
தெய்வங்களின் பசி தீர்த்த பின்னரே தங்களின் பசி தீர்த்துக்கொள்வர் சிலர். "கணீர்" என்ற மணியின் ஓசை கேட்டு தெய்வங்கள் ஓடி வந்துவிடுவார்களாம்! நன்கு பொங்கிய- தும்பைப்பூ போன்ற சாதமும், பருப்பும்- நெய்யினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன! அந்த சின்னஞ்சிறு அறையினுள் பல்வேறு விதமான கடவுள்கள்! இத்தனை கடவுள்கள் இருந்தும் - ஒருவருமே அழைத்தவுடன் ஏன் வருவதில்லை? ஒரு வேளை- கடவுள்களும் மாளிகை வாசிகளின் பளிங்கு பூஜை அறையில் தங்கி விட்டார்களோ- என்னவோ!
ஆயிரக்கணக்கான கடவுள்களின் மத்தியில் அங்கு ஓர் புதுவரவும் உண்டு! ஸ்படிக லிங்கம்! அதை அங்கு கொண்டு வந்ததே பெரும் கதை! அந்த லிங்கத்தை வீட்டில் பிரதிஷ்டை செய்வதற்கு ஆன செலவு- லிங்கத்தை விட விலை அதிகம்! மற்ற கடவுள் பிரத்மைகளை விட இதன் மதிப்பு கூடுதல் என்பதனாலோ என்னவோ- ஸ்படிக லிங்கத்தின் மீது பக்தியும் கூடுதலாகத்தான் இருந்தது- பாலனுக்கு!
"நம்பிக்கையினால் தான் வாழ்கை" என்ற வாக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு பார்க்கப்போனால்- கடந்த மூன்று ஆண்டுகளாக- பாலனுக்கு வாழ்கை என்பதே இல்லை என்றுதான் கூறவேண்டும்! அவனது வாழ்கையின் லட்சியம், அவனது தாயாரின் இறுதி மூச்சுவரை அவளுக்கு பணிவிடை செய்வது- அவனது இறுதி மூச்சு வரை- தெய்வங்களுக்கு தொண்டு புரிவது! வாழ்கையின் முன்னேற்றம்- வெற்றி, தோல்வி, போன்ற- மனிதர்களுக்கு சொந்தமான சிறு சந்தோஷங்களிலிருந்து மூன்று வருடங்களுக்கு முன்னர் அவனது மனம் விலகி விட்டது! பங்குச்சந்தைகளும் கடவுள்களைப் போலத்தான். அவைகளால் கொடுக்கவும் இயலும், பறிக்கவும் இயலும்! அதனாலேயோ என்னவோ- பாலனுக்கு இப்போது எப்படி கடவுள் மோஹம் பற்றிக்கொண்டதோ- அதே போல, சில வருடங்களிக்கு முன்னர் வரை பங்குச்சந்தை மோஹம் பற்றியிருந்தது! ஆனால் அதனால் கூட அவனுக்கு நம்பிக்கை விலகவில்லை! அதற்கு வேறு காரணம் இருந்தது!
உன்னி- பாலனை விட ஐந்து வயது சிறியவன்தான்! ஏதோ! விதியின் வினோத புத்தியினால் விளைந்த ஓர் விபத்தில் தவறிவிட்டான் உன்னி! ஓர் வங்கியில் பணிபுரிந்து வந்த உன்னியின் சம்பாத்தியத்தில் தான் அவர்களின் குடும்பம் பிழைத்திருந்தது! பாலனின் கொஞ்ச-நஞ்ச சேமிப்பும் உன்னியின் மருத்துவ செலவில் கரைந்தது! கடவுள்களுக்கு இதெல்லாம் தெரியாது! தெரிந்திருந்தால் உதவியிருப்பார்கள்! தனியாக நின்று இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்து, தங்கள் கால்களில் நிறுத்திய சீதா அம்மாவும், உன்னியின் மறைவிற்குப் பின்னர், நொடிந்தே போனாள்! அவளுக்கு வயதும் ஆகிவிட்டது! அவளது கணவரின் பழைய ரேடியோவில் தஞ்சம் புகுந்தாள்! பாலன்- கடவுள்களின் பிரதிமைகளில் அமைதி கண்டான்!
தினந்தோறும் காலையில் குளித்துவிட்டு- கடவுள்களின் பிரதிமைகளை சுத்தம் செய்திருப்பான் பாலன்! அவைகளை நீர், பால், சந்தனம், மஞ்சள்- போன்றவற்றினால் நீராட்டி- நன்கு சுத்தம் செய்வான். தங்கம் போன்று ஜொலித்து மின்னிக்கொண்டிருக்கும் அந்த கடவுள்களுக்கு, நெய்யும், பருப்பில் நனைத்த சாதமும் லஞ்சம் அளித்து- "இப்படி எப்படி நடக்க முடியும்"? என்பது போன்ற அசாதாரணமான வரம் கேட்டு பக்தியில் மூழ்கி நிற்பான்- பாலன்! "புதியதொரு கதிரவன் தோன்ற- நான் இதுவரையில் கண்டிடாத அளவிற்கு செல்வம் பெற்று வாழ வேண்டும்", என்று உருகுவான்!
கடவுள்களின் மீது அளவிற்கு மீறிய நம்பிக்கை இருப்பவர்களுக்கு என்றுமே கடவுள் அலுத்துப்போவதே இல்லை! வேப்பமர தாயத்து சாமியார் முதல்- ஹிமாலய மலைச்சாரல்களின் மகிமை கண்ட ப்ரஹ்மானந்த சாமியார் வரை- யாராக இருந்தாலும் அவர்களின் மகிமையில் மெய்மறந்து போவர்- பக்தர்கள்! இப்படிப்பட்ட ஓர் சாமியாரின் உபயம் தான் அந்த ஸ்படிக லிங்கம்! சிவனின் அம்சமெனக் கருதப்படும் அந்த ஸ்படிக லிங்கத்தின் மகிமை யாதெனில்- கேட்பது கிடைக்கும், நினைத்தது நடக்கும்! பாலனுக்கு அதை வீட்டிற்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து- நேம நிஷ்டைகளை முடிக்கவே ஒருமாத காலம் ஆனது!
