இது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, "மாதங்கி மாலி" ன்னு ஒரு post போடணும்-னு தான் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு "வல்லியசிம்ஹன்" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல "பெயர் காரணம்" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி படிக்கும் போதெல்லாம் "நாமளும் எழுதணும்" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.
Mr. X: பேரு?
நான்: மாதங்கி
Mr. X: மாதவி-யா?
நான்: மாதங்கி-மாதங்கி...
Mr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா?
நான்: மா-த-ங்-கி, sir...
அதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர்! Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல! 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.
"தில்லானா மோகனாம்பாள்" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. "என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா!
எனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம "குறிஞ்சி மலர்" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த "மாதங்கி" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு! (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம்! "நல்ல வேள" ன்னு நினைச்சுப்பேன்...)
உலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்கலாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். "சித்ரா-பௌர்ணமி", "புத்த பூர்ணிமா", "சித்ர ஸ்வாதி"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு "தோ- இருக்கேன்-இருக்கேன்" ங்கரதுகள்! எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....
சின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் "மாடங்கி" ("Mod-dong-gee") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும்! School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல "pause" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்!
நாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. "மாதன்கி" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு? "போடா-- ! எவ்வளவு ஒசத்தியான பேரு! எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ"? ன்னு அளப்பா! எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்!
Calcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது "perspective" கடைச்சுது. Perspective என்ன perspective? ஒரு புது "கோணம்" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன்! அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். "மாதங்கி" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- "மாதொங்கி"! "மாதொங்கினி" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த "தொங்கலுக்கு" முன்னாடி இந்த "தொங்கல்" எடுபடல.
ஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல "அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்" னு ஒரு பறவைய பத்தி வரும். "மாதங்கி" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறையா பேரு "D" sound use பண்ணுவா- "த" க்கு பதிலா. இல்ல "Ki" சொல்லுவா "Gi" க்கு பதிலா. "மா-த (त)-ங்-கி (गी)" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- "ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.
Blog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் "Matangi Mawley" கடைச்சுது. "Mahalingam" short-form "Mali" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் "Mali" ன்னா "தோட்டக்காரன்" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா "Mali" யோட phonetic spelling-ஆன "Mawley" use பண்ணுவா, sign பண்ண. "Mathangi" ல 'h' எடுத்துட்டு "Matangi Mawley" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.
4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. "மாதங்கி மாலி" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் "எனக்கும் எழுத தெரியறது" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...
Tag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...
அப்போலாம் இது சாப்படணும்னா ஒண்ணு டிவி ஓடனும், இல்ல ஏதாவது ஆடு, மாட கட்டி போட்டு வேடிக்க காட்டணும், இல்ல- கத சொல்லணும். கதையும், சும்மா "பாட்டி இருந்தா... காக்கா வந்துது"ன்னு லாம் இருக்கப்டாது. பேய், பிசாசு, ராஜகுமாரி, பூதம், மந்த்ரவாதி- இத போல சில characters அந்த கதைல கண்டிப்பா இருக்கணும். எல்லாம் அதோட பாட்டி பண்ணின வேல. இதுக்கு பேய்-பிசாசு கதையா சொல்லி சொல்லி பழக்கி விட்டுருக்கா, நன்னா! எனக்கா, கதையே சொல்ல வராது. இது அடுத்த வாய்-க்கு வாய துறக்காத "உம்... உம்..." ங்கும். நான் எங்க போவேன், கதைக்கு?
"அப்புறம் கிச்சு என்ன பண்ணித்து, டொய்ங்.... னு அந்த அஞ்சு தல பாம்பு தலேல குதிச்சுது. சோனி கிட்ட-'டேய், நீ போய் எல்லாரயும் கூட்டிண்டு வாடா'ன்னு சொல்லித்து..." ன்னே நானும் எத்தன நாள் சொல்லி ஓட்ட முடியும்? இது அப்பா நன்னா அளப்பார். செத்த இது சாப்படற வரைக்கும் ஏதாவது சொல்லுங்கோ-ன்னா ஒழியாது. நாம சொன்னாதான் கேக்கப்டாதே! ஆனா நான் office போய்டா, ரெண்டும் ஒத்துமையா plate ல சாப்பாடெல்லாம் எடுத்து வெச்சுண்டு கத பேசிண்டே சாப்டும்!
என்னென்னமோ கத! இன்னிக்கு என்னடா கத சொன்னா, உங்கப்பா? ன்னா, "நடகம்-சொக்கம்" ங்கும். அது என்ன கதையோ... "நரகத்துல என்ன இருக்கும், சொர்கத்துல என்ன இருக்கும்"- இது தான் கத. அதுலயும் "நரகம்" தான் இதோட favourite! ஏன்னா அதுல தான் பூதம், பிசாசு-லாம் வரும். "அலிபாபா..." சினிமா ல வராப்ல "எண்ண கொப்பற"லாம் வரும். இந்த கத கேட்டு-கேட்டு, அப்புறம் இந்த "முன்ஷி தோதா ராம்" னு "அமர் சித்ர கதா" ல ஒண்ணு இருக்கும். அது பிடிக்கும். அதுல பாத்தேள்னா இந்த தோதா ராம் நரகத்துல போய் அவனோட கணக்குல-லாம் fraud பண்ணறாப்ல லாம் வரும்.
"சத்யமூர்த்தி" கத தான் அடுத்த favourite. அதுல மோஹினி பிசாசெல்லாம் வரும். கொழந்தேள்- னா "ராமர்", "கிருஷ்ணர்", "தேவதை"-ன்னு ஏதாவது சொல்லணும். இது பேய்-பிசாசு கத தான் கேப்பேன்-ங்கறது! அது பாட்டி பழக்கி விட்டது, அத்தனையும். அவா ஊர் கதையெல்லாம் இப்புடி தான் 'மந்த்ரம்-மாந்த்ரீகம்'னு லாம் இருக்கும். எங்க அம்மா ஆனா- சும்மா சொல்லப்டாது. ரொம்ப நன்னா கத சொல்லுவா! பாட்டி கதையெல்லாம் வேற மாதிரி இருக்கும். காளி கோவில், பலி, தல தலையா தொங்கறது, மந்திர வாள், யந்த்ரத்துக்கு நடுப்ற கறுப்பு பொம்ம- இப்புடி இருக்கும். பேய்-பிசாசு-லாம் அப்பா. மந்த்ரமெல்லாம் பாட்டி!
