க்கு பதிலா. இல்ல "Ki" சொல்லுவா "Gi" க்கு பதிலா. "மா-த (त)-ங்-கி (गी)" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- "ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.
Blog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் "Matangi Mawley" கடைச்சுது. "Mahalingam" short-form "Mali" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் "Mali" ன்னா "தோட்டக்காரன்" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா "Mali" யோட phonetic spelling-ஆன "Mawley" use பண்ணுவா, sign பண்ண. "Mathangi" ல 'h' எடுத்துட்டு "Matangi Mawley" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.
4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. "மாதங்கி மாலி" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் "எனக்கும் எழுத தெரியறது" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...
Tag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
சிறந்த புதுமுகம் -- நன்றி LK
Thanks LK!- for the Goldden Man!
They make my day...
-
15 hours ago
-
1 week ago
-
1 week ago
-
1 week ago
-
4 months ago
-
8 months ago
-
11 months ago
-
1 year ago
-
1 year ago
-
2 years ago
-
5 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
12 years ago
-
12 years ago
-
14 years ago
-
14 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".