அதில் அவனுக்கு நம்பிக்கை வருவதற்கும் சரி, வலுவடைந்ததற்கும் சரி- ஒரு காரணம் இருந்தது! உன்னி, வேலையில் இருக்கும் பொழுது காலம் சென்றதனாலும், அவனது ஒரு வருமானத்தில் தான் குடும்பம் பிழைத்தது என்றதனாலும்- சீதா அம்மா, வங்கிக்கு, ஏதேனும் உதவி கோரி கடிதம் இட்டிருந்தாள்! அவர்களும், கூடிய விரைவில் பரிசீலித்து பதில் போடுவதாக பதில் அனுப்பியிருந்தார்கள்! பாலனுக்கு இது ஸ்படிக லிங்கத்தின் மகிமை என்றே தோன்றியது! அவனது பக்தியும் அந்த லிங்கத்தின்பால் நாளுக்கு நாள் வலுவடைந்தது!
டி. எம். எஸ் ஸின், "ஒளி மயமான எதிர்காலம்" பாடல் பழைய ரேடியோவில் ஒலிக்க- பகல் வெயில் பாலனுக்கு தூக்கத்தை அளித்தது! முற்றத்தில் அமர்ந்தபடி பேப்பரில் பங்குச்சந்தை செய்திகளை படிக்க முயற்சித்துக்கொண்டிருக்கையில் ராமன் வருகை தந்தார். பாலனின் ஆரம்ப காலங்களில் அவர் அவனுக்கு நிறைய உதவியிருக்கிறார். அவனது மானசீக குரு அவர் என்றே கூட கூறலாம்! இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் ராமன். பாலனின் "நலம்-விரும்பி" என்ற உரிமையில் அவ்வபோது அவன் வீட்டிற்கு அவர் வந்துபோவதுண்டு.
"குமார் நெனவிருக்கா? உம்பின்னாடியே ராப்பகலா அலைஞ்சுண்டுருப்பானே"? என்றார் ராமன்.
"ஓஹோ! நன்னா ஞாபகம் இருக்கே! நல்ல பையன். அந்த வயசு அப்படி- எதப்பாத்தாலும் தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்...", என்றான் பாலன்.
"சின்ன பையனா? இப்ப அவனுக்கு என்ன வயசு இருக்கும்னு நெனக்கறே? மாமா வாட்டம் ஆயிட்டான் தெரியுமோ"? என்றார் ராமன். இருவருமே சிரிக்கத்தொடங்கிவிட்டார்கள். அந்த சிரிப்பு ஓய்ந்த பின்னர் ராமன்தொடர்ந்தார்.
"என்ன தப்பா எடுத்துக்காதே! நீ எம்புள்ள மாதிரி. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். முதல் வேணும்னாலும் நான் தரேன். அந்த குமார் ஏதோ புதுசா பிசினஸ் ஆரம்பிக்கறதா நான் கேள்வி பட்டேன். நான் சொன்னா அவன் கேப்பான். நீயும் அவன்கூட சேந்துக்கோ! எனக்கென்னவோ அதுல நல்ல லாபம் வரும்னு தோணறது.. என்ன நான் சொல்லறது"? என்றார்.
பாலன் ஏதோ சிந்தித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, தொடர்ந்தார் ராமன்- "போனது போகட்டும். அத கட்டிண்டு அழறதுல பிரயோஜனமில்ல! அத மனசிலேர்ந்து விட்டு எறிஞ்சுட்டு ஆக வேண்டியத கவனி! நாள மத்யானமா ஆத்துக்கு வா..."
"நீங்க என் நல்லதுக்கு தான் சொல்றேள்னு நேக்கு புரியறது", என்று குறுக்கிட்டான், பாலன். "ஆனா நீங்க முதல் தர வேண்டாம். என்னால அத வாங்கிக்க முடியாது. பேங்க் லேர்ந்து பதில் வந்துடட்டும்! அதுக்கப்றம்..."
ராமன் பாலனை உற்றுநோக்கியிருந்தார். சில வருடங்களுக்கு முன் அந்த கண்களில் இருந்த ஒளி இப்போது இல்லை! காலத்தின் கோணல் புத்தியின் விளையாட்டிற்கு முடிவே இல்லையோ, என்று எண்ணிக்கொண்டார், ராமன்! "ஏதோ- ஒரு விடியல் வந்தா சரி", என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு புறப்பட்டார், ராமன்!
ஸ்படிக லிங்கம், நாளுக்கு நாள் ஜொலித்துக்கொண்டே போனது. ஆயினும், அதன் சக்திகள் எதையும் வெளிப்படுத்தவில்லை!
ஆனால் அன்று- வங்கியின் பதில் வந்தது! பாலனுக்கு சந்தோஷத்தில், கைகள் நடுங்கியது. சீதா அம்மா, அவனை- கடிதத்தை ஸ்படிக லிங்கத்தின் பாதங்களில் முதலில் வைக்கும்படி கூறினாள். பின்னர், நல்ல நேரத்தில் எடுத்துப் படிக்கலாம் என்று, பாலனும் ஸ்படிக லிங்கத்தின் பாதத்தில் வைத்தான்- கடிதத்தை!
சீதா அம்மாவும், பாலனும், ஆவலுடன் நல்ல நேரத்தை எதிர்நோக்கியிருந்தனர். அந்த ஓர் கடிதத்தில் தான் அவர்கள் இருவரின் நம்பிக்கையுமே இருந்தது! இருவரும் உணவு அருந்தி, ரேடியோவில் பழம் பாடல்களை ரசித்தபடி, கடிகாரத்தில் கவனம் செலுத்தியிருந்தனர். இருவரும், அப்படியே உறங்கிப் போயினர். "மஞ்சள் ஒளி! தங்கத்தைப் போல ஜொலித்துக்கொண்டு அவன் அருகில் வந்தது"! அவன் அதைத் தொடுவதற்குள்- கடிகாரம் நான்கு மணி என அறிவித்தது. கண் முழித்து, பாலன் முகம் கழுவி வந்து, சீதா அம்மாவை எழுப்ப முயற்சித்தான்...
அன்று பதிமூன்றாம் நாள்- சீதா அம்மாவின் மறைவிற்கு, துக்கம் விசாரித்துப்போக வந்த விருந்தினர்களும் விடை பெற்றுக்கொண்டு விட்டார்கள். அங்கு தனியாக அமர்ந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த பாலனுக்கு, கடந்த பதிமூன்று நாட்களில் ஒரு நாள் கூட, இந்த நாளிற்குப் பிறகு அவன் என்ன செய்வான் என்று நினைக்கவே இல்லை!