"கொழந்த பயபடும், சொல்லாதேள்" னா, பேச்ச கேட்டா தானே! அது கேக்கறது-ன்னு இவரும் சொல்றாராம். நான் evening duty போனாலும் போனேன், கொழந்த ஒரு வாரமா ராத்ரிலாம் சரியாவே தூங்கல. ஒரே ஜுரம். அப்புறம் தான் விஷயம் வெளீல வருது.
"ராத்திரி 12 மணி. வெள்ள screen லாம் மெது உ உ வா ஆடறது. உனக்கு தெரியாம வரும். பெருஸ்ஸ்ஸ்ஸா இருக்கும். வெள்ள வெள்ளேர்னு இருக்கும். கருப்ப்ப்பு dress போட்டுண்டுருக்கும். இதோ இந்த இடத்துல, கழுத்துல கடிச்சு ரத்தத்த எல்லாம் உறிஞ்சிடும். அதோட முன் பல் ரெண்டுத்தோட mark மட்டும் இருக்கும், தொ- இந்த இடத்துல இருக்கும்- Draculla ..." ன்னு கத சொல்லிருக்கார் மனுஷர். இதுவும் பயந்து நடுங்கிண்டு, தூங்காம ராத்திரி முழுக்க ஜன்னல் பக்கத்ல உக்காண்டு "Draculla வருதா வருதா" ன்னு பாத்துண்டுருந்திருக்கு!
இனிமே பேய்-பிசாசு ன்னு யாராவது இந்தாத்ல சொன்னேளோ தெரியும்! பாய்-ல design பாத்தப்போவே நேக்கு ஸம்ஷயம். மருந்து மாத்தர கொடுத்து தூங்க பண்ணிருக்கு, பாவம்- இப்போதான். கொழந்தைக்கு இப்புடியா கத சொல்லுவா? Office -லேர்ந்து வரட்டும், பேசிக்கறேன்... கதையா சொல்றேள் கத...?
நேரான ஒரு கோட்டில் திடீரென்ற கோணலைப் போல ஒரு எதிர்பாரா பயணம். புதிய இடங்கள் தேடிக் கொண்டு, போன இடங்கள் அத்தனையும் என்னவோ கோவில்கள் தான். பயணங்களில் பலன் தேடிப் போகவில்லை. பலன்கள்
கிட்டுமோ என்ற எதிர் பார்ப்பும் இல்லை. சென்று வந்தோம். ஒரு சில மறக்க முடியாத நினைவுகளை/நிகழ்வுகளை, கொண்டு வந்தோம்.
விடியற் காலை 4:30 மணிக்கும் திறந்து விரிந்த ராமேஸ்வரம் கோவில் கதவுகள். ஒலித்த பாடல்கள் என்னவோ 'அருணாச்சலமே போற்றி' என்று தான்! அத்தனை நேர பிரயாணத்திற்குப் பிறகு படுத்துறங்க மட்டும் தான் சம்மதித்தது, மனம். 'அக்னி குண்டத்தில்' குளிக்க வேண்டும்- என்றார்கள். பாவங்கள் எல்லாம் கரைந்து போகுமாம்.
பாபாத்மாக்களுக்கு 'அக்னி குண்டத்தில்' பஞ்சமில்லை. அவர்கள் அனைவரின் பாபங்கள் தூவப்பட்ட மலர்களும், பூஜையில் உபயோகித்த மற்ற சாமான்களும் நாங்கள் மூழ்கி எழுந்த பின், எங்களின் மீது.
சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் இருந்த ஓர் இடம் ஒன்று, இப்போது இல்லை. கடல் கொண்டு சென்ற 'தனுஷ்கோடி' யின் எஞ்சி இருக்கும் நினைவுகளில் பங்கு போட்டுக்கொள்ள சென்றிருந்தோம். மணலும், கடலும் மட்டும் வசிக்கும் அந்த
இடத்தில் ஆங்காங்கே ஓரிரு மீனவ கிராமங்கள். ஒரு புறம் வங்காள விரிகுடா. மறுபுறம் இந்து மஹா சமுத்திரம். பல கடற்கரைகளில் அலைகளோடு மல்லு கட்டி நின்று தோற்றுப்போன செருப்புகளின் கடைசி இருப்பிடம், அங்கிருந்த மணல்.
அவசர அவசரமாக சிறகுகளை அடித்துக் கொண்டு கடலை நோக்கி விரைந்து
கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியை பார்த்து அம்மாவிற்கு வருத்தம். "அது பாட்டுக்கு கடல்-ல போறதே... எங்க rest எடுத்துக்கும்.."? என்று! பறந்து விரிந்த அவனியில் கடலையும், வானத்தையும் தவிர வேறொன்றுமில்லை. மிகுதியை மட்டும் கண்டு வியந்திருந்த என் கண்களுக்கு அந்தச் சிறிய பட்டாம்பூச்சியை காண முடியவில்லை. அம்மாவின் பார்வை- என் மிகுதியின் நிறைவில் முடிவு கண்டிருந்த மனதிற்கு மீண்டும் ஒரு துவக்கத்தைக் காட்டியது!
வைதீஸ்வரன் கோவில். ஸ்தல வ்ருக்ஷமான வேப்பமர நிழலில் அநேக மந்திகள். பூஜையில் படைக்கப்பட்ட பழுத்த வாழைப்பழங்களினால் அழகாக ஓடிக்கொண்டுருந்தது அந்த கொழுத்த மந்திகளின் சுக ஜீவனம். புறாக்களின் சிறகுகளின் பட படப்பிலும், வவ்வால்களின் மிகுதி உணர்த்திய அந்த கந்தத்திலும்,
மந்திகளின் குறும்பிலும், தெப்ப குளப் படிக்கரை பாசியிலும் உயிர் பெற்று இருந்தது அக்கோவிலின் பழமை வாய்ந்த அழகு. அம்பாள் சந்நிதி குருக்களின் அட்டகாசமான பஞ்சகச்சம்- 'திருவிளையாடல்' படத்தின், 'தருமி' கதையில்- சிவாஜி-க்கு கட்டப் பட்டிருந்த அதே பாணியில்!