திடீரென்றுதான் வங்கியிலிருந்து வந்த கடிதத்தின் நினைவு வந்தது. ஸ்படிக லிங்கத்தை நோக்கி விரைந்து சென்று, கடிதத்தை எடுத்து, படிக்கத் துவங்கினான்:
"திருமதி. சீதா அம்மா அவர்களுக்கு,
முதலில் திரு. உன்னிக்ருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க விழைகிறோம். அவரது மறைவு, எங்கள் வங்கிக்கும் ஒரு பெரிய இழப்பே! கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு தரும் திட்டம் தற்போது அமலில் இல்லை. ஆயினும், தங்களின் குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஒரு விதி விலக்காக தங்களுக்கு ரூபாய். பத்து லட்சம் கருணைத் தொகை வழங்குவதாக எங்கள் வங்கியின் உச்ச நிலை நிர்வாகக்குழு தீர்மானித்திருக்கிறது.
இந்தத் தொகையை பெறுவதற்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, தங்களுடைய கையெழுத்தையும் 'அட்டெஸ்ட் ' செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்கள் கையெழுத்தையும் மற்ற விவரங்களையும் சரி பார்த்த பிறகு- மேல் குறிப்பிட்டுள்ள தொகை காசோலையாக தங்களுக்கு அனுப்பி வைக்கப் படும்.
இப்படிக்கு,
ந. சொக்கல்லிங்கம்
(முதுநிலை மேலாளர்)"
ஸ்படிக லிங்கம், இன்றும் ஜொலித்து நிற்கிறது!
ஸ்கூல் விட்டு வந்தோடனே- மூஞ்சி அலம்பினோமா, கெளம்பினோமா-ன்னு உண்டா? ஒயட்டிண்டு நிக்கறது- அங்கயும், இங்கயும். நாங்கள்லாம் அந்தகாலத்துல இது வயசுல பத்து பேருக்கு சமச்சுபோடுவோம். இதென்னடான்னா- எல்லாத்துக்கும் என்ன ஏவிண்டு நிக்கறது! நானும் எத்தன்னாளுக்கு தான் இது பின்னாடியே குளி, பல்லு தேய், பாத்ரூம் போ ன்னு சொல்லிண்டு அலைய முடியும்? அதெல்லாம் அதுக்கா தெரியனும். மொட்ட மாடிலேர்ந்து துணி எடுத்துண்டு வரேன்னுது! ஆஹா- எம்பொண்ணும் வேல செய்யரதேன்னு நெனச்சேன்! அங்க உக்காந்து- நோட் பேப்பர்-ல ராக்கெட் பண்ணி உட்டுண்டுருக்கு! தெனத்துக்கு இது ஒரு வேல! பாட்டுக்லாஸ் போகணும்னாலே இப்படி ஏதாது பண்ணிண்டுருக்கு!
எப்போதும்போல இன்னிக்கும் லேட்டு தான். "பாட்டு மாமி திட்டறா"னா- யாருக்குதான் கோவம் வராது? சரளி முடிஞ்சு, ஜண்ட முடிஞ்சு- நாங்க உள்ள போறச்ச அலங்காரம் பாடிண்டுருந்தா. மூஞ்சிய ஒண்ணுமே தெரியாதமாரி வெச்சுண்டு அது உள்ள காலெடுத்து வெக்கும்போதே நேக்கு தெரியும் இது இன்னிக்கு நன்னா வாங்கி கட்டிக்க போறதுன்னு! "வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு" ங்கறா மாமி. "பண்ணினேன் மாமி"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது! மாமி ஒடனே என்னதான் பாக்கறா! நான் என்ன பண்ணறது?! இத பெத்தாச்சு. ஆனாலும் கோதண்டராம ஐயர் எங்கள அப்படி வளக்கலையே- பொய்யெல்லாம் சொல்லபடாதுன்னா- நான் என்ன பண்ணறது? "அதெல்லாம் பண்ணுவா"ன்னேன்!
நாலு ஸ்வரம் பாடரதுக்குள்ள பேச்சு வேற மாமிகிட்ட! ஸ்கூல் கதையெல்லாம் ஒப்பிச்சாகணுமே! என்கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறது! அது 3rd std ல A section ல படிக்கரதுங்கரதே அது மாமி கிட்ட கத சொல்லும்போது தான் நேக்கு தெரியறது! பாடினோமா, நாலு பாட்டு கத்துப்போமா.. ஒண்ணுங்கடயாது! ஒரு விஷயத்த உக்காத்திவச்சு சொல்றதுக்கே அத்தன ப்ரயத்ன பட வேண்டிருக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு ன்னு அப்டியே தாவிண்டேஇருக்கு!
"தாளமெல்லாம் தப்பு. தருவ தாளம் இப்படியா போடுவா? நீ வரதுக்கு முன்னாடி கார்திக்காவது ஒழுங்கா போட்டுண்டுருந்தான். உன்ன பாத்து அவனுக்கும் மாறிடுத்து"! இது கவனம் எங்க தாளத்துல இருக்கு? அவாத்துல "திலோ"ன்னு ஒரு பூனை இருக்கும். அது அப்போதான் பாலெல்லாம் குடிச்சுட்டு, ஜம்முனு சொஹுசா- sofa ல ஏறி படுத்துண்டுது. அத உக்காந்து நோட்டம் உட்டுண்டுருந்துது. அந்த கார்த்தி புள்ளயாண்டானுக்கு பாவம், தாளம் மறந்துபோச்சு. இது சரியா போடறதோன்னு இத பாத்து அவம்போட- மாமி உள்ளேர்ந்து வரெச்ச ரெண்டும் கரெக்ட்-ஆ தப்பு தப்பா போட்டுண்டுருக்குகள்! நேக்கு தெரிஞ்சாலாது ஏதாது சொல்லிருக்கலாம். நேக்கு எங்க இதெல்லாம் தெரியும்?
திட்ட வாங்கிநோடனே வாய்லேர்ந்து- ரெண்டுத்துக்கும் கொரலே காணல. இதுக்கா, கூட்டத்துல வாயசச்சே பழக்கம் அதுக்கு! கார்த்திக் வேற பாவம்- சொஹத்துல கொரலே எழும்பால அவனுக்கு! மாமி- "சத்தம்-சத்தம்" கரா! அதட்டரா! திடீர்னு, "மாமி-மாமி! கார்த்திக் அண்ணா அழறா", அப்ப்டின்னுது, வாய வெச்சுண்டு சும்மா இல்லாத! மாமி ஒடனே- "அவனுக்கு வெக்கம், மானம், சூடு, சொரண-எல்லாம் இருக்கு. அதனால அழறான்! நமக்குதான் அதெல்லாம் கெடயாதே! நீ பாடு..." அப்படின்னா. நல்ல வேள. அதுக்கு இதெக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. தெரிஞ்சாலும் பெரிசா கண்டுக்காது!