சீர்காழியில், ஒரு பாட்டி. சிரித்த முகம், சிறிய உருவம், நெற்றி நிறைய குங்குமம்.
'மீனுக்கு பொறி போடுங்க...', என்று அவள் சொல்ல- அதை தட்டிக் கழிக்க மனமில்லை. எத்தனை மீன்கள்! காலை முதல், கோவில் பிரகாரங்களை சுற்றிக்கொண்டிருந்த கால்களில், மேலும் நடக்க வலு இல்லை. 'நல்லா கால வீசி போட்டு நடங்க...' என்று அவள் குரல் மட்டும், அருகில் கேட்டது! ஆடுகள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும் குழந்தைகள்- கோவில் வழியாக போவதால் ஒரு கையில் புத்தகப் பையும், மற்றொரு கையில் செருப்புகளும் சுமந்து கொண்டு ஆடுகளுடனும், மற்ற தோழர்களுடனும் விளையாடிக்கொண்டே போன காட்சிகள். சட்டநாதர் கடவுளுக்கு இரும்புத்திரை. பெருச்சாளிகள் தொல்லை, கவுளைச் அச்சிறையில் தள்ளியதாம்! வெளிச்சமும் இல்லை. "பாவம் செஞ்சவா கண்ணுக்கு சுவாமி தெரியமாட்டார்", என்று கிண்டல் அடிக்க- கண்ணுக்குத் தெரியாத அந்த கடவுளைக் கண்டதாகச் சொல்லித் திரிந்தோம்,
பதிலுக்கு.
நந்தனார் பார்வை மறைத்த நந்தியை நகரச் செய்தாராம், ஈசன். விலகி இருக்கும் நந்திக்கு புகழ் கிடைத்தது, திருப்புங்கூரில். பிரம்மாண்டமான நந்தியின் காதுகளை அலங்கரித்திருந்தது, வெண்கல மணி. ப்ரதொஷநாதரும் மின் வெட்டிற்கு பலியாகியிருந்தார். இருட்டில் புதைந்திருந்த அவரை ஓரளவு கண்ணுக்கு காட்டியது, சுடர் விட்ட கற்பூரம். கோவில் வாசலில், சுந்தர ராமசாமி சொல்வது போல- 'நிக்கரை பஹிஷ்கரித்து' விட்டு அபீட்
எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்கள்.
'மானசரோவர்' இல்லத்தில், குச்சி ஐஸ். ஊஞ்சலில் பொழுதுகள் கழித்து, திண்ணையின் குளுரில் உறக்கம். முற்றத்துக் கம்பிகளின் நடுவே ஒளி தந்து கொண்டிருந்த சூரியக் கிரணங்களின் ஒளி, அவ்வபோது அந்த ஓட்டு வீட்டின் மூலையில் தொங்கிக் கொண்டிருந்த ஹரிக்கன் லைட் கண்ணாடியில் மோதி, வெளிவந்த ரஸ்மிகள். தோட்டத்தில் காய்த்துக் குலுங்கிய பலா, செவ்விளநீர் பறித்துக் கொடுத்த ஒருவர்- மரம் ஒன்றிற்கு ரூபாய் 20. முல்லை, மல்லி, செம்பருத்தி, அரளி- இன்னும் எத்தனை எத்தனையோ பல வண்ண மலர்கள். ஊசி மிளகாய் இலையில் மறைந்து நிற்க- காய்த்துக் குலுங்கிய
எலுமிச்சையின் பளுவில் வளைந்த கிளைகள். வெந்நீர் தவலையை படம் பிடித்த எனக்குப் ப்ராந்தென்று கருதிய உறவுகளும் அங்குண்டு. இப்படிக் கோவில்களில் கழிந்தது 'சிவராத்திரி' பகல். அன்று இரவு கேபிள் டி-வி யில் 'மன்மதன் அம்பு' சினிமா.
'பாட்டி சமையல்' ருசியின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்த இந்த சில நாட்களுக்கு விடை கொடுக்கும் பொழுதும் நெருங்கியது. ரயில் வண்டியில்
பயணத்தின் போது பின்னே விட்டுச் செல்லும் இடங்கள் கண்ணில் தெரியும் வரையில் பார்த்துக் கொண்டே இருந்தது என் கண்கள். பழைய நினைவுகளின் தாக்கத்தினால் சாப்பிட்ட ஒற்றை குச்சி ஐஸ்-இன் பலன், தண்ணீரும் தொண்டை வழியே செல்லாது, வருத்தியது.
பத்து நாட்களாக நகரம் காணாத கண்களுக்கு, நகரத்தை உள் வாங்கிக் கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது. பத்து நாட்களில் ஒரு கிலோ இடை குறைந்திருந்தான், துப்பாண்டி!
கொஞ்ச காலமாவே- நான் நிறையா மராத்தி பாட்டுகள் கேட்டுக்கொண்டு இருக்கேன். நம்ம ஊர்ல இப்போ almost நிறையா பேருக்கு அருணா சாய்ராம் புண்யத்துல நிறையாவே மராத்தி பாட்டுகள் பரிச்சயம் ஆகிக்கொண்டுருக்கு, அபங்கம் மூலமா. But நான் இங்க சொல்லறது cinema பாட்டுகள பத்தி. எனக்கு மராத்தி எல்லாம் தெரியாது. எதோ subtitles புண்ணியத்துலயும், பாஷ தெரிஞ்ச சில friends மூலமாகவும்- lyrics கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன். ஒரு சில lyrics லாம் கேக்கும் போது பாரதியார் சொன்னது- 'சிங்க மராத்தியர் தம் கவிதை ...' தான் நினைவிற்கு வருது. அத்தன அழகா இருக்கு. ஆனா- அது நல்லதா கேட்டதா தெரியல, எனக்கு என்னிக்குமே Music தான் முதல் favourite. ஒரு சில சமயங்கள்-ல 'lyrics' புரியலேன்னாலும்- பல பாஷைகளோட பாட்டோட இசை-ய நம்ம அந்த இசையினோட ஈர்ப்பினால தான் ரசிக்கறோம். என்ன இருந்தாலும்- அந்த இசை தான் நம்ம அந்த lyrics நோக்கியும் இழுத்து செல்லும் ஒன்று ங்கறது என் கருத்து.