"போன கிளாஸ்-ல கல்யாணி வர்ணம் முடிஞ்சுதா...?" ன்னு இத கேட்டாஇதுக்கென்ன தெரியும்? அது பாடற அழகு, கல்யாணி, காம்போஜி, ஆரபி- எல்லாமே ஒரே போல தான் இருக்கும். அது எதோ ஒரு பக்கமா தலையஆட்டித்து. மாமி, அத அமாம்-நு எடுத்துண்டு- "நான் 'விரிபோனி' வர்ணம்எடுக்கறேன். பைரவி, அட தாள வர்ணம்! இப்ப கத்துக்க ஆரம்பிச்சாதான் ஒரு வருஷத்துல எப்போவாவது பாட வரும்..."- அப்படின்னா மாமி. கார்த்திக் அண்ணாவுக்கு குஷி தாங்கல! கஷ்டமான பாட்டாச்சே.. எம்பொண்ணா- திலோ கு உக்காண்டு மூஞ்சி காட்டிண்டுருக்கு.
"வி-ரி-போ-ஒ-ஒ-ஒ-நி-இ-இ-இ-யயி-இ.." ன்னு மாமி ஆரம்பிச்சா! ஏற்கனவே- இவா ரெண்டு பெரும் வாயே தெறக்கல! இந்த பாட்டா! எங்கேயோ ஒரு போந்துக்குள்ளேர்ந்து படராப்ல இருக்கு. மாமி வேற "சத்தம்-சத்தம்" நா என்ன பண்ணறது?
ஒரு வழியா பல்லவி முடிஞ்சுது. தமிழ் பாட்டு ஒண்ணு "நானொரு விளையாட்டு பொம்மையா". வேண்டா வெறுப்பா பாட ஆரம்பிச்சுது. "ஒழுங்கா பாடு"நா மாமி. திடீர்னு எங்கேர்ந்தோ கொரல் மேல எரிடுத்து. ஏத்தலும் ஏறக்கலுமா அது பாட பாட மாமி- "ஒழுங்கா பாடு- நீ பாடற அழகு 'பொம்மையா' ல பொம்மையோட தல தனி கால் தனி-யா வந்துடும் போலருக்கு"-நா. ஒரு வழியா "ஸா- பா- ஸா" சொல்லி முடிக்கல, மூட்டைய தூக்கிண்டு அங்கேர்ந்து கேளம்பரச்சே அதுக்கு இருக்கறசந்தொஷமிருக்கே! என்னவோ போங்கோ! இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...!
ஈரமான இரும்பை ருசித்த அனுபவம் இருக்கிறதா? அதன் குளுமைக்கு நிகரே கிடையாது. அதன் ருசி- உப்பை விட ருசி அதிகம். வேடிக்கையான உணர்வு. எப்பொழுதோ சுவைத்த நினைவு- இப்பொழுது என் நாவில் தோன்றி மறைந்தது! என் காலின் கீழ் ஊறிக்கொண்டிருக்கும் அந்த மண்ணின் ஈரம்- என் பாதங்களில் மென்மை கூட்டியது!
அந்த ஊஞ்சலின் சங்கிலிகள் வழியே- சற்று தொலைவில் உள்ள கட்டிடங்களைப் பார்த்தேன். அந்த கட்டிடங்களின் உயர்வில் அமைதி இல்லை. நிரந்தரம் இல்லை. அது இன்னும் உயரும். உயர்ந்து உயர்ந்து விண்வெளியின்எல்லையே தொட்டுவிடும். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சல் தெரியுமா? தெரியாது என்றுதான் நினைக்கிறேன். அதன் மீதிலிருந்து இந்த ஊஞ்சலைப் பார்க்க வேண்டிய அவசியம்? பார்க்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஊஞ்சலின் மீதிலிருந்து அந்த உயரத்தின் மேதுள்ளதைக் காணலாமோ? முடியும். ஊஞ்சலின் வேகத்தைப் பொறுத்து- அதன் உயர்வைப் பொறுத்து... ஆனால் அதன் சங்கிலிகளின் வலுவின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் ஆர்வம்.
அந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி சிந்தித்துத்க்கொண்டிருன்தேன். அது வரையில் தனிமையின் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த என் அருகில் ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்தது. எங்கிருந்துதான் அதன் மீது அத்தனை வண்ணங்களோ! அதன் இறகுகளின் படபடப்பினால் அந்த வண்ணங்கள் என் ஊஞ்சலின் மீது சிந்தத் தொடங்கியது. இந்த பிரபஞ்சத்தின் அத்தனை வண்ணங்களையும், தன் மெல்லிய இறகுகளில் சுமந்துகொண்டிருந்த அந்த பட்டாம்பூச்சி, அவ்வபோது தனது பாரத்தை, அங்கும் இங்கும் சிதற விடுகிறது போலும்...
அதன் படபடப்பில் எதோ ஒரு மொழி. எனக்கு மட்டுமே எதையோ சொல்லத்துடிக்கும் அந்த இறகுகளின் மொழியை அறிய முயன்றேன். ஆம். அதனால் முடியும். அந்தச் சிறகுகளால் அந்த வண்ணத்துப்பூச்சியை, கட்டிடங்களின் உச்சி வரை கொண்டுசெல்ல இயலும். அது கண்டு வரும்- விண்ணின் உச்சத்திலிருந்து இந்த ஊஞ்சல் தெரிகிறதா என்று. தன் சிறகுகளை அடித்துக்கொண்டு பறக்கத் தொடங்கியது. அதன் வண்ணங்களின் ஒருசில துளிகளை என் மீதும் தெளித்துக் கொண்டு- அதன் பயணத்தை துவங்கியது- அது! சிறிது நேரம் வரை என் கண்களுக்கு தெரிந்து கொண்டிருந்த அந்த வண்ணங்களின் படபடப்பு மறைந்தது. பிறகு சிறிது நேரத்தில், அதன் இறக்கைகளின் படபடப்பின் அதிர்வுகளும் ஓய்ந்தன. ஊஞ்சலில் அமர்ந்தபடி பட்டாம்பூச்சியின் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஊஞ்சலின் அசைவின் ஒலி அதன் வயதை உணர்த்தியது. காலத்தின் வேகத்தை அதுவரை உணர்ந்திடாத எனக்கு- அங்கு காத்திருந்த ஒவ்வொரு வினாடியும் அவஸ்தையே! ஊஞ்சலின் ஒலியில் ஆறுதல் கண்டேன்.
ஒரு ஒலி. தொலைவிலிருந்து பட்டாம்பூச்சியின் சிறகுகளின் அதிர்வுகளை உணர்த்தியது. ஆர்வத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எனக்கு, என் வேகத்தைத் தடுக்க இயலவில்லை. ஊஞ்சலின் பலகை கீழே விழுந்ததை கவனியாது, பட்டாம்பூச்சியின் வருகையின் களிப்பில் மூழ்கினேன்!
அந்த வண்ணத்துப்பூச்சி என் கைகளில் வந்து அமர்ந்தது. அதில் வண்ணங்கள் இல்லை. கருமையே உருவமாகவும், களைப்பாகவும் தோன்றியது. அதன் வண்ணங்கள் அனைத்தும், அந்த உயரத்தை அடையும்போது சிதரிப்போயிருந்தன. அதன் இப்பொழுதைய சிறகின் படபடப்பின் மொழி வேறானது!
"கட்டிடத்தின் சிகரத்திலிருந்து ஊஞ்சல் தெரிந்ததா"? என்று கேட்கவிழைன்தேன். கார்தும்பி, என் கையின் மீதிலிருந்து பறந்து, என்னை விலகிச் சென்றது. உடைந்துபோன ஊஞ்சலின் சங்கிலிகள் மட்டுமே, தாங்குவதற்கு ஏதுமில்லாமல் தொங்கிக்கொண்டிருந்தன. அதன் வழியே, பறந்து சென்றுகொண்டிருந்த என் கார்தும்பியை கண்டிருந்தேன்...
திண்ணையில் "கார்தும்பி": http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=11007049&edition_id=20100704&format=html
காலங்காத்தால மூஞ்சிய இப்படி வெச்சுண்டு வந்து நின்னா, பின்ன கோவம்வருமா வராதா? நீங்களே யோஷ்சு பாருங்கோ! அதெப்டி நெனச்சொடனே fever வருமோன்னுதான் நேக்கு புறியல! மூஞ்சிய தூக்கி வெச்சுண்டு, கண்ண தொறக்கவே முடியாதெக்கி வந்து நிக்கறது! தொட்டு பாத்தா ஒண்ணும் சூடா இல்ல. ஆனா உள்ளுக்குள்ள "கொண கொண" ன்னு இருக்கும்போல தான் தோணறது!
தெருக்கோடில clinic ஒண்ணு இறுக்கு. ஆனா இத கெளப்பி கூட்டிண்டு போணுமே! அப்றம் சமயல யாரு கவனிப்பா? துளி மெளகு தட்டி போட்டு கொட்ரசம் வேச்சாச்சுன்னா ஆச்சு! பின்னாடியே என் வால புடிச்சுண்டு அப்போலேர்ந்து அலைஞ்சுண்டுருக்கு. "Leave Letter" ல கையெழுத்து போடணுமாம்! எம்பொண்ணு என்ன சமத்துன்னு நெனச்சுண்டேன்!
அவர் ஆபீஸ் போற வழீல school-ல குடுத்துட்டு போய்டலாம். நோட்புக்- லேர்ந்துபேப்பர கிழிச்சு, ink பேனாவால அழகா எழுதிருக்கு, கொழந்த!
From
M. Mathangi
II, 'A'
To
The Class Teacher
II, 'A'
Miss,
As I am suffering from fever, I am unable to attend class. Please grant leave for one day only.
(Parent's Signature)
ஏதோ! இது school-லுக்கு போலேன்னா அவா class ஏ ஒரு நா அமைதியாதான் இருக்கும். தினத்துக்கு ஒரு 'complaint'. டைரி- ல "Always talking", "Beating other children"- னு ஏதாவது ஒண்ணு இருந்துண்டுதான் இருக்கும். என்ன பண்ணமுடியும்? ஆத்துல அதுக்கு யார் இருக்கா பேசறதுக்கு? சண்டபோடரதுக்கு? அங்கதானே எல்லாம் பண்ணியாகணும்!
ரசன்ஜாமும், நார்தங்காயும், நாலுவா ஊட்டி உட்டுட்டு- டாக்டர்- ட கூட்டிண்டுஓடியாயுடுத்து! அவரான்னா- ஊசி ஊசி-ன்னு பயமுறுத்துவார் கொழந்தைய! ஒரே அழுக! அந்த fever பாட்டுக்கு அதுவா போயிருக்கும், இந்த மனுஷன் இப்படிஅழவிடாம இருந்தா! மருந்து மாத்தறைய தவிர, சாக்லேட் வேற வாங்கணும் இப்போ! இந்த அழுகைய நிறுத்த!
போன வாரத்லேர்ந்து சேத்துண்டுருக்கு! ஏதோ இந்த "ஆசை" சாக்லேட் அட்ட ௨0 சேத்தா, வாய்ல மாட்டிக்கற பல்லு தருவாளாம். மெனக்கட்டு, ஒரு வாரமா தின்னு தீத்து, ஒரு வழியா ௨0 அட்ட சேத்து வச்சிண்டுருந்துது! அதையும் கையோட வாங்கிண்டு, மருந்து மாத்தற எல்லாத்தையும் வாங்கிண்டு, ஆத்துக்கு வந்ததுதான் கொறச்சல்! ஒடனே குதிச்சுண்டு பொய் டிவியபோட்டாயிடுத்து!
நமக்கு ஒடம்பு செரியில்லையே, பேசாம தூங்குவோமே கொள்ளுவோமே- ன்னு உண்டா! ஒண்ணு டிவி, இல்ல பேச்சு! ஏதாவது ஒரு சத்தம் இருந்துண்டே இருக்கணும் போலருக்கு! அந்த டிவில "வயலும் வாழ்வும்" தான் பொழுதன்னிக்கும் ஓடும் வேற! அதையும் உக்காந்து "சந்திரகாந்தா" பாக்கராப்லையே பாத்துண்டுருக்கு!