நான் school ல படிச்ச காலத்துல, radio ல ராத்திரி-ல ஒரு programme போடுவான். அது பேரு மறந்து போச்சு. But அது ரொம்பவே நல்ல concept. Doordharshan ல Sunday அன்னிக்கு மத்த பாஷ ல award வாங்கற படங்கள் போடறாப்ல இது radio ல ஒரு programme. இந்தியா ல இருக்கற பல மாநினங்களிலேர்ந்து வந்த நல்ல நல்ல பாட்டெல்லாம் போடுவான். நாங்க தமிழ் பாட்டு போடறானா-ன்னு பாக்க அந்த programme regular ஆ கேப்போம். அப்படி கேட்ட ஒரு பாட்டு- பாட்டோ, அந்த வார்த்தைகளோ, ஏன்- அது என்ன பாஷன்னு கூட நினைவில்ல. ஆனா ரொம்ப நாள் அந்த இசை மட்டும் மனசில இருந்தது. ஒரு சில சமயம் தோணும்- Google ஆண்டவர் கிட்ட நம்ம hum பண்ணி, அந்த tune கு matching பாட்ட அவர் தேடி தர கூடாதோ-ன்னு! ரொம்ப வருஷம் கழிச்சு, ஒரு reality show ல யாரோ அந்த பாட்ட பாடினா. அப்போ தான் அது மராத்தி பாட்டு ன்னு தெரியும். அப்படியும் வெறும் த்வனி தான் காதில் விழுந்ததே தவிர- lyrics ஒண்ணுமே புரியல. இன்னும் நிறையா வருஷம் கழிச்சு, You Tube புண்ணியத்துல, எதோ தேட போக- இந்த பாட்டு வந்து நின்னுது! ஒரே குஷி!
இவ்வளோ build-up குடுத்த அந்த பாட்டு- ஒரு Kholi song. அதாவது நம்ம 'செம்மீன்' மலையாள படத்துல 'கடலினக்கர போனோரே' பாட்ட போல ஒரு மீனவ பாட்டு. இது ரொம்பவே பழைய பாட்டு. ஆனா ரொம்ப famous கூட. நீங்களும் இத எப்பவாவது கேட்டிருக்க வாய்ப்புண்டு. Hridaynath Mangeshkar music ல லதா வும் ஹேமந்த் குமாரும் பாடின பாட்டு. இதெல்லாம் நான் சமீப காலத்துல கண்டு பிடிச்சது தான். இத்தன வருஷமா என்ன haunt பண்ணின அந்த tune 'Mi Dolkar' (click here).
தேடல்கள் மூலமா நான் கண்டு பிடிச்ச இன்னொரு பாட்டு- 'Gaarva' ன்னு ஒரு Album song. இத Milind Ingle பாடிருக்கார். அத்தன ஒரு மெதுவான, இனிமையான tune. இதே போல இல்ல. ஆனா- இந்த மாதிரி ஒரு சாயல்-ல ஒரு அழகான மலையாள பாட்டு கூட உண்டு. அது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு- 'பீலி ஏழும் வீசி வா...' ன்னு 'பூவினு புதிய பூந்தென்னல்' ங்கற மலையாள சினிமா பாட்டு. அத நாலையோ என்னவோ- இந்த மராத்தி பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு! 'Gaarva' பாட்டு கேக்க- click here...
இத போல எத்தனையோ பாட்டுகள். மராத்தி பாடல்கள்-ல ரொம்பவே interesting aspect - லாவணி.
அந்த காலத்திலேர்ந்து ஆரம்பிச்சு- இப்போ வரைக்கும், இந்த லாவணி ங்கறது மராத்தி பாடல்-களோட ஒரு தனி எடத்த பிடிச்சிருக்கு. நம்ம 'ஹே ராம்' படத்துல கூட ஒரு லாவணி பாட்டு வரும். ஒரு பழைய- ஆனா ரொம்பவே பிரபலமான லாவணி பாட்டு Jeyashree Gadkar பாடினது கேக்க click here. இந்த பாட்டு எனக்கு ஒரு music forum மூலமா தெரிய வந்தது. Recent -ஆ, 'Zee Talkies' banner ல மராத்தி ல ''Natrang" நு ஒரு படம் வந்தது. அதுல் குல்கர்னி நடிச்ச அந்த படத்த- நான் recent ஆ பாத்தேன். ரொம்பவே சோகமான படம். அதனாலேயே அது ஒரு நல்ல படம். அந்த cinema ல வர பாட்டெல்லாம் ரொம்பவே அற்புதமா இருக்கு. ஒரு ரெண்டு லாவணி பாட்டு, அதுல. Lyrics, இசை- எல்லாமே A1!
Bela Shinde பாடின 'Apsara aali' ங்கற இந்த பாட்டு (click here) 'மாயா மாளவ கௌள' ராகத்தில இருக்கு. இப்படியும் இந்த ராகத்த பயன் படுத்த முடியும்-நு நினைக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது! இந்த பாட்டுல ஒரு அற்புதமான 'passion'. 'passion' கொஞ்சம் strong ஆன வார்த்த. 'Suggestive' இல்ல 'provocative' நு சொல்லலாமோ என்னவோ. simple ஆ சொல்லலும்-னா ரொம்ப அழகான பாட்டு. அந்த லாவணி dancer அ வருணிக்கறது போல எழுதப்பட்டிருக்கு. புரியணும்-னு கூட இல்ல. கூர்மையா கவனிச்சாலே அழகா புரியும் போல எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். ஆனா fortunately subtitles இருக்கற video வே இங்க இருக்கு.
அதே படத்துல வரும் இன்னும் ஒரு பாட்டு இது. 'jau dya na ghari' (click here) ங்கற இந்த பாட்டையும் Bela Shinde தான் பாடிருக்காங்க! போன பாட்டுல இருக்கும் 'sensuousness' இந்த பாட்டுல வேற ஒரு உருவம் எடுக்கறது. கேக்க இன்னும் 'captivating' ஆகவும் enjoyable ஆகவும் இருக்கு!
'Mi Radhika mi premika' (click here) ங்கற இந்த பாட்டு பாடினது- Aarti Ankalikar- Tikekar. இது 'maalkauns' ஆ 'basant mukhari' யா ன்னு எனக்கு சரியா தெரியல. அத்தன அழகான பாட்டு. கேட்டாலே 'Radha - Krishna' saga வ மையமா கொண்ட பாட்டு-ன்னு தெரியும். வார்த்தைல என்ன இருக்கு? எனக்கு இந்த பாட்ட கேட்டா 'எல்லா கோபிகா கூடவும் ஒரு கிருஷ்ணன் dance பண்ணுவானே'- அந்த scene mind ல வரும். சோகத்துலையும் சுகம் தேடும் tune. சோகம், சுகம், பிரேமை, பிரிவு, தடை போடப்பட்ட ஆசைகள்-னு எல்லா விதமான emotions கும் இந்த ராகமும், இந்த பாடலும் ஒரு 'திறக்கப்பட்ட கதவு' போல தோணும், இந்த பாட்ட கேக்கும் போது, எனக்கு! இதுவே கூட 'பக்தி' ன்னு சொல்லலாமோ என்னவோ!
இத போல எத்தனையோ மொழிகள்-ல எத்தனையோ பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் நம்மள ஒரு வேறு விதமான உலகிற்கும், கலாசாரத்துக்கும் அழைத்துச் செல்லுகிறது! அந்த அடுத்த கட்டத்துக்கு போக முதல் அடி ஒண்ணு தான் நாம எடுக்கணும். தேடல்கள் தொடர்கின்றன...

- 'இது Movie Review கிடையாது"
ஒரு season ல என்னோட book shelf முழுசா crime stories ஆ இருக்கும். அங்கேர்ந்து கொஞ்சம் உயர்ந்து thriller movies கு என்னோட progression ஏற்பட்டது. தமிழ்-ல நான் முதல் முதலா பார்த்த thriller 'பொம்மை' ன்னு ஒரு S. Balachander படம். ஆனா அந்த cinema எனக்கு அவ்வளவா நினைவு இல்ல. எதோ ஒரு பொம்மை உள்ள bomb இருக்கும். அதுக்கப்றம் அந்த cinema நான் பாக்கவும் இல்ல. அதுக்கப்றம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு thriller movie, அதே director எடுத்த 'அந்த நாள்'. பாட்டு எல்லாம் இல்லாம, characters ஓட psychological aspect அ ரொம்பவே subtle ஆ 1954 ல எடுத்தது- நிஜமாகவே ஒரு ரொம்ப பெரிய விஷயம். அதுக்கப்றம் எவ்வளவோ books, movies ... இந்த 'Unsolved True Crime Stories' ல வர கதையெல்லாம் படிச்சு அவ்வளோ ரசிச்சிருக்கேன்.
'Detective' னு ஒரு Arthur Heily யோட novel. அந்த book ல தான் முதல் முதலா Serial Killers பத்தி படிச்சேன். எந்த field பத்தி தெரிஞ்சுக்கணும்-நாலும் அத பத்தின Arthur Heily book படிச்சா போரும்-னு என் அப்பா மட்டுமில்ல, நிறையா பேர் சொல்லி கேள்வி பட்டிருந்தேன். ஒரு Crime investigation, serial killing ல இருக்கற pattern பத்தி- என்னவெல்லாம் ஒருத்தருக்கு தெரியனுமோ- அத்தனையும் அந்த book படிச்சா ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அதுக்கப்றம்- Alfred Hitchcock. எப்படி mafia movies எல்லாத்துக்கும் 'Godfather' தான் inspiration ஓ, அதே போல thriller எல்லாத்தக்கும் இவரோட movies.
Gautham Menon ஓட 'நடுநிசி நாய்கள்' cinema இன்னிக்கு பாக்கும் பொது எனக்கு தோணினது- Hitchcock ஓட 'Psycho' movie ய ரொம்பவே சுமாரா - சுமார் கூட இல்ல, ரொம்பவே மட்டமா தமிழ் ல எடுத்த ஒரு படம் னு தான் நினைக்க தோணித்து. Menon 'Psycho' வ மட்டும் அவரோட inspiration ஆ எடுத்திருந்தா கூட பரவாயில்ல. 'Psycho' மற்றும் 'சிகப்பு ரோஜாக்கள்'- ரெண்டையும் சேத்ததுதான் இங்க பிரச்சனையே. 'Psycho' எப்படி ஒரு phenomenon ஓ, அதே போல 'சிகப்பு ரோஜாக்கள்' உம் ஒரு phenomenon. 'சிகப்பு ரோஜாக்கள்' ஒரு அருமையாக எழுதப்பட்ட/execute செய்யப்பட்ட ஒரு படைப்பு. Crime Thrillers ல interest இருக்கற எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பெயர்- 'Ted Bundy'. Ted Bundy யோட 'charm', அவனோட trial போது கூட அத்தன பெண்களோட கவனத்த அவன் தரப்பு ஈர்த்தது. இது history. America வோட one of the most notorious serial killers ல இவனுக்கு தான் முதல் இடம். அவன் எத்தன பேரை கொன்னான் ங்கறது இப்போ வரைக்கும் ஒரு mystery தான். Serial killers கு இருக்கற ஒரு main advantage- அந்த element of surprise தான். Unassuming ஆன- unexpected nature வெளிப்படுத்துதல். Ted Bundy பத்தி நீங்க தயவு செஞ்சு internet ல படிக்கவும். அப்ப தெரியும், கமல் ஹாசன், 'சிகப்பு ரோஜாக்கள்' ல அந்த role அ எவ்வளவு நல்லா பண்ணிருக்கார்-னு!
'Gautham Menon' ங்கற brand name பாத்துட்டு அந்த cinema கு போனது என் தப்பு-தான். ஆனாலும், எனக்கு மத்தவங்க 'reviews' கேட்டுட்டு cinema பாக்கறது பிடிக்காது. "Mobile வாங்க மட்டும் அத்தன review படிக்கற"! ன்னாங்க என் அம்மா. உண்மை தான். யோசிக்க வேண்டிய விஷயம். Realism கடைபிக்கவேண்டிய தருணங்களில்- psychological transition ரொம்பவே 'smooth' ஆ இருக்கணும். சரி. இது ஒரு 'commercial movie' ன்னு ஒப்புக்கொள்வதாக இருந்தால்- அந்த transition ல இருக்கும் drama, effective ஆக இருந்திருக்க வேண்டும். 'அந்நியன்' ல இருந்தது போல. ஆனா- இந்த cinema வில வரும் அந்த 'transitions' எனக்கு சிரிப்பு தான் வந்தது. Screen குள்ள குதிச்சு போய் ஒரு 'Vicks Inhaler' வாங்கி கொடுக்கலாமோ-ன்னு நினைக்க வெச்சது.