"Yours Faithfully"- ன்னு மட்டும் எழுத தெரியறது! எல்லாம் school- கு போகாம இருக்கறதுக்கு ஒரு சாக்கு! ஆனா சும்மா சொல்லப்டாது! என்னமா மூஞ்சியவெச்சுண்டு நின்னுது காலேல! இந்த ஒரு விஷயத்துக்குதான் வருஷா வருஷம் எம்பொண்ணுக்கு "fancy dress"- ல "first prize" கொடுக்கறது! ஒரு வாரம் முன்னாடிதான், ஆதி சங்கராச்சார்யா வேஷம் போட்டுண்டு, "பஜ கோவிந்தம்" சொல்லித்து! "First prize"-னா சந்தோஷபடாதோ? "Second Prize"- கு ஒரு pencil box கொடுத்துருக்கா! அதுதான் பாக்க அழகா இருக்காம். அதுதான் வேணுமாம். இப்பகொடுத்துருக்கற cup வேண்டாமாம்! ஒரே அழுக! "டேய் இதாண்டா ஒசத்தி" ன்னா- அதுக்கென்ன தெரியும், பாவம்! அதுக்கு pencil box, கப்- னு தான் தெரியும்! எம்பொண்ணு ஒரு படி மேல! "1" விட "13" தான் பெரிசுன்னு, அங்கேர்ந்து பெருமையா ஓடி வந்து- "அம்மா! நான் 13th rank வாங்கிருக்கேனே " ன்னு- சிரிச்சுண்டே சொல்லும்! அத திட்ட தான் மனசு வருமா, அடிக்கத்தான் கைவருமா?!
ஒரு வழியா அந்த டிவி- கு உத்தரவு கொடுத்து- இத தூங்க பண்ணியாச்சு! கிழிஞ்சநாரா கெடக்கு- பாவம்! அது அந்த "பஜ கோவிந்த"த்த ஸ்பஷ்டமா சம்ஸ்க்ருதத்துல சொன்னதுலேர்ந்தே நான் நெனச்சுண்டுதான் இருந்தேன்! எல்லார் கண்ணும் பட்டுடுத்து பாவம் கொழந்த மேல! தூங்கட்டும்... நானும் செத்த அப்டியே கட்டய சாய்க்கறேன்...
மணல் கோபுரங்கள். கற்களும், இரும்பும் இல்லாத போதிலும் அழியாநினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும் நினைவுக் கட்டிடங்கள். காலங்காலமாக, காற்றுக்கு இரையாகி, கொஞ்சம்கொஞ்சமாக அதனுடன் கலந்து- இல்லை மற்றும் சரகுகளுடன் இணைந்து; பூமி, ஆகாயம்; இவை இரண்டிற்கும் மத்தியில் சஞ்சரித்துக்கொண்டிருன்தது- புழுதி.
கதிரவனின் கிரணங்கள் பூமியை தகித்துக்கொண்டிருந்தது. உயிர்நீர், உடலினுல்லிளிருந்து, அக்கிரனங்களை காணும் பொருட்டு வெளிவரத் துவங்கும் நேரம். காற்றும் அப்போதுதான் அங்கிருந்த ஓரிரு இலைகளை அசைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
அந்த காற்றின் மென்மை, உயிர்நீரின் மீது மேவிய பொது, ஆழ்கடலின்ஆழத்திற்கே போய்வந்தார்போன்ற ஓர் உணர்வு. பஞ்சபூதங்களும் இணைந்த அந்த தருணம். மெதுவாக துவங்கிய அந்த காற்றின் ஆற்றல், வலுவடைந்து கொண்டது. திடீரென்று, எங்கிருந்தோ கிளம்பிவந்த அந்த புழுதி- என் கண்களில் நினைவுகளாக மாறிப் படர்ந்தது.
என் ஒவ்வொரு பாதத்துளியும் அப்புழுதியின் சீற்றத்தை அதிகரித்தது. கடந்துபோன காலத்தின் நிழல் உருவங்கள். என் கண்கள் அதைக் காண விரும்பாத போதிலும், கட்டாயமாக என் மூடிய கண்களை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
அப்புழுதியின் சீற்றத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல்- அந்த காற்றின் திசையைஎதிர்த்து, வருங்காலத்தை நோக்கி விரைந்தேன்...
கல்லைக் கடவுள் என்பவர்களும் சரி- கடவுளைக் கல் என்பவர்களும் சரி- இவர்கள் இருவருமே என் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இது இப்படியாயிருக்க, நான் என் எண்ணக்கிளர்ச்சியின் மத்தியில் மெய்மறந்துஉலாவிக்கொண்டிருந்த அந்த சமயத்தில்- திடீரென்று, ஸ்ரீரங்கம்- "ரங்கா ரங்கா" கோபுரம் என் கண் முன்னே தோன்றியது! இது "தெய்வத்தின் குரல்" அல்ல! என்மூளைக்குள் அடங்கிய ரசாயனக் கலவையின் வேலை! என் நினைவுகள், நான்குதிசைகளிலிருந்தும் உருவங்களைப் பற்றி வரையத் தொடங்கியது. நானும் அந்தஎண்ண அலைகள் என்னை ஈர்த்த திசையை நோக்கி விரைந்தேன்!
யாராக இருந்தாலும் சரி! கல்லாயினும், கடவுளாயினும், அதை உயிர் என்று நம்பியதால் உருவெடுத்திருக்கும் அந்த பிரம்மாண்டனான கோபுரமும், அதன் வேலைப்பாடுகளும்! மதுரை கோவிலே சிறந்த வேலைப்பாடு நிரம்பிய கோவில் என்றாலும்- கோவில் என்று பொதுவாகவே எடுத்துக்கொள்வோமே- கோவில் என்பது ஓர் அதிசயமே! இது என் கருத்து!
கோபுரத்தின் உள் நுழைந்த உடனே கடைகள். பாத்திரங்கள், ஆன்மீக நூல்கள், தெய்வங்களின் படங்கள், என்று அநேக சந்தைகள். சிறு வயதினில், பரமபதத்திற்கும், தாயத்திற்கும் ஆசைப் பட்டு கோவிலுக்குப் போனதுண்டு. அந்த பரமபதத்திற்கும், தாயத்திற்கும் இப்போது விலை மிகவும் கூடிவிட்டது! பின்னே சந்நிதிகளின் துவக்கம். நாங்கள் சமீபத்தில் கண்டறிந்த 'விநாயகர்' சிலை, உள்ளே முதல் கோபுரத்தில், ஓரிடத்தில். வைணவ கோவில்களில், விநாயகர் சிலைகள் நான் கண்டது குறைவே!