ஒரு அவலத்தை 'romanticize' பண்ணுவதின் பெயர் 'art' கிடையாது.
படத்தில், anti-hero, தான் கொலை செய்த பின் அந்த சடலங்களை 'acid' இல் கரைக்கிறார். இப்படி ஒரு சம்பவம் நினைவில் வருகிறதா? Nithari killings இல் சடலங்களை மறைக்க பயன்படுத்தப்பட்ட முறை இது. அவரது வாழ்க்கையில் ஒரு 'mother- figure' ஆக இருக்கும் பெண்ணின் உடல் நெருப்பில் வெந்து போகிறது. அப்படி வெந்து போன அந்த பெண்ணை அந்த 'anti-hero' வின் கண்களால் நாம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் காண்கிறோம். அதை பார்க்கும் போது- கும்பகோணத்தில் school குழந்தைகளுக்கு நடந்த ஒரு சம்பவத்தின் நிழல் உருவங்கள் மனதில் புழுக்கத்தை அதிகரித்தது. கோரத்தின் கொடூரங்களில் ஈர்ப்பு கண்ட இயக்குனரின் வக்கிரமான பார்வைகளை, அவரது நடிகர்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்த கோரங்களை மறக்க முடியாமல்- அதை நினைத்து-நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்தும் என்னைப் போன்றவர்களுக்கு இவரது இந்த வெளிப்பாடு அருவருப்பை தான் அளித்தது. அந்த காட்சிகளின் மீது அல்ல. அவரது எண்ணங்களின் மீது...
ரெண்டு மணி நேரம் theater ல உக்கார முடிஞ்சதுக்கு - Intermission விட்டப்போ 'டேய்- interval விட்டான் டா. இவன் நல்லவன் டா'-ன்னு கத்தின அந்த முகம் தெரியாத பையனுக்கு தான் நன்றி சொல்லணும்!

கறைகளும் அந்தச் சுவருகளில் ஒரு சித்திரம் தான் போலும். பழுதடைந்துவிட்ட அந்த கட்டடத்தை புதுப்பித்தால், அந்தக் கட்டிடத்தின் அழகு குறைந்து விடும். சுண்ணாம்பு உடைந்து கீழே விழுந்து கொண்டிருந்தது, அந்தச் சுவருகளிலிருந்து. என்ன ஒரு அழகான ஓவியம், அது! இரண்டு பேர் தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரவிற்கு கிடைத்த ஒரே ஒளி, அவர்கள் இருவரில் ஒருவர் அருகில் இருந்த ஒரு தூங்கா விளக்கு. அந்த விளக்கின் ஒளி- அவர்களின் நிழலை தீட்டிக்கொண்டிருந்தது. அங்கு இன்னும் ஒரு ஓவியம் உண்டு. பள்ளிக்கு, ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் சிறுவர்கள். அந்த ரிக்ஷாவை இழுத்துச் சென்றுகொண்டிருப்பவன்- அவனும் ஒரு சிறுவன்தான். ரிஷாவில் அமர்ந்திருப்பவர்களின் வயது தான் அவனுக்கும்.
இந்த ஓவியங்களைப் பற்றி அப்போது எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் ஓவிய "வீட்டுப் பாடத்தை" வரைவதில் மூழ்கி இருப்பேன். ஓவிய வகுப்பின் மிகவும் கடினமான பகுதி- மனதில் இருப்பதை வரைவது. நான் முயற்சிக்காமல் இல்லை. ஆனாலும், என் ஓவியத்தை பார்பவர்கள் என்னை அழைத்து- "பேய், பிசாசு சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது", என்று அறிவுரை
கூறுவார்கள்.பெற்றோர்கள், பொதுவாகவே அவர்களது குழந்தை- போன ஜென்மத்தில் ஒரு பாடகியாக, ஓவியனாக, ஒரு விஞ்ஞானியாக, கற்றறிந்த ஞானியாகவெல்லாம் இருந்திருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எனக்கு மகள் பிறக்கும் போது- நானும் இப்படித் தான் நினைப்பேன் போலும். ஆனால்- எனக்கு ஓவியத்தில் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஓவியர்கள் பிடிக்கும். ஆனால் என்னால் 'ஓவியம் தீட்டுவது' என்பது இயலாத காரியம்.
ஆனால் ஆசை உண்டு. ஒரு சில விஷயங்கள் காட்சிகளாக, நினைவுகளாக என்னுள் மட்டுமே இருக்கின்றன. அதைச் சொற்களால் வருணிப்பது என்பது சாத்தியமில்லை. அந்தச் சிறிய த்வாரத்தை திறந்தவுடன், "சஷ்.." என்ற சத்தத்துடன் கொட்டும் அரிசி நிறைந்த பத்தாயம். பாசி படிந்த சுவரில், சிகப்பான பூச்சி. இதையெல்லாம் எப்படி வருணிப்பது?
நாம் எத்தனையோ விஷயங்களை செய்ய நினைக்கிறோம். சிறு குழந்தைகளைப் போல. எனக்குத் தெரிந்த ஒரு ஆறு வயது சிறுமிக்கு 'Ornithologist' ஆகவேண்டுமாம்! ஆனால், அச்சிறுவர்கள், மிக விரைவிலேயே அவர்களின் அந்தக் கனவுகளை- 'வெறும் கனவுகள்' என்று புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
'Ornithology' விரைவிலேயே ஒரு ஆறு வயது சிறுமியின் அம்மாவின்- ஆறாவது பிராயத்தின் ஒரு அபத்தமான கானவாக் மாறிவிடும்.எனக்கு பல அபத்தமான் கனவுகள் உண்டு. நான் ஒரு பேருந்தில் செல்கிறேன். எங்கு செல்கிறேன் என்ற கவலையின்றி சென்றுகொண்டே இருக்கிறேன். கையில் ஒரு பேனாவும், சில பேப்பர்களையும் தவிர வேறொன்றுமில்லை. என் பயணத்தின் முடிவை தவிர்த்துக் கொண்டே- நான் சென்று கொண்டே இருக்கிறேன்...
சில சமயங்களில்- என் அபத்தமான கனவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில்- 'இந்தக் கனவு என்னுடையதில்லையோ' என்று தோன்றும். 18- ஆவது மாடியில், நான். மிகப் பெரிய ஜன்னல். ஜன்னலுக்கு வெளியில்- உண்மைகளின் கொடூரமான அழகு! ஜன்னலின் விளிம்பில் அமர்ந்தபடி நான்- புகை பிடித்துக்கொண்டு. மழை. ஆனால் மழையில் என் cigarette ஐ நான் அணைக்க என்னதான் முயற்சித்த போதும், அதன் முனையில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு- எரிந்து கொண்டே இருந்தது. மழையை அவமானப் படுத்துகிறேன்,
cigarette- சாம்பலை கீழே தட்டியவாறு.கூட்டமான ஆட்டோ-வில் வேலைக்குச் செல்ல ஓட்டம், கணினியின் கருப்பு- வெள்ளை தோற்றம், cafeteria வில் coffee. ஆனால் இப்படிப்பட்ட சில சாரமில்லா உண்மைகளுக்கு நடுவிலே- என்னை நான் என் கனவுகளிடம் தோற்றுவிட்டேன். நான் என்னதான் உண்மைகளை நோக்கி விரைய முயற்ச்சித்தாலும், இன்னும் எனக்குப் பிடித்திருக்கும் ஓவியம்- உண்மைகளில் ஊறிப்போன இருவர்- அதை மறக்கும் பொருட்டு, தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அருகே இருக்கும் அந்த தூங்கா விளக்கு, அவர்களின் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக தீட்டிக்கொண்டிருந்தது. அந்த நிழல் நீண்டுகொண்டிருந்தது...
பின் குறிப்பு: படங்கள்- என் கிறுக்கல்கள்...
பச்சை இலைகளின் மத்தியில் ஆங்காங்கு மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் இலைகள்- கிளைகளைப் பற்றிக்கொண்டு வாழ முடியாத முதிர்ச்சியால்- பற்றியிருக்கும் கிளைகளை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே! மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.
சிந்தனை மனதில் தோன்றி வார்த்தையாக உருவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தருணம். வார்த்தை தேடி அலையும் அந்த சிந்தனைகள், மனதினுள் ஏற்படும் எண்ணச் சிதரல்களுக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருக்க- அதனுள் அத்தனை மாற்றங்கள்! நாம் ஏன் உதித்தோம்? நமக்கு வடிவம் கிட்டாமல் இப்படி மூலையில் ஒடுங்கிப் போய் விடுவதற்கு நாம் உதிக்காமலேயே இருந்திருக்கலாமோ? என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா'? என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சிந்தனைகள் என்னிடம் கூறியது- 'இந்த அறிவின்மையும் அந்த கூட்டத்தில் தான் சேரப்போகிறது' , என்று!
ஒரு ஜீவராசியின் சிந்தனை- அதனுடையது. உரு இல்லாது போனால்- அது வெளி வர வேறு வழி இல்லை. உடைந்த சாமான்கள், தூசு படிந்த தரையினில் சீரின்றி படர்ந்து இருந்த அந்த அறையினுள்- வருடங்கள் பல கழிந்தும் உருவம் மாறாது, இடம் தவறாது அமர்ந்திருந்தது அந்த ஜாடி. கழுத்தை உயர்த்தி, அது வலித்து உடைந்து போகும் வரையில் அந்த ஜாடியை பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. சிலந்தி வலைகளின் திரையின் மறைவில், எழிலாய் ஒளிந்து கொண்டு, களவாய் நம்மை அழைத்திருந்தது- பழமை தட்டிப் போன அந்த பீங்கான் ஜாடி.
அதனுள் என்ன இருக்கக் கூடும்? இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச்சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன? "இருட்டு"! என்றார்கள். உருவில்லா சிந்தனைகள். இருட்டு ஜாடியினுள் சிக்கிக் கொண்டிருக்கும் என்னை- அந்த ஜாடி வான மார்கமாக பறந்து சென்று, பின்பு பூமியைத் துளைத்துச் சென்று- நாகலோகத்தில் விட்டு விடுவது போன்ற உருவில்லா சிந்தனைகள்!
அலாவுதீனின் பூதம் போன்றதொரு பூதம் கிளம்பியதாம்- ஜாடியின் உள்ளிருந்து! மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது? இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே! இப்போது கேட்க என்ன இருக்கிறது? அந்த மூன்று ஆசைகள் என்ன என்று தேடி இன்னும் அலைந்திருக்கிறது என் உருவில்லா சிந்தனைகள்.
சிந்தனையின் திரையை விலக்க மனமில்லை! ஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...

"தோ... தோ... வரேன்.."-ன்னு குச்சிய எடுத்துண்டு விரட்ட போனா, ஜம்முன்னு தரேல சயநிச்சுண்டு, வெண்ணைய திருடிட்டு, "என்னாச்சு மாமி", ன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற கிருஷ்ணனாட்டம்- "மியாவ்" ங்கறது! இந்தாத்துல இருக்கரதுகளும் சரி, வந்து வாய்க்கரதுகளும் சரி- எல்லாம் ஒரே போல! Iron பண்ணி வெச்சுருந்த dress மேல- ஜம்முன்னு, மெத்து மெத்துன்னு, நாலு காலையும் ceiling அ பாக்க தூக்கி வெச்சுண்டு படுத்து தூங்கறது. 'இத ஏதாவது சொன்னியோ'-ன்னு என்கூட சண்ட பிடிக்க இந்தாத்துல இருக்கற ரெண்டும் ready யா நிக்கறதுகள். அது மேல போய் அப்படி என்ன ஈஷல் வேண்டி கடக்குரெண்டு பேருக்கும்?