பின் 'சக்ரத்தாழ்வார்' சந்நிதி! இந்த சந்நிதியின்பால் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஆன்மீக ரீதியாக சொல்லவில்லை. அந்த சந்நிதியின் அருகே வசதியான இடம் உண்டு. நண்பர்களோடு அமர்ந்து உரையாட! அங்கே எழுத்தாளர் சுஜாதா"வும் முன்னொரு காலத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதுண்டு! அப்போதிலிருந்து அந்த சந்நிதியின்பால் ஒரு மதிப்பு!
ரங்கனின் சந்நிதிக்கு வெளியே, ஓர் இடத்திலிருந்து தங்க கோபுரம் தெரியும். அங்கேயே, ஒரு பேசும் கிளியும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் அந்த கிளி பேசுவதில்லை. ஆனால் முன்னர், அந்த கிளி "ரங்கா!"என்னும் போதெல்லாம் என் ஆச்சர்யத்திற்கு அளவே கூற இயலாது! "பேசும் கிளி" வேண்டும் என்று பிரார்த்தித்தது கூட உண்டு! ரங்கனின் சந்நிதி தீர்த்தம், மிகவும் ருசியாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று முறைகள் கூட பருகிய அனுபவங்கள் உண்டு! பின் எனக்கு மிகவும் பிடித்தமான ஓர் இடம். "தாயார்" சந்நிதிக்கு செல்லும் வழி. அங்கு நானும் என் அப்பாவும் விளையாடுவது உண்டு. சிறு பிராயத்தில் ஓட்டப்பந்தயத்தில் அப்பாவுடன் அந்த இடத்தில் ஓடியதுண்டு.
"தாயார்" சந்நிதியின் உள் பூக்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அங்கே "ஜம்பகப்பூ" என்ற பூ உண்டு. இரண்டு பூக்களே வாங்கமுடியும். அதை பத்திரப்படுத்திக்கொண்டு, வீட்டில் அம்மாவிடம் கொண்டு கொடுத்த நினைவுகள் உண்டு. "தாழம்பூ" வேண்டும் என்று அழுது புலம்பிய நாட்களும் உண்டு. அதைக்காண்பதற்குக் கூட விலை உண்டு போலும்!
"தாழம்பூ ஏன்?" சிறு வயதில், அப்பா கதைகள் சொல்லி கேட்பதுண்டு. இப்பொழுதும் கூடத்தான். அந்த கதைகளில் ஒரு கதை- ஆயிரம் வருடங்கள் ஜீவித்த நாகத்தின் தலையில் ஒரு நாகமணி தோன்றியதாம்! தாழம் காட்டினுள், மாதம் ஒரு முறை அமாவாசை தினத்தன்று, அந்த நாகம், தனது ரத்தினத்தை அவிழ்த்துவிட்டு, அதன் மூலம் வரும் வெளிச்சத்தைக் கொண்டு இறை தேடுமாம். அந்த மணியைக் கைப்பற்றுவது எப்படி என்பதே அந்த கதை! தாழம்பூ அன்று முதல் எனக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றானது!
சந்நிதிக்கு முன், "அஞ்சு குழி மூணு வாசல்" என்று ஒன்று உண்டு. இன்று வரை அந்த கதை எனக்கு விளங்கவில்லை. அதாவது, தாயார், ரங்கனின் வருகையை, தனது விரல்களை தரையில் ஊன்றி எதிர் பார்த்துக் கொண்டிருந்தாளாம். அங்கே, அவரவர், தங்கள் விரல்களை நுழைத்து சுற்றும்-முற்றும் பார்ப்பது வழக்கமாகியது. சிறு வயதில்- தாயார் மிகவும் பருமனானவராய் இருந்திருக்கக் கூடும், எனவேதான் அப்படி ஒரு குழி அந்த கற்களால் ஆன தரையில் தோன்றியிருக்கிறது, என்ற எண்ணங்களும் வந்ததுண்டு!
ஒருசில வவ்வால் தோட்டங்களும் இடையிடையே வந்துபோவதுண்டு! அவைகளை கண்டாலே எனக்கு பயம்தான். சிறு வயதினில், நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பாதபடியால், "ஒருவர்" நான் ஒவ்வொரு முறை பிடிவாதம் செய்யும் போதும் "பெற்றோர்களை மதிக்காதவர்கள், அடுத்த ஜன்மத்தில் வவ்வால்களாவார்கள்" என்று சொல்லி பயமுறுத்தியது உண்டு. அதுவும் ஒரு காரணம். முதலில், அதை நான் நம்பவில்லைதான். அதெப்படி முடியும் என்று யோசித்ததும் கூட உண்டு! ஆனால் "மை டியர் குட்டிச்சாத்தான்" படம் பார்த்தது முதல், எனக்கு அந்த வாக்கியத்தின் மீது அபார நம்பிக்கை! அதனாலேயே, அந்த வவ்வால் தோட்டங்களை பார்க்கும் போது, ஒரு புறம் பயம் இருந்தாலும் கூட, மறு புறம், "அடுத்த ஜன்மத்தில் இதுவே என் வீடு" என்று எண்ணி, அந்த இடங்களை, நெடு நேரம்வரை நின்று வேடிக்கை பார்த்ததும் உண்டு!
"மடிசார்" புடவையில், இரண்டு மூக்குத்திகள் ஜொலிக்க, தலையை இருக்கவாரிப் பின்னி, கதம்பம் பூண்டு, உதடுகள் மெதுவாக "சஹஸ்ரநாமம்" பாடிக்கொண்டு, அந்த மஞ்சகாப்பை நெற்றியில் அவர்கள் பூணுவர். அவர்களுக்கு அதுவே உண்மை, அதுவே ப்ரஹ்மம். என்னைப் பொறுத்த வரையில், அது ஆயிரக்கணக்கான வருடங்களாக, வழி முறையிலும், வாழ்கை முறையிலும் நம்மோடு கலந்துபோன ஓர் உணர்வு. கலாசாரம். அழகு.
நாம் என்னதான் வேதாந்தம் பேசினாலும், அறிவியல் புழுக்களாக மாறிய போதிலும், நம் நினைவுகளிலிருந்து அந்த "கலாசாரம்" எனப்படுவதை அழிப்பதுசற்றே கடினம். அதை நம்மால் மட்டுமே ரசிக்க இயலும். எனக்கு தெய்வங்களின்மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். அப்படிப் போய்விட்டது என்றும் கூறவில்லை. அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை! ஆனால், என் நினைவுகளில் இருக்கும் இந்த கோவிலை என்னால் மறக்க இயலாது! அதை நான் விரும்பவும் இல்லை!