நடுல வேற நாங்க ஒரு பத்து நாள் ஊர்ல இல்ல. இது என்ன பண்ணித்தோ
தெரியல. Gate எல்லாம் முழுக்க அடச்சு வெச்சாச்சு, உள்ள நுழைய முடியாதக்கி. ஊர்லேர்ந்து, பக்கத்தாத்து மாமிக்கு எதோ காரியமா phone பண்ணினா- "துப்பாண்டி எப்புடி இருக்கான்"ன்னு கேளாம்! எனக்கே அது என்ன பண்ணுமோ-ன்னு கவலையாதான் இருந்துது. தானாவும் எதுவும் தேடிக்க தெரியாது, நம்ம போடறதையும் திங்காது! பின்ன என்ன தான் பண்ண முடியும்? இதுக்காக ஒரு 'cat food' ஒன்னு வேற! அது பாக்க புளியன்கொட்டையாட்டமா இருக்கும். அத எடுக்கறதுக்காக, cupboard அ தொறந்தா போரும். ஒரே சத்தம். அத குடுக்கற வரைக்கும் கத்திண்டே இருக்கும். ஆனா அது எப்புடி போரும்? எப்போ பாரு அதையே குடுக்கவும் முடியாது. நமக்கு கட்டுபடியாகாதோன்னோ?
ஒரே ஒரு கரப்பு ஒண்ணுத்த புடிச்சுடுத்தாம். அத விட்டுட்டு-விட்டுட்டு புடிச்சு எம்முன்னாடி வேட்டையாடி காட்டறது. பிடிச்சதையும் கடேசீல திங்கக்காணும். அந்த கரப்பு, இதுக்கு டிமிக்கி குடுத்துட்டு ஓடி போய்டுத்து! மறுபடியும் வால தூக்கிண்டு வந்து, கதவுல மூஞ்சிய தேச்சுண்டு நின்னுது.
நாங்க ஊர்லேந்து வந்தப்றம், பக்கத்தாத்து மாமி சொன்னா. ரெண்டு நாள்- ஆத்து வாசல்-ல நின்னுண்டு கத்திண்டே இருந்துதாம். பாவம். சாயந்தரம் ஓடி வந்துடுத்து. அத பாத்தப்ரம் தான் எங்களுக்கே ஆத்துக்கு வந்தாப்ல இருந்துது!
எளச்சு போய்டுத்து, பாவம். முன்னாடி ஜம்முன்னு, புஷ்டியா இருக்கும். வாசல் gate கம்பிக்குள்ள நுழைய முடியாம கஷ்ட படும். நாங்க கூட எலி, அணில் ஏதாவது புடிச்சு சாப்பட கத்துண்டுடுத்தோன்னு சந்தோஷ பட்டோம். "Born Free" ன்னு ஒரு English சினிமா-ல ஒரு புலி குட்டிய ஆத்துக்கு தூக்கிண்டு வந்து வளத்துட்டு அதுக்கு வேட்டையாட தெரியாத போன கதையாட்டமாயுடுத்து!
இதுக்கு நடூல Bushy வேற. முன்னாடியெல்லாம் அது சாப்படவே சாப்படாது.
இப்போ, "கொண்டா-கொண்டா"ன்னு சாப்படறத பாத்தா, வீடு முழுக்க பூனை பன்னையாட்டமாயுடுமோ-ன்னு வேற பயமா இருக்கு. Net ல வேற பூனைக்கு pregnancy 65 days தான்னு போட்டுருக்கு. Bushy சரியான 'அறிகரப்பான்'! முன்னாடியெல்லாம் துப்பாண்டி தான் கத்தும்- சாப்பாடு கேக்கும். Bushy அதுக்கு ஒத்து ஊதும். இப்போ துப்பாண்டி வாயே தொரக்கரதில்ல. அது சரி! கடேசீல நம்ப துப்பாண்டியாத்துலையும் 'மதுரை' தான் போலருக்கு!
அன்னிக்கு ஒரு நாள், ஆத்து வாசல்-ல புது சத்தம். துப்பாண்டி அம்மா, ஒரு ஈடு 'புது release' விட்டுருந்துது.
ஒன்னு 'இஞ்சி' (அது இஞ்சி colour ல இருக்கும்), இன்னொண்ணு 'Binji' (Black இஞ்சி. மூஞ்சி மட்டும் கருப்பா இருக்கும்). துப்பாண்டி ஒடனே வெளீல போய் பாக்கறார். ஒரு 15 நாள் ஒரே கூத்து. எப்புடியாவது இந்த இஞ்சி-Binji ய நம்பாத்துல settle பண்ணிடனும் னுபிளான் போட்டுது, துப்பாண்டி. அந்த 'இஞ்சி'- துப்பாண்டியோட அட்ட அசல்! அவனோட 2 பங்கு சாப்படறது. நம்பளால முடியாதுடாப்பா-ன்னு ரெண்டுத்தையும் துரத்தி விட்டாச்சு.
ஒரு நாள் evening, துப்பாண்டி அம்மா அதோட parapet ல அசையாம கிடந்துது. அத எடுத்தப்ரம், அந்த parapet கு நேரா இருக்கற மதில்-ல உக்காந்து அந்த இடத்த வெச்ச கண் வாங்காம பாத்துண்டே இருந்துது. அன்னிக்கு ராத்திரி ஒரு அசாதாரணமான குரல்-ல ஒரு கத்து கத்தித்து. எனக்கு அத கேக்க, அதோட அம்மா-வ நெனச்சுண்டு அது அழராப்ல இருந்துது.
நம்ம தான் சொல்லறோம், அஞ்சறிவு-ன்னு. அதுகளுக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்க தான் செய்றது. இஞ்சி-Binji
ரெண்டுத்தையும் பத்தரமா கொண்டுபோய் இதுதான் விட்டுட்டு வந்துது. அது விட்டுட்டு வந்த அன்னிக்கு அத பாக்கரெச்ச எங்களோட குட்டி துப்பாண்டி வளந்து துப்பாண்டியார்-ஆ மாரிட்டாப்ல தோணித்து..... ஒரு க்ஷணத்துக்கு.
"தோ... தோ... வரேன்"..!
Cupboard மேல ஏறி குதிச்சுண்டுருக்கு...
"அடி... அடி..."
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
சிறந்த புதுமுகம் -- நன்றி LK
Thanks LK!- for the Goldden Man!
They make my day...
-
1 day ago
-
6 days ago
-
6 days ago
-
1 week ago
-
6 months ago
-
10 months ago
-
1 year ago
-
1 year ago
-
2 years ago
-
2 years ago
-
5 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
12 years ago
-
12 years ago
-
14 years ago
-
15 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".