எனவே, என்னை ஆன்மீகமா, அறிவியலா என்ற தர்கத்திற்குஆளாக்கிக்கொள்ளாமல், என் நினைவுகளிலிருந்து என்னை மீட்டுக்கொண்டேன்!
காடுதான். மனிதத் தன்மையற்ற மிருகங்கள். மதம், மொழி, இவற்றைத் தவிர சோம்பேறித்தனமும், அலட்சியத்தன்மையும் கொண்டு, வாழ்கை என்பது இது என்ற ஓர் அடிப்படை அறிவு இல்லாமல்- ஓர் மிருகம் போன்ற வாழ்கை வாழும்இடம். இது காடுதான்.
காடோ, நாடோ என்ற எண்ணமே இல்லாது- உடுத்தியிருக்கும் துணியின் மீதுள்ளஅழுக்கில் சிறிதும் உள்ளத்தில் கிடையாத, தான் இன்னார் என்ற உணர்வேஇல்லாத ஓர் ஜீவன். பசி, தாகம், சுகம், துக்கம்- இவை எல்லாமே அந்த ஜீவனுக்குச் சமமே. அப்படிப்பட்ட நிஸ்சலமான ஓர் தூய ஆத்மாவை நாம்காணவே முடியாது. வெளுப்பின் உச்சகட்டம்.
ஓர் குட்டிச்சுவற்றின் அடியில்- சினிமாப்பட போஸ்டர்களை கொண்டு தன்னை மூடியவாறு அமர்ந்து கொண்டிருந்த அந்த ஜீவன்- எதை பற்றிதான் அவ்வளவு நிச்சிந்தனையாக நினைத்துக்கொண்டிருன்ததோ; என்று எனக்கு ஓர் எண்ணம். அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தால், பயம்.
பயமென்ன பயம்? அந்த உயிருக்குதான் இரண்டு கை இல்லையா? கால் இல்லையா? அதுதான் பேசாதா? பிறகு என்ன பயம்? தெரியவில்லை. புறியவும் இல்லை. எதோ பயம். ஆரண்யத்தில் பயத்திர்கா பஞ்சம்? நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ரஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா! பயம்தான்.
நாடு காட்டில்- நடப்பது தவிர்த்து, அந்த ஆத்மாவையே உற்றுப் பார்த்திருந்தேன். அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இந்த ஆரண்யத்தில் இருப்பது சற்றே குறைவுதான். இங்கேயுள்ள மிருகங்கள் சிந்திப்பதில்லை. அழுக்கான ஆடைகள்அணிவதில்லை. ஆடைகளின் அழுக்கையெல்லாம் உள்ளுக்குள் போட்டு பூட்டிவிடுவர் அவர். ஓர் இடத்தில் இருப்பதில்லை. ஓர் நிரந்தர இலக்கும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இவை எதுவும் அந்த ஆத்மாவிற்குப் பொருந்தாது!
நான் உற்றுப் பார்ப்பதை ப்ரஹ்மஞானத்தின் மூலம் தெரிந்துகொண்டது போலும். அந்த ஆத்மா! திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு! கையில் எதையோ எடுத்து வீசுவது போன்று தோன்றியது. மிருகம் ஓடியது!
என் கதையைப் படிப்பது யார்?
- அதை எழுதும் நானே அதைப் படிக்கத் தகுதியும் பெற்றேன். தான் நடக்கும் பாதையைக் கூட பின்னே திரும்பிப் பார்க்க நேரமில்லாத இந்த உலகத்திற்கு, எனது கதையைப் படிக்க மட்டும் நேரம் இருக்கவா போகிறது! உண்மைதான். நேரத்தைத் தவிற இந்த உலகத்தில், ஏல்லோரிடத்திலும் எல்லாம் இருக்கிறதுபோலும்!
காற்றின் போக்கில் போகும் காகிதத் துளி போன்ற ஒரு வாழ்கை. காற்று வீசும்திசையில் மிதந்து கொண்டிருக்கும் அந்த காகிதம்- சில நேரங்களில் நின்றும், மற்றும் சில சமயங்களில் மிதந்துகொண்டும் இருந்தது. இன்னும் அது ஏத்தனை நேரம் வரை அப்படி மிதந்துகொண்டிருக்குமோ- என்று எனக்குத் தெரியாது! அந்த காகிதத்தின் வாழ்க்கையில் ஒரு சில நொடிகள், என் கண்முன்னே நடக்க வேண்டும் போலும்!
பேருந்து நகர நகர, காகிதமும் மறையத் தொடங்கியது! ஜன்னலின் வழியாக பின்னே பார்த்துக்கொண்டே- முன்னே போகும் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்தேன். அதை ஆட்டிவைக்கும் அந்த காற்றுக்குக்குத்தான் எத்தனை எண்ணமாற்றங்கள்? ஒரு சில நொடிகளில் மெதுவாகவும்- திடீரென்று வலுவாகவும்- அப்பப்பா! பாவம் அந்த காகிதம். என்னதான் செய்யுமோ?
வாழ்கையெனும் காற்றின் போக்குகேற்றார்போல் நாமும் ஆடத்தானே வேண்டியிருக்கிறது!
பேருந்தின் வேகம் அதிகரிக்கவே, காகிதத்தின் மறைத்தாலும் கூடிக்கொண்டே இருந்தது! திடீரென்று ஒரு அமைதி. காற்று, சற்று இளைப்பாறியது போலும். ஆனால் அந்த காகிதத்தைக் காண முடியவில்லை! சற்றே முயற்சித்தேன். அதோ! ஆனால்...
காகிதமும் இளைப்பாறியது! நிரந்தரமாக. அங்கே திறந்து கிடந்த ஒரு சாக்கிடைக்குள்- அங்குள்ள ஏராளமான குப்பைகளோடு, ஒரு குப்பையாக- அதுவும் இளைப்பாறியது! என் பேருந்தும்விரைந்தது...
MY OTHER BLOG
BEWARE
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!
சிறந்த புதுமுகம் -- நன்றி LK
Thanks LK!- for the Goldden Man!
They make my day...
-
2 days ago
-
3 days ago
-
3 days ago
-
4 days ago
-
6 months ago
-
9 months ago
-
1 year ago
-
1 year ago
-
2 years ago
-
2 years ago
-
5 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
11 years ago
-
11 years ago
-
12 years ago
-
12 years ago
-
12 years ago
-
14 years ago
-
14 years ago
-
-
ABOUT ME...
- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".